17/04/2011

தமிழர் நோக்கில் பண்பாடும் மொழியும் - இ.அண்ணாமலை

தமிழ்ப் பண்பாடு பெருமையாகச் சொல்லிக்கொள்ளப்படும் ஒன்று. தமிழர்களுக்கே உரிய பண்புகள் சில உண்டு என்பதும் அவை தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவன, சிறப்புப்படுத்திக் காட்டுவன என்பதும் தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளிடம் பரவலாகக் காணப்படும் நம்பிக்கை. தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவதில் முதன்மையானது மொழி என்பதில் ஐயமில்லை. மொழி பண்பாட்டின் அடிப்படையான அம்சம்; பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனம். தனிப்படுத்திக் காட்டும் மற்ற பண்பாட்டுக் கூறுகள் எவை என்று நிறுவுவது எளிதானது அல்ல. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் மற்ற சமூகத்தினரிடம் இல்லாதவையாக இருக்க வேண்டும்; தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரிடையேயும் இருப்பவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தமிழருக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாகச் சொல்ல முடியும்.

இந்த இரண்டு அடிக்கோல்களின் அடிப்படையில் புறநோக்கில் தனித் தன்மையைக் கணிப்பது கடினமானது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் சொல்லும்போது அவர்கள் அகநோக்கில் தங்களைப்பற்றி மானசிகப்படுத்திக்கொள்வதையே குறிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது தான் உண்மையானது. இவ்வாறு மானசிகப்படுத்திக்கொள்வது பெரும்பாலும் அறிவுஜீவிகளால் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரவும் எனவே அது அறிவுஜீவிகளின் வாழ்க்கை மதிப்பீட்டை ஒட்டி அமைந்திருக்கும். இவ்வாறு மானசிகப்படுத்திய பண்புக் கூறுகள் வேறு சமூகத்தினரிடையேயும் இருக்கலாம்; தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் இல்லாமலும் இருக்கலாம். மானசிகப்படுத்துவதற்கு இந்த நடைமுறை உண்மைகள் தடையாக இருப்பதில்லை.

தங்கள் பண்புக் கூறுகள் சிறந்தவை என்பதும் ஒருவகை வாழ்க்கை மதிப்பீட்டின் அடிப்படையில் கூறுவதுதான். மதிப்பீடு இல்லாத நிலையில் பண்புகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.

கற்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தமிழ்க் கற்பு என்பது உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஒன்று. பொதுநிலையில் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் ஒழுக்க உறவை வரையறுக்கும் ஒரு பண்பு. எந்தச் சமூகத்திலும் அதன் கட்டுக்கோப்பைக் காக்கவும், அதன் சுய வளர்ச்சியை உறுதிசெய்யவும் அவசியமாக இருக்கும் பண்பு. இந்தப் பண்பு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்குப் பலர் போன்ற பலவும் வெவ்வேறு சமூகங்களில் வழங்குகிற, அந்தந்தச் சமூகங்களுக்குத் தேவையான கற்பு நெறிகள்தான்.

ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பு நிலையே தமிழ்ப் பண்பாடாகப் பேசப்படுகிறது. ஏக பத்தினி விரதன், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆண் நிலையிலும் கற்பு பேசப்பட்டாலும் கற்பு, பெண்ணின் ஒழுக்க நெறியாகவே நடைமுறையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மழை வருவித்தல், ஊரை எரித்தல் போன்ற இயற்கை விதிகளை மீறும் ஆற்றலைப் பெண்ணின் கற்புக்குக் கொடுத்திருப்பதைப் போல ஆணின் கற்புக்குத் தனி ஆற்றல் எதுவும் கொடுக்காதது இது வெளிப்படுத்தும். எனவே கற்பு என்பதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் தனி அர்த்தம் கொடுக்கப்படுகிறது. அது பெண்ணின் பால் ஒழுக்க நெறியை வரையறுக்கும் பண்பாகவே கொள்ளப்படுகிறது.

மனத்தாலும் மற்ற ஆணை நினைக்கக்கூடாது என்று பெண் கற்பை வலியுறுத்தும் தமிழ்ச் சமூகத்தில்தான் திரைப்படக் கதாநாயகனை மனத்தால் கூடும் "சினிமாவுக்குப் போன சித்தாளு" வும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதேபோல் பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவது தமிழ்ப் பண்பு என்று சிறப்பித்துக் கூறிக்கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில்தான் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடுகிற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பண்புகள் என்று போற்றப்படுபவை நடைமுறையில் இல்லாவிட்டாலும் மானசிகப்படுத்திக் கொண்ட பண்புகளே.

மானசிகப்படுத்திக்கொண்ட பண்புகள் ஆதர்சநிலையை காட்டுகின்றன. ஆதர்ச நிலை விதிநிலையை நிர்ணயிக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் பேசும்போது தாங்கள் ஆதர்சநிலையிலும் விதிநிலையிலும் காண்கிற ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அது நடைமுறையில் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

இப்படி நடக்க வேண்டும் என்ற நடத்தை விதிகளும் பண்பாட்டின் கூறுதான். அவை இதை இப்படிச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் விதிப்பதுபோல சமூகத்தின் அறிவுஜீவிகள் விதிக்கும் பண்புக்கூறுகள். அவை ஒருவன் தன்னியல்பாக உண்ணும் உணவல்ல. மருத்துவர் விதிப்படி உண்ணும் பத்திய உணவு. மரபிலக்கண விதிகள் எப்படி மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் மொழி விதிகள் ஒருவனுடைய இயல்பான பேச்சின், எழுத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் விளக்க விதிகள் அல்ல. தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு என்று செல்லும்போது மேலே சொன்ன கட்டுப்பாடு விதிகளையே குறிக்கிறார்கள்.

இது இப்படி இருக்கவேண்டும் என்ற விதிமுறையில் அல்லாமல் இது இப்படி இருக்கிறது என்று விளக்கமுறையில் பார்க்கும்போது உலகின் எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான, அடிப்படையான கூறு, வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்வது. உண்பது, உறங்குவது, உடலுறவுகொள்வது மட்டுமே மனித வாழ்கை அல்ல என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் இயற்கைப் பொருள்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம்தந்து தன் இருப்பைப் புரிந்துகொள்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது ஆகும். இந்த வாழ்க்கை அர்த்தம் கருத்துகள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படும். இவற்றின் தொகுப்பையே விளக்கநிலையில் பண்பாடு என்கிறோம்.

தமிழ்ச் சமூகத்தை இந்த நோக்கில் பார்த்து அதன் தனிப் பண்புகளை - அதாவது வாழ்க்கையைப் பற்றிய அதன் தனி அர்த்தங்களை - நிறுவும் போதுதான் விளக்கநிலையில் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் பற்றிப் பேசமுடியும். விளக்கநிலையில் பண்பாடுகளுக்கிடையே - அர்த்தப்படுத்திக் கொண்ட வாழ்க்கைகளுக்கிடையே - உயர்வு தாழ்வு இல்லை. இந்த நோக்கில் அமெரிக்கப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என்ற இரண்டில் எது உயர்ந்தது என்ற கேள்வி அர்த்தமில்லாதது. இதைப்போலவே தமிழ்ச் சமூகத்தின் சங்ககாலப் பண்பாட்டையும் இக்காலப் பண்பாட்டையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பதும் தவறானது. ஒரு சமூகத்தினுடைய, ஒரு காலத்தினுடைய பண்பாட்டின் அடிப்படையில் இன்னொரு சமூகத்தினுடைய, இன்னொரு காலத்தினுடைய பண்பாட்டை எடைபோடுவது தவறாகும். ஒவ்வொரு சமூகமும் தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் தன் சமகால வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இது பரிணாம நியதி. எனவே தான் பண்பாட்டு மாற்றம் இருக்கிறதே தவிரப் பண்பாட்டு அழிவு இல்லை என்கிறோம். ஒரு சமூகத்தினர் முற்றிலுமாக அழியும்போது, ஒரு சமூகத்தினர் தங்கள் பண்பாட்டை விட்டுவிட்டு இன்னொரு சமூகத்தினரின் பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும்போது பண்பாட்டு அழிவு நேரலாம். ஆனால் இது அபூர்வம். மொழிக்கும் இது பொருந்தும்.

வாழ்க்கையின் அர்த்தம் - பண்பாடு - நிலையானது அல்ல. அது காலந்தோறும் மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மனிதனைச் சுற்றியிருப்பவை மாறுகின்றன. அந்த மாறுதல்களோடு தன்னை இணைத்து வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும் மாறுகிறது. தமிழ்ப் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது, நடக்க முடியாதது. அதே நேரத்தில் வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டில் உண்டு. ஆழ்நிலையில் இருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த இரண்டின் அடிப்படையிலும் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு என்ன என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். சங்ககால மரபுப் பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும், ஏற்றுக்கொண்ட மேல்நாட்டின் புதிய பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும் விடை ஆகாது. இரண்டின் ஊடாட்டத்தில் விளைந்த ஒன்றே இன்றைய தமிழ்ப் பண்பாடாக இருக்க முடியும்.

பண்பாட்டின் அடிப்படை அம்சமான மொழியைப் பற்றிய தமிழர்களின் கருத்துகளும் மேலே சொன்ன பிற பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய அவர்களது கருத்துக்களைப் போன்றவையே. அவர்களுடைய மொழி நோக்கு, மொழியின் நடைமுறை வழக்கின் அடிப்படையில், விளக்க நிலையில் அமையாமல் மானசிகப்படுத்தப்பட்ட ஆதர்சநிலையில், விதிநிலையில் அமைந்திருக்கிறது. அமைப்பில் தமிழ் மொழி தனித்தன்மை உடையது, மற்ற மொழிகளைவிடச் சிறந்தது, இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாதது என்ற கருத்து தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளால் போற்றப் படுகிறது.

ஒவ்வொரு சமூகமும் அதன் பண்பாட்டின் அடிப்படையில் சில சாதனைகள் புரிகிறது. வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு சாதனைகள் புரியலாம். பண்பாட்டின் சாதனைகளையே நாகரிகம் என்கிறோம். சாதனைகளில் உயர்வு, தாழ்வு உண்டு, வாழ்வு தாழ்வும் உண்டு, எனவே ஒரு நாகரிகம் சிறந்த நாகரிகம் என்றோ அழிந்த நாகரிகம் என்றோ சொல்லலாம். ஒரு சமூகம் தன் பண்பாட்டின் விளைவாக எழுத்தையோ வெடி மருந்தையோ கண்டுபிடித்து அதன் மூலம் அதிகார பலம் பெற்று உயர்ந்த நாகரிகம் என்று பெயர் பெறலாம். வேறு சாதனைகளால் அதைவிட அதிகாரபலம் பெற்ற இன்னொரு நாகரிகத்தால் வெல்லப்பட்டு அழிந்த நாகரிகம் என்றும் பெயர் பெறலாம். பண்பாட்டிற்கு உயர்வோ அழிவோ இல்லை; நாகரிகத்துக்கு உண்டு. ஒருவன் பண்பாட்டை உயர்ந்தது, தாழ்ந்தது என்று வகைப்படுத்தினால் அது நாகரிகத்தை வகைப்படுத்துவதாகவே அமையும்.

தமிழ்ப் பண்பாடு கட்டடக் கலை, நுண்கலை, நீர்ப்பாசனம், கடல் வணிகம் முதலியவற்றில் முன்காலத்தில் படைத்த சாதனைகளைத் தமிழ் நாகரிகம் எனலாம். தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், ஓரளவு தத்துவம் ஆகியவற்றில் படைத்த சாதனைகளும் தமிழ் நாகரிகத்தில் அடங்கும். இரு பண்பாடுகளின் ஊடாட்டத்தால் புதிய சாதனைகள் - நாகரிகங்கள் - பிறப்பதை உலக வரலாறு காட்டுகிறது. மேலே சொன்ன மொழித் துறைகளில் முக்கியமாக இலக்கணத்திலும், தத்துவத்திலும், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வட மொழிகளின் ஊடாட்டம் தமிழ் மொழிக்குக் கிடைத்தது.

தமிழ் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று நாம் பெருமைப்படலாம். இது தமிழ் முன்னோர்களின் பெருமை, நம் பெருமை, இதற்கு நாம் வாரிசு என்பதே. இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. கலை, அறிவியல், இலக்கியம் முதலியவற்றில் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் தனிப்பட்ட சாதனைகள், சிறப்பான சாதனைகள் என்று பெருமைப்பட எதுவும் இல்லை. ஆங்கிலப் பண்பாட்டின், மொழியின் ஊடாட்டம் தமிழ்ப் பண்பாட்டுக்கு, மொழிக்கு இன்று இருக்கிறது. ஆனால் இதன் விளைவாகப் புதிய சாதனைகள் எழக் காணோம். செய்தவை எல்லாம் ஆங்கிலப் பண்பாட்டினுடைய, மொழியினுடைய சாதனைகளின் நிழலாகத்தான் இருக்கின்றன. இப்படித் தமிழ் நாகரிகம் ஒடுங்கிவிட்டதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பண்பாட்டைப் பற்றியும் பண்பாட்டின் சாதனமான மொழியைப் பற்றியும் தமிழர்கள் கொண்டிருக்கிற மனப்பாங்கும் கருத்துக்களும் ஒரு காரணம் ஆகலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி, இரண்டைப் பற்றிய தமிழர்களின் மனப்பாங்கும் கருத்துகளும் ஒரே மாதிரியானவை. தமிழ்ப் பண்பாடு தூய்மையானது, இந்தத் தூய்மையைப் போற்ற வேண்டும் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் விளைவான செயல்களும் மொழிக்கும் ஏற்றப்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ்ப் பெண்ணாக உருவகிக்கும் போது அதன் கன்னித்தன்மை - இளமை, தூய்மை என்ற இரண்டு பொருளிலும் - வலியுறுத்தப்படுகிறது. கன்னித்தன்மையைக் காக்கச் சுதந்திரமான வளர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. தமிழ் நாகரிகம் உயர்ந்திருந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தமிழ் வீட்டு மொழியிலிருந்து நாட்டு மொழி ஆக வேண்டுமென்றால் கட்டுப்பாடுகள் துணை செய்யாது. வீட்டைவிட்டு நாட்டுக்கு உழைக்கச் செல்லும் பெண் புடவையிலேயே இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது. பழைய மரபை மேற்கோள்காட்டி நெறிப்படுத்தும் பண்புகளுக்கும் இன்றைய வாழ்க்கையின் நிர்பந்தங்களுக்கு ஏற்ப நடைமுறையில் கடைப்பிடிக்கும் பண்புகளுக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போல மரபு இலக்கணங்களிலிருந்து மேற்கோள் காட்டி நெறிப்படுத்த முனையும் தமிழ் மொழிக்கும் இன்றைய தேவைகளை நிறைவு செய்யத் தேவையான தமிழ் மொழிக்கும் இடைவெளி இருக்கிறது. போற்றுவது ஒன்றும் பின்பற்றுவது ஒன்றுமாகப் பிற பண்பாட்டுக் கூறுகளில் இரட்டை நடத்தை இருப்பது போல, மொழியிலும் போற்றுவது தமிழ், பின்பற்றுவது ஆங்கிலம் என்ற நிலை இருக்கிறது. இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழுமலர்ச்சி அடையவில்லை. நம் ஆளுமையை உருப்படுத்தும் நம் பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய மனம் இல்லை. வாய்ப்பு இல்லை. நாம் முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்ளாத இன்னொரு பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய இயலவில்லை. மீறிச் சிலர் செய்கிற சாதனைகளைப் பிறப்பால் தமிழர்களின் சாதனைகள் எனலாமே தவிர தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் சாதனைகள் என்று கூறுமுடியாது.

தமிழ்ப் பண்பாட்டிடம் தமிழர்களுக்கு ஒரு பக்தி இருப்பதுபோல் தமிழ் மொழியிடமும் ஒரு பக்தி இருக்கிறது. தமிழைத் தாயாக, தெய்வமாகக் கொள்வதன் விளைவு இது. பக்தி இன்னொரு படி போய்ப் பயபக்தி ஆகிறது. பயபக்தி மொழியை நம்மிடமிருந்து தூரப்படுத்துகிறது. மேலே சொன்னபடி மரபின் அடிப்படையில் மொழிக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் தூரப்படுத்துதலை உறுதி செய்கின்றன. மொழிக்கு நாம் வணங்குவதை விட மொழியை நமக்கு வளைக்க வேண்டும். மொழியைத் தூரத்தில் வைக்காமல் நெருக்கம் காட்ட வேண்டும். மொழியோடு தோழமை உறவுகொண்டு ஊடியும் கூடியும் அதன்மேல் ஆட்சி செலுத்தினாலே புதிய மொழி பிறக்கும், புதிய படைப்புகள் பிறக்கும். கலை, அறிவியல், இலக்கியப் படைப்புகளில் புதிய சாதனைகள் படைக்க மொழியிடம் உரிமை எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் விளைவாகப் புதிய சாதனைகள் படைக்கும்போதுதான் புதிய தமிழ் நாகரிகம் பற்றிப் பேசலாம். அதைப்பற்றிப் பெருமைபடலாம்.

நன்றி: காலச்சுவடு 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக