13/03/2011

பெண் புனைவு கட்டமைப்பில் நாலடியார்.... - வே. சிவக்குமார்

"சமய கணக்கர் தம் நிறம் கேட்ட காதை" மணிமேகலையில் படித்த காதை. பரபக்கத்தை பேசுவதில் நிகழ்வு அமைந்தாலும் "தன் இல்லத்துக்கு புறத்தே கூட கேட்கக்கூடாத அளவுக்கு மென்மொழியை" பெண்மொழியாக்கிய தமிழ் சமூகத்தில் ஆன்றோர் நிறைந்த அவையில் அனைவரையும் எதிர்த்து வாதாடுவது மரபு கட்டமைப்பின் மாற்றம் நிகழ்ந்த சாதனை என்பதை மறுக்கவியலாது. அதே தளத்திலேயே கண்ணகி மொழியும் இயங்கியது. பௌத்தம், சமணம், பெண் கல்விக்கான நிகழ்வுகளிலும் மறுமொழி பேசும் நிகழ்வுகளிலும் வெகுசன மக்களிடையே புதிய சிந்தாந்தத்தை விதைத்தது மட்டுமின்றி அதனை செய்தும் காட்டியது.

''அணுவிரதம், குணவிரதம், சிகிச்சை விரதம்'' போன்ற இல்லற அறக்கோட்டிபாட்டிலும் பெண்ணுக்கு சம உரிமையை பௌத்தம் வழங்கியே வந்துள்ளது. குறிப்பாக துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்தையே பெரும்பாலும் பேசி வந்துள்ளது. ஆனால் சமணம் விலங்குணர்வோடு நடத்தப்பெறும் குடும்ப வாழ்க்கையை வெறுத்தே பேசுகின்றது.

''இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை'' (குறள் : 47)

இல்வாழ்க்கைகுரிய சிறப்பை இத்தகைய முறையில் வெகுசனபடுத்தியது சமணமே.

''பறையன் மகனெனினும் காட்சியுடையான்

இறைவன் என் உணரற் பாற்று'' (அருங்கலச் செப்பு - 37)

வேதகாலம் முதலாக கட்டிக்காத்து வரும் மனுவுக்கு எதிரான பஞ்சமரையும் தெய்வமாக்கும் நிலையும், சமணர்களின் அபய தர்மம் (அடைக்கால தர்மம்) சாத்திர தானம் (கல்வி தானம்) எனும் கொள்கையும் சமண இலக்கிய முழுமைக்கும் பேசப்பட்டாலும் செயல்படுத்தும் பாத்திர வார்ப்புகளாக பெண்களே முதன்மைபடுத்துவதை காணமுடிகிறது.

எல்லா சமயங்களும் வலியுறுத்தும் ''துறவறம்'' (வீடுபேறு) பற்றிய கொள்கையில் முரண்பாடுகளை முன்வைத்து முடிச்சுகளையும் அதுவே தளர்த்திக் கொள்கிறது. ''தென் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட சமணப் பள்ளிகள் இருந்தன. ஆண் துறவிகள் போல் பெண் துறவிகளும் ஆசிரியராக இருந்துள்ளனர். கனகவீரக் குரத்தியர் (மாணக்கர் மாணாக்கி) பட்டினிக் குரத்தியடிகள் எனக் கல்வெட்டுக்கள் குரத்தி எனும் பெயரோடு இவர்களைக் குறிக்கின்றன. பெண் துறவிகளிடத்தில் மாணக்கர்களும் பயின்ற செய்திகளைக் கழுகு மலைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் குறிப்பாக (சமணமும் தமிழும், ப.4) என்ற மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் கூற்றின்படி ''பெண் துறவிகள்'' என்பதினை சமணம் மறுப்பு கொள்ளாத/ அங்கீகாரம் வழங்ககூடிய மதமாகவே வந்துள்ளது.

துறவு மேற்கொண்டு இறுதியில் உயர்நிலை எய்திய சிலப்பதிகாரத்துக் கவுந்தியடிகளும் 19-வது தீர்த்தங்கரரான மல்லிநாதரும் பெண்களே என்னும் நிலையில் சமணம் உணர்த்தும் முக்திக் கோட்பாட்டினை பாலின வேறுபாடற்றக் தன்மையினைக் காணமுடிகிறது. இந்நிலையினை அடித்தளமாகக் கொண்டு சமண இலக்கியத்தின் நீதி நூலான நாலடியாருக்குச் சென்றால் அங்கே முரண்பாடுகளும் அவிழ்க்கவியலாத முடிச்சுகளுமே காணப்படுகின்றன.

''பிறனில் விழையாமை'' வள்ளுவம் பேசும் தளத்தில் ''பிறர்மனை நயவாமை'' பற்றி நாலடி பேசுகிறது. வள்ளுவத்தை விட கடுமையாகவே ''இம்மை அலியாகி ஆடியுன் பார்'' என அலிகளாக பிறந்து கூத்தடி உண்பார்கள் என கடும்மொழியிலேயே பேசுகிறது.

பெண்ணுக்கான உடல்மொழி, பெண்மொழி, பெண் புனைவு குறித்தன கருத்தாக்கங்களில் வெகுசன பண்பாட்டின் நிகழ்வுகளோடு சமரசம் செய்து கொள்வதில் முரண்பாடே காணப்படுகிறது. ''பொதுமகளிர்'' தொடர்பான பதிவுகளில் பிரதி காலத்தோடு நடையிட்டாலும் ''கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்'', ''தேற மொழிந்த மொழிகேட்டு'', ''ஏமாந்த போழ்தின்'' என்னும் சொல்லாடல்கள் கடுமையான பதிவாகவே காணப்படுகிறது.

''பொதுமகளிர்'' தவிர்த்து ''கற்புடை மகளிர்'' புனைவுக்குள் செல்லும்பொழுது ''பெறுநசையால் பின்னிற்பா இன்மையே பேணும்'' என ''பெறுவதற்குரிய கற்பினையுடைய இந்திராணி போன்ற பெரிய புகழினையுடைய பெண்களே என்றாலும் (அவருள், தன்னைப்) பெறவேண்டும் என்னும் ஆசையால் விரும்பித் தன் பின்னே நிற்பவர் (ஒருவரும்) இல்லாதபடி செய்து கொள்ளும் குணத்தையுடையவளே நல்ல துணைவி'' என புனைவு செய்வது அவளுடைய கற்புத்தன்மையை தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் தன்மையற்றவளாகவும் தன் செயல் எப்பொழுது வேண்டுமானாலும் கணவனுக்கு மனபிறழ்வை தரக்கூடிய நன்மை உடையதாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலே அவள் வாழ்வு அமைந்திருப்பதையும் காட்டுகின்றது.

''வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்

இல்லாள் அமர்ந்ததே இல்''

இல்லம் அமையும் விதம் குறித்து பதிவு செய்யும் நாலடியார் எல்லா பக்கங்களிலும் நீர் ஒழுகும் தம்மையுடைய வீட்டில் இருந்தாலும் தான் வாழும் ஊரில் தன்னைக் கற்புடையள் என புகழ வேண்டும் எனக் கூறுகின்றது.

தான் வாழும் இல்லமும், தன் சுற்றமும் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதற்கான மேன்மை குறித்தும், சிறப்புறச் செய்யும் நிலை குறித்தும் பிரக்ஞை கொள்ளுபவள் கற்புடைய மகளிர் அல்ல. தான் கற்புடையவள் என எண்ணிக் கொண்டே/ சொல்லிக் கொண்டே இருந்தாலும் கற்புடையவள் அல்ல. ஊரார் அவளைக் கற்புடையவள் என கூற வேண்டும் அவளே கற்புடையவள். (எந்த பெண்ணை ஊரார் கற்புடையவள் என புகழ்ந்து பேசியிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

நாலடியாரின் பெண் பற்றிய புனைவு இப்படியிருக்க அவளது உடல் தொடர்பான பதிவுகளை பார்க்கும் பொழுது இன்னும் வியப்பாக உள்ளது. தலைவனும் தலைவியும் உடன்போக்கு செல்ல தீர்மானித்து அந்நிகழ்வை தலைவி தோழிக்குச் சொல்கிறாள். அப்பொழுது மெல்லிய இயல்புடைய பெண்ணே அரிய பாலைவனத்தில் கடந்த செல்ல உன்னால் இயலுமா? என பெண்களுக்கே உரிய குணத்துடன் தோழி கேட்க அதற்கு மறுமொழியாக தலைவி ''பெற்றான் ஒருவன் பெருங்குதிரை; அந்நிலையே கற்றான் அய்தூரு மாறு'' என கூறுகின்றாள். ''குதிரையை வாங்கிய ஒருவனுக்கு அதன் மேல் ஏறிச் செல்வது என்பதும் தெரிந்த ஒன்றே என கூறுகின்றாள். இங்கே குதிரை என்பது பெண் உடலாகக் கொண்டு அணை மேல் ஏறி செல்லும் குதிரையோட்டியாக வர்ணித்திருப்பது பெண் உடல் குறித்து நாலடி கொண்டுள்ள கருத்தை அறிய முடிகிறது. (குதிரையின் செயல்பாடுகளை இன்னும் அனுகி ஒப்பிட்டு பார்த்து விளக்கம் தரத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்)

மொழி பொதுவான கருவி என்றாலும் அதை பயன்படுத்தும் தளத்தில் அர்த்தப்படுத்தினால் மொழியாளரின் மன உணர்வும், உலகியலில் அவன்/அவள் கொண்ட புரிதலையும் உணர்ந்து கொள்ளமுடியும்.

''மடமொழி மாதர்'' வர்ணனை இயல்பான ஒன்று. தலைவன் பிரிந்து சென்றான் என்பதனால் ''தன்னை மட்டும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதிலிருந்து மாறுபட்டு தன் தாயையும் தாக்கும். எனவே என்தாயும் எப்படி பிழைப்போம் என தலைவி கூறுகின்றாள். ''என்னை ஈன்ற யாயும் பிழைத்த தென்'' என்னும் வரிகள் ஒரு பெண் மட்டும் அப்படிப்பட்டவள் அல்ல. பெண்கள் மொத்தமும் அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் என்பதை பறைசாற்றுகின்றது (தந்தை நிலை குறித்து குறிப்பிடாதது இயல்பா? வலிமையா?) இதற்கு உரைகாரர்கள் ''யான் பிறந்தபொழுதே கொன்றிராத என்னைப் பெற்ற தாயும்'' என எழுதியிருப்பது பெண் சிசுக் கொலை அந்த காலத்திலேயே இருந்திருக்குமோ? என்ற நிலைக்குத் தள்ளியிருப்பதைச் சற்றேத் தவிர்த்திருக்கலாம்.

''பிரிவுள்ளி மாலை பரிந்திட்டழுதாள்'' என தலைவன் பிரிந்த பொழுது மாலை வந்தது தலைவியினுடைய செயலாக கூறியிருப்பதில் உள்ள சூட்சமம் ''அழுதாள்'' எனும் செயல் காம மிகுதியைக் காட்டுகிறதே தவிர. காதலை காட்டவில்லை என்பதும் கவனிக்கத் தக்கச் செயலாகும்.

தன் மொழியாக கூறிய நாலடியார் ஒரு பெண் மீது கொண்ட உணர்வையும் பதிவுசெய்யாமல் போகவில்லை. தலைவி, தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள். அதனை கூறவந்த நற்றாய், முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன்'' என ''உடம்பு முழுவதையும் முத்துமாலையை நேற்று அணிந்து கொண்ட பொழுது எனக்கு எதுவும் புரியவில்லை. இப்பொழுது தான் புரிந்தது அது உடன்போக்கு செல்வதற்கான குறி'' என்று கூறுகின்றாள். ''பூம்பாவை செய்த குறி'' என நாலடியார் கூறுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண் மீது கொண்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முதப்படி என்றே கூறுலாம் (அந்த காலம் தொட்டே வீட்டில் இருக்கும் அணிகலன்களை அணிந்து கொண்டு உடன்போக்கு செல்வது என்பது கூடுதல் செய்தியாகும்).

நாலடியார் கூறும் இத்துனை உவமைகளும் இயல்பான பெண்ணுக்குரியதல்ல. ''கற்புடை மகளிருக்கு'' உரியது. இவர்களது உடல், மொழி, புனைவு பற்றிய பதிவுகள் இப்படி இருக்குமென்றால் மற்ற பதிவுகளை கேட்கத் தேவையில்லை. ''சம சாங்கியம் பெண்டிரைக் கற்பழிக்க வேண்டுமென ஞானசம்பந்தர் இறைவனை நோக்கி பாடியிருப்பது'' (ஏகாம்பரநாதன் கல்வெட்டில் சமணம் ப.98) என பாடியிருந்தும், சமணர்களை கழுவேற்றியும், மதக்கோட்பாட்டினை சிக்கலான நிகழ்வுகளுக்குள்ளாக்கியும் இருந்தாலும் சைவம் வென்றது. சமணத்தின் இத்தகைய தளர்த்த முடியாத, வெகுசனங்களோடு சமரசம் செய்து கொள்ளாத சில முரண்பாடுகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக