13/03/2011

நாட்டுப்புற பெண் தெய்வ வழிபாடு - கு.பெரியசாமி, எம்,ஏ., எம்ஃபில்.,

நாட்டுப்புற பெண் தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முத்துமாரியம்மன், தீப்பாஞ்சியம்மன், பெரியகாண்டியம்மன் போன்ற தெய்வங்கள் ஊர்ப் பொதுத் தெய்வங்களாகப் பாவிக்கப்படுகிறது. இத் தெய்வங்களுள், முத்தாலம்மன் வழிபாட்டு முறை சற்று மாறுதல் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. இக்கட்டுரை முத்தாலம்மன் வழிபாட்டில் இடம் பெறும் சாமிசாட்டுதல், கரகம் சோடித்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், படுகளம் போடுதல், கழுமரம் (வழுக்கு மரம்) ஏறுதல், கரகம் புறப்பாடு ஆகிய வழிபாட்டு மரபுகளை எடுத்துகூற முற்படுகின்றது. திண்டுக்கள் மாவட்டம், ஆவிளிபட்டி கிராமத்தினை களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

முத்தாலம்மன் வழிபாட்டுக் கதை:-

முத்தம்மாள் என்ற பெண் சேட வீட்டுப் பிள்ளையாகப் பிறந்து வளர்ந்ததாகவும், ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தபொழுது தன் அம்மா திட்டியதால், அங்கு வேலைக்கு வந்துக் கொண்டிருந்த ''வீரபாகுச் சாம்புகன்'' என்ற பறையன் பின்னாலேயே சென்று விட்டாள். அவன் முத்தம்மாவைத் தனியாகப் பச்சைப் பந்தல் இட்டு, ஊரின் ஒதுக்குப்புறமாகக் குடியமர்த்தி விட்டான். ஒரு நாள் முத்தம்மாளிற்குக் கறி உணவு ஆசை வரவே, அதனை நிறைவேற்ற அவன் கிடையில் ஆட்டைத் திருடிப் பாறையில் சுட்டுக் கொண்டிருந்தான். அவ்வேளையில், அவ்வழியில் வந்த வேட்டையாடும் அம்பளக்காரர்களிடம் பொய்கறி திருட்டில் சிக்கவைத்தான். வீரபாகுச் சாம்புகளின் மனைவி, அவனது நடத்தையில் சந்தேகம் கொண்டு தன் நான்கு குழந்தைகளின் கழுத்தையும், தனது நகத்தினால், கீறிக் கொன்றாள். அவன் முத்தம்மாளிடம் முறையிட்டபோது நான்கு குழந்தைகளையும் உயிர் பெறச் செய்வதாகக் கூறினாள். பின்னர் யாகம் நடத்தி உயிர்பெறச் செய்தாள். பிறகு முத்தம்மாள் தெய்வமாகிவிட்டாள். அவளே முத்தாலம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறாள். (தகவல்: திரு. ரெட்டிணகிரி)

தோரணம் கட்டுதல்:-

சாமி சாட்டுதல் நாளில் தோரணம் கட்டுகின்றனர். வீதிகளைச் சுத்தம் செய்து வைக்கோலைப் பிரியாகத் திரித்து, அவற்றில் நடுவே மாவிலை, வேப்பிலை போன்றவற்றைச் சொருகி வீதியின் இரு பக்கங்களிலும், பச்சை மூங்கில் நட்டுக் கட்டுகின்றனர். இப்பணியைத் தோட்டிகள் செய்கின்றனர். இதன் மூலம் வெளியூர் மக்கள் சாமி சாட்டுதலை அறிவதாகக் கூறுகின்றனர்.

சாமி சாட்டுதல்:-

ஊர் மந்தையில், பறையடித்துத் தோட்டி (பறையர்) சாமி சாட்டுவதற்கு வரனும் என்று அறிவிக்கிறார். பின்னர் மற்ற வீதிகளிலும் அறிவிக்கிறார் சாமி சாட்டுதல் எட்டு அல்லது பதினைந்து நாள் சாட்டாக அமைகிறது. சாட்டில் கலந்து கொண்டவர்கள் கண்டிப்பாக விழாவில் கலந்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தீமை நடக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் சாப்பாடு உண்ணவோ, தண்­ர் குடிக்கவோ கூடாது. (தகவல்: மாரியம்மாள்)

கரகம் சோடித்தல்:-

அம்மன் வழிபாட்டு மரபுகளில் கரகம் சோடித்தல் முக்கிய இடம் பெறுகின்றது. விழா தொடக்க நாள் இரவு ஒன்பது மணிக்குமேல் ஊர்ப் பொதுமக்கள், முக்கியநபர்கள், பூசாரிகள், சாமியாடிகள், கரகம் தயாரிக்கும் குயவர்கள்(வேளாளர்) ஆகியோர் கரகம் சோடிக்கும் இடமான ''முத்தாலம்மன் மாண்டு'' என்ற இடத்தில் கூடுகின்றனர். அம்மன் தெய்வத்திற்கு உரிய ஆடை, அணிகலன்கள் வைக்கப்பட்டுள்ளப் பெட்டியை ஊர் நாட்டாண்மைச் சுமந்து வருகிறார்.

பொதுவாக அம்மன் தெய்வங்களுக்கு:-

புதிய மண் கலயம் அல்லது பித்தளைச் செம்பில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி அதனுள் தென்னம்பாளை (பூ) , மாவிலை, வேம்பு இலை ஆகியவற்றைக் கொண்டுக் கூம்பு வடிவாக்கி பட்டு நூல் கொண்டு, சுற்றிக் கட்டி கரகம் சோடிக்கிறார்கள். ஆனால் முத்தாலம்மன் கரகம் சுடப்படாத பச்சை மண் கொண்டு அம்மன் உருவம் வழக்கப்படுகிறது. பின்னர் அதனை ஒரு பலகையில் வைத்து ஆடைகள், நகைகள், மலர்கள் பூட்டி கரகம் அலங்கரிக்கப்படுகின்றது. கரகத்திற்கு உயிர் ஊட்டும் ''கண் திறப்பு'' என்ற நிகழ்வு வேளாளரால் செய்யப்படுகின்றது. கருப்பு மையால், கண்களுக்கு மை இடுவதன் மூலம் இறைமைப் பண்பை அடைவதாகக் கூறுகின்றனர். இறுதியாகப் பூசை செய்து, அதனைச் சுமந்து வந்துக் கோயிலுக்குள் வைக்கின்றனர். அப்பொழுது ஓர் ஆடு பலி கொடுக்கப்படுகின்றது. இதற்குப் ''புகு குட்டி'' எனப்படுகின்றது. அது வேளாளருக்குக் கொடுக்கப்படுகிறது.

பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல்:-

அம்மன் வழிபாடுகளில் பொங்கல் வைப்பதும், மாவிளக்கு எடுத்தலும் மரபாகக் காணப்படுகின்றது. பொங்கல் வைக்கும்போது சாமி அமர்ந்து இருக்கும் திசையில் பொங்கினால், அதிக நன்மை என்கின்றனர். இதில் பெண்கள் அதிகம் பங்குப் பெறுகின்றனர். அனைவரும் பொங்கல் வைத்தப் பின்னர், பூசை செய்யப்படுகின்றது. அப்பொழுது ஆடு, கோழி போன்றவை பலியிடப்படுகின்றது.

மாவிளக்கு என்பது பச்சை அரிசியை இடித்து, அதனுடன் வெள்ளம், சுக்கு, மிளகு, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றை கலந்து விளக்குப் போடும் அமைப்பில் மாவு பிடிக்கப்படுகின்றது. தெய்வத்திற்குப் படைக்கும் மாவை எச்சில் படாமல் பார்த்துக் கொள்கின்றனர். உறவினர்களுக்குக் கொடுக்கும் மாவில் எள் பயன்படுத்துகின்றனர். அம்மனுக்கு படைக்கும் மாவில், எள் உகந்ததல்ல என்கின்றனர். (தகவல்: ராமாயி அம்மாள்).

முளைப்பாரி எடுத்தல்:-

அம்மன் வழிபாடுத் தொடங்கப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே முளைப்பாரி வளர்க்கும் முறைக் காணப்படுகின்றது. பெண்கள் மட்டுமே இடம் பெறுகின்றனர். முளைப்பாரியில் தானியங்கள் வளர்ந்துள்ள தன்மையைப் போன்றே தங்களது வாழ்வும் செழிப்புடன் திகழும் என நம்புகின்றனர் (தகவல்: செல்வி) அனைத்து வயதுடைய பெண்களும், கோயில் முன்பு முளைப்பாரிகள் வைத்துச் சுற்றி நின்று கும்மியடித்துப் பாடல்கள் பாடுகின்றனர். மாதவிலக்கான பெண்கள், குழந்தைப் பிறந்த ஒரு மாத காலம் ஆகாத பெண்கள் இவற்றில் கலந்து கொள்வது இல்லை. விழா இறுதி நாளன்று முளைப்பாரிகளை நீர் நிலையில் விடுகின்றனர். நீரில் கரைக்கும் முன்பு, சிறிது முளைப் பயிர்களையும், மண்ணையும் எடுத்துச் சென்றுத் தங்களது வேளாண்மை நிலங்களில் இடுகின்றனர். இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என நம்புகின்றனர்.

தீச்சட்டி எடுத்தல்:-

தீச்சட்டி எடுத்தல் எனும் நிகழ்வு நேர்த்திக் கடனாகச் செய்யப்படுகின்றது. இதனைப் பூச்சட்டி என்றும் அழைக்கின்றனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய அனைவரும் இடம் பெறுகின்றனர். மஞ்சள் நீரை தலைமுதல் ஊற்றிக் கொண்டு, கையில் வேப்பிலைத் தாங்கி, தீச் சட்டியை ஏந்தி ஆடிச் செல்கின்றனர். கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். பின்னர் நீர்நிலையில் கொண்டு விடுகின்றனர்.

படுகளம் போடுதல்:-

முத்தாலம்மன் வழிபாட்டில் படுகளம், கழு மரம் ஆகிய இரண்டும் சிறப்பான இடம் பெறுகின்றது. படுகளம் என்பது மிகவும் ஆபத்தானது என்ற கருத்து உள்ளது. இப்பகுதியில் வேளாளர் (குயவர்) வெள்ளாலர், நாயக்கர், செட்டியார், வன்னார், பள்ளர், பறையர், சக்கிலியர், அம்பலக்காரர், ஆசாரி என்று பல இனத்தவர் வாழ்கின்றனர். ஆனால், படுகளம் நிகழ்வில் பங்குக் கொள்ளும் அனைவரும், பறையர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மற்ற இனம் சார்ந்தவர்கள் பார்வையாளர்களாகவே இடம் பெறுகின்றனர்.

படுகளத்தில் இனம் சார்ந்த பதினைந்து வயதிற்குட்பட்ட நான்கு ஆண் பிள்ளைகளை முத்தாலம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்ட நான்கு கால் பந்தல் தேரடியில் நான்கு திசைகளுக்கு ஒரு பிள்ளை என வானத்தை நோக்கி மல்லாந்துப் பார்த்தவாக்கில் படுக்க வைக்கின்றனர். படுத்திருக்கும் பிள்ளைகளின் மீது வெள்ளை வேட்டியைப் போட்டு மூடிவிட்டு, இறந்தவர்களின் முன்பு அடித்து ஆடும் சவ அடியும் (தப்பாட்டம்), மாரடிப்பு, ஒப்பாரியும் வைத்து அழுதுக் கொண்டே மடிப்பிச்சைக் கேட்கின்றனர் இதனையே படுகளம் என்கின்றனர். படுகளத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் ''புழுக்கச்சி" வேடமிட்டவர் ''பால் கொடுப்பது" போன்றுப் பாவனைச் செய்கிறார்.

படுகளப் பிள்ளைகளை எழுப்புவதற்குப் ''படுகளக் குட்டி'' (ஆடு) பலியிடப்படுகின்றது. ஆட்டின் இரத்தத்தைப் பிள்ளைகளின் நெற்றியில் இட்டவுடன் அவர்களை நான்கு பேர் கையில் தூக்கிக் கொண்டு, கோயில் வீட்டிற்கு ஓடிச் செல்கின்றனர். அங்கு பூசை, நடத்திய பின்னர், உண்பதற்கு உணவு பரிமாறப்படுகிறது. இதனை ''விரதம் விடுதல் என்று கூறுகின்றனர்.

படுகளத்தில் காணிக்கை:-

படுகளத்தில் படுத்திருக்கும் பிள்ளைகளின் பெற்றோர் (ஆண்கள் மட்டும்) பார்வையாளர்களின் ஊடே சட்டை அணியாமல் சென்று மேல் துண்டை விரித்து ஏந்தி அதில் காணிக்கைப் பெறுகின்றனர். அந்த காணிக்கையை வழிபாட்டில் எட்டாம் நாள் நடத்தும் கருமாதி நிகழ்விற்குத் தாங்கள் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். படுகளத்தின்போது வேடமிட்டவர்களும், ஆசிர்வாதம், அருள்வாக்கைக் கொடுத்துக் கொண்டு காணிக்கைப் பெறுகின்றனர். அம்மன் வேடம், புழுக்கச்சி (சாம்புகனின் மனைவி) வேடம் போட்டவர்கள் பறையர் இன மக்கள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

படுகளப் பிள்ளைகள் சிறு வயதுடைய ஆண் பிள்ளைகளாக இருக்க வேண்டும். காரணம் அவர்களையே விரைவாகத் தூக்கிக் கொண்டு ஓட வசதியாக இருக்கும். மேலும் வீரபாகு சாம்புகனின் ஆண் பிள்ளைகள் நான்கு பேரும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதுதான் அவன் மனைவி கொன்றுவிட்டாள். இதில் படுகளப் பிள்ளைகளை நேற்றிக் கடனாகவே பறையர் இனத்தவர்கள் ஈடுபடுத்துகின்றனர். (தகவல்: பொன்னம்மாள்).

கழு (வழுக்கு) மரம் ஏறுதல்:-

கழு மரம் என்பது உயரமான வழுக்கும் மரம் என்றுக் கூறுகின்றனர். கழு மரம் தேர்வின் போது சாமியிடம் குறிகேட்டு திசையறிந்துச் சென்று வெட்டி வருகின்றனர். கழு மரமாக உயரமான ''பீ நாத்தி'' (தீக்குச்சிகள் செய்யப்பயன்படும்) மரம் பயன்படுத்தி வந்ததாகவும், அவற்றின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதால், உயரமான ''குரோளியர்'' (சில்வர்வுட்) போன்ற கடினமான மரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

கழு மரம் வெட்டி வரப்பட்ட பின்னர், அதன் பட்டை நீக்கி இழைக்கப்பட்டு ஆசாரிகளால் தயார்படுத்தப்படுகின்றது. மரம் வழுக்குத் தன்மை அடைய சோற்றுக் கற்றாழை. கேழ்வரகு, விருவிச்சாறு, விளக்கெண்ணெய் போன்றவை மரத்தின் மீது பூசப்படுகின்றது. கழு மரம் ஏறுபவர்கள் மீதும், மரத்தின் மீதும், மஞ்சள் தண்­ர் ஊற்றப்படுகின்றது. மரம் சுமார் 60 அடி முதல் 70 அடி உயரம் வரை காணப்படுகின்றது. மரத்தின் உச்சியில் பரிசுப் பொருளாகப் பண முடிப்பு, தேங்காய், பழம் திருநீறு போன்ற பூசைப் பொருள்களையும் மஞ்சள் துணியில் கட்டி வைத்துள்ளனர். கழு மரம் ஏறும் நிகழ்வில் அம்பலக்காரர்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். பிற இனத்தவர்கள் பார்வையாளர்களாக உள்ளனர்.

கரகம் புறப்பாடு:-

விழாவின் முதல் நாள் சோடிக்கப்பட்ட கரகம் விழாவின் இறுதிநாள் மதியம் புறப்பட்டு நிகழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. அப்பொழுது ஓர் ஆடு பலியிடப்படுகின்றது. இதனைப் போக்குக் குட்டி அல்லது ''பயணக்குட்டி'' என்கின்றனர். இக்குட்டி, பறையருக்கு உரியது. கரகம் கொண்டு செல்லும் வழியில் மஞ்சள் நீராட்டு (விளையாட்டு) நிகழ்வு நடைபெறுகிறது. முத்தாலம்மன் கரகம் நீர் நிலையில் கரைக்கப்படுவதில்லை. மாறாகக் கல்லிச் செடி (புதர்) க்கு அடியில் அல்லது பூவரசம் மரத்தின் அடியில் வைக்கப்படுகின்றது. அம்மனது ஆடை, அணிகலன்கள் அகற்றப்பட்டு, சிலையின் சுண்டு விரலையும் உடைத்துவிட்டுப் பறையர் தவிர மற்ற இனத்தவர்கள் சென்றுவிடுகின்றனர். பறையர்கள் (தோட்டி) தாங்கள் எடுத்துவந்த புதுத் துணியை அம்மனுக்கு போட்டு, அங்கேயே அமர்ந்து, அழுது புலம்பும் நிகழ்வு நிகழ்த்தப்படுகின்றது. இதன்மூலம் அம்மன் இறந்ததாகவும், இறந்தவர்களைக் காயம் (ஒச்சம்) செய்துவிட்டு, அவர்கள் சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர். (தகவல்: சக்தி).

தொகுப்புரை:-

1. முத்தாலம்மன் பற்றிய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் ''மற்றும்'' ''நாடகம்'' போன்றவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.

2. முத்தாலம்மன் தெய்வம் பறையர் இன மக்களிடம் இருந்ததாகவும் தாங்களால் வழிபட முடியாத நிலையில் வெள்ளாளர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறுகின்றனர்.

3. அம்பலக்காரர்கள் கழு மரம் ஏறுதல், பறையர்கள் படுகளம் போடுவதோடு அம்மன் வேடம், புழுக்கச்சிவேடம் புனைந்து ஆடுவதையும் காண முடிகின்றது. இந் நிகழ்வுகள் யாவும் ''போலச் செய்தலை'' நினைவு கூறுகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக