22/03/2011

நேர்காணல் - பேராசிரியர் தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து

பேரா. “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். அண்மையில் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசியராகத் தமிழ் கற்பித்து வருகிறார். தமிழில் இலக்கியத் திறனாய்வு, இலக்கியத் தத்துவங்கள், நாட்டுப்புறவியல், பற்றிய நூல்கள் எழுதியுள்ளார். இவரது அமைப்பியல் (Structuralism) என்ற நூல் சிறுபத்திரிக்கைச் சூழலில் வரவேற்கப் பட்டிருக்கிறது. எழுத்து, கசடதபற, க, போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கும் இவர், தற்காலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவர். நவீனத் தமிழ் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை எழுதி வரும் இவர் பின் நவீனத்துவ முயற்சிகளைக் கூர்ந்து கவனித்து வருகிறார். கன்னட, மலையாள மொழிகளில் பயிற்சியுள்ள இவர் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். திறனாய்வு, படைப் பிலக்கியம், விமரிசகம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளில் இவர் எழுதிய நூல்கள் 15. கிறிஸ்துமஸ் விடுமுறையில் சான் ·பிரான்சிஸ்கோ வந்திருந்த இவரைத் தென்றல் சார்பில் சந்தித்துப் பேசினோம்.

வணக்கம் பேரா. தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து! தென்றல் வாசகர்களின் சார்பில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறோம். உங்கள் தமிழ்ப் பணிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நான் 1965-ல் மாணவர்கள் மத்தியில் எழுந்த தமிழ்ப்பற்று அலையில் தமிழ் படிக்க விரும்பினேன். நான் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ்க் கல்வித் துறையில் நுழைந்தவன். திறனாய்வு, ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், படைப் பிலக்கிய நூல்களையும் வெளியிட்டிருக் கிறேன். சீரிய சிந்தனையாளர்களும், நல்ல எழுத்தாளர்களும் வலம் வரும் சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்குவது எனக்கு மகிழ்வு தருகிறது. புதுக்கவிதை இயக்கத்தை அதன் தோற்றத் திலிருந்தே ஆதரித்து வந்திருக்கிறேன். பெங்களூரில் தமிழ்ப் பேராசிரியர் பணி புரிந்ததால், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டு, குறிப்பாக, ஈழத்தமிழர்கள் கவிதைகள் சிலவற்றைத் தேர்ந் தெடுத்துக் கன்னடத்துக்கு மொழி பெயர்த்திருக் கிறேன். சுப்பிரமணிய பாரதியார் என்ற பெயரில் கன்னட நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். டாக்டர் யு. ஆர். அனந்தமூர்த்தியின் “அவஸ்தை” என்ற கன்னட நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக் கிறேன். மலையாள நாட்டுப்புறப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். தற்போது, இந்தியாவை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள போலந்து மாணவர்களுக்கு வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்து வருகிறேன்.

மிகவும் மலைக்கத்தக்க தமிழ்த் தொண்டு. பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் மிகுந்த பிணக்குகள் நிலவும் இக்காலத்தில் நீங்கள் இரு துறைகளிலும் சமமாகப் பங்கேற்றிருப்பது வியப்பளிக்கிறது. உங்களுடைய கண்ணோட்டத்தில், தமிழ்ப் பேரா சிரியர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் குறிப்பாகச் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் இருக்கிறது?

இது தமிழ் மொழி, மற்றும் வாழ்வோடு தொடர் புள்ள கேள்வி என்பதால் இதைப் பற்றிச் சற்றுக் கடுமையான கருத்துகளைச் சொல்லவும் தயங்கக் கூடாது எனக் கருதுகிறேன். இலக்கியம் என்பது 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் பரவிய புதிய சிந்தனை. கல்லூரித் தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கியத்தில் பயிற்சி இல்லை. அவர்களுக்குக் கவிதை தெரியும், யாப்பு தெரியும், சந்தம், எதுகை, மோனை என்ற எல்லாமே தெரியும். ஆனால் இலக்கியம் தெரியுமா என்பது சந்தேகமே! மு. வரதராசன், அ. ச. ஞானசம்பந்தன் போன்றோர் இலக்கியத் திறனைப் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய இலக்கிய அறிவையும் முற்றாக என்னால் ஏற்க முடியவில்லை.

தமிழாசிரியர்கள் இலக்கியத்தைச் செய்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது, இலக்கியத்தின் நோக்கம் ஒரு நல்ல கருத்தை வெளியிடுவது என்று கருது கிறார்கள். அது தேவையில்லை. இலக்கியம் நேரடி யாக கருத்தைச் சொல்லி மனிதனை ஒரு பாதையில் இட்டு செல்லக்கூடிய ஒரு தன்மை கொண்டது அல்ல. அது மிகவும் ஆழமானது. அது செயல் படக்கூடிய முறை சிக்கலானது. திருக்குறள் இலக் கியம் இல்லையா, அது நல்ல கருத்தைச் சொல்லவில்லையா என்று கொச்சைப் படுத்திப் பேசுவது இன்றைய நிலை.

நான் பணியாற்றும் கர்நாடகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்கள் சிறந்த நாவலாசிரியர்களாக இருக்கிறார்கள். இந்திய மொழிகளில் மிகவும் அதிகமான ஞான பீட விருது பெற்ற மொழி கன்னட மொழி. நான் அவர்களோடு பணி புரிந்தும் விவாதித்துக் கொண்டும் வருகிறேன். தமிழிலே ஒரே ஓர் அகிலனுக்கு மட்டுமே ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கிறது. அதே போல் சாகித்திய அகாதமியின் வாயிலாக அனைத்து இந்திய விருது பெற்ற ஆசிரியர்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்கள் இலக்கியத்தின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது. ஒரு வேளை தமிழின் பெரிய பாரம்பரியம் இவர்களை புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லத் தடையாக இருக்கிறதோ?

தமிழ்த் துறைகளிலே ஏன் இலக்கியம் வளரவில்லை? ஆழமான, வளமான தமிழ்ச் சமூகத்தின் படைப்பு வெளிவராமல் இருப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் காரணமாக இருக்கக் கூடாது. தமிழ்ப் படைப்பு களுக்கு ஏன் நோபல் பரிசு வரக்கூடாது? தமிழுக்கு ஞானபீடப் பரிசே எட்டவில்லை. உலக அளவில் வரக்கூடிய படைப்பா எட்டப் போகிறது? பிற மாநிலத்துக் கல்லூரிகள் போல், தமிழில் தற்கால இலக்கியம் கற்பிக்கப் படுவதில்லை. தமிழ்த்துறை களின் அழுத்தம் பழைய இலக்கியத்தில் இருக்கிறது. தற்காலத் தமிழை நாம் கவனிக்க வில்லை என்றால் அடுத்த தலைமுறைத் தமிழை யார் பாதுகாப்பது? தமிழ்த்துறைகள் பழைய இலக்கியத்துக்கும், புதிய இலக்கியத்துக்கும் பாலமாக இருக்க வேண்டும். புதிய இலக்கியத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் அவற்றைச் சீர் செய்ய வேண்டும்.

பெருமை பாரமாக இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் வெளிநாட்டு அலைகளை ஏற்றுக் கொண்டு படைப்பவை மொழி பெயர்ப்பு நூல்கள் போல் தோன்றுகின்றன. தென் அமெரிக்க எழுத்தாளர்களின் மேஜிகல் ரியலிசம் படைப்புகள் அவர்கள் மரபோடு ஒன்றியவை. ஆனால், தமிழ் இலக்கிய வாதிகள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு எழுதுவது திகைப்பளிக்கிறது. இவ்வாறு உலக இலக்கியத்தில் தோன்றும் அலைகளை அவ்வப்போது அப்படியே ஏற்றுக் கொள்ளும் தற்காலத் தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது ஆழமான, முக்கியமான கேள்வி. பாரதியே மேல் நாட்டு இலக்கியத்தின் ஷெல்லி, கீட்ஸ், உவோர்ட்ஸ்வொர்த் போன்ற ரொமாண்டிக் இயக்கத்தின் தாக்கத்தில் தமிழ்க் கவிதைகள் பல படைத்தான். பாரதியின் காலக்கட்டத்தில் அனைத்து இந்திய மொழிகளின் மேலும் இந்த மேலை நாட்டுத் தாக்கம் இருந்திருக்கிறது. முதல் நாவல்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் மேலை நாட்டுத் தாக்கத்தால் உருவானவை. அனைத்து இந்திய, அனைத்து உலக வீச்சிலிருந்து தமிழ் தப்ப முடியாது. உலக இலக்கிய ·பேஷன் அலைகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நான் கிராமத்திலிருந்து வந்தவன். எப்படி பேண்ட் போடுவது ·பேஷன் ஆகி விட்டதோ அதே போல இலக்கிய ·பேஷன்களைப் பின்பற்றும் எண்ணம் தப்பு என்று எனக்குத் தோன்றவில்லை. வெளிநாட்டு அலைகள் நம்மை ஈர்க்கின்றன என்றால் அதற்கும் ஏதோ நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இன்னொரு சிக்கலும் அதில் இருக்கிறது. நம்முடைய தொன்மத்தை மறப்பதற்கு இவை காரணமாக இருக்கக் கூடாது. உங்கள் கேள்வியில் அந்த ஆதங்கம் இருப்பதாக நான் பார்க்கிறேன். அது சரியான ஆதங்கம் தான். அதே நேரத்தில் நம்முடைய சூழலையும், வெளிநாட்டு வடிவத்தையும் இணைக்கும் படைப்புகள் வருவதை நாம் மறுக்கத் தேவையில்லை.

உலகமயாமாக்கல் நம் மொழியை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது passive voice என்ற தமிழ் மொழிக்குப் புறம்பான சொல் வடிவ அமைப்பு, அதாவது “கேட்கப் படுகிறது”, “சொல்லப் படுகிறது” போன்ற வடிவங்கள், தமிழ் மொழிக்கும் வந்து விட்டது. இது இப்போது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மொழி அமைப்பிலேயே ஆங்கிலப் பாணி ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் இலக்கியத்தில் ஏற்பதில் எந்த விதத் தவறும் இல்லை. மேஜிகல் ரியலிசத்தில் பயிற்சியில்லாமலேயே விமரிசனம் செய்ய எந்தத் தமிழாசிரியர்களுக்கும் தகுதியில்லை. மேஜிகல் ரியலிசத்தைப் படித்து விட்டு விவாதிப்போம். நம்முடைய சோம்பேறித் தனத்தால் நாம் இதைச் செய்யக் கூடாது, அதைச் செய்யக் கூடாது என்று விவாதம் அமைந்து விடக்கூடாது.

அது நேர்மையான கருத்து. ஆனால், பல சிற்றிதழ்ப் படைப்புகள் மொழிபெயர்ப்புக் கதைகளாகத் தெரிகின்றன. தென் அமெரிக்க இலக்கியம் அவர்களுடைய அரசியல் பின்னணியில், அவர்கள் பழங்குடி மரபுகளில் தோய்ந்து எழுந்தவை. அதனால்தான் அவை அமெரிக்க வாசகர்களையும் நோபல் பரிசுக் குழுவையும் ஈர்க்கின்றன. நம்முடைய மரபுகளும் ஆழமானவை. அவற்றைப் புறக்கணித்துத் தென் அமெரிக்கக் கருத்துகளை, நம் மரபுக்குப் புறம்பான கருத்துகளை எடுத்தாள்வது தென் அமெரிக்கக் கதைகளைத் தமிழில் எழுதுவது போல் இருக்கிறது. தமிழ்க் கதைகளைத் தென் அமெரிக்கப் பாணியில் எழுதுவதுபோல் இருப்பதில்லை.

நானும் இந்தக் கருத்தை ஏற்கிறேன். நம்முடைய சமூக உண்மைகள் வெளிப்பட வேண்டும். சில நேரங்களில், வெளிப்படும் முறை மாறும்போது, இவை நம் சூழ்நிலையில்லையோ என்ற சந்தேகம் தோன்றலாம். கடந்த 20 ஆண்டுகளில் மேஜிக்கல் ரியலிசம் போன்ற தென் அமெரிக்கப் பாணிகள் தமிழில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதற்கு முன்னர் ஆங்கில, ரஷ்ய இலக்கியங்களின் ரியலிச தாக்கங்கள் இருந்ததால், தமிழ் இலக்கியத்தில் ஒரு கிளர்ச்சியை, ஒரு புதிய முயற்சியைச் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு தென்னமெரிக்கப் பாணி புதிய சாத்தியங்களைத் தருகிறது. இந்த எழுத்துகளைப் பற்றிய நல்ல ஆழமான விமரிசனங்கள், விவாதங்கள் உருவானால், நல்ல தமிழ் இலக்கியங்கள் உருவாகும்.

மலையாளம், கன்னட மொழிகளில் இது போன்ற விவாதங்கள் மிக அதிகமாக நடக்கின்றன. தமிழ் மொழியில் படைப்பு எழுத்தாளனுக்கு மதிப்பு கிடையாது. இங்கே சினிமா நடிகர்களுக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் மதிப்பு இருக்கும். எழுத்தாளனுக்கு இல்லை. கலைத்துறை, சினிமாத் துறைக்குத் தேவைக்கு அதிகமான மதிப்பு கொடுக்கும் தன்மை தமிழில் இருக்கிறது. அது தவறான போக்கு. பிறமொழிகளைப்போல் எழுத்தாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு மதிப்புக் கொடுத்தால், நீங்கள் சொல்வது போல் ஆழமான சர்ச்சைகள் எழுந்து, நமக்கு எந்த விதமான படைப்புகள் வேண்டும் என்று தீர்க்கமான பாதை தோன்றும்.

தற்காலத் தமிழ் இலக்கிய வாதிகள் அண்மைக் காலத்தில் நோபல் பரிசு பெற்ற இலக்கியப் பாணிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசுகள் அந்தந்த நாட்டின், மொழியின் இயல்பைச் சிறப்பாகச் சொல்லும் படைப்புக்கு, ஒரு பாணிக்குக் கிடைக்கின்றன. ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட பாணிக்கும் படைப்புக்கும் இன்னொரு மொழியில் எழுதுவதற்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை. தமிழ் இலக்கியவாதிகள் தம் மரபிலிருந்து, தம் மக்களின் உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்ல தமிழர்கள் சிந்தனைக்கு ஏற்ற ஒரு பாணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன். இதை மறுத்து, பரிசு பெற்ற பாணியில் பயிற்சி இருந்தால் பரிசும் பெறத் தக்க பாணி தானே உருவாகும் என்கிறார்கள் சிலர். இது பற்றித் தங்கள் சிந்தனை என்ன?

இது முக்கியமான ஒரு கேள்வி. தமிழ் மொழியில் தற்கால இலக்கிய அறிமுகம் மிகக் குறைவு. கன்னட மாணவர்களுக்கு உலக இலக்கியப் பயிற்சிக்காக Sophocles, Greek Tragedies போன்றவற்றைக் கன்னடத்தில் மொழி பெயர்த்துப் பாடமாக வைத்துள்ளார்கள். பல நாவல்களையும் மொழி பெயர்த்துப் பாடமாக வைத்துள்ளனர். அதனால் தற்கால இலக்கிய வளர்ச்சி கன்னடத்தில் அதிகம். ஆனால், தமிழ் பேராசியர்களுக்குத் தற்கால இலக்கியத்தில் பயிற்சி இல்லாததால் பழைய இலக்கியத்தை வலியுறுத்துகிறார்கள். பழைய இலக்கியத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால் அதைப் படிக்கும் உணர்வு நமக்கு அந்நியமானது. இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள், அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான படைப்புகளுக்குத் தற்காலத்தில் ஈர்க்கும் தன்மை இருக்காது. ஆனால், எப்போதோ எழுதிய தமிழ்ப் படைப்புகள் தமிழில் இருப்பதால் படிக்க வேண்டிய கட்டாயத்துக்காகப் படிக்கிறார்கள். அதே மாணவர்கள், இப்போது உள்ள நாவலைப் படித்தால் அவர்களுடைய உணர்வுகளுக்கு அருகில் உள்ள நாவலால் ஈர்க்கப் படுவார்கள்.

தற்கால இலக்கியத்தை ஈடுபாடுடன் நாம் படிப்பதற்குச் சில காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. சிறு பத்திரிக்கைகள் தம் சொந்தக் காசைப் போட்டு புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் வெளியிடுகிறார்கள். நிறையப் பணம் இருக்கும் பல்கலைக் கழகங்கள் ஏதும் செய்யாமல் இருந்தாலும், சாதாரண கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட ·பேஷன் என்று சொல்லக்கூடிய மேலை நாட்டுப் பாணிகளைப் பின்பற்றி தன்முனைப்புடன் இலக்கியம் படைக் கிறார்கள். இவர்களை நான் defend பண்ணியே பேச விரும்புகிறேன்.

இவை போன்ற புது முயற்சிகளுக்குத் தமிழில் ஊக்கம் கொடுப்பதில்லை. முதல் நாவலுக்கு, முதல் கவிதைத் தொகுப்புக்கு, இருபது வயதுக்கு முற்பட்ட இளைஞர் படைப்புகளுக்கு என்று பல பிரிவுகளுக்குக் கன்னடம், மலையாளம் மொழிகளில் பரிசு கொடுப்பது போல் தமிழில் இல்லை. இங்கே சினிமாவும், டிவியும் தான் பெரிய விஷயம். எழுத்துக்குப் பல்கலைக் கழகம், சமூகம், பெரும் பத்திரிக்கை, ஊடகங்களில் அங்கீகாரம் இல்லை. மற்ற மொழிகளைப் போல இலக்கியச் சர்ச்சை நமது பத்திரிக்கைகளில் இல்லை. அவற்றிற்கு சிற்றிதழ்களைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. அல்லது இப்போது மின்னிதழ் களை நாட வேண்டி இருக்கிறது. ஆனால் தமிழ்த்துறைகள் இதற்குள் விழித்துக் கொண்டிருப் பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனை மின்னிதழ்களைத் தமிழ்த் துறைகள் வெளியிடுகின்றன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

ஆமாம். அது ஏமாற்றத்துக்கு உரிய செய்திதான்.

எனவே, தமிழ்த் துறைகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கி, இவர்களையும் தமிழின் மையத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகிறேனே ஒழிய உங்கள் பாணியில் இவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவேயில்லை, மன்னிக்கவும்.

தமிழ் ஆசிரியர்கள், தமிழ்த் துறைகளின் கடமை வெறும் படைப்பிலக்கியம் மட்டும் இல்லை. ஒரு வளமான வளர்ச்சி தொடர்ந்து வரும் எந்த சமுதாயத்தின் பல கூறுகளையும் அவர்களுடைய மொழித் துறைகளில் காணலாம். ஆங்கிலத்தில் அகராதிகளும், களஞ்சியங்களும் அடிக்கடி புதுப்பிக்கிறார்கள். பல துறைகளில் நூல்கள் வெளியிடுகிறார்கள். இவற்றில் ஆங்கில மொழித் துறைகளின் பங்கு அளவிட முடியாதது. அவற்றைப்போல் இயங்காமல் தமிழ்த் துறைகள் பழைய சொத்தைப் பாதுகாக்கும் காவல் துறையாக மட்டுமே இயங்குவது போல் தோன்றுகிறது.

என்னை விடத் தீவிரமான திறனாய்வை நீங்கள் முன் வைக்கிறீர்கள். அது சரி என்றே எனக்குப் படுகிறது. தமிழ்த் துறைகளின் கடமை பழையதை மீண்டும் அடுத்த தலைமுறைகளுக்கு இறக்குமதி செய்வது தான். நீங்கள் சொல்வது போல் வெறும் தற்கால இலக்கியம் மட்டும் தமிழ்த்துறையின் கடமை இல்லை. ஆனால், இலக்கியம் ஒரு முக்கியமான துறை என்பதை நாம் மறக்கக் கூடாது. நீங்கள் சொன்னது போல் எத்தனை பேராசிரியர்கள் எத்தனை அகராதிகள் உருவாக்கி இருக்கிறார்கள்? பாரம்பரியமும், சிறந்த மரபும் கொண்ட மொழியில் இந்த மாதிரி வேலைகள் மிக உற்சாகமாக நடந்து இருக்க வேண்டுமே. ஆனால், அவை இல்லாமை உங்களைப் போல் எனக்கும் வருத்தத்தைத் தான் தந்திருக்கிறது.

இதற்கு அரசு உதவி இல்லாததால் இப்படியா? அல்லது தமிழ்த் துறைகள் தமக்கென்று இட்ட வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாலா?

அரசு ஊக்கம் கொடுத்தால் நல்லதுதான். ஆனால் அரசுகளின் உதவி இல்லாமலேயே என்னென்னவோ சாதித்திருக்கிறார்கள். இந்தியாவில் மொழி பெயர்ப்புகளிலிலேயே மிக அதிகமான மொழி பெயர்ப்புகள் வெளிவருவது தமிழ் மொழியில்தான்! ஒரு பைசா வரும்படி இல்லாவிட்டாலும் தன் முனைப்பால் சிற்றிதழ்களும் சிறு எழுத்தாளர்களும் தம் சொந்தச் செலவில் பல மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வந்திருக்கின்றன. இது போன்ற முயற்சிகளுக்கு அரசுகளோ, துறை அறிஞர்களோ தூண்டுகோலாக இருந்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு இவற்றில் அக்கறை இல்லை. சாகித்திய அகாதமி விருது போல் தமிழில் ஏதும் இல்லை. தமிழ் நாட்டில் பரிசுகள் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் அவர்களுக்கு வேண்டிய வர்களுக்கு உதவி செய்யத்தான் இலக்கியப் பரிசுகள் பயன்படுகின்றன.

அரசு சார்பற்ற தனியார் அமைப்புகள் ஏதும் தமிழ்நாட்டில் இது போன்ற தமிழ் இலக்கியப் பரிசுகள் கொடுக்கின்றனவா?

கே. கே. பிர்லா பரிசு என்பது ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறது. இது தமிழ் மொழிக்கு இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமானுஜர்” என்ற நாடகத்துக்குக் கிடைத்தது. புலிட்சர், புக்கர் பரிசுகள் போல் தமிழ் இலக்கியத்துக்குப் பரிசுகள் இல்லை. தனியார் வருவார்களா? வரலாம். ஸ்ரீராம் சிட் ·பண்ட்ஸ் என்ற அமைப்பு காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களை ஆதரிக்கின்றன. பிற்காலத்தில் வரலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை என நினைக்கிறேன்.

கலையின் அடிப்படையில் நல்ல படைப்புகளை இனங்காணுவது கற்பிக்கப் படுவதில்லை என்றீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில் கலையின் அடிப்படையில் ஒரு நல்ல நாடகம், நல்ல சிறுகதை அல்லது புதினம் இவற்றை எப்படி இனம் காணுவீர்கள்?

கலை, இலக்கியம் என்பவை அனைத்து உலகத் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் குறிப்பிடத் தக்க மொழியின் அடையாளமும் அதில் சேர்ந்து இருக்கும். மனிதனுடைய அடிப்படை உணர்வு இருக்க வேண்டும். இதைப் படித்தவுடன் மனித உணர்வு விரிந்து கொள்ள வேண்டும். அகவிரிவு என்ற ஒருவித மகிழ்வு இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, அண்மையில் Crime and Punishment என்ற நாவலைப் படித்தேன். ஒரு முக்கிய பாத்திரம் கொலை செய்து விடுகிறான். அந்த நாவல் முழுவதும், அவன் கொலை செய்ததைப் பற்றிய பச்சாதாபம். இது மனித குலத்துக்குப் பொதுவான தன்மையை விளக்குகிறது. ஆழமான விஷயங்கள், சிந்தனைகள், மனதுக்குள்ளே போய், நமது உணர்வின் ஒவ்வொரு நுட்பத்துக்குள்ளும் இணைந்து நம் அக உணர்வை விரிவு செய்கிறது. இது ரஷ்யாவில் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டது. அந்த நபருக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை. ஆனால், படித்தவுடன் என்னுடைய பக்கத்திலிருந்து என் உணர்வுக்குத் தொடர்புள்ள ஒருவர் எழுதியிருந்தது போலிருந்தது. அது அனைத்துலகத் தன்மை.

எனவே, ஒரு தமிழ்ப் படைப்பின் மொழி பெயர்ப்பு இந்த அனைத்துலகத் தன்மையை கொடுத்து விட்டது என்றால் அது மிகச் சிறப்பான படைப்பு எனக் கருதப்படும் என நினைக்கிறேன். ஆனால், அது தமிழனுக்குப் புரியவில்லை என்றால் அது தேவையில்லை. இவை போன்ற சிக்கல்களைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டும். கலைத்தன்மை, படைப்பியல் போன்ற கருத்துகளை ஆராய வேண்டும். ஷேக்ஸ்பியரைச் சிறந்த படைப்பாளி என்கிறார்கள். எங்கோ பிறந்த மனிதன், ஏதோ ஒரு காலத்தில் எழுதப் பட்ட ஒரு படைப்பு, அதனை நாம் படித்தவுடன் எனக்கு அது ஒரு பக்கத்து உணர்வு போல் தோன்றுகிறது. என்னுடைய கலைக்கோட்பாடு, சிற்றிதழ் விமரிசகர்கள் பால் என்னை ஈர்க்கிறது. இலக்கிய அடிப்படை உணர்வைப் புரிந்து கொண்ட தமிழ்த்துறைப் பேராசிரியர் நூல் ஒன்றை இது வரை நான் படிக்கக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நான் புத்தகங்களைத் தேடிப்படிக்கக் கூடியவன்!

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாகப் படித்து இருக்க வேண்டிய படைப்புகள் என்று உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக. சிறுகதை என்று எடுத்துக் கொண்டால் மௌனி. - தென்றல் இதழில் மௌனி பற்றிய கட்டுரையைக் கண்டதும் மகிழ்ந்தேன் - மௌனியின் படைப்புகளை உலக அளவில் பாராட்டுவார்கள். ஜெர்மன் நாட்டவர் ஒருவர் மௌனியின் படைப்பின் மொழி பெயர்ப்பால் ஈர்க்கப் பட்டு தமிழ் நாட்டுக்கு வந்து யாரும் அறியாத செய்திகளைத் திரட்டினார். கா·ப்காவின் படைப்பு போல் ஆனால் இந்தியத் தன்மையுடன் இருந்தன என்றார். மௌனி, புதுமைப் பித்தனின் கபாடபுரம், சிற்பியின் நகரம், போன்ற படைப்புகள், திலீப்குமார் படைப்புகள் முக்கியமாகப் படுகின்றன. கவிதைகளில் ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், சி. மணி, போன்றவர்கள் படைப்புகள் முக்கியமானவை. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. கலாப்பிரியா என்ற கவிஞரின் கவிதைகளில் ஆழ்வார்களின் தாக்கத்தை நீங்கள் காணமுடியும். பிரம்மராஜன் என்பவர், ஆங்கிலப் பேராசிரியர். அவரது கவிதைகளின் நுட்பத்தன்மை என்னைக் கவர்கிறது. புதுக்கவிதை என்னை மிகவும் ஈர்க்கிறது. மரபுக் கவிதைகள் என்னைப் பொதுவாக ஈர்ப்பதில்லை. இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையான முயற்சிகள் அல்லது பணிகள் என்ன என்று கருதுகிறீர்கள்?

இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையான சூழல் இருக்க வேண்டும். அந்தச் சூழலைச் சிற்றிதழ்கள் தற்போது தருகின்றன. ஆனால், அதில் பிரச்சினைகளும் இருக்கின்றன. வங்காளம் போன்ற மொழிகளில் பெரும் பத்திரிக்கைகளில் இலக்கிய விவாதங்களும், செய்திகளும் வெளிவருகின்றன. தமிழில் அது அரிது. ஓரளவு அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. குமுதத்தின் தீராநதியைத் தவிர சிற்றிதழ்கள்தாம் அந்தச் சூழ்நிலையைத் தருகின்றன. இது போன்ற சிற்றிதழ்களுக்கு அனுபவமுள்ள மூத்தவர்கள் அல்லது அரசு நிதி உதவி அளித்து மொழி, இலக்கிய வளர்ச்சிக்குச் செயல்படலாம்.

அமெரிக்காவில் இருக்கும் விளக்கு என்ற அமைப்பு 25,000 ரூபாய் பரிசு தருகிறது. அதிலும், தமிழ் நாட்டில் கவனிக்கப் படாத தமிழ்ப் படைப்பாளிக்குத் தருவது இந்தச் சூழ்நிலை மாறி வருவது என்பதற்கு அடையாளம். சி. சு. செல்லப்பா, தருமு சிவராம், கோவை ஞாநி, திருவனந்தபுரத்துப் பெரியவர் நகுலன் போன்றோருக்கு “விளக்கு” பரிசு கொடுத்தார்கள். வாழ்க்கையில் ஒருவரும் பரிசு கொடுக்காத தமிழ்ப் படைப்பாளிகளை விளக்கு தேடிச் சென்று பரிசளித்தது. இது போன்ற தமிழ்ச் சமூகத்தின் பன்முகத் தன்மை, அதன் உயிரோட்டத்தையும், வாழும் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. இதுபோன்ற சூழல்கள், தமிழ் மொழி, மரபு, அதன் பல்வேறு தன்மைகளை உயிரோட்டம் உள்ளதாகத் தொடர வைக்கும். எனவே இது போன்ற கருத்துள்ளவர்கள், நாமும் சிலது செய்ய வேண்டும், என்று வந்து செயல்பட்டால் நாம் பாராட்ட வேண்டும்.

தற்காலத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படை யையே மாற்றக் கூடிய மிகப் பெரும் தொழில் நுட்ப மாறுபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில அறிவு இல்லாதவர்களுக்கு இவை பற்றித் தெரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது. இதைத் தவிர்க்கத் தமிழ் ஏடுகள், ஊடகங்கள் என்ன செய்கின்றன, என்ன செய்யலாம்?

ஒரு காலத்தில், கோவை கலைக்கதிர் போன்ற, விஞ்ஞான ஏடுகள் வந்து கொண்டிருந்தன. இப்போது அவை போன்ற ஏடுகள் வருகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால், தமிழை வளர்க்கக் கூடிய நிதி வசதி உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்ற பல நிறுவனங்கள் தோன்றியுள்ளன. தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற துறைச் செய்திகளைத் தாங்கி வரும் ஏடுகள் வெளிவரவேண்டும். நீங்கள் இந்தத் துறை யைச் சார்ந்தவர். ஏற்கனவே பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள், ஒத்த சிந்தனை உள்ளவர்கள், இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும்.

அமெரிக்காவைப் போல், நாளேடுகள், வார இதழ்கள், ஆழமான பன்முகச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் செல்கின்றனவா? இல்லை, என்றால் ஏன்?

இது முக்கியமான கேள்வி. பத்திரிக்கைகள் பெரும்பாலும் சினிமாச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றன. இது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. உலக அளவில் முக்கியமான செய்திகள் தமிழ்ப் பத்திரிக்கைகளில் இடம் பெறுவதில்லை. பொருளாதாரத்தில் நோபல் பரிசு யாருக்குக் கிட்டியது, எப்படிப்பட்ட சிந்தனை யைப் பரப்பி இருக்கிறார், ஒரு இந்தியனுக்குக் கிட்டியிருக்கிறது என்றால் அவர் என்ன மாதிரி கருத்து கொண்டிருக்கிறார் என்பவை போன்ற செய்திகள் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையில் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதே போல இலக்கியத் தில் நோபல் பரிசு பெற்றவர் பற்றிய செய்திகளும் இடம் பெறுவதில்லை. தமிழைப் பயனற்ற மொழியாக மாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. பல சிறந்த கருத்துகள், முக்கியச் சிந்தனைகள், அரசியல் நிகழ்ச்சிகள், பன்னாட்டுச் செய்திகள் இவற்றிற்கெல்லாம் தமிழில் இடமே இல்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் சினிமா நடிகைகள், சினிமாச் செய்திகளை மட்டும் வெளியிடுகின்றன. இது போன்ற செய்திகள் கொஞ்சம் தேவை. ஆனால், பணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, பண்பாடு பற்றிய அக்கறையில்லாமல் வியாபாரத்துக்குப் பத்திரிக்கை நடத்துகிறார்கள். சமூகப் பொறுப்பு இல்லாமல் பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் இந்த நிலையில் இயங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

ஆழ்ந்த சிந்தனையுள்ள வாசகர்கள், இது போன்ற செய்திகளை ஆங்கிலத்திலேயே படித்துக் கொள் வார்கள். பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இவை தேவையில்லை என்று சில பத்திரிக்கை நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் ஒரு அடுப்பறை மொழியாக மட்டுமே இயங்கும் ஆபத்து இருக்கிறதல்லவா?

தமிழில் வெளியிட வேண்டியதில்லை என்பது மிகவும் பொறுப்பற்ற கூற்று. தமிழ் மொழியில் ஆழ்ந்த சிந்தனைகளையும் தகவல்களையும் தொடர்ந்து பரப்பாவிட்டால் மொழியின் இயல்பே மாறத் தொடங்கிவிடும். கடைசியாகத் தமிழ் சினிமாவைத் தவிர தமிழ் மொழிக்கு வேறு எதுவும் இல்லை என்ற போக்கு உருவாகும் என்றால், அது தமிழ் மொழியை அழிப்பது போல் ஆகும். ஈழத்தமிழர்கள் பலர், ஆங்கிலத்தில் புலமையுள்ளவர்கள் கூட, பன்னாட்டுச் செய்திகளை நல்ல தமிழில் எழுதி வருகிறார்கள். அவர்களது தமிழ் படிப்பதற்கு மகிழ்வளிக்கிறது. மொழியின் வலிமை கூடுகிறது. ஆங்கிலத்திலேயே எல்லாம் சாதிக்க முடியும் என்பது மேட்டுக்குடி மனப்பான்மையாக எனக்குப் படுகிறது.

இந்தச் சரிவு அண்மையில் நிகழ்ந்ததா? இல்லை பாரதி காலத்திலிருந்தே தொடர்கிறதா?

இல்லை. பாரதி காலத்தில் இது இல்லை. அவரது தொகுப்புகள் பிரமிக்க வைக்கின்றன. ஜப்பானிய நாட்டின் நிகழ்ச்சிகள், ரஷ்ய நாட்டின் புரட்சி, பொருளாதார நிகழ்வுகள், இந்த மாதிரியான செய்திகளைப் பாரதி தமிழில் எழுதி இருக்கிறார். இந்தச் சரிவு அண்மையில் தொடங்கியது. சமூகப் பொறுப்பற்ற, பொருளாதார, வியாபார நோக்கில் செயல்படும் தன்மை கூடிய பின்பு தொடங்கிய சரிவு இது. நிறைய பேர் படிக்க வேண்டும், எளிமைப் படுத்த வேண்டும் என்று தொடங்கி கருத்துகளை முற்றிலும் விட்டு விடுகிறார்கள். மலையாளத்தில் தெருவில் போகிறவர்கள்கூட உலக அரசியல் செய்திகளை அறிந்திருப்பார்கள். ஆனால் தமிழில் அப்படியில்லை. இந்தச் சரிவு நம் அறிவுஜீவிகள், அறிஞர்கள் தங்கள் பொறுப்பு உணர்வைத் தட்டிக் கழித்து விட்டதாலோ என்று தோன்றுகிறது. தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும் என்று போராடுவதைப் போலவே, தமிழ் மக்களின் அறிவுத் திறமையையும் அகலமாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் அல்லவா? உலகச் செய்திகளைத் தமிழிலும் தரவேண்டும் என்று யாராவது குரல் கொடுத்திருக் கிறார்களா? போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? இவை எல்லாம் முக்கியமான பிரச்சினைகள்.

நீங்கள் முன்னர் குறிப்பிட்டது போல இது பாரம்பரியச் சுமை கொண்ட அனைத்து மொழி களுக்கும் உள்ள சிக்கலா இல்லை தமிழுக்கு மட்டும் உள்ள சிக்கலா?

இது பாரம்பரியச் சுமைச் சிக்கல் அல்ல. பெரிய பாரம்பரியம் உள்ளவர்கள், அந்தப் பாரம்பரியத்தில் மூழ்குவது ஒருவிதமான கனவுக்குள் போகுவது சில தன்மைகள். ஒரு சமூகம் தொடர்ந்து எல்லா வகையிலும் இயங்கிக் கொண்டு நிலையாய் இருந்தால் இவை போன்ற காரியங்கள் நடக்கா. சமூகத்தின் சில அங்கங்கள் ஏதோ காரணங்களால் சாகத் தொடங்குகின்றன. இந்த மாதிரி சாக விடுவது நல்லதல்ல. சமூகத்தைச் சார்ந்த பொறுப்பானவர் களுக்கு நல்லதல்ல. யார் எப்படிக் கெட்டால் நமக்கென்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக் கூடியவர்களுக்கு இந்தச் சர்ச்சை களும் விவாதங்களும் தேவையில்லை, ஆனால் ஒரு சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவர்களுக்கு இந்த விவாதங்கள் தேவை. இந்த மாதிரியான சர்ச்சைகள் வரும்போது, உங்கள் பாரம்பரியம் உங்களைத் தூங்க வைக்கிறது, அல்லது முட்டாளாக்குகிறது என்றால் அந்தப் பாரம்பரியத்தால் என்ன பயன்?

இந்தச் சரிவுக்கு தமிழர்கள் பிறருக்கு அடிமைப் பட்டு வாழ்ந்திருக்கும் வரலாறு காரணமாக இருக்குமோ?

இது மிகவும் அக்கறையோடு யோசிக்க வேண்டிய கேள்வி. அந்நிய ஆதிக்கத்தால் தமிழர்களுக்குச் சிந்தனைக் கோளாறு ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் நாட்டில் சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமல்லாமல் தெலுங்கின் ஆதிக்கமும் இருந்திருக் கிறது. இவற்றால், தமிழனுடைய வளம், தமிழ் உயிரோட்டமாக விளங்கக்குடிய பல்வேறு அங்கங் களில் சில செத்துப் போய் விடுகின்றன. இவற்றிற்கு அந்நியர் வருகை காரணம் என்ற கருத்தையும் ஆழமாகப் பார்க்க வேண்டும். தமிழை முன் வைத்த இயக்கங்கள் ஆத்ம சுத்தத்தோடு செயல் பட்டனரா? “மடையர்கள் தாம் தொண்டர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தாம் தான் சொல்வதை எல்லாம் செய்வார்கள்” என்று சொன்ன பெரியார் இயக்கத்தின் தாக்கம், சில சமய நம்பிக்கைகள் என்று எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்க வேண்டும். எந்தக் கேள்வியை யார் கேட்கலாம் என்று விதிமுறைகள் எல்லாம் விதிக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தக் கேள்வியையும் எழுப்பலாம் என்ற நிலை சமூகத்தின் மேன்மைக்குக் காரணமாக இருக்கும்.

நீங்கள் பெங்களூரில் தமிழ் கற்பித்தலிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலையில் தமிழ் கற்பிக்க வந்திருப்பது வியக்கத்தக்கது. போலந்தில் தமிழ் கற்பிக்கும் அமைப்பு எப்படி உருவாயிற்று?

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் தமிழ்த்துறை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவது பரவிய போது, கால்டுவெல் பாதிரியாரின் ஆராய்ச்சியால் இந்தியா வின் முக்கியமான இன்னொரு மொழிக்குடும்பம் திராவிட மொழிக்குடும்பம் என்பது உலக ஆராய்ச்சி யாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியா வைப் புரிந்து கொள்ள சமஸ்கிருதம் மட்டும் போதாது, திராவிட மொழிகளில் மூத்த மொழியான தமிழும் தேவை என்ற எண்ணம் வலிவு கொண்டது. தமிழை ஐந்து ஆண்டுகள் படிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து தமிழ் கற்பிக்க வந்த பேராசிரியர்களுள் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர்.

ஆனால் இந்தத் தமிழ் மாணவர்களுக்கும் ஆதரவு தேவை. போலந்து நாட்டில் தமிழ் படிக்கும் இந்த மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கும், புலம் பெயர்ந்த தமிழிடங் களுக்கும் அவர்களை வரவழைத்துத் தமிழ் பற்றிக் கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி நூல்களை அவர்களுடைய நூலகங்களுக்குக் கொடுக்க வேண்டும். இவர்கள் ·பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகளையும் தெரிந்தவர்கள் என்பதால் ஐரோப்பிய அறிஞர்களிடம் தமிழ் பற்றிய கருத்தைப் பரப்ப இவர்கள் துணை புரிவார்கள். இந்தியாவில் பல தமிழ் மாணவர்களை உருவாக்குவதை விட ஒரு போலந்து தமிழ் அறிஞரை உருவாக்குவது அதிகப் பயனைத் தரும். பிற நாடுகளில் தமிழ் கற்பிக்கும் கல்வி நிலையங்களோடு இவர்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ்க் குடும்பங்களோடு 2-3 மாதங்கள் தங்கி தமிழ் ஆராயும் வாய்ப்பை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் முறையாகத் தமிழ் பயின்ற மாணவர்களைத் தமிழிலேயே தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பேரா. தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து அவர்களே, தென்றல் வாசகர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி.

பேட்டி, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்
ஒலிபெயர்ப்பு: ஆஷா மணிவண்ணன்

நன்றி - தென்றல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக