22/03/2011

நேர்காணல் - "அது நன்னன் முறை" - முனைவர் நன்னன்

சென்னைத் தொலைக்காட்சி முதன்முதலாகத் தமிழகத்தில் தொடங்கிய காலத்தில் மக்களுக்கு பயன்படும் பலவகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். கண்மணிப்பூங்கா, தமிழறிவோம், எண்ணும் எழுத்தும், வாழ்க்கை கல்வி போன்று மொழி மற்றும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலம் அது. முனைவர் நன்னன் அவர்களின் எண்ணும் எழுத்தும், தமிழறிவோம், உங்களுக்காக எனும் நிகழ்ச்சிகள் அச்சமயம் மிகப் பிரபலம்.
நன்னன் அவர்கள் தமிழ் எழுதவும், படிக்கவும், சொற்களைச் சரியாக உச்சரிக்கவும், பிழையின்றிப் பேசவும் என்று மிக அழகாக, சிறு குழந்தைகளும் அறிந்து கொள்ளும் விதத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வகுப்பு நடத்திச் சாதனை படைத்துள்ளார்.

இன்றும் அவரது தமிழ்த் தொண்டு தொடர்கிறது. அவரது நினைவுகளும், கருத்துக்களும்...

நீந்தத் தெரிந்தால் படிப்பு!

நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். நெய்வேலி, விருதாச்சலம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள காவனூர் என் ஊர். ஆனால் சுமார் 50 ஆண்டுகளாகச் சென்னையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்தாருக்கும் என் பிள்ளைகளுக்கும் சொந்த ஊர் என்றால் அது சென்னைதான்.

எங்கள் குடும்பம் வேளாண்மைக் குடும்பம். விவசாயம்தான் எல்லோருக்கும் தெரியும். எங்கள் கிராமத்தில் ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஏதோ பகை இருந்தது. அது ஒரு தனியார் பள்ளி. அன்றைய காலத்தில் பள்ளிக்கூடம் அனுப்பாமல் இருந்தாலும் இருப்பார்கள். பகையாளி பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். என் பெற்றோர்களும் என்னை அங்குச் சேர்க்கவில்லை. எங்கள் ஊரின் இரண்டு பக்கமும் ஆறு. ஒரு பக்கம் வெள்ளாறு, இன்னொரு பக்கம் மணிமுத்தாறு. எங்கள் ஊரில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் எல்லாருக்கும் நீந்தத் தெரியும். நன்றாக நீந்தத் தெரிந்தபிறகுதான் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பாங்க. திருமுட்டம் என்ற ஊரில் உள்ள District Board Higher Elementary School பள்ளியில் சேர்த்தார்கள். அதில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்.

திண்ணையும் பெட்டியும்

அதன் பிறகு நான் விவசாயம் பண்ணிக்கொண்டிருந்தேன். அன்றைய காலத்தில் நாங்கள் வெல்லம் செய்து அதைக் கொண்டு போய் சிதம்பரத்தில் உள்ள மண்டியில் கொடுக்கச் செல்வோம். அப்படிக் கொடுப்பதற்காக ஒரு தடவை என் தந்தையாருடன் நான் சென்றேன். சிதம்பரத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் சாப்பிட உட்கார்ந்தோம். அப்போது எல்லாம் ஓட்டல்கள் அரிதாகத்தான் இருக்கும்.

நாங்கள் சாப்பிட உட்கார்ந்த வீடு மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் வீடு. சோமசுந்தரம்பிள்ளை என் தந்தையாரிடம் என்ன செய்கிறார் உம் மகன் என்றார். அதற்கு உடனே எங்கள் அப்பா குடும்பம் பார்க்கிறான் என்றார். உடனே அவர் "என்ன குடும்பம் பார்க்கிறானா? குடும்பம் பார்க்கத்தான் நீங்க இருக்கீங்க. உங்க மூத்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்புறம் என்ன?" அப்போ எங்க அப்பாவிற்கு வயது ரொம்ப அதிகம் இல்லை. சுமார் ஒரு 55 அல்லது 58 இருக்கும். "இவனை இங்கேயே படிக்க விட்டுவிட்டுப் போங்க" என்றார் அவர். உடனே எங்கப்பாவும் விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்வதற்கான புகுமுகத் தேர்வுக்குத் தயார் செய்கின்ற பள்ளி ஒன்று இருந்தது. எந்தவிதக் கட்டணமும் கிடையாது. அங்கே என்னைச் சேர்த்துவிட்டார்.

அங்கு ஓர் ஆச்சியம்மா வீடு. மாதத்திற்கு 5 ரூபாய் சாப்பாடு. என்னைப் போல் மேலும் சில பையன்கள். படுப்பதற்கு இன்னொரு வீட்டுத் திண்ணை. பெட்டி, படுக்கை எல்லாம் வாசலில் வைத்திருபோம். எங்கப்பா எனக்குப் பெட்டி ஒன்று வாங்கி கொடுத்துவிட்டு ஊருக்கு போய்விட்டார்.

எட்டாம் வகுப்பு படித்த கையோடு வந்திருந்தால் நான் அப்பவே ஓடிப்போயிருப்பேன். ஆனா இரண்டு ஆண்டு விவசாயத்தில் அதிகம் உழைத்ததால் எனக்கு இந்த சுகமான வாழ்க்கையில் ஓர் ஆர்வம் வந்தது. இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டுமென்றால் படிக்க வேண்டும். அதனால் எனக்கு படிக்கணும்னு ஆர்வம் வந்தது. அப்புறம் படித்தேன்; நன்றாகப் படித்தேன்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதினேன். முதல்தரமான மதிப்பெண் பெற்றேன். எனவே எனக்கு உதவித்தொகை கிடைத்தது. மாதம் 10 ரூபாய் உதவித்தொகை.

உ.வே.சா தந்த பரிசு

அவ்வாண்டு பல்கலைக்கழகத்தேர்விலே நான் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். அதைப் பார்த்தவுடன் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் எனக்கு 50 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். என் இறுதியாண்டுப் படிப்புக்கு வேண்டிய அத்தனை புத்தகங்களையும் அதில் வாங்கிவிட்டேன். அவரிடமே ஒரு 20 புத்தகத்திற்கான பட்டியல் எழுதிக் கொடுத்துவிட்டேன். அவரும் வாங்கி கொடுத்துவிட்டார். எனக்குப் பரிசு கொடுத்த மறு ஆண்டே உ.வே.சா அவர்கள் காலமாகிவிட்டார். தமிழ்ப்புலவர் பட்டம் வாங்கினேன். அது இன்றைய எம்.ஏ ஆனர்ஸ¤க்கு இணை. அதற்குப் பிறகு நிறைய மேல்நிலை வகுப்புகளுக்கு நான் பாடம் நடத்தியிருக்கிறேன். எனக்கு இப்பவும் என் புலவர் படிப்புதான் உதவி செய்கிறதே தவிர அப்புறம் நான் படிச்ச எல்லாம் சும்மா காசு சம்பாரிக்கிறதுக்குதான்.

ஆசிரியப் பணி

கோயம்புத்தூரில் உள்ள கலைக் கல்லூரியில் எனக்கு வேலைகிடைத்தது. பின்னர் பல்வேறு இடங்களில் வேலை செய்தேன். கடைசியாகச் சென்னை மாநிலக்கல்லூரியில் பணி புரிந்தேன். என்னிடம் முதுகலை படித்த மாணவர்கள் உதவிப் பேராசிரியராக பிறகு வேலைக்கு சேர்ந்தார்கள். நான் மட்டும் இன்னும் கீழேயே இருந்தேன். அதனால் நான் ஊக்கப்பட்டு மெட்ரிக்குலேசனில் தொடங்கி எம்.ஏ.வரை தனியே படித்து முன்னேறினேன். அப்போது என்னை ஒரு பேராசிரியர் பி.எச்டி பண்ணச்சொன்னார். எனக்கு அதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வுபெறப் போகிறோம். எதற்கு இப்போ பி.எச்டி என்று இருந்தேன். சில காரணங்களால் பிஎச்டி வாங்குவதற்கு முயன்றேன். தனிப்பட்ட முறையில் ஆய்வு பண்ணுவதற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி கேட்டு எழுதியிருந்தேன். அவர்களும் எனக்கு அனுமதி அளித்தனர். எனக்கு வழிகாட்டியாக இருந்தவருக்கு கூடத் தெரியாமல் நான் பல்கலைக்கழகத்தில் எழுதி அனுமதி வாங்கிவிட்டேன். ஏற்கெனவே நான் எம்.ஏ.வுக்கு கிட்டத்தட்ட 13 ஆண்டு வகுப்பு நடத்தியிருக்கிறேன். அந்த அனுபவம் இருந்ததால் என்னை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய அனுமதித்தார்கள். நானும் பிஎச்டி வாங்கினேன்.

ஓய்வுபெற்ற பிறகு என்னைக் கொஞ்சநாள் வயதுவந்தோர் கல்வி வாரியத்தில் துணைத்தலைவராக நியமித்தார்கள். என்னுடைய அனுபவத்தை எல்லாம் பயன்படுத்தி அத்துறையில் சிறப்பாகப் பணியாற்றினேன். தொலைக்காட்சி அனுபவமும் கைகொடுத்தது.

இறும்பூது தந்த பெருமை

'தேர்தலில் வெற்றி பெற்றதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்?' என்றால் இந்த தேர்தலில் தோற்றுபோய்விடுவாய், எப்படி வெற்றி பெற்றாய் என்று கேட்டதாகும். 'நீங்கள் நலமுடன் இருப்பதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்' என்றால் 'நீ செத்துப் போயிருப்பாய் என்று நினைத்தேன், நீ எப்படி உயிருடன் இருக்கிறாய்' என்று பொருள். தப்பாகவே எல்லாரும் பயன்படுத்துகிறோம். இறும்பூது என்பதற்கு ஆச்சரியம், வியப்பு, அதிசயம் என்று பொருள். நாம் மகிழ்ச்சி என்று நினைக்கிறோம் என்று பெரிய அறிஞர்கள் வரை நினைத்துக் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை ஒரு கூட்டத்தில சொன்னேன். இதைப் பார்த்த கலைஞர் அவர்கள் இதை எல்லாம் நீங்கள் குங்குமத்தில் எழுதுங்கள் என்றார். குங்குமத்தில் தொடர்ந்து எழுதினேன்.

வழக்குத் தமிழ் என்னும் பெயரில் அவற்றைத் தொகுத்து நூலாகப் போட்டேன். அந்த நூலில் முன்னுரையிலேயே ''எல்லா எழுத்தாளர்களும் எழுதுகோலைக் கீழே வைக்கிற காலத்தில் நான் எழுதுகோலை எடுக்கிறேன்'' என்று தொடங்கினேன். 25 நூல்கள் எழுதியுள்ளேன். பெரியார் கணினி 1300 பக்கம். இப்பவும் இரண்டு நூல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடநூல்கள் நிறைய எழுதியிருக்கிறேன். இன்னும் என்னால் எழுத முடியும். நிறையக் கருத்துகளை வைத்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் எழுத வேண்டும் என்பது என் ஆசை.

சென்னைத் தொலைக்காட்சியில் என்னை முதன்முதலாகக் கொண்டுச் சென்றார்கள். என் நிகழ்ச்சி முடியும் வரை வேறு யாரும் அதில் வரவில்லை. வாழ்க்கைக் கல்வி, எண்ணும் எழுத்தும் - மொத்தம் 17 ஆண்டுகள். கிரிக்கெட் நடந்தால்கூட என் நிகழ்ச்சி நடக்கும்!

இந்தியா முழுவதும் அந்தக் காலகட்டத்தில் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே வெற்றிகரமாக நடத்தினார்கள். மற்ற மாநிலங்களில் பாதியில நின்றுவிட்டது.

தமிழ் வளர முனைப்புத் திட்டம்

தமிழ்வளர்ச்சித்துறையில் நான் போன போது ஏறக்குறைய ஒன்றுமே அங்கே நடக்கவில்லை என்று சொல்லலாம். ஆட்சிமொழிச் சட்டம் வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போகிறேன். எனக்கு முன்பு பல பேர் அங்கு இயக்குநராக இருந்திருக்கிறார்கள். முதல் ஆய்வுக்குப் போனபோதே அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன். 'இப்படியே விட்டால் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் நடக்காது. இவர்களை நெருக்கிப் பிடிப்பதற்கு என்ன வழி?' என்று சிந்தித்தேன். மூவாண்டு முனைப்புத்திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமைத்தேன்.

ஏனென்றால் எனக்குப் பணிக்காலம் மூன்றாண்டுகள்தான் இருந்தன. நான் ஓய்வு பெறுகிற காலத்தில் கடைசி மூன்றாண்டுகள் என்னை அங்குக் கொண்டு போட்டார்கள். சில துறைகளைத் தேர்ந்தெடுத்தேன். மொத்தம் 11 துறைகள் என்று நினைக்கிறேன்.

மூன்றாண்டுகளுக்குள் நூறுக்கு நூறு தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிடித்து நெருக்கினேன். இதெல்லாம் அரசு ஆணையாக வெளியிட்டேன். அவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் தெரியுமா? "எங்களுக்கு தமிழ்த் தட்டெச்சுப் பொறி இல்லை", "தமிழ் அகரவரிசை இல்லை", "ஆட்சிச் சொல் அகராதி இல்லை". இப்படிப் பல காரணங்கள். அவர்கள் சொன்னது நியாயம் என்று எனக்குப்பட்டது. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். இப்போதும் தமிழ் ஆட்சிச் சொல் அகரவரிசை என்ற நூலைப் பார்த்தீர்கள் என்றால் என் பேர்தான் இருக்கும். என் காலத்தில் அது பதிப்பிக்கப்பட்டது. மறுபதிப்பு வந்தபோதுகூட அந்தப் பேரை எடுக்காமல் அப்படியே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு தட்டச்சு பொறிகள் மாற்றுவதிலும் ஈடுபட்டேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு போராட்டம். நிதிதுறையில் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்வார்கள். எழுதுபொருள் அச்சுத் துறையில இருப்பு இல்லை. தமிழ்த் தட்டச்சுபொறி இல்லை என்று சொல்வார்கள். தட்டச்சுப் பொறிகளை அத்துறை இயக்குநர்தான் வழங்கவேண்டும். அவர் ஆயிரக்கணக்கில் பொறிகளை வாங்கிக் குவித்துவிட்டார். அதிகாரிகள் ஆங்கிலத் தட்டச்சுப் பொறியைக் கொடுத்துவிட்டு தமிழ்ப் பொறியை மாற்றமாட்டேன் என்கிறார்கள்.

நான் என்ன பண்ணினேன் என்றால் அலுவலகத்தில் ஒரு தேதியைக் குறிப்பிட்டுவிட்டு, 'உங்கள்அலுவலகத்தில் 32 தட்டச்சு இருக்கு. ஆங்கிலத்தில் இரண்டுதான் இருக்கணும். இதோ 30' என்று அங்கு கொண்டுபோய் தள்ளிவிட்டு அங்கிருக்கிற ஆங்கிலத் தட்டெச்சுப் பொறிகளை வாரிப் போட்டுக் கொண்டு வரச்சொன்னேன். மூன்றாண்டு முனைப்புத் திட்டம் என்று போட்டு நெருக்கி ஒரளவுக்குச் செம்மையாக இந்த ஆட்சிமொழித் திட்டத்தை செயல்படுத்தினேன். சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்புத் திட்டம் என்று ஒன்று இருக்கிறது அரசாங்கத்தில். அது 7 ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்தது. நான் ஒரே ஆண்டில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான பரிசுகளைக் கொடுத்தேன்.

'நன்னன் முறை'

சென்னைத் தொலைக்காட்சி தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு வாழ்க்கைக் கல்வி என்பதில் எண்ணும் எழுத்தும் என்ற பிரிவில் நான் பாடம் நடத்த ஆரம்பித்தேன். ஏறக்குறைய 17 ஆண்டுகள் நான் அங்கு பாடம் கற்பித்திருக்கிறேன். அப்போது எனக்கென்று ஒரு முறை உருவாயிற்று. குழந்தைகளுக்கு முதல் வகுப்புத் தமிழ்ப் பாடம் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு புத்தம் புதிய முறையை அதில் நான் உருவாக்கினேன். பிறகு நான் தமிழ்நாட்டில் வயதுவந்தோர் கல்வி வாரியத் தலைவராக இருந்தபோதும் அதைப் பரிசோதித்துப் பார்த்தேன். பல ஆய்வுகள் நடைப்பெற்றன. State Resource Centre (SRC) என ஒன்று இருக்கிறது. ஒரு அறுபது, எழுபது அறிஞர்கள் இரண்டு நாள் கூடி இந்த முறையை ஆராய்ந்து, அக்குவேறு ஆணிவேறாக விவாதித்து தீர்மானித்தார்கள். நானே ஒரு இருபது பேருக்கு வகுப்பு எடுத்து அதைச் சோதித்துப் பார்த்திருக்கிறேன். பிறகு ஒரு 100 மையங்களிலே மற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்திப் பார்த்து, அதில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்தி தமிழ்நாடு முழுக்க மத்திய அரசாங்கத்தின் உதவியோடு 'கண்பெறுவோம்' என்ற தலைப்பில் அந்தப் பாடத்திட்டம் நிறைவேறியது.

பிறகு மலேசியாவிலே அஸ்ட்ரோ என்ற நிறுவனம் நடத்தும் வானவில் என்ற 24 மணிநேரத் தமிழ் தொலைக்காட்சிச் சேனலில் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாகப் பாடம் நடத்திக் கொண்டு வருகிறேன். இலண்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சிக்குக்கூடப் பாடம் கொடுத்திருக்கிறேன். இப்பொழுதும் அதில் சில மாறுதல்கள் செய்து ஒரு புதிய ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். அந்த திட்டப்படிப் பார்த்தால் 52 வகுப்புகளிலே (20 நிமிடம் ஒரு வகுப்பு) தமிழ் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்துவிடமுடியும். எதைக் கொடுத்தாலும் - தொல்காப்பியத்தைக்கூட - படிப்பார்கள்.

அர்த்தம் தெரியுமோ தெரியாதோ, தமிழில் எதையும் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுத்துவிட முடியும். யாராக இருந்தாலும் தமிழை மிக எளிமையாக, இயற்கையாக, குறைந்த நேரத்தில் சரியாக, முழுமையாக, திறமையாக, அழகாகக் கற்றுக் கொள்கிற முறை - 'நன்னன் முறை'. "இசை விழாவைத் தடுத்தோம்"

நான் சைவக் குடும்பத்தில் பிறந்தவன். பிறவிச் சைவன். திருமால் நெறியை விரும்புகிறவன். கிறித்துவத்தில ஆர்வம் காட்டி வந்தவன். இசுலாத்தில ஈடுபாடு கொண்டவன். புத்தத்தை மதிக்கிறேன். சமணத்தைப் போற்றுகிறேன். ஆனால் நான் நாத்திகத்தில் என்னை முழுக்க முழுக்கக் கரைத்துக் கொண்டு நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பேராயர்க் கட்சி, அதாவது காங்கிரசுக் கட்சியின் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் 1942ல் கலந்துக்கொண்டவன். அப்படிப்பட்ட நான் அரசியலில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழ் இசையரசு தண்டபாணி தேசிகருடைய இசைஅரங்கைச் சில பேர் கேலியும், கிண்டலும் செய்து பாதியில் அவர் கலைத்துக் கொண்டு போகும்படியாகச் செய்துவிட்டார்கள். அதனால் அப்போது அவர் தமிழ் மாணவர்களுக்கெல்லாம் கையெடுத்து கும்பிட்டுவிட்டு எழுந்து போய்விட்டார்.

உடனே எங்களுக்கெல்லாம் ஒரு வேகம் வந்துவிட்டது. வேகம் வந்த பிறகு அங்கே தமிழ் உணர்வு கொண்ட மாணவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அடிதடியெல்லாம் நடந்தது. தியாகராயர் உற்சவம் திருவையாறு போலவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் ஒருவாரத்துக்கு நடக்கும். இசைக்கல்லூரிக்கு முதல்வராக டைகர் வரதாச்சாரி இருந்தார். அந்த ஆண்டு "தமிழிலே பாடிய தண்டபாணி தேசிகரைப் பாடவிடாமல் கலைத்துவிட்டதனால் நீங்கள் இசைவிழா நடத்தக்கூடாது" என்று போராடி நடத்தவிடாமல் பண்ணிவிட்டோம். கொஞ்சம் வன்செயல்கள்கூட நடந்துவிட்டன. நான் அப்போது சிறியவன். கும்பலில் ஒருவனாக இருந்தேன். அப்போதுதான் எனக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

பிறகு பெரியாரை அழைத்தார்கள். அப்போதுதான் நான் முதன்முதலாக பெரியாரைப் பார்க்கிறேன். அப்போது எல்லாருமே ஆத்திகர்கள்தான் அங்கே. நாத்திகர்கள் என்று சொல்லப்போனால் நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன், செழியன் ஆகிய இரண்டு மூன்று பேர்தான். ஆயிரக்கணக்கில் ஆத்திகர்கள்தான். சாதாரணமாக அங்குப் பெரியார் வரமுடியாது. அப்போது தமிழர் என்ற உணர்வு அதிகம் இருந்ததனால் இவர் வந்தால்தான் சரியாக இருக்கும் என்று அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.

பெரியாரும் அண்ணாவும்

பெரியாரிடம் இரண்டு நிபந்தனைகள் வைத்தோம். ஒன்று சாமி இல்லை என்று கூறக்கூடாது. இரண்டு காங்கிரசைத் திட்டக்கூடாது. மற்றப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். எங்கள் இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுப் பெரியார் கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேல் பேசினார். "நாம இவர் பிராமணர்களைத் திட்டுகிறார், சாமி இல்லை என்று கூறுகிறார் என்றுதானே நினைத்திருந்தோம்! அப்படியில்லை, இவரிடத்தில் ஏதோ இருக்கிறது" என்பதைக் கண்டுபிடித்தேன். பின்னால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அண்ணா வந்தார். 'ஆற்றோரம்' என்ற தலைப்பில் ஒரு அருமையான சொற்பொழிவு நடத்தினார். இன்றுவரை பதிவாகமலேயே போன ஒரு உயர்ந்த சொற்பொழிவு அது.

ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எதையெல்லாம் பேசுகிறோமோ என்று ஆரம்பித்தார். சிந்துவெளிநாகரிகம் தொடர்ந்து நைல் நதி நாகரிகம் என்று சொல்லி சுற்றி, கடைசியில் நம் காவிரிக் கரை நாகரிகத்தில் கொண்டு வந்துவிட்டார். ஒன்றரை மணிநேரம் பேசினார். அதையே அடுத்த நாள் ஆங்கிலத்தில் பேசினார். 'ஆஹா!' என்று எண்ணி அவர்கள் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். விவாதங்கள் பண்ணினேன். அப்போதெல்லாம் திராவிடர் கழகம், திமுக எல்லாம் கிடையாது. சுயமரியாதை சங்கம், நீதிக்கட்சியில் சேர்ந்தேன். சமுதாய நீதிக்காகப் பாடுபடுகிற, இந்த நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத ஏழை, எளிய மக்களுக்காகப் பாடுபடுகின்ற, தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம் இதற்காகப் பாடுபடுகின்ற இயக்கம் என்று கருதி அதில் சேர்ந்தேன். சேர்ந்து மாணவராக இருக்கின்ற போது பெரியார், இங்கர்சால் போன்றவர்களின் நூல்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். முழு நாத்திகனானேன்.

பெரியாருடன் பேசுகின்ற சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது எனக்கு. அந்தச் சந்தர்ப்பத்தில் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் இவர்களுக்கெல்லாம் தேர்வு முடியவில்லை. அதனால் ஒரு மாணவச் சொற்பொழிவாளர் வேண்டும் என்று ஓர் ஆள் வந்தார். மயிலாடுதுறையில் பெரியார் பேசுகிறார், மாணவர் வேண்டும் என்றவுடன் அவர்களால் போக முடியவில்லை. அது 1944 என்று நினைக்கிறேன். நான் இயக்கத்திற்குப் புதியவன். எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நான் பெரியார் முன்னிலையில் ஏதோ பேசினேன்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் பெரியார் என்னிடத்தில் "தம்பி, விடுமுறையில் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார். வீட்டில் சும்மா இருப்பதற்கு வாருங்கள் என்னுடன் என்றார். சிவபெருமான் பக்தனைக் கூப்பிட்டால் எப்படி இருக்கும்? அதுமாதிரி அவர் பின்னாலேயே போய்விட்டேன்... அவருடனே இருந்தேன். தேர்வு முடிந்து வெற்றி பெற்றேன். கொஞ்சகாலம் அவருடன் இருந்தேன். அவரிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியே வந்துவிட்டேன். ஏனென்றால் அவர் ஒரு கடுமையான பத்தியம் போன்றவர். ஒழுக்கக்குறைவோ, தவறுகளோ இருந்தால் கோபித்துக் கொள்வார்.

பெயர் மாறிய கதை

மறைமலைஅடிகளை அழைத்து நாங்கள் கூட்டம் நடத்தினோம். அவர் வேதாசலம் என்ற தம் பெயரை மாற்றி மறைமலை அடிகளானார். சூரியநாரயண சாத்திரி பரிதிமாற் கலைஞன் என்று மாற்றிக் கொண்டார். அதைப் பார்த்த நாங்கள் ஐந்தாறு பேர் ஏன் நாமும் பேர் மாற்றம் செய்து கொள்ளக்கூடாது என்று யோசித்தோம். திருஞானசம்பந்தன் என்ற என் பெயர் நன்னன் ஆனது. நாராயணசாமி என்கிற தன் பெயரை நெடுஞ்செழியனாகவும், ராமய்யா என்கிற பேர் அன்பழகனாகவும், சீனுவாசன் செழியனாகவும் அன்றுதான் மாறியது. பிறகு நாங்கள் சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக் கொண்டோம்.

திமுகவில் நான் தாமரை இலைத் தண்ணீர் போல்தான் இருக்கிறேன். கலைஞர் என்னை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார். நேரடியாக அரசியலில் கலந்தால் அது நமக்கு ஒத்துவராது என்று நான் ஒதுங்கி இருக்கிறேன்.

தேர்தலில் நின்று சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்திற்கோ போகிற எண்ணம் எனக்கு கிடையாது. கட்சியில் எந்தப் பொறுப்பும் வைத்துக் கொள்கின்ற எண்ணம் இல்லை. திராவிட இயக்கத்தை பற்றி எழுதுவேன்.

ஏதாவது கலந்துரையாடல் நடக்கும் போது எனக்கு வாய்ப்பளிப்பார்கள். பொதுக்குழுவில் கலந்து கொள்ள எனக்குச் சிறப்பு அழைப்பு வரும். இதுதான் எனக்கு திமுகவில் உள்ள தொடர்பு.

பகுத்தறிவு வளர்ந்திருக்கிறதா?

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் வளர்ந்திருக்கிறதா என்றால், வளர்ந்திருக்கிறது. ஆனால் அதைவிட மூடநம்பிக்கைள் அதிகம் வளர்ந்திருக்கின்றன. ஏன் என்றால், மதுவிலக்கு பிரச்சாரம் நடந்தும், மதுவிலக்கு ஒழிந்ததா? திருடக்கூடாது, பொய்சொல்லக்கூடாது, சூதாடக்கூடாது இது பஞ்சமாபாதகம் என்று வேத காலத்தில் இருந்து ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் என்று எல்லாரும் சொல்லியும் அது எல்லாம் ஒழிஞ்சிருக்கா, குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா? ஏராளமாக கூடியிருக்கு.

எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் கொசுவை ஒழிக்கமுடிந்திருக்கிறதா? இவை எல்லாம் போல் அறிவியக்கம் எந்தக் காலத்திலுமே வெற்றிப் பெறாது. புத்தர் வெற்றி பெற்றாரா? இயேசு வெற்றி பெற்றாரா? நபிகள் நாயகம் வெற்றி பெற்றாரா? ராமனுசர் வெற்றி பெற்றாரா? வடலூர் வள்ளலார் வெற்றி பெற்றரா? காந்தி வெற்றி பெற்றாரா? யார் வெற்றி பெற்றார்கள், பெரியார் வெற்றி பெறுவதற்கு!

உலகத்தில் அறம் வெற்றி பெறுவதே இல்லை. மறம்தான் வெற்றி பெறுகிறது. சுயமரியாதை இயக்கம் என்பது அறிவியக்கம், அற இயக்கம். ஒழுக்கத்திற்கு நாங்கள் கொடுக்கிற மதிப்பு போல் யாரும் கொடுக்கமாட்டார்கள். ஒழுக்கத்தை முதன்மை இடத்தில் வைக்கிறோம். உண்மை பேச வேண்டும், உழைக்க வேண்டும், ஏமாற்றாதே, மூடநம்பிக்கை கொள்ளாதே என்கிறோம். மூடநம்பிக்கை சுலபமானது. நம்பிக்கைக்குக் காரணம் சோம்பல். மூடநம்பிக்கைக்கு முட்டாள்தனமும் காரணம்.

எல்லா மதத்திலும் மூடநம்பிக்கை இருக்கிறது. நான் இந்து மதத்தை மட்டும் குறிப்பிடவில்லை. இந்த மூடநம்பிக்கை இல்லாமல் அறிவை மட்டும் முழுக்க முழுக்கப் பயன்படுத்துகின்ற, ஒழுக்கமான இனம் உண்டாகி இருக்குமானால் இன்று மனிதன் கற்பனைத் தேவர்களைவிட சிறந்த வாழ்க்கை வாழ்வான். நாம் முன்னேறாததற்குக் காரணமே மூடநம்பிக்கைதான்.

இப்போது பார்த்தீர்களானால் கரிகால் சோழன் அணையைக் கட்டினான். உலகத்திலே உண்டான முதல் அணைக்கட்டு அது. அணைகட்டினால் பள்ளத்தில் வரும் நீர் மேட்டுக்குச் செல்லும் என்று கண்டுபிடித்தான் தமிழன். இரண்டாயிரம் வருடத்திற்கு சிமெண்ட் இல்லாமல், சுண்ணாம்பு இல்லாமல் வெறும் கற்களில் இசைவு பார்த்து அடுக்கிக் கட்டினான். அன்று கட்டிய அணை அப்படியே இருக்கிறது. அதற்கு பிறகு நாம் அணை கட்டவில்லை. கரிகாலனுக்கு பிறகு வந்த சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாரும் கோயில்களாகவே கட்டி இருக்கிறார்கள். நம்முடைய மடை மாற்றப்பட்டப்பட்டது. நம்முடைய அறிவியலும், பொறியியலும், தொழில்நுட்பமும் ஆலயத்தில் கொண்டு தள்ளப்பட்டுவிட்டன.

ஒவ்வொரு ஊரிலும் கோயில்களும், பிரம்மாண்டமான கோபுரங்களும், ஆயிரங்கால் மண்டபங்களுமாக கட்டித்தள்ளினார்கள். இதனால் பக்தி வளர்ந்துவிட்டது என்றா நினைக்கிறீர்கள்? வெறும் சடங்குகள்தான் இன்று கோயில்களில் நடக்கிறது? உண்மையிலே கடவுளை நினைத்து உருகுகின்ற, துதிக்கின்ற எத்தனை பேர் இருக்கிறார்கள்? வெறும் ஆராவாரம் - பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம், சினிமா என்று இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே நம்முடைய பகுத்தறிவு வளர்ந்து. மூடநம்பிக்கை இல்லாமல் மனித இனம் வளர்ந்து அதிலிருந்து விலகிவிடுமானால் இதுபோன்ற வளர்ச்சியை நாம் பெற்றுவிடமுடியும்.

அடிமைத் தனம்

சாதியைச் சொல்லி இவர்கள் பிழைக்கிறார்கள். எல்லாம் தேர்தலும், அரசியல் நாட்டமும் தான் தமிழ்நாட்டிலே. தமிழ்நாடு மட்டும் இல்லை, இந்தியாவில் இருக்கின்ற ஒழுக்கக்கேடுகள், குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இன்றைக்கு அதுதான் காரணம்.

தேர்தலும், தேர்தல் அடிப்படையிலான அரசியலும் தான் காரணம். யாராவது வலியவன் ஒருவன் இன்று இந்தியாவைப் பிடித்து ஆண்டான் என்றால் இந்த சாதியெல்லாம் ஒழிந்து போகும். பொதுவாக இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்களே அடிமையாக இருப்பதற்குத் தகுதியானவர்கள். அடிமையாக இருக்க ஆசைப்படுகிறார்கள். சுதந்திரமாக வாழ்வதற்குத் தகுதியில்லாதவர்கள். சர்க்கசில் உள்ள விலங்குகளையெல்லாம் ரிங் மாஸ்டர் செய்வது போல, நம்மை எவனாவது ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நம்மைப் பார்த்து சர்ச்சில், "you are unfit to be independent nation" என்று அந்தக் காலத்தில் சொன்னாராம். நான் அதைப் பெருமையாகச் சொல்லவில்லை. நம்முடைய இழிவை நாம் உணரவேண்டும்.

இன்றைக்கு இங்கு இருக்கிற குறைபாடுகளுக்கெல்லாம் காரணம் யாருக்கும் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ, மொழியைப்பற்றியோ உணர்வு இல்ல. ஒவ்வொருவரும் தான் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். யாரையாவது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் நான் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறேன், இல்லை என்றால் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன் என்பார்கள். அது போல் அரசியலில் இருப்பவர்களைக் கேட்டால் அவர்கள் 'நான் அரசியல் செய்கிறேன்' என்று சொல்கிறார்கள்! அரசியலைப் பிழைப்பதற்கு ஒரு வழி என்று நினைத்துவிட்டார்கள். எம்எல்ஏ, எம்பி யாருக்கும் சம்பளமோ சலுகைகளோ கிடையாது, தப்பு செய்து சம்பாதிக்க முடியாது என்ற நிலையைக் கொண்டு வந்துவிட்டால் இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளில் பலபேர் காணாமல் போய்விடுவார்கள். அவர்கள் வளர்வதற்கு சாதியை பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான்.

ஆங்கில மோகம்

இது ஒரு நோய். ஆங்கிலேயேனை விரட்டிவிட்டோம். அவர்களின் மொழியான ஆங்கிலத்தை நாம் பிடித்து வைத்திருக்கிறோம். நம்மைவிட அயலாரை உயர்வாய் நினைக்கிற மனப்பான்மை நம்மிடம் உள்ளது. தாழ்வுமனப்பான்மை என்றுகூட சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாக நினைக்கிறோம். நம் மொழியை மதிக்கிறதில்லை. இந்த நாட்டில் மட்டும் பிறமதங்கள் நன்றாகப் பரவுவதற்குக் காரணம் இதுதான். சங்கராச்சாரியாரோ, ஜீயர் சுவாமிகளோ மற்றப் பெரியவர்களோ மதத்தைப் பற்றி கவலைப்படாமல் 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்' என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் செய்கிறார்கள்.

கிறித்தவமாய் இருந்தாலும், இசுலாமாய் இருந்தாலும் இங்கே பரவுவதற்கு காரணம் என்ன? முதல் காரணம் அன்னிய மோகம். இரண்டாவது காரணம் இந்து சமயத்தில் உள்ள குறைபாடுகள். நம்மைச் சேர்ந்தவனையே இங்கு வராதே அங்கே வராதே என்கிறோம். இந்துக்கள் எவ்வளவு பேர் என்று பட்டியல் இட்டுச் சொல்கிறீர்களே, அத்தனை பேரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறீர்களா? ஒவ்வொரு சாதிக்குள்ளும் எத்தனை பிரிவுகள்? எத்தனை விதமான வேறுபாடுகள்? இப்படி ஒவ்வொருவரும் பிரிந்து கிடக்கிறோமே! நமக்கு அன்னிய மோகம், அன்னிய மதத்தைப் பின்பற்றுகிறோம். அவர்கள் நம்மை 'வா, வா' என்று அழைத்து இறுக்கிக் கொள்கிறார்கள். இப்படி இருந்தால் அந்த மதம் எப்படி வளரும்? இதை இந்த மதத்தலைவர்கள், பெரியவர்கள் நினைக்கவேயில்லை. நடுநிலையில் இருந்து நான் பேசுகிறேன். என் கொள்கையிலிருந்து விலகிப் பேசுகிறேன். இந்து மதம் இருக்க வேண்டும் என்று நினைப்பு இந்து மதத்தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்ய வேண்டும். எல்லோரையும் ஒன்றுசேர்க்கவேண்டும்.

இப்போதுகூட ஜனவரி முதல் தேதி திருப்பதி வெங்கடாசலபதிக்கு நடு இரவில் பூஜை. வடபழனி முருகனுக்கு பூஜை. நான் கேட்பேன் வெங்கடாசலபதி எப்போது கிறித்தவரானார் என்று. இப்போது சங்கராசாரியார் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அதை நிறுத்திவிட்டார்கள்? 'Happy New Year' என்கிறான் தமிழன். இப்படி நமக்கு ஒவ்வொன்றிலும் அன்னிய மோகம் அதிகம். ஆகையினால் ஆங்கில மொழியைப் படிப்பதற்கு மோகம் இன்றும் இருக்கிறது. இது நாளடைவில் குறையும். கையெழுத்துப் போடுவதுகூட நாம் ஆங்கிலத்தில்தான் செய்கிறோம். அதிகம் படித்திருக்கமாட்டான், அவன் பேரை மட்டும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு போடுவான்.

சந்திப்பு: கேடிஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக