நாட்டுப்புறப்பாடல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுத்துவதாகும். தாலாட்டு முதல் ஒப்பாரி ஈறாக நூற்றுக்கும் மேற்பட்ட வாய்மொழி நிகழ்த்துக்கலைப் பாடல்கள் உள்ளன. நாட்டார் வழக்காற்றியலின் புதிய வகைமையொன்று சென்னை நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே கானாப் பாடலாகும். அக்கானாப் பாடலை ஆராய்கின்ற பொழுது நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படும் வாய்மொழிப் பாடலின் நீட்சியாகக் காணப்படுகின்றன. அதனை ஆராய்வதே நோக்கமாகும்.
இறப்புச் சடங்கு - நிகழ்த்துக்கலைகள்:-
கானாப் பாடல் சென்னை நகரின் குடிசை வாய் மற்றும் நடைபாதை மக்களிடத்தில் இறப்பின் ஊடாக நிகழ்த்தப்படுகின்றன. இவை உருவாக்கத்திற்கான, காரணங்களை ஆராய்கின்ற பொழுது தமிழகத்தின் இறப்புச் சடங்கிற்கு நிகழ்த்தப்பெறும், நிகழ்த்துக் கலையினை அறிதல் அவசியமாகின்றன. அவை பின்வருமாறு.
1. ஆலி ஆட்டம், 2. இலாவணி, 3. கழியல் ஆட்டம், 4. குறவன்குறத்தி ஆட்டம், 5. கைச்சிலம்பாட்டம், 6. கோலாட்டம், 7. தப்பாட்டம் (பறையாட்டம்), 8. தெருக்கூத்து, 9. நையாண்டி மேளம், 10. பெரியமேளம், 11. பேயாட்டக்காமிக், 12. ஒப்பாரி, 13. மாரடிப்பாட்டு ஆகியன நிகழ்த்தப்படுகின்றன. இவை வட்டாரத்திற்கு வட்டாரம், பொருளாதாரத்திற்கு ஏற்றாற் போலும், இறந்தவரின் வயதிற்குத் தகுந்தாற் போலும் மாறுபடும். இந்நிகழ்த்துக் கலைகளில் கானாப்பாடலின் கூறுகளும். தன்மைகளும் ஒப்பாரியிலும் மாரடிப்பாட்டிலும் காணலாம். அவற்றின் நிகழ்வினைப் பின்வருமாறு ஆராயப்படுகின்றன.
ஒப்பாரி - நிகழ்த்தும்விதம்:-
உயிர்போன வெற்றுடல் எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ கிடக்கின்றது. அவ்வெற்றுடலை நம்பி வாழ்ந்தவர்கள், அதனால் வாழ்வு பெற்றவர்கள், உரிமையுடையவர்கள் உயிர்போன அவ்வெற்றுடலைச் சுற்றி நின்று அல்லது உட்கார்ந்து கொண்டும், ஒருவர் மேல் ஒருவர் கையினைப் போட்டுக் கொண்டும், சிலர் கண்ர் மட்டும் சிந்த, சிலர் மனதுக்குள் வருத்தப்பட, சிலர் மனம் கலக்கமுற்று மயங்க, இப்படித் தங்கள் துன்பங்களை வெளிப்படுத்துவார்கள். அவ்வெற்றுடலைக் கண்டு சிலர் பாட்டுப் பாடி அழுகின்றார்கள். அப்பாட்டுக்களில் உயிர் இருக்கின்றது. இறந்து போனவர் அப்பாடல் மூலம் எழுந்து நடமாடுவது போன்று இருக்கிறது. இறந்து கிடக்கும் வெற்றுடலின் வரலாறு தெரியாதவர்களுக்கு அப்பாடல் அதனுடைய வரலாற்றினைக் காட்டுகின்றது. எனவே இறந்தவர் எழுந்து பாட்டு வடிவில் நடமாடுகின்றார். இறந்தவரைப் பாட்டின் மூலம் மற்றவர்களுக்குக் காட்டக் காரணமானவர்கள் பெண்கள். பெண்களால் பாடப்படும் அப்பாடல்களையே ஒப்பாரி என்று அழைக்கிறோம்.
பெண் ஒருத்தி தான் ஒப்பாரி வைத்துச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தார்போல், சொற்களைப் பயன்படுத்தா விட்டால், மற்ற பெண்கள் பொருத்தமின்மையைக் கிண்டலடிப்பார்கள். உரியச் சொற்கள் என்று குறிப்பது ஒப்பாரி வைக்கும் பெண்ணிற்கும் இறந்தவருக்கும் உள்ள உறவினைக் குறிக்கும். இதனையொத்த நிலையில் சென்னை நகரக் குடிசை வாழ் மற்றும் நடைபாதை மக்களிடத்தில், இறப்புச் சடங்கன்று ஆண்கள் ஒன்று கூடிப்பாடுகின்றார்கள். அதனைக் கானாப் பாடல் என்று கூறுவார்கள்.
மாரடிப்பாட்டு - நிகழ்த்தும் விதம்:-
மாரடிப்பாட்டு என்பது இறந்தவர்கள் பற்றிப் பாடப்படும் பாடலாகும். இதற்கென்றே கூலிக்கு மாரடிக்கும் கலைஞர்கள் உள்ளனர். மார்பில் அடித்துக் கொண்டே பாடுவதால் இது மாரடிப்பாட்டு என்று வழக்கப்படுகிறது. இதனை ஒப்பாரிப்பாட்டு என்றும் அழைக்கின்றனர். இந்நிகழ்வு தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இதனைக் குறிப்பிட்ட இடம், மாதம், நாள் எனக் கணக்கிட்டு நிகழ்த்துவதில்லை. இறந்தவர்களின் வீடுகளில் மட்டுமே நிகழ்த்துகின்றனர். இறந்தவரின் பிணம் வீட்டுக்குள் இருக்கும் போது மாரடிப் பாட்டு கலைஞர்கள் வீட்டின் முற்றத்தில் (வாசல்பகுதி) நின்று கொண்டு இதனை நிகழ்த்துகின்றனர். இவை வாழ்க்கை வட்டச் சடங்குகளில், இறப்புச் சடங்கின் ஒரு கூறாக உள்ளது. பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இறந்தால் மட்டுமே மாரடிப்பாட்டு நிகழ்த்தப்படுகிறது. சிலயிடங்களில் வரையறையுடன் நிகழ்த்துகின்றனர். இம்மாரடிப் பாட்டில் பதினோரு பேர் பங்கெடுக்கின்றனர். இதில் ஆறு பேர் பாட்டுப் பாடுகின்றனர். ஒருவர் நாதசுரம் வாசிக்கின்றார். இருவர் தம்புருசெட் (பெரியமேளம்) அடிக்கின்றனர். ஒருவர் உறுமியும் மற்றொருவர் கிடுகிட்டியும் இசைக்கின்றனர்.
இறந்தவர்களின் வீடுகளிலிருந்து மாரடிப் பாட்டுக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுப்பர். இவர்கள் குழுவாகச் சென்று நிகழ்த்துவர். கலைஞர்கள் முதலில் இறந்தவர் ஆணா, பெண்ணா என்ற தகவலுடன் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்வர். அவற்றை மாரடிப் பாட்டில் கலந்து பாடுகின்றனர். இங்ஙனம் இறந்தவர் பற்றிய தகவலைக் கேட்டறியும் முறை கானாப்பாடல்களிடமும் உண்டு. ஆண்கள் பெண் வேடமிட்டு மாரடிப்பதும் உண்டு. அரவாணிகளும் மாரடிப்பதும் உள்ளது. ஆண்களில் மூன்று பேர் பெண் வேடமும், பிறர் ராஜபார்ட், கோமாளி, பபூன் வேடங்கள் புனைந்தும் மாரடிப் பாட்டினை நிகழ்த்துகின்றனர். இவர்கள் வட்டமாக நின்று கொண்டு அழுதும் பாடுவார்கள். இவை கிராமப் புறங்களிலும் நகரங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிகழ்வு சென்னை நகர மீனவர்கள் வாழும் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. தற்பொழுது இந்நிகழ்வு குறைவு. ஒப்பாரியும், மாரடிப்பாட்டும் மருவி கானா என்னும் வடிவம் எவ்வாறு வந்ததென்பதைக் காணலாம்.
ஒப்பாரி, மாரடிப்பாட்டு - கானா
சென்னை நகர அடித்தள மக்களின் இறப்புச் சடங்குப் பாடலாக கருதப்படுவது கானாவாகும். இவை சென்னை நகர குடிசை மற்றும் நடைபாதை மக்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதனைப் பின்வருமாறு ஆராயலாம்.
ஒப்பாரி என்பது துயரத்தின் வெளிப்பாடாக முழுக்க பெண்களே ஒப்புச் சொல்லிப் பாடுவதாகும். இவ்வொப்பாரி காலச் சூழலுக்கேற்றார்போல் ஆண்களும் சிலயிடங்களில் பாடுகின்றனர். பெரம்பலூர் தென்னாற்காடு போன்ற மாவட்டங்களில் அடித்தளமக்கள் வீடுகளில் இறப்பன்று தெருக்கூத்துக் கலைஞர்கள் கூத்துப் பாடலுடன், ஒப்பாரிப் பாடல்களையும் பாடுவார்கள். இவை முழுக்க ஆண்களே நிகழ்த்துவார்கள். அதனால் ஆண்கள் ஒப்பாரியினையும் பாடுவர். அடுத்து இறப்பன்று தப்பாட்டம் வைப்பதும் உண்டு. இந்தப் பாட்டிடையில் இறந்தவரின் பெயரையும் உறவினரின் பெயரையும் வைத்து இட்டுக்கட்டி, ஒப்பாரியாகப் பாடுவார்கள். இதன் ஊடாகப் பார்க்கும் பொழுது ஆண்களும் ஒப்பாரி வைக்கும் தன்மைக் காணப்படுகின்றது. சென்னை நகரில் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் இறப்பன்று கண்விழித்திருக்க மாரடிபாட்டும், கானாவும் நிகழ்த்தப்படுகின்றன. இதனை இவ்விரு குழுவினரும் மாறி, மாறி நிகழ்த்துவார்கள்.
இவ்வாறு நடைபெறும் காலக் கட்டத்தில் செலட்டிங்புரம் அந்தோணி என்பவரையும் அழைத்துப் பாட வைத்தார்கள். முதலில் அரவாணிகள் மாரடிப் பாட்டினை நிகழ்த்தினர். பின் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அந்தோணியைப் பாடச் சொன்ன போது, ஒப்பாரியாக ஆல்த்தோட்ட பூபதிப் பாடலைப் பாடினாராம். இவ்வொப்பாரிப் பாடலை விடிகாலை ஐந்து மணி வரைப் பாடுவாராம். இப்பாடலினைக் கானாப் பாடகர்கள் சிறுசிறு பாடலாகப் பாடி வருகின்றனர். ஒப்பாரிப் பாடலையும் மாரடிப் பாட்டினையும் ஆராய்கின்ற பொழுது இவ்விருப்பாடலின் பரிணாம வளர்ச்சியே கானாப் பாடலாகும். ஒப்பாரிப்பாடல் பின்வருமாறு.
குழந்தையை இழந்த தாய் பாடும் ஒப்பாரிப்பாடல்:-
கருவில் இருக்கும் போது பிறக்கும் குழந்தையைப் பற்றிப் பலவித கற்பனைகளுடன் இருப்பாள் தாய். கற்பனை செய்த தாயினை ஏமாற்றிவிட்டு இறந்துவிட்டது குழந்தை. அத்தாயின் மனக்குமுறலாக இதோ.
அழகை எழுதியவன் ஆயுள் எழுதலையே
வடிவை எழுதியவன் வயதெழுத மாட்டலையே
அழகை எழுதியவன் ஆயுளை எழுதலையா?
ஆயுசை எழுத அசத்திட்டு இருந்தானா?
பச்சைக்கிளி வளர்த்தோம் பறக்கையிலே தப்பவிட்டோம்
குஞ்சுக்கிளி வளர்த்தோம் கூவையிலே தப்பவிட்டோம்
பொட்டுள்ள நெத்தி புழுதி அரிச்சிரிச்சு
மையிட்ட நெத்தியை மண்கரையான் தின்னுரிச்சு
நீலமணி கண்கள் ரெண்டும் நீலக்கரையான் தின்னுரிச்சு
இதனைப் போன்றே அம்மாவைப் பறிக்கொடுத்த மகன் பாடுவதாக அமையும் கானாப் பாடல் மகன் கருத்தரித்த நாள் முதல் பிறக்கும் வரை அம்மாவிற்கு ஏற்பட்ட துன்பத்தினைப் பாடும் பாடல்.
ஒரு ஜான் வயிற்றினிலே கருவான நாள் முதலாய்
என்ன தவம் செய்தாய் அம்மா (என் தவம்)
இந்த நிலை உனக்கென்னம்மா... அம்மா (இந்த நிலை)
ஓராம் மாதமம்மா உன் முகம் சிவந்ததம்மா
இரண்டாம் மாதத்திலே நீ புரண்டு படுத்தாயம்மா (ஓராம்)
மூன்றாம் மாதம்மா முதுகெலும்பு நலுந்தம்மா
நான்காம் மாதத்திலே நரம்புகள் தளர்ந்ததம்மா (நான்காம்)
ஓ அம்மா... அம்மா.... (ஒரு ஜான்)
ஐந்தாம் மாதம்மா ஆய்ந்து பயந்து நோக்கும்மா
ஆறாம் மாதத்திலே அடி வயிறு கனத்ததம்மா (ஐந்தாம்)
ஏழாம் மாதம்மா எலும்பிச்சை இனிக்குமென்று (ஏழாம் மாதம்)
எட்டாம் மாதத்திலே எட்டி எட்டி உதைத்தானம்மா (எட்டாம்)
(ஒரு ஜான்)
ஒன்பதாம் மாதமம்மா ..... ஆ....
ஒன்பதாம் மாதம்மா தாய்வீட்டு சீமந்தம்மா
பத்தாம் மாதத்திலே பணிக்குடம் உடைத்தம்மா (ஒன்பதாம்)
ஓ..... அம்மா அம்மா.....
இவ்வாறு தாயினை இழந்தமகன் பாடுவதாக அமைகின்றன. இக்கானா பாடலினை நிகழ்த்தும் விதத்தினைப் பற்றியும் காணலாம்.
கானா வரையரை - நிகழ்த்தும் விதம்:-
சென்னை நகர அடித்தள மக்களில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் காரண, காரியங்களின் ஊடாக, பல நிகழ்த்துப் பாடல் தொகுப்பு; அல்லது தாக்கம், தனி மனித உணர்வின் கூட்டுவெளிப்பாடே, கானாப் பாடல் எனப்படும்.
குடிசை மற்றும் நடைபாதை மக்கள் வசிக்குமிடங்களில் இறப்பென்றால், உறவினருக்குத் தெரிவிப்பார்கள். அடுத்த மேளத்தாருக்கு அழைப்பு விடுப்பார்கள். இறந்த சடலம் இரவு இருக்குமேயானால் அவ்விரவுப் பொழுதினைப் கழிப்பதற்கு அத்தெருவில் அல்லது அப்பகுதியில் நன்கு பாடக்கூடியவர்களை அழைத்துப் பாட வைப்பார்கள். இதற்கு இசைக் கருவியாக சில்வர் தவளை அல்லது குடத்தினை இசையாக அடித்து பாடுவார்கள். சிலர் கைத்தட்டலுடன், தீப்பெட்டி, தபேலா அல்லது டோலாக் ஆகியவற்றைப் பாடலுக்கு ஏற்றார் போல் இசை அடிப்பார்கள். இறந்தவர்களின் வீட்டின் முன் அல்லது அருகாமையிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வட்டமாக அமர்ந்து ஒருவர் தொடுக்க மற்றொருவர் எடுத்துக் கொடுக்க, ஒலி ஒப்புமையுடன் இறந்தவர்கள் மீதும் அவர்கள் உறவினர்கள் மீதும் இட்டுகட்டிப் பாடுவார்கள். இந்நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் பெரும்பாலர் மது, கஞ்சா, மாவா, பீடி போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்திப் பாடுவார்கள். இவை இறப்பன்று நிகழ்த்தப்படுவதாகும்.
அடுத்து இறந்தவருக்குக் கரும காரியம் (நடப்பு) செய்யும் வகையில் பதினாறாரம் நாள் இரவிலும், பிறகு முதலாமாண்டு, இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையிலும், கானாப் பாடல் கச்சேரி அழைப்பின் பேரில் வைப்பார்கள். இதற்கு வசதியுள்ளவர்கள் மேடைகள் அமைப்பார்கள். சிலர் இரண்டு மாட்டு வண்டியினை ஒன்றாகச் சேர்த்து மேடையாக அமைப்பர். இந்நிகழ்வு இரவு பத்து மணிக்குத் தொடங்கி இரண்டு மணிக்கு முடிப்பார்கள். இப்பாடுபொருள் பெரும்பாலும் இறந்தவரைப் பற்றியும், அவர்களின் உறவினர்கள் பற்றியும் அமையும். இரசிகர்கள் விருப்பத்திற்குகேற்றார் போல் பல்சுவைப்பாடலும் பாடுவார்கள்.
வாழ்க்கை வட்டச்சடங்கு - கானா:-
இன்று கானாப்பாடல் என்பது குடிசை வாழ் மற்றும் நடைபாதை மக்களின் பண்பாட்டு தளமாகவும், அவர்களின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது. இப்பண்பாட்டுத் தளங்களென்பது அவர்கள் பொருளாதார வசதிக்கேற்றவாரே தனது சடங்குகளை நிகழ்த்துகின்றார்கள். சடங்குகள் என்பது ஒரே வகையாக இருந்தாலும், நிகழ்த்தும் விதமும் அலங்காரமும், உணவு வகையிலும் வேறுபடுகின்றன. சில வசதியானவர்களின் வீட்டில் கானாப் பாடல் நடைபெறும் பொழுது அனைவரூக்கும் தேநீர், பிஸ்கட், மற்றும் இனிப்புவகைகளைத் தருவார்கள். ஆகையால் பண்பாட்டுத் தளங்களென்பது பொருளாதாரத்தின் பின்புலத்தினைக் கொண்டே அமைக்கப்படுகின்றன
முடிவுரை:-
கானாப் பாடல்கள் ரிக்ஷா ஓட்டுகின்றவர்கள். மூட்டை சுமப்பவர்கள் உழைப்பின் வெளிப்பாடகாவும், மனவேதனை, குமுறல் ஆகியவற்றின் வெளிப்பாடகாவும் பாடப்படுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொழுது உணர்ச்சியின் வெளிப்பாடே கானாப்பாடலாகும். தமிழகத்தில் இறப்புச் சடங்கு வழி நிகழ்த்துக் கலைகள் கொண்டு ஆராய்கின்ற பொழுது நாட்டுப்புறப் பாடலின் நீட்சிக் கானாப் பாடலாகும். இதனைத் திரை ஊடகத்தில் தவறான சொற்களைப் போட்டு, இப்பாடலுக்குக் கலங்கம் விளைவிக்கின்றனர். திரைப்படத்தில் கானாப் பாடல்கள் என்று சொல்லப்படுபவை, கானாவின் சாயலேத் தவிர அவை உண்மையான கானாப்பாடலாகாது. (எ.கா) யூத் படத்தில் வருகின்ற ஆல்தோட்டப்பூபதிப் பாடலாகும்.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக