28/03/2011

தொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியவகைகள் - மு.குமரகுரு

வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களின் எச்சங்களைத் தாங்கியுள்ள தொல்காப்பியத்தில் பழந்தமிழரின் பண்பாடு தொடர்பான செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் பண்ணத்தி, பிசி, முதுமொழி, பொய்ம்மொழி, நகைமொழி, நிலக்கடவுள்கள் (வழிபாடுகள்) போன்றவை யாவும் நம் தமிழ்ப் பண்பாட்டில் நிலவி வந்த, எழுதப்படாத இலக்கிய வகைகள் ஆகும். இதனை உரையாசிரியர்கள் கூறும் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

பண்ணத்தி (இசை):-

ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன்பே நாட்டுப்புற இலக்கியம் தோன்றியது. ''ஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்பே கதைகளும், பாடல்களும் தோன்றிவிட்டன'' என்று நா. வானமாமலை கூறுவார். தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி என்பது நம் நாட்டுப்புற மக்களிடம் இயல்பாகப்பிறந்து வளர்ந்து வந்த இசை வகையாகும். இதனைப்,

''பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின்இயல பண்ணத்தியியல்பே''

என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.

இந்த நூற்பாவிற்கு உரை விளக்கம் தந்த பேராசிரியர், பாட்டின் ஊடுகலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும், உரையும் போலச் செய்யப்படுவன என்று கூறுவார். மேலும் மெய்வழக்கு அல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப என்றும், இஃது எழுதும் பயிற்சியற்ற புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்றும் கூறுவர். இவற்றில் மெய்வழக்கு அல்லாத புறவழக்கு, எழுதும் பயிற்சியற்ற புற உறுப்புப் பொருள் ஆகிய இரண்டும் நாட்டுப்புற மக்களின் பாடல் நிலைகளைக் குறிப்பிடுவன என்று கூறலாம். இதில் கி.வா. ஜகந்நாதன் மெய்வழக்கு என்பது உண்மை வரலாற்றையும், புற வழக்கு என்பது கற்பனையையும் குறிக்கும் என்பர். இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் புறவழக்கு என்பதும் கி.வா. ஜகந்நாதன் குறிப்பிடும் புறவழக்கு என்பதும் நாட்டுப்புறப் பண்பாட்டைக் குறிக்கின்றது எனலாம். நாட்டுப்புறவியல் அறிஞர்கள் பலர் பண்ணத்தி என்பதற்கு இசை என்ற பொருளைப் பயன்படுத்தினாலும், பண்ணத்தி என்பது நாட்டுப்புறப்பாடலை குறிக்கவில்லை அது தொல்காப்பியர் குறிப்பிடும் எண்வகை வனப்புகளில் ஒன்றாகிய புலன் என்பதே நாட்டுப்புறப்பாடலைக் குறிக்கின்றது என்ற முரண்பட்டக் கருத்தினை முன் வைப்பார்.

தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப புலனுணர்ந் தோரே (தொல்.செய்-553)

என்ற நூற்பாவிற்கு உரை எழுதிய பேராசிரியர் தெரிந்த மொழி என்பதற்குப் பாடபேதமாகச் சேரிமொழி என்று குறிப்பிடுவார். இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் சேரிமொழி என்பது நாட்டுப்புறமக்களின் இசை மொழி என்றே கூறலாம். இவ்விசை மொழிக்குத் தொல்காப்பியர் அடிவரையறையையும் இலக்கணமாகக் கூறியுள்ளார். இதனை,

அதுவே தானும் பிசியோடு மானும்

அடிநிமிர் கிளவி ஈராறாகும். (தொல்.செய்-174)

என்ற நூற்பாவில், பிசியோடு ஒத்துவருவது பண்ணத்தி என்றும், அது பன்னிரண்டு அடிகளில் வரும் என்பதும் அதற்கு மேல் வந்தாலும் நீக்குதற்கு உரித்தன்று என்றும் கூறுகின்றார். ஆனால் இக்கருத்துக்கு உடன்படாத சொ. கந்தசாமி என்பவர் பிசி என்ற விடுகதை இரண்டடி அளவில் வருவதால் இதுவும் இரண்டடியாகவே வரும் என்று கூறுகின்றார்.

இடைச்சங்ககாலத்திலேயே தமிழ்ப்பண்கள் இவ்வாறு வளம் பெற்றிருந்த நிலையில், கடைச் சங்ககாலத்தில் பண் என்ற சொல்லைத் திருவள்ளுவர் ஓரிடத்தில் எடுத்தாண்டுள்ளார்.

பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம்

கண்ணோட்ட மில்லாத கண் (குறள்-573)

இக்குறளில் உலகியல் வாழ்க்கைக்கு அடிப்படையான கண்ணோட்டம் என்ற ஒன்றினை அவர் விளக்கியுள்ளார். அதன் மூலம் மக்களுக்கு நன்கு தெரிந்த பண்ணை உவமையாகக் காட்டித் தெரியாத ஒன்றை விளக்கக் கருதியுள்ளார். எனவே வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவுக்குப் பண் நாடறிந்த ஒன்றாக இருந்துள்ளது எனக்கருதலாம்.

பிசி (விடுகதை):-

மரபு வகை நாட்டார் வழக்காறுகளுள் நிலைத்த தொடர் அமைப்புடையது விடுகதையாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பிதிர், புதிர், வெடி என்ற பல்வேறு பெயரிட்டு வழங்கப்பட்டுவருகின்றது. நெல்லை மாவட்டத்தார் விடுகதையை அழிப்பாங்கதை என்று கூறுவார்கள். அதாவது விடுப்போரின் விடுகதைக்கு, கேட்போரின் மறுபதில் என்பதே அதன் பொருள். பிதிர், புதிர், வினோத வார்த்தை, எழுத்துக்கூட்டு, விகடப்பா, ஒளிவடிவ புதிர், சொற்புதிர், நொடிவினா, விடுகதை எனப் பலபெயர் இட்டு வழங்கும் விடுகதையைத் தொல்காப்பியர்,

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவ கிளர்ந்த துணிவினானும்

என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே (தொல்.செய்-169)

தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பது விடுகதையே என்பதை அறிய உரையாசிரியர்களான இளம்பூரணரும், பேராசிரியரும் தரும் விடுகதைச் சான்றுகள் மூலம் தெளியலாம்.

(இளம்) அச்சுப் போல பூப்பூக்கும்

அமலே யன்ன காய்காய்க்கும் - பூசனிக்கொடி

(பேரா) பிறை கவ்வி மலை நடக்கும் - அது யானை

மேற்கண்டவாறு தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் சான்றுகள் கொண்டு பிசி என்பது விடுகதையே என்றும், இது தமிழர் வாழ்வில் பொழுதுபோக்கிற்காகவும், அறிவுத்திறனைச் சோதிப்பதற்காகவும் போடப்பட்டு வந்தன என்றும் கூறலாம்.

பொய்மொழி (கதை):-

பண்டைய மக்களிடையே கதைசொல்லும் ஆர்வமும், கதைகேட்கும் ஆர்வமும் இருந்தன என்பதைத் தொல்காப்பியரது இலக்கணம் கூறுகின்றன. இதனைப்,

பொருளோடு புணராப் பொய்ம் மொழியானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும் (தொல்.செய்-166)

என்ற நூற்பாவால் அறியலாம்.

இந்நூற்பாவிற்கு உரை கண்ட பேராசிரியர் ஒரு சிறுகதையைக் கூறி விளக்கம் தந்துள்ளார். ''யானையும், குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இன்ன இடத்திற்குப் போய் இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் அதன்பால் அடங்குவன'' என்பார். இதனைப் பார்க்கும் போது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழக்கில் வந்த கதைகள் தொல்காப்பியத்திலும் வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

முதுமொழி (பழமொழி):-

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வாய்ந்த மக்களிடமும், நாகரீகத்தில் பின்தங்கிய இனக்குழு மக்களிடமும் சுருங்கிய வடிவு கொண்ட, உருவகப் பண்புடைய அறிவுக் கூர்மையான பழமொழிகள் காணப்படுகின்றன. அத்தகைய பழமொழிகள் தொல்காப்பியத்திலும் பிரதிபலித்துள்ளன. இதனை உணர்த்த வந்த தொல்காப்பியர் ''முதுமொழி'' என்ற சொல்லால் குறிப்பிடுவார். இதனை,

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்தப் பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏதுநுதலிய முதுமொழி.

என்ற நூற்பாவால் அறியலாம்.

''கூறியதாய்ச் சுருங்கி, விழுமியதா எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்தப்பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின் அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி'' என்று இந்நூற்பாவிற்கு பேராசிரியர் உரை எழுதுவார். நூற்பாவில் சுருக்கமும் நுண்மையும், ஒளியுடைமையும், மென்மையும், குறித்தப்பொருளை அழுத்தமாய் விளக்குவதற்கும், ஒரு சூழலில் காரணங்காட்டுவதற்கும் இப்பழமொழிகள் இன்றியமையாததாகின்றன. இதனால் பழமொழிகள் வழங்கக்கூடிய சமுதாயச் சூழலைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் எனலாம்.

விரிச்சி (நிமித்தம்):-

மக்கள் பார்க்கும் நம்பிக்கைகளுள் சகுனம் பார்த்தலும் ஒன்று. இதனைத் தொல்காப்பியர் விரிச்சி என்ற சொல்லால் குறிப்பார். தலைவியைப் பிரிந்த தலைவன் வருவதற்கும், போர் தொடங்குவதற்கும் முன்னும் சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்ததைப் பழந்தமிழர் வாழ்வில் காணமுடிகின்றது.

படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சியும் (தொல்.புறத்-3)

உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும் (தொல்.புறத்-5)

எதிர்பாராது பிறர் கூறும் நற்சொல்லைக் கேட்டுவிட்டுச் சென்றால் வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கையும், உன்னமரம் என்பது தன் நாட்டகத்து கேடுவருங்கால் உலர்ந்தும், கேடுவாராத காலத்துக் குழைந்தும் நிற்கும். அதன்படி குழைந்து நிற்கும் காலத்துப் போர்புரிந்தால் நாட்டகத்து தீங்கு வராது என்ற நம்பிக்கையும் இருந்துள்ளதைத் தொல்காப்பியர் சுட்டுகின்றார் எனலாம்.

நாட்டுப்புறவியல் என்பது காலங்காலமாக மக்களால் பின்பற்றப்படும் அனைத்து வகையான பண்பாட்டுக்கூறுகளையும் உள்ளடக்கிய ஒன்றாகக் காணப்படுகின்றது. இது வாய்மொழியாக வழங்கப்பட்டுவரும் வழக்காறாக இருந்துவருகின்றது. இவ்வழக்காறுகள் யாவும் ஏட்டிலக்கியங்களிலும் பிரதிபலித்துள்ளன. அதனடிப்படையில் தொல்காப்பியம் கிடைத்திருக்கின்ற தமிழ் நூல்களில் முதன்மை அடைகின்றது. இதில் தொல்காப்பியம் வழக்கும் செய்யுளும் நாடி இலக்கணம் எழுதப்பட்டதாகக் கூறினாலும் பெரும்பகுதி மக்கள் வழக்காற்றை மையமாக வைத்தே செய்திகள் பேசப்படுகின்றன. இதனைத் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது என்பதை இந்த கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் பண்ணத்தி, பிசி, முதுமொழி, பொய்மொழி ஆகியவை நாட்டுப்புற இலக்கிய வகைகளாகக் கருத முடிகின்றது. மேலும் தொல்காப்பியர் கூறும் வழிபாடுகள், சடங்குகள் போன்றவை விரிவாக ஆராய்தலுக்குரியன.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக