தன்னைப் பரிகாசம் செய்யத்தான் இன்ஸ்பெக்டர் அப்படிச் சொல்லுகிறாரோவென்று சாம்பு அவர் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உண்மையில் கோபாலன் யதார்த்தத்தையே சொன்னார். “ஆமாம் சாம்பு! உங்கள் தொழிலுக்கு மோடார் விடத் தெரிய வேண்டியது அவசியம். ஒன்றுமில்லை, பாருங்கள்: சைதாப்பேட்டையில் ஒரு கொள்ளை நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பஸ்ஸையும் ரயிலையும் நம்பிக் கொண்டிருக்க முடியுமா, அல்லது மோட்டார் டிரைவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்க முடியுமா?” என்று கேட்டார்.
“அப்படியெல்லாம் நமக்கு எங்கே ஸார் ஏற்படப் போகிறது? ஏதோ அதிருஷ்டவசமாக...” என்று சாம்பு ஆரம்பித்தான்.
“அதுதானே வேண்டாமென்கிறேன்! உம்முடைய மூளை இருக்கிறபோது, அதிருஷ்டம் என்னங்காணும் வந்தது? மோட்டார் ஓட்டக் கற்றுக் கொள்கிறீரா? ஒரு வார்த்தை சொல்லும்! நான் ஏற்பாடு செய்கிறேன்!”
சாம்பு பதில் சொல்லவில்லை. உச்சந் தலையைச் சொறிந்து கொண்டான். மூக்கு நுனியை இழுத்து விட்டுக் கொண்டான். சாம்புவின் இந்தப் பழக்கம் எல்லாம் இன்ஸ்பெக்டருக்குச் சகஜமானவையாகையால் அவர் சாம்புவின் பதிலை எதிர்பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு மோட்டாரையும், கற்றுக் கொடுக்க மோட்டார் விடத்தெரிந்த ஒரு கான்ஸ்டபிளையும் மறுநாளே அனுப்பி விட்டார்.
சாம்புவுக்குப் பயிற்சி ஆரம்பமாயிற்று. அன்றுமுதலாகப் பட்டணத்துப் பாதசாரிகளுக்கும் அபாயம் அதிகரிக்கலாயிற்று. சாம்புவுக்கு மோட்டாரை வடக்கே திருப்ப உத்தேசம் இருக்கும்: கை இடது பக்கம் அதைத் திருப்பும். அதை நிறுத்த எண்ணுவான்; உடனே மோட்டார் கடும் வேகத்தில் கிளம்பும். ஒருதரம் மோட்டார் கவிழ்ந்து மூன்றுமுறை உருண்டு பின் எழுந்து நின்றது. கற்றுத்தர வந்த கான்ஸ்டபிள் நடுங்கிப் போய், “ஸார், ஸார்! முதல்லே வண்டியை ஓட்டக் கத்துக்குங்க! இந்த மாஜிக் வேலைகளைப் பின்னாடி பழகிக்கலாம்” என்று வேண்டிக் கொண்டான்.
சுமார் பதினைந்து நாட்கள் சாம்பு பழகி இருப்பான். சுமாராக மோட்டார் வண்டியும் அவன் சொன்னதைக் கேட்கத் தொடங்கி இருந்தது. அந்தச் சந்தோஷத்தில் சாம்பு தன்னை மறந்திருந்தான். அப்போதுதான் சாம்புவுக்குத் தன் சுயநினைவை உண்டாக்கிய ஒரு சிறு சம்பவம் நடந்தது.
அன்று சாம்பு ஒரு சினிமாவுக்குப் போயிருந்தான். திரையில் சுவாரஸ்யமற்ற கட்டம் - காதலியும் காதலனும் உட்கார்ந்து பேசிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த காட்சி - நடந்து கொண்டிருந்தது. சாம்புவுக்கு முன் ஸீட்டில் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் அவர்கள் முகத்தைக் கவனிக்க முடியாமல் போனாலும், பேச்சு மட்டும் கணீரென்று சாம்புவின் காதில் விழுந்தது.
“ஊரெல்லாம் எத்தனை திருட்டு, கொள்ளை என்கிறீர். கையிலே இருக்கிற குடையை அழுத்திக் கொண்டு போய்விடுகிறேன் என்கிறான்! இனிமேல் ‘துப்பறியும் சாம்புவைத்’ தான் வரவழைக்க வேண்டியிருக்கும் போல் இருக்கிறது!” என்றார் ஒருவர்.
“சாம்பு வந்து, என்னத்தைப் புரட்டிவிடுவான் காணும்! கொஞ்ச நாளாக அவன் பேரைக்கூடக் காணோம்! இந்தப் பட்டணத்தில் எத்தனை ‘கேஸ்’ பிடிக்கலாம்! எத்தனை பேர் அரிசி மூட்டையும் கோதுமை மூட்டையும் வீட்டில் சேர்த்து அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...!”
”சாம்பு அது விஷயம் கவனித்திருக்கலாம். அல்லது கவனித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?” என்றது மற்றொரு குரல்.
“ஹூம், சாம்புவா? தலையைச் சீவிட மாட்டான்களா, சாம்பு அங்கெல்லாம் தலையை நீட்டினால்! இதிலே பெரிய பெரிய கைகள் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கு, தெரியுமா?”
“எத்தனையோ பெரிய கைகளைச் சாம்பு விலங்கு மாட்டிக் கொண்டு போயிருக்கிறார், அது தெரியுமா உமக்கு?”
“சும்மா இருங்காணும்.... சாம்பு மட்டும் சைதாப்பேட்டையிலே........”
இவ்வளவு நேரம் மூக்கைச் சொறிந்து கொண்டிருந்த சாம்பு முன்னால் சாய்ந்து, சைதாப்பேட்டையில் என்ன விசேஷம் என்று அறிய முயன்றான். ஆனால் அப்போது, வெள்ளித்திரையில் காதலனும், காதலியும் கர்லாக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் ரசமான சந்தர்ப்பம் வந்திருந்தது. ஜனங்களின் சந்தோஷம் எல்லை மீறிப்போய், சிரிப்பும், கரகோஷமும் கொட்டகையே இடிந்துவிடும் போல் எழுந்தன. அந்தச் சப்தத்தில் சாம்பு என்ன முயன்றும், அவர்கள் பேச்சைக் கேட்க முடியாமல் போயிற்று. ‘இண்டர்வெல்’லுக்கு விளக்குப் போட்டபோது, தன் முன் ஸீட்டுக்கள் காலியாக இருந்ததைச் சாம்பு கவனித்தான்.
*****
இரவு பத்துமணிக்கு மேலாகச் சாம்பு சைதாப்பேட்டையில் வீதி வீதியாக நடக்கத் தொடங்கினான். எங்கேயாவது மூட்டைகள் வந்து இறங்குகின்றனவா என்று கண்ணோட்டம் விட்டான். இது மிகவும் ஆபத்தான வேலை, ஒருக்கால் மாட்டிக் கொண்டு உயிர்விட வேண்டி வந்தாலும் வரலாம் என்ற பயம் சாம்புவுக்கு இருந்தது. ஆகவே, இன்ஸ்பெக்டர் கோபாலனிடம் ஒரு வார்த்தை போட்டு வைப்பது நல்லது என்று எண்ணினான். அதில் இன்னொரு சிரமும் இருந்தது; தான் எடுத்த காரியத்தில் ஜயம் பெறாவிட்டால், கோபாலன் என்ன எண்ணுவார்? ‘வரவரச் சாம்பு சுத்த சாம்பார்!’ என்று அவர் முடிவு செய்யலாம். அதற்கு இடங் கொடுக்கக் கூடாதென்று சாம்பு சிந்தனை செய்து ஒருவித முடிவுக்கு வந்தான். கோபாலனிடம் போய், “சைதாப்பேட்டையில் ஓர் அலுவல் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. என் சந்தேகம் உண்மையாகுமானால் பிறகு உமது உதவி வேண்டியிருக்கும்” என்று சொல்லி வைத்தான்.
“என் உதவியா? போலீஸ் இலாகா முழுவதுமே உமக்கு உதவி செய்யக் காத்திருக்கிறதே மிஸ்டர் சாம்பு! உத்தரவு போடும் காத்திருக்கிறோம்” என்றார் கோபாலன். சாம்பு திரும்பினான்.
அவன் வந்து போன பதினைந்து நிமிஷத்துக்கெல்லாம் கோபாலன் டெலிபோனில் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைக் கூப்பிட்டு, “மிஸ்டர் சாம்பு ஒரு கேஸ் விஷயமாக சைதாப்பேட்டையில் வேலை செய்ய வருகிறார்” என்றார்.
டெலிபோனில் பதில் சொன்ன அதிகாரி துள்ளிக் குதித்தார். “வரட்டும் ஸார்! இங்கே சாம்பு வருவாரா? எப்போது வருவார்? எங்களாலான உதவியை....”
“அவர் எப்போது வருவார் என்று நான் சொல்ல முடியாது. அவர் வரும்போது வேண்டிய உதவி செய்யுங்கள். உடனே எனக்கும் தெரிவியுங்கள். அவரை யாரும் அநாவசியமான கேள்விகள் கேட்க வேண்டாம். அவர் செய்யும் ஒவ்வொன்றிலும் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கும்.... தெரிந்ததா?” என்றார் கோபாலன்.
சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஜவான்களெல்லாம் சாம்புவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன கேஸோ, என்ன ஆச்சரியமான மர்மமோ, என்ன அவசரத்தில் அவர் வருவாரோ என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இதையெல்லாம் அறியாத சாம்பு, சைதாப்பேட்டை ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தான்.
*****
<!----> மணி பதினொன்று அடித்திருக்கும். அவன் ஒரு பெரிய பங்களாவின் முன்பு நின்று கொண்டிருந்தான். சந்திரன் இன்னும் கிளம்பவில்லை. பங்களாவின் மாடியில் ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் பளீரென்று மின்சார வெளிச்சம் அடித்துக் கொண்டிருந்தது. மாடி அறையில் அத்தனை விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தனவென்று அவன் ஊகித்தான். சுற்றுப்புறத்தில் எங்கும் அந்தகாரம்; இந்த வீட்டில் மட்டும் பதினோரு மணி வேளைக்கு என்ன வேலை இருக்க முடியும்?
சாம்பு மனத்தை திடம் செய்து கொண்டு உள்ளே நுழைந்தான். காம்பவுண்டு இரும்பு ‘கேட்’ சும்மா திறந்தபடி இருந்தது. சாம்பு நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை. பங்களாவின் முன் வாசலில் சிறிது தயங்கினான். அங்கேயும் அவனைத் தடுப்பவர் யாருமில்லை. ஹாலைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தான். ஒருகணம் திகைத்துப் போனான். மங்கலாக இருந்த வெளிச்சத்தில் சுவரோரமாக வரிசை வரிசையாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! அவ்வளவும் என்ன மூட்டைகள்? இது பெரிய கேஸாகவல்லவா போய்விடும்போல் இருக்கிறது! மூட்டைகளை நெருங்க சாம்பு காலை ஓர் அடி எடுத்து முன்வைத்தான். ஹால் ஓரத்திலிருந்த மாடியில் ஆஜானுபாகுவாக ஓர் ஆசாமி அப்போது இறங்கி வந்துகொண்டு இருந்தான்.
“யார் ஐயா நீ?” என்ற இடிபோன்ற குரலில் அவன் கேட்கவே, சாம்பு பயந்து சிலையாய்ச் சமைந்து போய் விட்டான். திருடன் என்று எண்ணி விட்டால் என்ன செய்வதென்று நடுங்கினான். நல்ல சமயத்தில் ஒரு யோசனை தோன்றியது. “நான் ஏ.ஆர்.பி.யைச் சேர்ந்தவன். மணி பதினொன்றாகியும் மாடியில் வெளிச்சம் தெரிகிறதே என்று பார்க்க வந்தேன்” என்றான் சாம்பு.
அந்த மனிதன், “அட! பதினோரு மணியாகி விட்டதா? சரி! அணைக்கிறோம், ஸார்! வேலையில் கவனமாக இருந்ததிலே மணி போனதே தெரியவில்லை” என்று சற்றுப் படிமானமாகப் பதில் சொல்லவே, சாம்புவும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் வாசலைப் பார்க்க நடையைக் கட்டினான்; விறுவிறுவென்று சிறிது தூரம் நடக்கிறாற்போல் நடந்து, பங்களாவிலிருந்து நூறு கஜத்துக்கு அப்பால் போய் நின்று கொண்டான். அந்த மூட்டைகளில் இருப்பது என்ன? அதைத் தெரிந்து கொள்ளாமல் போக சாம்புவுக்கு இஷ்டப்படவில்லை. போலீஸ் உதவியைக் கோரலாமா? இந்த யோசனை உடனே கைவிடப்பட்டது. இத்தனை நாளாகப் போலீஸுக்கு உதவி செய்தது போக, இப்போது இந்த அற்ப கேஸூக்காக... ஊஹூம்... போகவே கூடாது.
சாம்புவின் கால்கள் தாமாகவே திரும்பின. பங்களாவின் மாடியில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சாம்பு காம்பவுண்டுக்குள் நுழைந்தான். யாரிடமாவது மறுபடி சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? பங்களாவைச் சுற்றிக் ‘குரொடென்ஸ்’ செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன. அவைகளில் மறைந்தவாறு ஓரமாகப் பங்களாவைப் பாதிப் பிரதக்ஷணம் செய்திருப்பான். சுவரில் சுமார் ஒன்பதடி உயரத்தில் ‘வெண்டிலேட்டர்’ துவாரம் இருப்பது சாம்புவுக்குத் தெரிந்தது. அதை எட்டிப் பிடித்தால், கூடத்து ஹாலில் இருக்கும் மூட்டையை அதன் மூலம் பரீக்ஷிக்கலாம். உண்மையில் ஒரு மூட்டை ‘வெண்டிலேட்டர்’ துவாரத்தில் பாதியை அடைத்துக் கொண்டிருந்தது.
சாம்பு சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரில் திறந்தபடி மோட்டார் காரேஜ் இருந்தது. அதில் ஒரு பழைய மோட்டாரும் நின்று கொண்டிருந்தது. எங்கும் நிசப்தம். சாம்பு மனத்தைத் திடமாக்கிக் கொண்டு ஜன்னலில் கால் வைத்து ஏறினான். ஜன்னலில் நின்று கையை உயர்த்தியபோது, ‘வெண்டிலேட்டரை’ எட்டிப் பிடிக்க முடிந்தது. ஒரே எழும்பலில் தாவி விடலாம். சாம்பு இந்த முயற்சியைச் செய்யலாமா, அது நம்மால சாத்தியமா என்று தயங்கியபோது, அவன் தயக்கத்தை நீக்குவதுபோல் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.
அடுத்த வீட்டு மொட்டை மாடியில் உலாவ வந்திருந்த ஒருவர், பங்களாவின் பக்கம் நோக்கியிருக்கிறார். இருட்டில் ஏதோ அசைவதை கவனித்து ஊன்றிப் பார்க்கவே, வெள்ளைச் சுவரின் மீது ஓர் ஆளின் உருவம் ஏற முயல்வதைக் கண்டு விட்டார். “ஐயோ! திருடன்! திருடன்! முதலியார்வாள் உங்கள் வீட்டில் திருடன்!” என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டார். சாம்பு அதே க்ஷணம் தன் யோசனையைக் கைவிட்டான். இப்போது அகப்பட்டுக் கொண்டால், ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்! முதலில் ஒரு தடவை அந்த வீட்டுக்குள் போய் ஏ.ஆர்.பி.காரன் போல் வேஷம் போட்டதற்காக வேறு நாலு ‘தொப்பல்’ கூடவே விழும்; சந்தேகமில்லை.
அடுத்த வீட்டில் கூக்குரலோ அதிகமாகி வந்தது. அந்த ஆளுடன் இப்போது ஒரு ஸ்திரீயும் சேர்ந்து கொண்டு, தன் கீச்சுக் குரலில் கூடவே கத்தினாள்.
எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சாம்புவை பலமாகப் பிடித்துக் கொண்டது. ஓடினால் வாசற்படி தாண்டுமுன் பிடிபட வேண்டியதுதான். அதற்குள்ளாகவே பங்களாவில் சந்தடியும் சலசலப்பும் கேட்டன. தப்பித்துக் கொள்ள மோட்டார் வேண்டும். காரேஜில் அதற்காகவே போல் ஒரு மோட்டார் வண்டி காத்திருந்தது. சாம்பு அதை உபயோகிக்க முடிவு செய்தான். ஒரே நிமிஷத்தில் அதனுள் பாய்ந்து அதைக் கிளப்பி விட்டான்.
எப்படி அவன் தப்பித்தான் என்று கேட்டால் இன்றைக்கும் சாம்பு சரியான பதில் சொல்ல முடியாது. சாம்பு கற்றுக்கொண்டிருந்த சொற்ப மோட்டார் ஓட்டும் அநுபவமும் அந்த நெருக்கடியில் அவனைக் கைவிட்டது. எதையோ அமுக்கினான்; மோட்டார் இன்னும் வேகமாக ஓடிற்று. எதையோ இப்படியும் அப்படியும் திருப்பினான். மோட்டார் வலது புறமும் ஓடிற்று. எந்த இடத்தைத் தவிர்க்க வேண்டுமென்று நினைத்தானோ அங்கெல்லாம் அது சென்றது. கடைசியாக, ஒரு பெரிய வீதியில் திரும்பி, போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடியது. உண்மையில் சாம்பு மோட்டாரை ஓட்டவில்லை. மோட்டாரே சாம்புவை இழுத்துக் கொண்டு போயிற்று! போலீஸ் ஸ்டேஷனைக் கண்டதும் சாம்புவுக்குத் துணுக்கென்றது. அதன்பக்கம் போகாமல் வேறுபுறமாகப் போய், மோட்டாரையும் விட்டுவிட்டு ஓடித் தப்ப வேண்டும். ஆனால், சாம்பு ஒன்று நினைக்க, மோட்டார் வேறொன்று நினைத்தது. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இருந்த ஒரு லாந்தல் கம்பத்தை நோக்கிச் செல்லவே சாம்பு பதறிப் போய் எதையோ பிடித்து உதைத்தான். மோட்டார் அந்த லாந்தல் கம்பத்தைத் தொட்டவாறு சடேரென்று நின்றது.
அதே சமயம் மோட்டாரின் பின் ஸீட்டின் அடியிலிருந்து ஓர் ஆசாமி தடுமாறிக் கொண்டு எழுந்தவன், மோட்டார் நின்ற அதிர்ச்சியில் வெளியே தூக்கி எறியப்பட்டான். சாம்புவை எதிர்பார்த்து வாசல் பக்கம் வந்த இரண்டு போலீஸ் ஜவான்கள் அந்த ஆளைக் ‘கப்’பென்று பிடித்து நிறுத்தினார்கள். ஒருவன் விளக்கை அவன் முகத்தில் பிடித்து, “என்ன அப்பேன்! கில்லாடி முனிசாமின்னா! நீ எங்கேப்பா வந்தே? வா உள்ளே!” என்றான்.
மோட்டார் சப்தம் கேட்டு அவசரமாக வந்த ஸப்-இன்ஸ்பெக்டர் சாம்புவைக் கைவாகு கொடுத்து அழைத்துச் சென்றார்! மோட்டார் பின்னால் வேறோர் ஆள் வந்தான் என்பது சாம்புவுக்குத் தெரிந்ததும் அவன் ஆச்சரியமும் பயமும் அதிகரித்தன. அந்த ஆசாமி பங்களாவில் தன் திருட்டுக் காரியங்களைக் கவனித்திருக்க வேண்டும். இன்ஸ்பெக்டரிடம் எல்லாவற்றையும் அவன் சொல்லி விடுவான், இனித் தப்பிக்க வழி இல்லை!
ஆனால், சாம்புவை இன்ஸ்பெக்டர் ஒன்றுமே கேட்கவில்லை. ‘கில்லாடி’ முனிசாமியின் பக்கம் திரும்பினார். ‘என்னடா!’ என்றார்.
“எல்லாம் அவரையே கேளுங்க!” என்றான் அவன்.
“அவனே சொல்லட்டும்!” என்றான் சாம்பு.
முனிசாமி வெளியாக்கிய விவரம் ஸப் இன்ஸ்பெக்டரை ஒருவிதத்தில் ஆச்சரியப்படுத்தியதென்றால், சாம்புவை அது பதினாயிரம் விதத்தில் வியப்படையச் செய்தது. முனிசாமி தந்த வரலாற்றின் சாராம்சம் இதுதான்.
பங்களாவின் சுவான்தாரர் காமாக்ஷி முதலியார் அன்றுதான் பாங்கியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். அதைப் பாங்கியிலிருந்தே உளவறிந்து, கில்லாடி முனிசாமியும், சோதா சொக்கனும் பங்களாவுக்குள் வந்திருக்கிறார்கள். சொக்கன் உள்ளே புகுந்து விட்டான். முனிசாமி வெளியே வேவு பார்த்துக் கொண்டு ‘காரேஜு’க்குள் ஒண்டிக் கொண்டிருந்தான். முதல் தடவை சாம்பு வந்து உள்ளே பார்த்துவிட்டு ஏதோ பேசிவிட்டு வந்தார். பிறகு சுவர் வழியாக ஏறிப் பார்த்தார். முனிசாமி உடனே மோட்டாருக்குள் பின் ஸீட்டில் அடியில் பதுங்கிக் கொண்டான். உள்ளே சொக்கன் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, சாம்பு மோட்டாரில் பாய்ந்து, அதைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விட்டார். நடுவில் முனிசாமி குதித்துத் தப்பித்துக் கொள்ள முடியாதபடி மோட்டாரைக் கோணல் மாணலாகக் குலுக்கிக் குலுக்கி அவர் ஓட்டி வந்தார். சொக்கனும் ஓடி விடாதபடி பக்கத்து வீட்டில் சொல்லி, கூச்சல் போட வைத்திருக்கிறார்.
சாம்புவுக்குத் தைரியம் வந்தது. அதிர்ஷ்ட தேவதை அவன் பக்கந்தான் இருந்தது! ’பங்களா கூடத்தில் மூட்டைகளில்...’ என்று அவன் ஆரம்பித்தான்.
“ஆமாமுங்க! மூட்டைக்குப் பின்னாலே ஒளிஞ்சிக்கிட்டிருந்தானுங்க சொக்கன்! இந்நேரம் அவனும் மாட்டிக்கிட்டிருப்பானுங்க!” என்றான் முனிசாமி.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தடபுடல் பட்டது. ஒரு காரில் பங்களா சொந்தக்காரரரும் அவர் ஆட்களும் சொக்கனைக் கைப்பிடியாகக் கொண்டு வந்தார்கள். காமாக்ஷி முதலியார், “இவன் எங்கள் வீட்டில் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் இருந்தான்” என்றார்.
“மணல் மூட்டைகளா அவை?” என்று சாம்பு மனத்தில் எண்ணி வாயைப் பிளந்தான்.
“நாங்களே அங்கு வருவதாக இருந்தோம். மிஸ்டர் சாம்பு முனிசாமியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, சொக்கனைப் பிடிக்க எங்களை அழைக்கத்தான் மோட்டாரில் அவசரமாக வந்திருக்கிறார். இவரால்தான் உங்கள் பணம் இன்றைக்குத் தப்பியது” என்றார் ஸப் இன்ஸ்பெக்டர்.
அப்போது விஷயங்களைக் கேட்டுக் கொண்டே நுழைந்த கோபாலன், சாம்புவின் முதுகில் தட்டி, “பலே! சாம்பு ஸார்! உம்மை நம்பவே கூடாது!” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக