14/03/2011

பின் நவீனத்துவ கவிதை - முனைவர் க. நாகநந்தினி

தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார்.

நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ''மணிக்கொடி'', ''எழுத்து'', ''நடை'' போன்ற பத்திரிகைகள் தமிழில் கவிதை வடிவம் பெறுவதற்கான சூழலை விமர்சனங்கள் எழுந்தபோதும் உருவாக்கித்தந்தன.

வசனம் நடந்தால் உரைநடை, நடனமாடினால் கவிதை என்றும், அழகிய சொற்கள் அழகிய வரிசையில் நிற்றல் என்றும், உணர்ச்சிகளின் பிரவாகம் என்று கவிதை பல்வேறு நிலைகளில் விளக்கப்பட்டது என்றாலும் கவிதை எழுதப்பட்ட போது அதற்கான காரணம் பின்வருமாறு கூறுப்பட்டது.

''வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சோர்ந்தவைதான். வசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. தம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப்போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது. என்ற ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. மனதுடன் தொடர்புடைய அகவய அனுபவமாக வெளிப்பட்ட கவிதை மரபில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட அவநம்பிக்கை, மனமுறிவு, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் புறநிகழ்வால் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட ஆற்றாமை, இதுவரை கட்டிக்காத்த மதிப்பீடுகளின் சரிவு, மேற்கத்திய இலக்கியம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்க்கவிஞர்களையும் எழுதத் தூண்டியது.

''வாழ்வின் வினையேதும்

அறியாத இருள் ஊடே

உலகத்தின் சாலையில்

ஊடாகும் சாலையில்

ஊடாகும் நிழல்கள்'' - ந. பிச்சமூர்த்தி

''திருமனிதா

தெருவில் சாவோலம்

மிக நெருங்கி வருகிறது.

ஓடு இருட்டுக்கு காட்டுக்கு

எங்காகிலும் ஓடு

உலகத்தைவிட்டு - எஸ். வைத்தீஸ்வரன்

பின்னாலும் போகவில்லை

முன்னாலும் போகவில்லை

நடுக்கிணற்றில் நிகழ்காலம் - ச. மணி

வாழ்க்கையின் மீது கொண்ட இத்தகைய நம்பிக்கையின்மை, எங்கிருந்து பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் வெல்லேன் கூறுகிறார்.

''நம்பிக்கை

அது

இருண்டவானத்திற்குள்

ஓடி ஒளிந்துகொண்டது''

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியே இதற்குப் பதிலாகும்.

அதன்பிறகு வானம்பாடி இயக்கம் முதல் கவிதை வெகுஜன மக்களுக்கும் புரியும் வடிவமானது. வானம்பாடி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு கவிதை எழுதுவதாக அறைகூவியது.

''இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்'' எனத் தன் சமகால விடுதலை விரும்பிகளுக்கு வருங்காலப் பொதுமை விரும்பிகளுக்கும் வெடிப்புறப் பேசியும், நயம்படச் சொல்லியும், அறைகூவல் விடுத்த தமிழ்ச்சாதியின் நிர்மாணச் சிற்பியும், ஆசியாவின் ஒப்பற்ற மனிதாபிமானிகளுள் ஒருவனும் இருபதாம் நூற்றாண்டின் உலகமாக கவிஞர்களுள் ஒருவருமான பாரதிக்கு, அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள்'' என்று வானம்பாடிக் கவிதை இயக்கம் தொடங்கியது.

நம்

கரங்களின் உழைப்பைக்

காலம் அலட்சியப் படுத்தும் போது

நிறங்களின் சிவப்பையே

நாம்

நிச்சியக்கமுடியும்''

என்ற சிலப்புச்சிந்தனை, பொதுவுடமை கொள்கை முழக்கமாக வெளிப்பட்டது கவிதை. அதன் பிறகு படிமக் கவிதை, உருவக் கவிதை, எள்ளல் கவிதை என்று கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்பாடாக கவிதை உருவெடுத்தது.

எண்பதுகளில் நடுவில் கவிதை என்பது பாரதி எழுத்து ரீதியான ஒரு பொருள் என்று சொல்கிற நிலையில் புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் கவிஞன் என்ற மனிதன் ஆளுமை கொண்டவனாக தரிசனம் மற்றும் உள்ளொளி கொண்டவனாக சித்தரிக்கப்படவில்லை. படைப்பாளியை விட படைப்பே முக்கியத்துவம் பெற்றது. எனவே, படைப்பு மொழி பற்றிய சிந்தனையும் மாறியது. தினசரி மொழியின் பெரும்பாலான கூறுகள் பத்திரிக்கைச் செய்தி, விளம்பர மொழி, சின்னத்திரை, பெரியதிரை, நாடகம், நகைச்சுவைமொழி, வெகுஜன வார மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் என்ற பல்வேறு தளங்களில் மொழி தன் கூர்மை மழுங்கிய நிலையில், இந்த மொழி எனக்குத் தேவையில்லை என்றனர் சில படைப்பாளிகள், தன் சுயம் இழந்த மொழித்தளத்தை மீறிய மொழித்தளத்தில் கவிதை எழுத நினைத்த இவர்கள் சாதாரண வாசகரின் பங்கு பற்றி சிந்தனை மறந்துபோய் கவிதையை சிக்கலான மொழியில் எழுதினர். அமைப்பியல் ஆய்வாளர் கூறுவதன்படி கவிதைமொழி சொல்லாடல்களாக உருவாகிறது. கவிதை மொழியைப் புதைநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக எதிர்கவிதை, காண்கவிதை தொடர்பற்ற வார்த்தை வடிவம் சொல்லாக்க கவிதை வடிவம் போன்ற மாற்றங்கள் கவிதை வடிவத்தில் ஏற்பட்டன.

இதற்கடுத்த காலகட்டத்தில்தான் பின்நவீனத்துவ மரபு எழுகின்றது.

கவிதையில் மையமிழந்த தன்மையும் (ஆசிரியன் இறந்துவிட்டான்) பல குரல்களும், வாசிப்பு அனுபவத்தை பல்வேறு அனுபவங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கவிதை என்பது ஒரு கட்டமைப்பு என்றே பார்க்கப்படும். ஒரே கவிதையில் ஒன்றுக்கொண்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைப்பிக்கப்பட வேண்டிய அவசியமிராது.

கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு அவ்வளவுதான் என்று நவீன கவிதை இயல்பு குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கவிதை வேறெதையும் குறிக்கவில்லை

தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம்

சொற்களால் உருவாகவில்லை. சொற்களின்

இடைவெளியில் - மௌனங்களில் தோன்றியது

என்று விளக்கம் தரப்பட்டது.

''புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது

நிஷ்சிந்தையில் மலரும் ராட்சதக் காளான்

மௌனநிறம் போல

என் மூளையின் பின்னாலே நினைவூட்டாது

ஏதுமின்றி

என் மேலதீத நானிடமே

துமில்லாமல்...'' ஞாபகச்சிற்பம்

என்ற கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதிய பிரம்மராஜன் கதைத்தளத்தை திறந்த வெளிக்கு எடுத்துச் செல்கிறார். அதாவது கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து இவைபேசும் பொருட்கள், நிலைகள், மௌனங்கள் ஆகியவை சிதையாமல் அமைவதற்கு இவற்றின் திறந்தவெளி அமைப்பே காரணமாகும். இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள பிறதுறை அறிவும், பயிற்சியனுபவமும் தேவையாகவுள்ளது. இத்தகைய முயற்சிகளை புரியாத கவிதையென்று ஒதுக்க முடியாது.

நன்றி: தற்கால தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக