இசையும் நடனமும் மிகப் பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக விளங்கி வந்துள்ளன. இசைக்கு முந்தியது நடனம் என்று கூறுகின்றார்கள். அனைவரும் பாடும்பொழுதும், ஆடும்பொழுதும் தங்களது நெஞ்சையழுத்தும் உணர்ச்சிப் பாரத்திலிருந்து விடுதலை பெறுகின்றார்கள். விழாக்கள், திருமணங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்றதான பாட்டும் ஆட்டமும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தொடக்க காலத்தில் தொழில் முறையான ஆட்டக்காரர்கள் இருந்தது இல்லை. எல்லாமே ''சமூக நடனம்'' என்ற அளவில் தான் இருந்தது. நாட்டுப்புற இசை நாட்டுப்புற மக்களால் காலம் காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றது. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையோடு நாட்டுப்புற இசை பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கின்றது.
நாட்டுப்புற மக்கள் தண்ர் சுமந்து செல்கிறபோதும், நெல் குற்றும் போதும், உழவு சம்பந்தமான செயல்களைச் செய்யும் போதும் நாட்டுப்புற இசையும், ஆட்டமும் இடம் பெறாமல் இருப்பதில்லை. நாட்டுப்புற மக்கள் ஓய்வாக இருக்கும் போது, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ''புல்லாங்குழல்'' வாசிக்கின்றார்கள். திண்ணையில் உட்கார்ந்து உடுக்கையடித்து தங்களுக்குப் பிடித்தமான நாட்டுப்புறத் தெய்வத்தின் மீது பாட்டுப்பாடுகின்றார்கள். தப்பு, திடும், நகார், பம்பை, உறுமி, கிணுக்குச்சட்டி, கஞ்சிரா, மேளம், மண்மேளம், முதலிய நாட்டுப்புற இசைக்கருவிகளை வாசிக்கும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் இன்றும் காணப்படுகின்றது. நாட்டுப்புற இசையும், நாட்டுப்புற இசைக்கருவிகளையும், கிராமப்புற மக்கள் அழியாமல் பாதுகாத்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நாட்டுப்புறத் திருவிழாக்களின் போது நாட்டுப்புற இசையைக் கேட்கலாம்.
நாட்டுபுற இசை:-
இசையில் இரு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுப்புற இசை மற்றொன்று சாஸ்த்திரீய இசை. நாட்டுபுற இசை நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது. மரபு வழியாகப் பரவி வரும் இசையையும், செவி வழியாகப் பரவி வரும் இசையையும் ''நாட்டுப்புற இசை'' என்று பொதுவாகக் கூறி வருகின்றனர். நாட்டுப்புற இசை என்பது செவி வழியாகப் பரவுவது; எழுதப்படாதது; அச்சிடப்பட்ட இசை அலகுகளை அடிப்படையாக வைத்து இசை அமைக்கப்படாதது; நினைவாற்றலால் அமைவது ஆகும்.
இதற்கு மாறானது, சாஸ்த்திரீய இசை, இது கற்றோர் வழி மரபினது. திட்டமிடல் தன்மையும் கட்டுக்கோப்பும் உண்டு. பாடுவோர், கேட்போர் என்று நிகழ்த்து முறையில் இது கற்றோரைத் தளமாகக் கொண்டது. சாஸ்த்திரீய இசை பெரும்பாலும் அரங்குகளில் நிகழ்கிறது. நாட்டுப்புற இசை பெரும்பாலும் திறந்த வெளி அரங்குகளில் நிகழ்த்தப் பெறுகின்றது. பாடுவோர் - கேட்போர் என்ற நிலையில் இது நாட்டப்புற மக்களைத் தளமாகக் கொண்டது.
1. நையாண்டி மேளம்
மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம். "கோவில் மேளம்'' திருக்கோவில் வழிபாடு, சுவாமி புறப்பாடு, சுவாமி திருஉலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும், ''கோயில் மேளம்'' பயன்படுகிறது. நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. திறந்த வெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்.
நையாண்டி மேளத்தின் அமைப்பு:-
நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். நையாண்டி மேளத்தில் சில போது மூன்று தவில், நான்கு தவில் என்று சேர்த்துக் கொள்வதும் உண்டு. ஆயின் இரண்டு நாத சுரம் மட்டுமே இடம் பெறும்.
நையாண்டி மேளத்தின் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும்போது ''காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.
நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ''ஆமந்திரிகை என்று கூறுகின்றது''. பழந்தமிழர் இதனைப் ''பல்லியம்'' என்று குறிப்பிட்டனர். இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.
2. கிராமீய நடனங்கள்:-
நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வருகின்றனர். கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, கும்மி, ஓயிலாட்டம் முதலியன தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்கள் ஆகும். தமிழ்நாடு கிராமீயக் கலைகளின் களஞ்சியமாகத் திகழ்ந்து வருகிறது எனலாம். கிராமீயக் கலைகளின் கிராமீய மக்களின் வாழ்க்கை. அதன் இன்ப துன்பங்களைத் தெளிவான மொழியில் விளக்குகின்றன. மக்களுடைய எளிய உணர்வுகள். தொல்லை தொடரும் அவர்களது அன்றாட வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் ஊடே இயற்கையாக நிரம்பி வழியும் மகிழ்ச்சிப் பெருக்கே இந்தக் கிராமீய நடனமும் இசையும். இக்கிராமீய நடனங்கள் மிக எளிமையானவை; கலை மதிப்புடையவை. தமிழ்நாட்டில் உயர்தரமான, கிராமீய நடன வடிவங்கள் மலிந்து கிடக்கின்றன. சங்கப் பண்பாட்டைப் புலப்படுத்தும் கிராமீய நடனங்கள் சில இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் சிலவகை கிராமீய நடனங்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
3. கரகாட்டம்
சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற குடக்கூத்திலிருந்தே இன்றைய ''கரகம்'' தோன்றியிருக்க வேண்டும். கிருஷ்ணன் ஒரு முறை மண்ணாலும்; உலோகத்தாலும் செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாடியதாகப் புராணக் கதைகள் எடுத்துரைக்கின்றன. ''கரகம்'' என்ற ஆட்டத்திற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் ''அம்மன் கொண்டாடி'' இன்றும் வழக்கில் உள்ளது. கிராமப்புறங்களில் காளியம்மன், மாரியம்மன் முதலிய நாட்டுப்புற தெய்வவிழாக்களின்போது ஆற்றங்கரைகளிலிருந்தோ, நதி தீரங்களிலிருந்தோ சக்தி கரகத்தை மலர்களால் அலங்கரித்துக் கொண்டு வருவர். ''சக்தி கரகம்'' எடுத்து வருபவர் சாமியாட்டம் ஆடிக்கொண்ட வருவர். தொடக்க காலத்தில் ''கரகம்'' வழிபாட்டோடு சடங்கோடு தொடர்புடையதாக இருந்தது. காலப்போக்கில் ''கரகம்'' சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூக நடனமாக தொழில்முறை ஆட்டமாக மாற்றம் பெற்றது எனலாம். ஏனைய கிராமீய கலைகளைப் போலவே நாட்டுப்புற மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தவும், பொழுது போக்கிற்காகவும் கரகாட்டத்தை ஆடி வருகின்றனர் எனலாம்.
நாட்டுப்புறத் திருவிழாக்களின் போதும், முருகன் கோவில் விழாக்களின் போதும் கரகாட்டம் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பழனி முருகன் கோவிலில் நடைப்பெறும் தைப்பூசம், பங்குனி, உத்திரம் முதலிய பெருவிழாக்களின் போது காவடிக் குழுவினர். கண்டு களிப்பதற்காக கரகாட்டத்தை உடன் அழைத்து வருகின்றனர். கொங்கு நாட்டு காவடிக் குழுவினர். பழனிக்கு காவடி எடுத்து வரும் போது பெரும் பொருட்செலவில் நையாண்டி மேளக் குழுவினரையும், கரகாட்டக் குழுவினரையும் உடன் அழைத்து வருகின்றனர்.
கரகாட்ட அமைப்பு முறை:-
பெரும்பாலான நாட்டுப்புற ஆட்டங்கள் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. அதைப் போலவே கரகாட்டமும் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றது. கோவில் வளாகங்களிலும் திறந்தவெளி அரங்குகளிலும் கரகாட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்கள் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கரகாட்டத்தைக் கண்டு களிக்கின்றார்கள். கரகாட்டத்தில் நையாண்டி மேளம் முக்கிய இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் முக்கிய இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் இசையைத் தொலைத் தூரத்தில் கேட்டாலே அங்கு கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். கரகாட்டத்தோடு பல துணை ஆட்டங்களும் சேர்ந்த நிகழ்த்தப்பட்ட வருகின்றன. கரகம், குறவன், குறத்தி, பபூன், காவடியாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என்ற முறையில் கரகாட்டம் கிராமப்புறங்களில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது.
ஆட்ட உடை:-
கரகாட்டம் ஆடத்தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்கள். வண்ண வண்ண உடைகளை ஆட்டத்தின் போது அணிந்து கொள்கிறார்கள். கரகாட்டம் ஆடுவதற்கென்றே இவர்கள் தனி உடையைத் தைத்து வைத்துக் கொள்கிறார்கள்.
செம்பு அலங்காரம்:-
கரகச் செம்பை வண்ணக் வண்ணக் காகிதங்களால், அலங்கரித்துக் கொள்கிறார்கள். செம்பின் உச்சியில் கிளி பொம்மை வைத்து அழகு படுத்துகின்றார்கள். சில நேரங்களில் கரகச் செம்பில் வேப்பிலைக் கொத்து வைத்தும் கரகாட்டம் ஆடுகின்றார்கள். தொடக்க காலத்தில் மண் கரகங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. மண் கரகங்களுக்குப் பதிலாக பித்தளைச் செம்பைத் தற்போது கரகமாகப் பயன்படுத்துகின்றனர். கரகாட்டக் குழுவினர் ஆடத் தொடங்குவதற்கு முன்னர் நையாண்டி மேளத்தை தொட்டுக் கும்பிட்ட பிறகே கரகாட்டம் ஆடத் தொடங்குகின்றனர். முதலில் இரு பெண்கள் கரகத்தை தலையில் வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகின்றனர். சுமார் ஒரு மணி நேரம் தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடி முடிந்ததும் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெறுகின்றது. குறவன்-குறத்தி ஆட்டம் முடிந்ததும் ''பபூன்'' அல்லது கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது.
பின்னர் மயிலாட்டம் 1/2 மணி நேரம் இடம் பெறுகின்றது. ஆண் ஒருவர் மயில்போல வேடம் அணிந்த கொண்டு மயிலாட்டம் ஆடுகின்றார். மயிலாட்டம் ஆடும் போது ''மயில்'' பற்றிய பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர். மயிலாட்டம் முடிந்த பிறகு அரை மணி நேரம் மாடாட்டம் இடம் பெறுகின்றன. பின்னர் தொடர்ந்து கரகாட்டம் இடம் பெறுகின்றது.
கரகாட்டத்தின் முடிவில் கரகம் ஆடும் கலைஞர்களுடன் குறவன் - குறத்தி, பபூன் முதலிய அனைவரும் சேர்ந்து கையில் வண்ணக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு ஒயிலாட்டம் போல ஒரு நடனம் ஆடுகின்றனர். கரகாட்டத்தில் பல துணை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அ. வாழைக்காய் வெட்டுதல்:-
கரகாட்டம் ஆடிக் கொண்டிருக்கும்போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து விடுகின்றனர். கரகாட்டம் ஆடுபவர் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக் கொண்டு, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுகின்றார். இதனைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர்.
பல்லால் ஊசி எடுத்தல்:-
தரையில் ஊசி வைக்கப்பட்டு இருக்கும். கரகாட்டம் ஆடுபவர், ஆட்டம் ஆடிக்கொண்டே தலையில் இருக்கும் கரகம் கீழே விழாமல், பல்லால் கடித்து ஊசியை எடுப்பார். இதன் போது பார்வையாளர்கள் உற்சாகமடைந்து கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.
பித்தளைத் தட்டு ஆட்டம்:-
கரகாட்டம் ஆடுபவர் அகன்ற பித்தளை தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள்.
பார்வையாளர்கள்:-
கரகாட்டம் இரவு எட்டு மணிக்குத் தொடங்கி, அதிகாலை ஆறுமனி வரை நடைபெறுகின்றது. விடிய விடிய கரகாட்டத்தை நடத்துகின்றார்கள், கிராம மக்கள் அனைவரும் திரளாக வந்து கூடி, விடிய விடியக் கரகாட்டம் பார்க்கின்றனர். கிராமப்புற மக்கள் நையாண்டி மேளத்திற்கும், கரகாட்டத்திற்கும் பேராதரவு தந்து வருகின்றார்கள். கிராமப்புற மக்களால் தான் நையாண்டி மேளக் கலைஞர் ஒருவர் பேட்டியின் போது தெரிவித்தார். கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாரும் எழுந்து செல்வதில்லை. கரகாட்டக் கலைஞர்களுக்குப் பார்வையாளர் சன்மானம் வழங்குகின்றார்கள் என்றும் தவில் கலைஞர் தெரிவித்தார். கிராமப்புறங்களில் நோன்பு கொண்டாடுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே நையாண்டி மேளமும் கரகாட்டமும் இடம் பெற வேண்டும் என்று தீர்மானித்து விடுகின்றார்கள்.
நையாண்டி மேளமும் காவடியாட்டமும்:-
முருகப் பெருமானுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்ற பக்தர்களின் பழக்கத்திலிருந்துதான் காவடி எடுக்கும் பழக்கம் தோன்றியது எனலாம். காணிக்கைப் பொருட்களை மரத்தண்டின் இருமுனைகளிலும் கட்டிக்கொண்டு சென்ற வழக்கத்திலிருந்தே காவடியாட்டம் தோன்றியது. காவடி எடுத்துச் செல்வோர் முருகன் புகழைப் பாட்டாகப் பாடிக் கொண்டு செல்கிறார்கள். காவடிப் பாடல்களைக் கூட்டாகச் சேர்ந்து பாடிக்கொண்டு செல்கின்றார்கள். காவடி எடுத்தலோடு தொடர்புடைய காவடிச் சிந்துப் பாடல்களும் தோன்றின. காவடு எடுத்தல் எனும் சடங்குடன் பாட்டும் ஆட்டமும் இணைந்து கொண்டன.
காவடி எடுத்துச் செல்வோரில் திறமையுள்ள சிலர் காவடி ஆட்டக் கலையின் நுணுக்கங்களை அறிந்து கெண்டு அதைத் தொழில் முறைக் கலையாக ஆட ஆரம்பித்தனர். தொழில் முறைக் கலைஞன் காவடியைத் தன் தோள்களில் சுற்றி வரச் செய்வான் முதுகில் காவடியை உருளவிடுவான். முதுகிலிருந்து மெல்ல மெல்ல காவடியைத் தலைக்குத் கொண்டு வருவான். தலையில் நீண்ட நேரம் சுழற்றி ஆடுவான்.
பார்வையாளர்கள் காவடியாட்டத்தைக் கண்டு மெய்மறந்து நிற்பார்கள். கோவை மாவட்டத்தில் தொழில் முறையாகக் காவடியாட்டம் ஆடும் கலைஞர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் கனமான பெரிய மயில் பீலிக் காவடிகளை வைத்து ஆடுகின்றனர். நையாண்டி மேளம் தான் காவடியாட்டத்திற்குப் பின்னணி இசையாக அமைகின்றது. இதன் போது காவடிக் கொட்டு வாசிக்கப்படுகிறது.
காவடியாட்டம் உச்ச கட்டத்திற்குச் செல்லும் போது நையாண்டி மேளமும் உச்சக்கட்டத்திற்குச் செல்லும். காவடிச் சிந்துப் பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர். கரகாட்டத்தில் கால் வைப்பு முறையும், காவடியாட்டத்தின் கால் வைப்பு முறையும் ஏறக்குறைய ஒன்று போலத்தான் இருக்கும். தொழில் முறைக் காவடி ஆட்டக் கலைஞர் தலையில் காவடியை வைத்து ஒரு மணி நேரம் சுழன்று சுழன்று ஆடுகின்றார். தொழில் முறைக் கலைஞர்கள் ஆடுகின்ற காவடியாட்டமும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஆட்டம் ஆகும்.
நையாண்டி மேளமும் பொய்க்கால் குதிரையாட்டமும்:-
தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் நாட்டுப்புற ஆட்டம் பொய்க்கால் குதிரையாகும். கோயில் திருவிழாக்களிலும், திருமண ஊர்வலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகின்றது. மூங்கில் தப்பைகளாலும், அட்டையாலும் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட அழகிய குதிரைகள் ஆட்டம் ஆடும் இருவர் அணிந்து கொண்டு, தங்களது கால்களில் மரக்கட்டைகளை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுபவர்கள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்காமல் பொய்க்கால்களில் நின்று கொண்டு ஆடுவது தான் இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். நையாண்டி மேளத்தின் இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுபவர்கள் கால்களைப் பின்னிப் பின்னி ஆடுவார்கள்.
தொடக்க காலத்தில் முதன் முதலில் தஞ்சாவூரில் இக்கலை தோன்றிப் பின்னர் பிற பகுதிகளுக்குப் பரவியது என்று கூறுகின்றனர். பொய்க்கால் குதிரையாட்டத்தில் ராஜா-ராணி வேடம் அணிந்து கொண்டு ஆடும் ஆட்டமே பிரதானம் ஆகும். குதிரையின் மீது ராஜா ஏறி அமர்ந்து கொண்டு ராணியின் அருகில் ஆட்டம் ஆடிக்கொண்டு வருவதும். ராணி விலகிச் செல்வதும் கண்டு மகிழத்தக்கதாகும். ராஜாவின் வருகை, அவரது மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்ற ஆட்ட வடிவமாக இவ்வாட்டம் விளங்கி வருகின்றது. சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்தே ஆடப்பட்டு வருகின்ற கலை வடிவம் என்ற பாரம்பரியம் இந்த ஆட்டத்திற்கு உண்டு. பொய்க்கால் குதிரையாட்டம் பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டக் கூடிய உற்சாகத்தில் திளைக்கச் செய்யக் கூடிய ஆட்ட வகையாகும். நையாண்டி மேள இசைப் பின்னணியுடன் வளர்ந்து வரும் கலைகளென கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களைக் குறிப்பிடலாம்.
திரைப்படம், தொலைக்காட்சி முதலிய பொழுது போக்கு சாதனங்கள் கிராம மக்களின் சமூக வாழ்க்கையைப் பாதித்துக் கொண்டு வந்தாலும், நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய பாரம்பரிய கலை வடிவங்கள் மண்ணின் மனத்தோடு செழித்து வளர்வதற்கு கிராம மக்கள் துணைபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நன்றி: திறனாய்வு சில புதியதேடல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக