வரலாறு என்பது மேட்டிமைச் சமுதாயங்களின் கதையாடல்களாகவே உள்ளது; இதில் அறியப்படாத தமிழக வரலாறு புதைந்து போயுள்ளது: அந்தப் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்வதே இன்றைய முதல் தேவை என்ற புரிதலுடன் தீவிரமாக இயங்கி வருபவர் பேராசிரியர் தொ. பரமசிவன். அந்த வரலாற்றை அடித்தட்டு மக்கள் வழக்காறுகள் மூலமே மீட்டெடுக்க முடியும் என்ற மனப்போக்குடன் உறுதியாகச் செயல்பட்டு வரும் தொ.பரமசிவன் தமிழக தீவிர வாசிப்பு வட்டாரத்தால் தொ.ப. என எளிமையாக அழைக்கப்படுகிறார். எந்தவிதமான அலங்கார, அணிவகுப்பு அடைமொழிகளுக்குள்ளும் அடைபடாத தொ.ப., அடிப்படையில் திராவிட இயக்க,பெரியாரியக் கொள்கை சார்ந்தவர் என்பது ஆச்சரியமான உண்மை.
மதுரை பல்கலையில் ‘அழகர்கோயில்’ குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது.அதுவரை எழுதப்பட்ட புத்தகங்கள் சார்ந்தே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பட்ட ஆய்வேடுகளுக்கு மத்தியில் கள ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அவரது ஆய்வேடு பல்கலைக்கழக ஆய்வு வட்டாரத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சியது.தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கள ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனது உடல்நிலை காரணமாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றாலும் களப்பணி ஆய்வுகளில் இருந்து ஒரு நொடியும் விலகாது ஈடுபட்டு வருகிறார். இன வரைவியல் குறித்த ஆய்வுகள் அவரது சிறப்புத்தன்மையாகும். இடைநிலை, கீழ்நிலை மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்ற நாட்டார் வழக்காறுகளில் உண்மையான வரலாறு புதைந்துள்ளதைத் தமது கூரிய நுண்ணுணர்வுகள் மூலம் வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார்.உண்மை என்பது மிக எளிய வழிகளில்தான் ஊற்றெடுக்கிறது. ‘அழகர் கோயில்’, ‘அறியப்படாத தமிழகம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘இந்து தேசியம்’, ‘தெய்வம் என்றொரு...’ உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான தொ.ப. தற்போது பாளையங்கோட்டை குறித்த உள்ளூர் வரலாற்றை முழுமையாக எழுதும் ஆய்வுப்பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய மணிவிழாவினை திருநெல்வேலி இலக்கிய நண்பர்கள் அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். அவரது மணிவிழாவினையொட்டி அவரது வீட்டில் நடந்த சந்திப்பு இது. அவருடன் செலவிடப்படும் ஒவ்வொரு நொடியும் வரலாறு குறித்த மாயையை அகற்றுகிறது. அவருடன் மேற்கொண்ட மிக இயல்பான உரையாடலில் இருந்து...
தீராநதி: கடந்த 30 ஆண்டுகால தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலித் கலை இலக்கியச் செயல்பாடுகள், பெண்ணிய விழுமியங்கள் முன்னிறுத்தப்படுதல், வரலாறு குறித்த புரிதல்கள் என மாறிவந்துள்ள இச்சூழலில் நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், இனவரைவு ஆய்வுகள் ஆகிய துறைகள் முக்கியப் பங்களிப்பு ஆற்றியுள்ளன. தொல்லியல் ஆவணங்களும், உள்ளூர் வரலாறுகளும் முக்கியத்துவம் பெறும் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கும் காலகட்டமாக இது இருக்கிறது.இதில் உங்களது பங்களிப்பு புதிய ஒளியைப் பாய்ச்சுவதாகக் கருதப்படுகிறது.
தொ.பரமசிவன்: அண்மையில் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஐரோப்பிய முறையியலைத் தள்ளி வைத்துவிட்டு எழுதுகிறார் என்று எழுதியிருந்தார்கள். அதுதான். நான் எடுத்துக் கொண்டுள்ள முறையியல் வேறு ஒன்றுமில்லை. கிராமத்துல, கம்மாய்க் கரையிலயோ, கோயில் வாசல்லயோ பெரிசுகள் உக்காந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் இல்லையா,அதுதான் என்னோட முறையியல்.அதை allpervesive என்பார்கள். ஒரு மணி நேரம் அந்தப் பெரிசுகள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டாக்க, ஒரு மரத்தப் பத்தி பேசுவாங்க, வாழ்க்கையோட எத்திக்ஸ் பத்தி பேசுவாங்க, வெள்ளைக்காரனப் பத்திப் பேசுவாங்க, நவாப் காலம் பத்திப் பேசுவாங்க..சயன்டிபிக்கா பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. Lore என்று சொல்லக்கூடிய வழக்காறுகள் இருக்கு பாருங்க.அவர்கள் வழக்காறுகளில் பல விசயங்களைத் தழுவுகிறார்கள்.இந்தப் பல விசயங்களையும் தழுவிப் பார்க்கிற போதுதான்,எல்லாக் கோணங்களிலும் ஊன்றிப் பார்க்க முடிகிறது.யூரோப்பியன் சிஸ்டமாலஜி என்னன்னா profile-ம்பான்.அதனால ஒரு பக்கப் பார்வை மட்டும்தான் நமக்குக் கிடைக்கும், வரலாறுன்னா எந்த அரசன் எத்தனை வருசம் ஆண்டான்னு. அது அல்ல. அவன் காலத்தில் என்ன நிகழ்ந்தது? முக்கியமான செய்தி என்ன? அவன் எந்தப் பக்கம் ஆட்சி செய்தான்? இதெப் பார்க்கணும்னா loreதான். lore ன்னா வழக்காறுதான். இந்த வழக்காறுக்குள்ள நிறைய விஷயங்கள் புதைஞ்சு கிடக்குது. அதத் தோண்டிதான் எடுக்கணும்.
தீராநதி: அதில் புனைவுகளும் சேர்ந்துதானே இருக்கிறது? தரவுகளை எப்படிப் பிரிப்பது?
தொ.பரமசிவன்: இல்லீங்க. அதுல புனைவு இருக்காது. உண்மை புதைஞ்சு போயிருக்கும்.அது reading ங்கற கணக்குல வராது. ஈசைபர்மெண்ட் அப்படிங்கற கணக்குலதான் வரும். டென்னிஸ் பந்துல ஒரு கோடு போட்டிருப்பான். அது எங்க தொடங்குது, எங்க முடியுதுன்னு தெரியாது. பிரிக்கிறது பெரிய கஷ்டம். அப்படித்தான் பார்க்கணும். இந்த வழக்காறுல உள்ளதுதான் ‘பாப்பானுக்கு முந்தி பறையன்’ங்கறது. அது ஒரு சமூக நிகழ்வுதான்.பிராமணர்கள் வருவதற்கு முன் யார் priestஆக இருந்தாங்கங்கற கேள்விக்கு அது பதில் சொல்லுது. அவர்கள் வருவதற்கு முன் பறையர்கள்தான் priestஆக இருந்தனர். ‘தம்பி உடையார்’னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி. நான் பரமக்குடியில் இருந்தபோது கீழக்கரை முஸ்லிம்ககிட்ட மட்டும் ஒரு வித்தியாசமான பெயர் வழக்கு இருந்ததக் கவனிச்சிருக்கேன். செய்கு தம்பி, முகமது தம்பி, சதக்கு தம்பினு பெயர் வைச்சிருப்பாங்க. இந்தக் கேள்விக்கு ரெம்ப நாளா எனக்கு விடை கிடைக்கல. திரும்பத் திரும்பத் தோண்டிப் பார்த்தா, சீதக்காதி அப்பா பேரு பெரிய தம்பி மரைக்காயர். யாருக்குப் பெரிய தம்பி? இவர் தம்பின்னா அண்ணன் யாரு? ன்னு வரலாற்றுரீதியாப் பார்த்தா, விஜய ரகுநாத பெரிய தம்பி அவர் பேரு. அப்படின்னா சேதுபதி தம்பி. சேதுபதிக்கு எப்படி தம்பியானாங்கன்னு பாத்தா, போகலூர்ல இருந்த மண் கோட்டைய விட்டுட்டு, இராமநாதபுரத்துல கோட்டை கட்டறதுக்கு பணம் கொடுத்து கிழக்க அழைச்சிட்டு வந்திருக்காங்க கீழக்கரை மரைக்காயர்கள். இதுக்குப் பதிலா என்ன கேக்கிறாங்கன்னா, கடற்கரையின் மேலாதிக்கத்தக் கேக்கறாங்க. சங்கு வியாபாரம் செய்வது போன்ற உரிமைகள வாங்கிக்கிறாங்க. இப்படி ராஜா தன்ன நிலைநிறுத்திய தம்பிங்கிறதால தம்பி பட்டம் கொடுக்கிறாங்க. இன்னமும் போட்டுக்கிட்டே வராங்க. இப்படி ஒன்றையொன்று தோண்டித் தோண்டிப் பார்க்கணும். இப்படிப் பார்த்தால் நிறைய விஷயங்கள் தெரியும்.நான் இப்படித்தான் பாத்துக்கிட்டிருக்கிறேன்; எழுதிக்கிட்டு இருக்கிறேன்.
தீராநதி: இதற்கான கேள்விகள் உங்களுக்கு எங்கிருந்து எழுகின்றன. இது உங்கள் வாசிப்பு சார்ந்த விஷயமா? அல்லது வேறு ஏதோ தேடல்கள் தொடர்பான விஷயமா?
தொ. பரமசிவன்: வாசிப்பு, மறுவாசிப்பு ரெண்டுந்தான். இதுபோக, இந்த மாதிரி கேள்வி கேட்கிற பழக்கம் எங்கிருந்து வந்ததுன்னா, மயிலை.சீனி. வேங்கடசாமி, ராகவன் பிள்ளை,வானமாமலை இந்த மாதிரி ஆட்கள் மூலம் ஏற்பட்ட பதிவுகள்ல இந்த மாதிரி கேள்விகள் வருது. இந்தக் கேள்விகளுக்கு விடை இல்ல. விடைகளைத் தேடுகிறபோது ஒரு பக்கம் வரலாற்று நிகழ்ச்சிகள்ல விடை இருக்கு. ஒரு பக்கம் வேற இதுகள்ல விடை இருக்கு.
தீராநதி: அடிப்படையில் பெரியாரிஸ்டாக இருக்கிற நீங்கள், எப்படி இதுபோன்ற வாசிப்புகளுக்குள் வந்தீர்கள்?
தொ. பரமசிவன்: ஒன்று வளர்ப்புன்னு சொல்லணும். நான் பிறந்து வளர்ந்த சூழல் இருக்கே அது.சமய நல்லிணக்கம் என்பது பெரியார் படிச்சு எனக்கு வரவில்லை. அது இயல்பாகவே என் வீட்டில் இருந்தது. இந்த ஊர்ல எல்லா இதயும் பார்க்கலாம். சவேரியார் கோயில் திருநாள்ல போயிப் பார்த்தீங்கன்னா, மற்ற மதத்துக்காரங்க கூட்டம் நிறைய இருக்கும். கிறிஸ்துமஸ்சுக்கு பாலகன் பிறப்புன்னு பிறந்த குழந்தையப் பார்க்கப்போற ஒரு கலாசாரம் இந்த ஊருல இருக்கு. உங்க வீட்டுல புதுசா ஒரு குழந்தை பிறந்திருந்துச்சுன்னா நான் சோப்பு, பவுடர், பால் பவுடர் டின் வாங்கிக்கிட்டுப் பார்க்க வருவது போல எல்லா சாதி மக்களும் பாலகன் பிறப்பு குடில் அமைக்கப்பட்டிருக்கிற இடத்துக்குப் போவாங்க. ‘பாலகன் பிறந்துருக்கான் பாருங்க, பாலகன் பிறந்திருக்கான் பாருங்க’ன்னு போவாங்க. இந்தக் கலாசாரம் மத எல்லைகளைத் தாண்டிப் பாய்கிறது.இந்த மாதிரி சமய நல்லிணக்கம்ங்கிறது,சகிப்புத்-தன்மைங்கிறதே ஒரு கெட்ட வார்த்தையாயிட்டு.இந்த சமய நல்லிணக்கம் யாருகிட்ட இயல்பா இருக்குதுன்னா பெண்களிடம் இருக்கிறது. நம்மில் சரிபாதியாகப் பெண்கள் இருக்கிறதாலதான் இங்க மதக் கலவரங்கள் இல்ல. ஒரு குழந்த பிறந்தால் பார்க்கணும்ங்கிற கலாசாரத்துல சாதியோ, மதமோ ஆபரேட் ஆகறதில்ல. இது தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருக்கு. ஏன்னா தென்பகுதி கல்சுரலா பெரிய சிரமங்களுக்கு ஆளாகாத பகுதி. undisturbed. இந்த மாதிரியான சூழல்ல.. ஊர்,தெரு, வீடு எல்லாமே இயல்பாகவே சமூக நல்லிணக்கத்தப் பேணுகிற, விரும்புகிற சூழல்ல வளர்ந்தது ஒரு முக்கியக் காரணம்.அதுல பாளையங்கோட்டைக்கு முக்கியப் பங்கு இருக்கு.
தீராநதி: இந்த மாதிரியான சூழல் தமிழ்நாடு முழுவதும் இல்லையா? இல்லை என்றால் ஏன் இல்லாமப் போச்சு?
தொ. பரமசிவன்: இங்க இருக்கு. தமிழ்நாடு பூரா இருக்கா இல்லையான்னு எனக்குச் சொல்லத் தெரியல. ஏன்னா என்னுடைய கள ஆய்வுகள் தென் மாவட்டங்களில்தான்.MRT என்று சொல்லப்படுகிற மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில்தான் என் கள ஆய்வுகள் இருந்துள்ளது.
தீராநதி: உங்கள் முதல் கள ஆய்வு மதுரை, அழகர்கோயில் பற்றிய கள ஆய்வுதானா?
தொ. பரமசிவன்: ஆமா. அதுல நான் எடுத்துக்கிட்டது வந்து.. கோயில்னா ஒரு சட்டம் வச்சிருந்தாங்க. paradigm இருந்தது. நான் அத எடுக்கல. ஒரு கோயிலுக்கும் நாலு சாதிகளுக்கும் உள்ள உறவ எடுத்துக்கிட்டேன். சித்திரைத் திருவிழாவில பார்த்தால், எல்லா சாதிகளும் வராங்க. இப்ப, ஆகமம் உள்ள கோயில்கள் இருக்கு; ஆகமங்கள் இல்லாத கோயில்களும் இருக்கு.அடித்தட்டு மக்கள் மத்தியில் ஆகமங்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது,அப்படிப்பட்ட மக்கள் ஏன் சித்திரைத் திருவிழாவில் கூட்டம் கூடுகிறார்கள் என்பதுதான் நம் கேள்வி. அந்த மக்கள் கள்ளர், பறையர், தாழ்த்தப்பட்ட மக்கள், இடையர் ஆகிய 4 சாதிகளுக்கும் அந்தக் கோயிலுக்கும் உள்ள உறவுதான் என் ஆய்வு. அப்படிப் போகும்போது சடங்குகளைப் பற்றிய நம்பிக்கைகள், பழமொழிகள், கல்வெட்டுகள் எல்லாம் பயன்பட்டுது.
தீராநதி: மதுரை அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் போலவே, திருவில்லிப்புத்தூர் அருகே திருவண்ணாமலையிலும் ஒரு கோயில் இருக்கிறதே?
தொ.பரமசிவன்: அது மதுரை அழகர்கோயிலின் Replica. ஒரு ஊரோ, கோயிலோ பெரிய அளவுக்கு முக்கியத்துவம் பெறும்போது அது மாதிரி Replica க்கள் உருவாகும். டூப்ளிகேட். காசின்னு ஒரு ஊரப் பார்த்து தென்காசின்னு பேர் வைச்சாங்கள்ல அத மாதிரி.
தீராநதி:இந்த இரு கோயில்களிலும் சில குறிப்பிடத்தக்க வழிபாட்டு முறைகள் கூட ஒரே மாதிரி உள்ளதே?
தொ.பரமசிவன்: வைணவம் நாட்டார் கோயில்களில் நிறைய இருக்கு. அந்த வகையில் மதுரை கள்ளழகர் கோயில்லயும், இங்கயும் வழிபாட்டு முறைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.தமிழ்நாட்டில் அரசர்கள் வைணவத்தை ஆதரிக்கவில்லை.சோழர்கள் சைவத்தைத்தான் ஆதரித்தார்கள். வைணவத்தை விரட்டினார்கள். அதையும் மீறி வைணவம் எப்படி தாக்குப் பிடிச்சுதுன்னா நாட்டார் மக்களாலதான். அதாவது நான் - பிராமின் மக்களைக் கோயிலுக்குள் வரவழைச்சது மூலமா வைணவம் தாக்குப் பிடிச்சுது. நாட்டார் மக்களுடன் சமரசம் செய்துகொண்டு வாழத் தொடங்கியது. இது 12, 13ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு. மேலோர் மரபுகள் வறுமைப்படும்போது கீழோர் மரபுகளுடன் எல்லா வகைகளிலும் சமரசம் செய்துகொண்டு மேலும் வாழ்கிறது. இவ்வாறு வைணவம் சிக்கல் பட்டபோது கீழோர் மரபுகளுடன் சமரசம் செய்தது, சைவம் அவ்வாறு செய்யவில்லை. இது தொடர்பாக ‘வைணவம் எவ்வாறு நாட்டார் கூறுகளை வரவு வைத்துக்கொண்டது’ என ஒரு கட்டுரையும், ‘தென்கலை வைணவத்தில் ஒரு கலகக் குரல்’ என ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன்.
தமிழ்நாட்டில் ராம அவதாரத்துக்கு மரியாதை கிடையாது. கிருஷ்ண அவதாரந்தான். இப்ப மதவாத சக்திகள் ராமனைத்தான் கையில் எடுக்குது. ‘ஜெய் ராம்’, ‘ஜெய் ராம்’ ங்கிறாங்க. கிருஷ்ணனைக் கையில் எடுக்க மாட்டாங்க. ஏன்னா ராமன்தான் அரச வம்சத்தைச் சேர்ந்தவன். அரச கல்வி கற்றவன். ஆயுதப் பயிற்சி பெற்றவன். கையில் ஆயுதம் தாங்கியவன். கிருஷ்ண அவதாரம் பார்த்தீங்கன்னா ஏழைக்குடியில் பிறந்தவன், அழுக்கானவன், திருடுபவன், பொய் சொல்பவன், பெண்களோடு கூடிக் குலாவுபவன். இதற்கு மூலம் பாகவதக் கதைகள். பாகவதம் மதம்தான் முதலில் உருவாகிறது. அதிலிருந்து வைணவம் உருவாகிறது. இந்தக் கதைகளைத்தான் ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். ராமனைப் பற்றி அதிகமாகப் பாடியதில்லை. கிருஷ்ணாவதாரத்தின் பாகவதக் கதைகள்தான் ஆழ்வார் பாசுரங்களில் வருகின்றன. குறிப்பாக, பகவத்கீதையைப் பற்றி ஆழ்வார்கள் பேசவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரே ஒருவர் போகிறபோக்கில் குறிப்பாகக் குறிப்பிடுகிறார். அதையும் தேடிக் கண்டுபிடிச்சாதான் உண்டு. அவ்வளவுதான். பகவத்கீதை கொண்டாட்டத்துக்குரிய ஒரு நூல் இல்ல.
தீராநதி:அப்போ 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த சமய சீர்திருத்தவாதிகள் ஏன் வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கவில்லை?
தொ. பரமசிவன்: ஒன்று, அது மிகவும் சிறுபான்மை நலனாகிப் போச்சு. இன்னொன்று,அதைவிட நேரடியாக ஆங்கிலேய முறையியலைப் பின்பற்றி விட்டார்கள்.பெரியார் உட்பட எல்லோரும் ஐரோப்பிய நாகரிகத்தையே எடுத்துக்கொண்டார்கள்.
தீராநதி: தொல்லியல் கூறுகளை இன்று இடதுசாரிகள் கையாள்கிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு பார்க்கிறார்கள்?
தொ. பரமசிவன்: இன்னும் சரியாகச் செய்யவில்லை. உதாரணமாகச் ‘சாமியாட்டம்’ என்று ஒரு நாட்டார் கலை இருக்கிறது. ஐரோப்பிய முறையியலைப் படித்தவர்கள், பெரியாரைப் படித்தவர்கள் எல்லாரும் ‘சாமியாட்டம்’ ஒரு காட்டுமிராண்டித்தனம் என்றுதான் கூறுவார்கள். ஆனா அதைக் கூர்ந்து கவனிச்சா சாமியாட்டம் பழைய போர் நடனத்தின் எச்சப்பாடு என்பது தெரியும். அதாவது ஒவ்வொரு சமூகத்திற்கும் வார் டான்ஸஸ், பாஸ்டரர் டான்ஸஸ் என்று உண்டு. தமிழ்ச் சமூகத்தின் வார் டான்ஸின் மிச்ச சொச்சம்தான் சாமியாட்டம். இப்படிப் பார்ப்பதற்கு இன்னும் நாம் பழகலை. சாமியாட்டம் நடந்தாலே விலகி ஓடுவார்கள். சாமியாட்டம் அந்தந்த வட்டார வரலாறுகளோடு தொடர்புடையது. சில இடங்களில் ஆயுதம் தாங்கிஇருக்கும். சில இடங்களில் அது இல்லாம இருக்கும். ஆயுதம் தாங்கி இருந்தால் அது என்ன வகையான ஆயுதம்? அத எதுக்குப் பயன்படுத்தறாங்கன்னு பார்க்கணும். அப்படி மக்கள் கலாசாரத்தோட தம்மை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பார்வை இன்னும் இடதுசாரிகளுக்கு வரல்ல. சாமியாட்டம் வார் டான்ஸுன்னே அவங்க நினைக்கல, இல்லயா? அத மாதிரி விளையாட்டுகள். இப்ப பல்லாங்குழி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதப் படிச்சிட்டு இடதுசாரிகள் எல்லாம் தலையில தூக்கிக் கொண்டாடப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா எந்த இடதுசாரியும் அதைப் படிக்கல. அது பிரைவேட் பிராபர்டீஸைக் கலாசார ரீதியாக நியாயப்படுத்துகிற ஒரு விளையாட்டு. உனக்கு ஏழு குழி, எனக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்துகள் என இந்த விளையாட்டு சமத்தன்மையோடு தொடங்குகிறது. மீண்டும் குழிக்கு அஞ்சு முத்துகள் என்ற நிலையே ஏற்படக்கூடாது என்பதுதான் விதி. மேடு பள்ளமாவதும், பள்ளம் மேடாவதும் விளையாட்டு. தோற்றவன் நான் தோற்றுப் போனேன் என்றே நினைக்க மாட்டான். விதி என்னைத் தோற்கடித்து விட்டது என்றுதான் கூறுவான். நீ ஏன் சொத்தைப் பறித்துக் கொண்டாய் என்று கூறமாட்டான். விதிதான் என் சொத்தை அபகரித்துக் கொண்டது என்றுதான் நினைப்பான். தோற்றுப்போனவன் கடைசியில் கஞ்சி குடிக்கணும். “கஞ்சி குடி, கஞ்சி குடி’’ என்பார்கள். தோற்றவனுக்கு அவர்கள் மீது கோபமே வராது. இந்த ஒழுங்குகளைக் கலாசார ரீதியாக உருவாக்குவதுதான் விளையாட்டு. இதை ஒவ்வொரு கட்டமாகப் பிரிச்சு எழுதியிருந்தேன். இதை இடதுசாரிகளால் புரிஞ்சுகொள்ள முடியவில்லை.
தீராநதி: உள்ளூர் வரலாறுகளை எழுதும் முனைப்பு இன்று ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை எவ்வாறு தேடுவது?
தொ.பரமசிவன்: அந்த வட்டார நிலவியல், அந்த வட்டார வரலாறு, அந்த வட்டாரத்திலுள்ள நிறுவனங்கள்... பாளையங்கோட்டை வரலாற்றை எழுதினால் Blind School பத்தி பேசாம இருக்க முடியுமா..? 100 ஆண்டுதான் ஆகிறது என்றாலும் தமிழ்நாட்டில் பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பள்ளி... இந்தியாவிலேயே பெரிய பள்ளிக்கூடம். 1903ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல்முறையாக தீக்ஷீணீவீறீ எழுத்தில் புத்தகம் வெளியிட்டான்.. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தப் பத்தி எழுதாம இருக்க முடியுமா...? இது போன்ற வட்டார நிறுவனங்கள், சடங்குகள், விழாக்கள் இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு.
தீராநதி: நீங்க பாளையங்கோட்டை வரலாறு எழுதுகிறீர்கள் இல்லையா? திருநெல்வேலி,பாளையங்கோட்டை இரண்டும் அடுத்தடுத்த ஊர்கள் என்றாலும் வேறு,வேறு அடையாளங்களைக் கொண்டதாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறதா? அல்லது கிறித்துவத்தின் வருகைக்குப் பின்னர் இந்தத் தனி அடையாளங்களைப் பெற்றதா?
தொ.பரமசிவன்: காலனிய ஆட்சி வந்த பிறகுதான் தனித் தனியானது. அதுக்கு முன்னாடி ஒன்னாத்தான் இருந்தது.காலனியாட்சி வந்த பிறகுகூட சாதி வேற்றுமைகள் கடுமையாக இருந்தன.(இரண்டு நகரங்களின் அடையாளங்களைப் பிரிக்கும் முக்கிய அம்சமாக இது விளங்கியது.) குறிப்பாக பிராமண ஆதிக்கம் பின்வாங்கிய பின்னரும் வெள்ளாள சாதி ஆதிக்கம் வந்து சேர்ந்தது. சாதி வேற்றுமையைப் பாதுகாப்பதற்காக வெள்ளாளர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
தீராநதி: வெள்ளாளர்கள் கிறித்துவத்துக்குள்ளும் வந்தார்கள் இல்லையா?
தொ. பரமசிவன்: அங்கயும் போயி எங்க சாதி ஆசாரம் உயர்வானதுன்னு சொல்லிருக்காங்க. அவன் முடியாதுன்னுட்டான். இதனால கிறித்துவத்தில் அவர்கள் நீண்டகாலம் வெற்றியடைய முடியவில்லை. ‘வெள்ளாள ஆசாரமும் குருமார் போதகமும்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்காங்க.கிறித்தவனானாலும் வெள்ளாளர் வெள்ளாளர்தான்.கோயிலில் நாடார்களுடன் சமமாக உட்கார முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. கல்லறையும் தனியா கட்டினாங்க. கச்ச கட்டி பிள்ளைமார்களுக்கு என தனிக் கல்லறைத் தோட்டம் உருவாக்குனாங்க. இதெல்லாம் நடந்திருக்கு.
தீராநதி: சீர்திருத்தக் கிறித்தவம் வந்த பிறகுதான் இதெல்லாம் மாறியதா?
தொ. பரமசிவன்: 18,19ஆம் நூற்றாண்டுகள்ல தாங்க முடியாத நெருக்கடி இருந்தது.நெல்லை மாவட்டத்துல ஏராளமான நாடார்கள் கிறித்துவத்துக்குப் போறாங்க.இந்த அளவுக்கு வேற எந்த மாவட்டத்துலயும் ஒரு சாதியினர் கிறித்தவத்துக்கோ, இஸ்லாத்துக்கோ போனதில்ல. ஏன் போனாங்கன்னா வரலாற்றில் வழக்கமாகச் சொல்கிற பிராமண ஆதிக்கம் இங்க கிடையாது.ஏன்னா இவங்க வாழ்ந்த நிலப்பகுதியில் பிராமணர்களே கிடையாது.வெள்ளாள சாதி ஆதிக்கம்தான் அதிகம் நிலவியது. அத எதுத்துதான் அவங்க போராடுனாங்க. உள்ளூர் வரலாறு எழுதும்போது இத மாதிரி பல தரவுகளுக்கான ஆதாரங்களத் தேடி நாம போக வேண்டியிருக்கு.
தீராநதி: இனவரைவியல் ஆய்வுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
தொ. பரமசிவன்: இன்றைக்கு சாதிகளின் வரலாற்றைப் பத்தி ஆராய்வதுதான் இனவரைவியல் ஆய்வுகள் எனப்படுது. சாதிகள் உண்மையா? பொய்யா என ஆராய்ச்சியாளர்கள்கிட்ட கேட்டா, சாதி உண்மையுமல்ல, பொய்யுமல்ல என்பார்கள். ஏன்னா பரம்பரையா இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள்தானே எந்த ஒரு சாதியினரும். எனவே, மண்ணின் வரலாறு அவங்க சாதிக்குள்ள பாய்ந்திருக்கும், அவங்க வரலாறு மண்ணின் வரலாற்றுக்குள் பாய்ந்திருக்கும், இல்லயா? இதுதான் இனவரைவியல் ஆய்வுகள். ஆராய்ச்சியாளனப் பொறுத்த மட்டுல, சாதி உண்மையுமல்ல, பொய்யுமல்ல.
தீராநதி:ஆனால்,தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்-படும் இனவரைவியல் ஆய்வுகளுக்கும்,இங்கு நடைபெறும் இனவரைவியல் ஆய்வுகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டல்லவா?
தொ.பரமசிவன்:ஆமா.சாதி என்பது இந்தியச் சமூகத்துக்கு மட்டும் peculiar ஆனது.
தீராநதி: சாதிகளில் உட்கூறுகளும் இருக்கின்றன...
தொ.பரமசிவன்: அடிப்படையா சாதி என்பது உள் வட்டத் திருமணங்களுடைய வரம்பு சார்ந்தது. எதுவரை உங்க சாதி இருக்கும்னா எது வரைக்கும் நீங்க கலியாணம் பண்ணிக்கலாமோ அது வரைக்கும் உங்க சாதி. அந்தக் காலத்தில பாளையங்கோட்டையில இருந்து சென்னைக்குப் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ முடியாது. ஏன், இங்கிருந்து 20,30 மைல்கள் தாண்டிக்கூட பெண் எடுத்ததுமில்ல, கொடுத்ததுமில்ல. ஏன்னா, ஒரு பொருளாதார யூனிட்டுங்கறது 10, 15 மைல்களுக்கு உள்ளதான் இருக்கும். எல்லாப் போக்குவரத்தும் அதுக்கு உள்ளதான் வச்சுக்க முடியும். சாதிகளில் உட்பிரிவுகள் என்பது காலனி ஆட்சிக்கு வெகு காலத்துக்கு முன்பு உருவாகியிருக்கு. தொழில்ரீதியாக் கீழ போகும்போது அவங்க சாதியிலயே கீழானவங்க ஆகறாங்க. இவ்வாறு ஒரே சாதியில் பல தொழில் பார்ப்பவர்கள் பல உள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதப் பார்க்கலாம். உழவுத்தொழில் செய்கிறவர், மருத்துவம் பார்க்கிறவர், பூசாரித் தொழில் பார்க்கிறவர், சுண்ணாம்புத் தொழில் செய்கிறவர், இறந்த மாடுகளைக் கொண்டு டானரி தொழிலில் ஈடுபடுகிறவர் என ஒரே சாதியில் பல உட் பிரிவுகளைப் பார்க்கிறோம் இல்லையா? அதப் போலத்தான்.
தீராநதி: இது போன்ற உழைக்கும் சாதியினருக்கு எழுத்தறிவு என்பது எப்போதும் இருந்தது கிடையாதா?
தொ. பரமசிவன்: எழுத்தறிவு என்பது அதிகாரம் சார்ந்தது இல்லையா? அது கீழ் சாதியினருக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. நில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கணக்கப் பிள்ளைகள் எப்போதும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். அதிகாரிகள் எழுத்தறிவு பெற்றவர்கள். மற்ற மக்கள் கையில் தொழில் நுட்ப அறிவு இருந்தபோதும் எழுத்தறிவு பெறாதவர்கள். நமது பாரம்பரிய விவசாயம் குறித்த அறிவுகள் எழுத்தில் ஒருபோதும் பதிவு செய்யப்பட்டதில்லை. நாம வென்ற இடமும் தோற்ற இடமும் அதுதான். தொழில் நுட்ப அறிவு எழுத்தில் வராமல் நினைவுகளிலேயே தங்கித் தங்கி வந்திருக்கிறது. இப்படித்தான், பெருவாரியான மக்கள் எழுத்து தெரியாத குருடர்களாகத்தான் இருந்துள்ளனர்.
தீராநதி: அடித்தட்டு மக்கள் வரலாறு என்பது நினைவுகளில்தான் தொடர்ந்து வந்துள்ளது.
தொ. பரமசிவன்: ஆமா. ஆனா, நில உரிமை பற்றிப் பேசுகிறபோது, possession முக்கியமாகக் கருதுனாங்க. அதாவது அனுபவ பாத்தியதை என்பது முக்கியமாக இருந்துள்ளது.
தீராநதி: தமிழ் அடையாளங்களை முன்னிறுத்துவதில், தேடிக் கண்டுபிடிச்சுப் பதிப்பிப்பது முன்பு பதிப்புத்துறையில் காணப்பட்டது. அதுபோல தொல்லியல்களை, நாட்டார் வழக்காறுகளைப் பதிப்புகளாக்கும் முயற்சி உள்ளதா?
தொ. பரமசிவன்: இல்லை. அதற்கான நிறுவனமோ, அமைப்போ இதுவரை ஏற்படல.நாட்டார் வழக்காற்றியலில் நாட்டார் நம்பிக்கைகள், திருவிழாக்கள் என்று கொஞ்சம் பதிவு பண்றாங்க.ஆனா, ஒட்டுமொத்தமான தமிழ் அடையாளம் கருதி மேற்கொள்ளப்படும் அமைப்போ, நிறுவன முயற்சிகளோ இல்ல. நிறுவனங்களால்தான் இதைச் செய்ய முடியும். எம்.ஐ.டி.எஸ்.மாதிரியான ஆட்கள் கொஞ்சம் கொஞ்சம் வர்றாங்க. ‘அறியப்படாத தமிழகம்’ பற்றி முழுமையாகக் கொண்டு வர வேண்டும். இடதுசாரிகள்தான் இதைச் செய்ய முடியும். அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளவே கொள்ளாது. இன்னமும் சாதியத்தில் உயிர் கொண்டுள்ளதால் அது கண்டுகொள்ளாது. அடையாளம் பற்றிய தன்னுணர்ச்சி பீரோகிரட்ஸ்க்குக் கிடையாது. இருந்திருந்தா உயிர்ப்பலி தடைச் சட்டத்தக் கொண்டு வந்திருக்க மாட்டாங்க.
தீராநதி: இதில் பெரியாரிஸ்டுகள் செய்த தவறு என்ன?
தொ. பரமசிவன்: தவறு செய்தாங்கன்னு எந்த அடிப்படையில் முடிவுக்கு வர்றீங்க?
தீராநதி:தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி வளர்ந்த திராவிடக் கட்சிகள் கண்ணகி போன்ற அடையாளங்களுடன் தன்னைச் சுருக்கிக் கொண்டன இல்லையா?அடித்தட்டு மக்கள் வரலாறுகளை நோக்கி அது விரிவடைந்ததா?
தொ. பரமசிவன்: உயிர்ப்பலி தடைச் சட்டத்தைக் கருணாநிதி கொண்டு வந்திருக்கவே மாட்டார். அந்த அம்மா இருக்கப் போயிதான் கொண்டு வந்தது. அரசு மட்டத்தில், பீரோகிரட்கள் மத்தியில் இன்னமும் மேட்டுக்குடி மனோபாவம் போகவில்லை. அரசு உணவாக இன்னமும் சைவ உணவுதானே உள்ளது. 92 சதவீத மக்களின் உணவான அசைவ உணவு அரசு மட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறதே?
தீராநதி: இந்த மட்டத்தில் தி.மு.க. சமரசம் செய்துகொணடதாகக் கூறலாமா?
தொ. பரமசிவன்: ஆமா, சமரசம்தான் செய்துள்ளது. ஆனாலும், உயிர்ப்பலி தடைச் சட்டம் போன்றவைகளைத் தி.மு.க. கொண்டு வராது என்று நினைக்கிறேன்.
தீராநதி: இன்றைய அரசியல் சூழ்நிலையில், திராவிட இயக்க விழுமியங்கள் எந்த அளவுக்கு எதிர்காலத்தில் காக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதே?
தொ. பரமசிவன்: ஒரு காலத்தில் வேதங்கள், சாத்திரங்கள் அடிமைப்படுத்தியது போல இப்போது மீடியா நம்மை அடிமைப்படுத்தியிருக்கு. இதுக்குக் காரணம் பன்னாட்டு மூலதனம். இன்றைய பிரச்சனை இந்தியாவோட முடிஞ்சு போற பிரச்சனையில்ல. தமிழ்நாட்டின் வெப்பச்சூழலுக்கு அரைக்கால் சட்டைதான் சரியான ஆடை. அப்படீன்னா அரைக்கால் சட்டையை நாகரிகமாக்குவதற்கு மலேசியாவில் அரைக்கால் சட்டையைக் கொண்டு வராங்க. சபாரி ஆடையிலேயே முழுக்கால் சட்டையில்லாமல் அரைக்கால் சட்டை போடறாங்க. தென் அமெரிக்க சட்டையைக் கேலி பண்ணி நாலு நாடகம், வடக்கத்தி ஜவுளி வியாபாரிகள் ரேமண்ட்ஸ், விமல் போன்றவர்களுக்காகப் போடுவார்கள். முழுக்கால் சட்டையை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
தீராநதி: அந்த நபர்களை ‘டவுசர்’ என்றுகூட கேலி செய்வார்கள்.
தொ. பரமசிவன்: ஜவுளித் துறையில் ஏற்படுத்தப்பட்ட மூலதனத்துக்கு அது பாதிப்பு ஏற்படுத்தும். அரைக்கால் சட்டை போட ஆரம்பிச்சிட்டா முழுக்கால் சட்டை நின்னு போகும், இல்லையா? அதனால அதச் செய்ய விட மாட்டாங்க. இன்னக்கி பன்னாட்டு மூலதனத்துக்குத் தேவையான சந்தையை உருவாக்குவதில்தான், கலை இலக்கியத் துறை உட்பட அனைத்துத் துறைகளும் ஈடுபட்டிருக்கு.
தீராநதி: பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பது என்பது உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமாகத்தான் முடியுமா?
தொ. பரமசிவன்: ஆமா. அது பொருளாதார ரீதியான பண்பாட்டு மரபுகளை மீட்டெடுப்பது. இப்ப, திருநெல்வேலியில யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் கப் தேநீர் விடுதிகளில் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆணை போட்டு இப்ப எல்லா இடத்துலயும் பேப்பர் கப்புகள் பயன்படுத்துறாங்க. 50 பைசா கூடன்னாலும் பரவாயில்ல. நாங்க எங்க வீட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் கப்புகளப் பயன்படுத்தறது இல்ல. ஏன்னா... பிளாஸ்டிக் கப்புகள் தீண்டாமையைப் பாதுகாக்கிற ஒரு கருவி. அதே போல, நானோ என் நண்பர்களோ எங்கள் வீடுகளில் மோர், தயிர் போன்றவற்றுக்கு மண் பாண்டங்களைத்தான் பயன்படுத்துகிறோம். இரட்டை மண் குடங்களை வைத்து நடுவில் தண்ணீர் ஊற்றி வைத்து, காய்கறிகளை வைத்தால் பல நாட்களுக்கு வாடாது.வாழைக்காய், தேங்காய்களைத் தொட்டித் தண்ணியில் போட்டு வைக்கும் பழக்கம் இன்னமும் கிராமங்களில் உள்ளது. பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாதே. அப்புறம் பிரிட்ஜ் எதற்கு? மார்கழி மாதத்தில் மறுநாள் கோலத்தில் பூ வைப்பதற்கும் முதல் நாளே மொட்டுகளைப் பறித்து வந்து தொட்டித் தண்ணீரில் போட்டுருவாங்க. மறுநாள் காலையில் மலர்ந்து விடுவதில்லையா? நாட்டார் கலைகளைப் போல நமது பாரம்பரிய மருத்துவமும் முதலில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. இன்றைக்கு 1200 அலோபதி மருந்துகள் இருக்கிறது என்றால், அதில் ஆயிரம் மருந்துகளின் காப்புரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது. அதிலும் பல நோய்களுக்கு மருந்தே இல்ல என்கிறான். அதனால நமது பாரம்பரிய மருத்துவ அறிவுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கிட்டான். நாம நமது நாட்டார் மருத்துவத்தைப் பாதுகாக்கத் தொடங்கணும்.
தீராநதி: அதுபோல நமது சிறு கோயில்கள், நடு கல்கள் குறித்த சொல் கதைகள், பாடல்கள் மறைந்து கொண்டே வருகிறது. அதைச் சொல்வதும், பாடுவதும் கேலியாகப் பார்க்கப்படுகிறது.
தொ. பரமசிவன்: ஆமா. அதுக்குக் காரணமும் மீடியாதான்.
தீராநதி: இன்னும் 30 ஆண்டுகளில் இதெல்லாம் மறைந்து போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதே.
தொ. பரமசிவன்: இதையெல்லாம் முறையாக ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தீராநதி: ‘சென்னை சங்கமம்’ போன்ற நிகழ்வுகள் மூலம் இது பாதுகாக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
தொ. பரமசிவன்: அங்க வேடிக்கை பார்க்கதான் வாரான். எட்டு கால் மாடு இருக்குன்னு சொன்னா அத வேடிக்க பார்க்க வருவான் இல்லையா? அது மாதிரி. இதெல்லாம் வணிகமயமாகத்தான் வாய்ப்பு இருக்கிறது.
நன்றி தீராநதி 06 10
தொ.பரமசிவன் அய்யாவின் இந்த நேர்காணல் பொக்கிசம். நான் தொ.பரமசிவன் அய்யாவின் தீவிர வாசகன். இந்த நேர்காணலை பலமுறை வாசித்தேன். பண்பாடு, நாட்டுப்புறவியல், அழகர்கோயில்,உலகமயமாக்கல் என பலவிசயங்களை கொண்ட ஆழமான கருத்துகள். பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு