13/03/2011

தமிழ் நாட்டு ஆடைகள் - சாத்தன்குளம் அ. இராகவன்

உலகில் மிக நாகரிகமுற்றவர்களாய் இன்று கூறிக்கொள்ளும் ஆங்கிலேயர், ஆடைகட்டத் தெரியாது. அரை நிர்வாணிகளாய் திரிந்தலைந்த காலத்திலே தமிழர்கள் பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். நவமணிகள் இழைத்த பொன் அணிகளைப் பூண்டு வந்தனர். சுருங்கக்கூறின், சிறந்த நாகரிக மக்களாய் விளங்கினர் என்று சொல்லலாம். தமிழர்கள், மிகத் தொன்மையான காலத்திலே ஆடைகளை அணிந்து வந்தனர் என்று நமது தமிழ் அறிஞர்கள் கூறுகின்றார்களேயொழிய, கி.மு. 3000 ஆண்டிற்கு முன்னர் தமிழர்கள் பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் அணிந்து வந்தனர் என்று தக்க சான்று காட்டி எவரும் எழுதியதே இல்லை. காரணம் தொன்றுதொட்டுத் தமிழர்கள் தொன்மையான பொருள்களைப் பாதுகாத்து வைக்கத் தவறியுள்ளனர்.

இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல், இந்திய வரலாற்றுத் துறை அறிஞர் இராசு அடிகள் போன்றவர்கள் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடப் பெருங்குடி மக்கள் கிரேக்கர், உரோமர் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் கட்டிடங்களையும் முத்திரைகளையும் ஆயுதங்களையும் அணிகலன்களையும் பாத்திரங்களையும், ஆடைகளையும் செய்து நனி சிறந்த நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப்பிடித்த மக்களாய் வாழ்ந்தனர் என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில் வணிக அமைச்சரால் நிறுவப்பெற்ற அகில இந்திய கைப்பணிக் கழகம் வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற சீரிய நூலில் ''ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது'' என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பண்டைக் காலத்தில் பாரத நாட்டில் உயிர் ஊட்டும் உழவுத் தொழிலை விட உயர்ந்து நின்ற தொழில் நெசவுத் தொழிலேயாகும் ''செய்யுந் தொழிலெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை'' என்ற தமிழகத்தின் அறவோர்கள் இத்தொழிலை உயர்ந்த அறத்தொழிலாக ஏற்றுப் போற்றி வந்தனர். உழவுத் தொழில் உயிர் ஊட்டுந் தொழில் நெசவுத் தொழில் மானங்காக்கும் தொழில். ஆடை மக்களின் மானத்தைக் காத்து வந்ததோடு மதிப்பையும் உயர்த்தி வந்தது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காவண்ணம் பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ''ஆடையுடையான் அவைக் கஞ்சான்'' ''ஆடையில்லா மனிதன் அரை மனிதன்'' என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை இவைகளை வைத்து அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் மிகத்தொன்மையான காலத்திலிருந்து இடம் பெற்று வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு வண்ண ஆடைகள் இருந்து வந்தன. மகளிர்கள் பட்டிலும், பஞ்சிலும் நெய்த பூந்துகில்கள் பல அணிந்து வந்துள்ளனர். நமது மக்கள் நாற்பதிற்கு மேற்பட்ட வண்ணங்களை அறிந்தனர். இன்று நமது சித்தன்ன வாசல், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது, புத்தம் புதிய வண்ணம் போல ஒளிர் விட்டுக் கொண்டிருப்பதே தக்க எடுத்துக்காட்டாகும்.

முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அதன் உடலும், விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் தரப்பட்டுள்ளன. அவை அடியில் வருமாறு:

1. கோசிகம், 2. பீதகம், 3. பச்சிலை, 4. அர்த்தம், 5. நுண்துகில், 6. சுண்ணம், 7. வடகம், 8. பஞ்சு, 9. இரட்டு, 10. பாடகம், 11. கோங்கலர், 12. கோபடம், 13. சித்திரக்கம்மி, 14. குருதி, 15. கரியல், 16. பேடகம், 17. புரியட்டக்காசு, 18. வேதங்கம், 19. புங்கர்க் கழகம், 20. சில்லிகை, 21. தூரியம், 22. பங்கம், 23. தந்தியம், 24. வண்டை, 25. கவற்றுமடி, 26. நூல் யாப்பு, 27. திருக்கு, 28. தேவாங்கு, 29. பொன்னெழுத்து, 30. குச்சரி, 31. தேவகிரி, 32. காத்தூலம், 33.கிறைஞ்சி, 34. செம்பொத்தி, 35. வெண்பொத்தி, 36. பணிப்பொத்தி.

இஃதன்றி, ''ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை'' என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் அளவிலாதிருந்தன. துகில், வெண்மை நிறம் உடையதாயும் சிவப்பு நிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில், தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் பொலிவதாய் இருக்கும்.''

1.''துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று'' - பரிபாடல்

2. ''புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்'' - பரிபாடல்

3. ''நீலக்கச்சைப் பூராடை'' - புறம்

4. ''கோத்தன்ன தோயாப் பூந்துகில்'' - பெரும்பாண்

5. ''ஆவியன்ன அவிநூற் கலிங்கம்'' -

6. ''பாம்பு பயந்தன்ன வடிவின்

காம்பின் கழைபடு சொலியின்

இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்'' - புறம்.

7. ''நோக்கு நுழை கல்லா நுண்மை யழக்கனிந்து

அரவுரி யன்ன அறுவை'' - பெரும்பாண்

8. ''மிப்பால் வெண்துகில் போர்க்குநர்

பூப்பால் வெண்துகில் சூழப்பக குழல் முறுக்குநர்'' - பரிபாடல்

9. ''புகைவிரித்தன்ன பொங்குறுகி துடிஇ'' - புறம்

மேற்கூறிய சங்க நூற்பாடல்களினின்று முற்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு விளிம்புகளும் முன்றானைகளும் உடலும் உள்ள அழகிய ஆடைகள் இருந்தன என்பது நன்கு பெறப்படுகின்றன.

விளிம்பிலோ, முன்றானையிலோ, உடலிலோ, ஆடைகள் அழகுற்று விளங்க, தாமரை மலர், அல்லி மலர், மல்லிகை மலர், பிச்சிப்பூ, மல்லிகை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்கள் எழில் பெற்று விளங்குமாறு நெய்யப் பெற்றன. இம்மலர்களும் அரும்பும், பிஞ்சும், சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் மட்டுமன்றி வெள்ளிச் சரிகை பொற்சரிகை போன்றவைகளை இணைத்து தகதகவென்ன ஒளிர்விட்டு மின்ன பட்டு நூலிலும், பஞ்சு நூலிலும் ஆடைகள் நெய்யப் பெற்றன. அவைகள் எழில் மிக்கனவாய் கண்ணைக் கவர்வனவாய் விளங்கின.

பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால் நுரை போலவும் தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய எண்ணிலா மெல்லிய ஆடைகளை நெய்தனர். மசூலிப்பட்டினத்திலும், கலிங்கத்திலும் மெல்லிய ஆடைகள் நெய்யப் பெற்றன. அதைப் பார்த்ததும் அத்தகைய மெல்லிய ஆடைகள் - இல்லை - அதைவிட மெல்லிய ஆடைகள் மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் நெய்யப்பெற்று வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பெற்றன.

உரோமர்களும், எகிப்தியர்களும் தமிழக ஆடைகளைக் கண்டு வியப்பெய்தினர். அரசர்களும், அரசிகளும் ஆடைகளின் எடைக்குப் பொன் கொடுத்து விலைக்கு வாங்கினர். ஆடைகளின் விளிம்பு பல்வேறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாய் விளங்கின. விளிம்பில் கொற்கை முத்துகள் இணைக்கப்பட்ட ஆடைகளும், விளிம்பில் தமிழ்நாட்டு பொன் வண்டுகளின் மஞ்சள், நீலம், பச்சை வண்ண இறக்கைகள் இணைக்கப் பெற்றுள்ள ஆடைகளும் வெளி நாட்டார் விரும்பி வாங்கினர். எகிப்திய அரசிகளும், உரோமர் நாட்டு அரசிகளும், உரோமர் நாட்டு பிரபுக்களின் மனைவிகளும் பொற்காசுகளைக் கொடுத்து வாங்கினர். எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்தப் பிரதேங்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளது என்று கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் ''இந்தியப் பட்டின் சாயல்'' என்னும் பொருள் பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983-ல் ஒரு சொற்பெருக்காற்றினார். அதில், ''பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல்.பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார்.

முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற பங்கய மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோம், கிரீஸ், எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போசகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து - 19 நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது. இன்று இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியரையில் இந்திய நாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது.

நமது தமிழகத்தில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமது ஆடைகள் மென்மையிலும், இதர தன்மையிலும், வண்ணத்திலும் சிறப்புற்று அபிவிருத்தி அடைந்துள்ளன. அச்சிறப்புகள் பாண்டிய நாட்டில் ஒரு விதமாகவும், சோழ நாட்டில் மற்றொரு விதமாகவும் உள்ளன. இவைகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து காட்சிக்கு வைப்பது பயனுடைய பணியாகும்.

நன்றி: 2-வது உலகத் தமிழ்நாட்டு கலைக் காட்சி கையேடு....

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக