எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூறுவார்கள். சில விஷயங்களை ஜாக்கிரதையாக மறந்துவிட்டு, கற்பனை, அங்கு மடிந்தவர்களின் வீரத்தைப் புகழ்கிறது. போர் செய்த இரு கட்சியினரும் (அந்நாட்டுப் பூர்வீகக் குடிகளான சிவப்பு இந்தியர்களும் வெள்ளையர்களும்) நாகரிக சமூகம் அக்காலத்தில் வீரம், ஆண்மை என்று போற்றக்கூடிய யுத்த தர்மத்திற்கு ஏற்பவே போர் புரிந்தனர். போரில் படையெடுத்த வெள்ளையர்கள் சிதறினாலும், அப்போர் பூர்வீகக் குடிகளை பல வருஷங்கள் வரை ஒடுக்கிவிட்டது என்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். லவல் சண்டையில் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடி வந்த வீரர்களின் சரித்திரம் சிறிதும் வழுவில்லாமல் காப்பாற்றப்பட்டு வருவதால், கீழே தரப்படும் கதையின் உண்மைப் பெயர்கள் - அவை கற்பனையால் மறைக்கப்பட்டிருப்பினும் - தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.
காலை நேரம். சூரிய கிரணங்கள் மரக்கிளை உச்சியில் அசைவாடிக் கொண்டிருந்தன. அதன் அடியில் முந்திய இரவு படுகாயத்துடன் சோர்ந்து படுத்திருந்த இருவர் இன்னும் கண் விழிக்கவில்லை. அவர்களுடைய படுக்கை காய்ந்துலர்ந்த சருகுகள்தான். அவர்கள் பக்கத்தில் ஒரு பெரும் கருங்கற்பாறை கல்லறை மீது நிறுத்தப்படும் பிரமாண்டமான குத்துக் கல்லைப்போல் நின்றது. இவ்விருபிரயாணிகளின் சமீபத்தில் சிறுசிறு ஓக் மரக் கன்றுகள் நின்றன.
இருவரில் ஒருவன் வயோதிகன்; மற்றவன் வாலிபன். கிழவன் ஏற்ற படுகாயம் அவனை உறங்க விடவில்லை போலும். சூரியோதயமானவுடனேயே அவன் மிகவும் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தான். தலை நரைத்திருந்தது; காயமில்லாவிட்டால் எதையும் தாங்கக்கூடிய தேகவலிமை படைத்தவன்; ஆனால் அவன் முகம் வெளிறி, கோடுகள் விழுந்து, வாழ்க்கையின் முடிவான யாத்திரை ஆரம்பித்து விட்டது என்பதைக் காண்பித்தது.
பக்கத்திலிருந்து வாலிபன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்திலும் ஒரு கை துப்பாக்கியைப் பிடித்த வண்ணமாக இருந்தது. கனவில் மறுபடியும் போரை நடத்துகிறான் போலும். திடீரென்று கூக்குரல் விட்டுக்கொண்டு எழுந்தான். உடனே கனவுடன் என்ற பிரக்ஞை வந்தது. உடனே தன்னுடன் இருப்பவனின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தான்.
"ரூபன், இதோ இந்தப் பாறைகள் எனது தலைக்கல். இனி என்னால் நடப்பது கஷ்டம். நான் ஏற்ற குண்டு எதிர்பார்த்ததைவிட அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. இந்த மலையின் அடுத்த பக்கத்தில் நமது வீடு இருந்தாலும் என்னால் இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது" என்றான் அந்தக் கிழவன்.
"மூன்று நாள் பிரயாணம் உங்களுக்கு மிகுந்த களைப்பைத் தந்துவிட்டது. ஏதாவது காய் கிழங்குகள் இருந்தால் பார்த்து வருகிறேன். அதன் பிறகு என்மேல் சாய்ந்து கொள்ளுங்கள். மெதுவாக நான் உங்களை கைத்தாங்கலாக அழைத்துச் செல்லுகிறேன்."
"இன்னும் இரண்டு நாள் கூட நான் பிழைத்திருக்க மாட்டேன். உனக்கோ என்னைவிடப் படுகாயம். நீயாவது உன்னைக் காப்பாற்றிக் கொள். எனக்கோ நம்பிக்கை கிடையாது. நான் இங்கிருந்தே சாகிறேன்."
"அப்படியானால் நானும் உம்முடன் இருப்பேன்."
"அது வேண்டாம். சாகப்போகிறேன். இந்த ஆசையையாவது நிறைவேற்று. ரூபன்! உன்னை நான் என் மகன் போலப் பாவிக்கிறேன். உன் தந்தையின் உத்தரவை ஏற்று இங்கிருந்து புறப்பட்டுப் போ!"
"நீர் என்னை மகன் போல் பாவித்து நடத்தியதற்காக நான் உம்மை இந்தக் காட்டிலே விட்டு விட்டு நடையைக் கட்டிவிட வேண்டுமாக்கும்! நீர் இறப்பது உண்மையானால் கடைசி வரையிலிருந்து உமக்கு வேண்டிய சாமக் கிரியைகளை நடத்திய பின்பே போவேன். எனது பலமும் போனால் நாம் இருவரும் ஒரே குழியில் படுத்துக் கொள்வோம். பின்பு தெய்வம் சக்தியைக் கொடுத்தால் நான் போகிறேன்."
"பட்டணங்களிலே உயிருடன் இருப்பவர் பார்க்காமல் இருக்க, இறந்தவர்களைப் புதைக்கிறார்கள். இவ்விடத்திற்கு இன்னும் 100 வருஷங்களுக்குள் யார் வரப் போகிறார்கள்? தெய்வ மணம் கமழும் காற்றில் நான் ஏன் அமைதியை ஏற்கலாகாது? சாகும்பொழுது இந்தப் பாறையில் உன் பெயரை எழுதுவேன். அதன் பின் அமைதிதான். முட்டாள்தனமாகத் தாமதிக்காதே!"
இவன் வார்த்தைகள் ரூபன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. "போரில் மரணத்தை ஏற்பது கஷ்டமில்லை. வீட்டிலே குடும்பத்தின் மத்தியிலும் அப்படித்தான். ஆனால் தனியாக, தனியாகச் சந்திப்பது..."
"ரூபன் போர்ன், அதற்கு நான் அஞ்சவில்லை. நீ வாலிபன், உன் முன்பு வாழ்க்கை காத்திருக்கிறது."
"உமது மகள் - அவளை எப்படிச் சந்திப்பேன்? காட்டில் உம்மை மடியும்படியாக விட்டுவிட்டு வந்தேன் என்று அவளிடம் சொல்லவா நான் அங்கு போகவேண்டும்! அவளிடம் அதைச் சொல்லப் போவதைவிட இங்கு உம்முடன் மடிவது நல்லதல்லவா?" என்றான் ரூபன் போர்ன்.
"எனது கட்டாயத்தின் பேரிலேயே வந்ததாகச் சொல்லு. இருவரையும் நான் ஆசீர்வதித்ததாகச் சொல்லு. நான் இறக்கும்பொழுதாவது இருவரும் வாழ்க்கைப் பாதையில் சுகமாகச் செல்லுவீர்கள் என்ற நினைப்பில் என் உயிர்போகட்டும்." இவ்வாறு பேசும் பொழுது, மிகுந்த ஆவேசத்துடன், தன் ரணத்தின் வலியையும் பொருட்படுத்தாதவன் போல் நிமிர்ந்து உயர்ந்தான் வாலிபன். அவனது ஆவேச முகக் குறியெல்லாம் தன் நன்மைக்காகச் செய்யும் முயற்சி என்றே நினைத்தான்.
ரோஜர் மால்வின் மறுபடியும் தொடர்ந்து, "நான் அனாவசியமாகப் பயப்படுத்திக் கொள்ளுகிறேன். ஒரு வேளை க்ஷேமமாய்த் திரும்பி வந்து என்னை அழைத்துப் போகலாம். முன் தடவை இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. நானும் எனது நண்பனும் படுகாயப்பட்டோ ம். எனது நண்பன் என்னைப் போகும்படி கட்டாயப்படுத்தி அனுப்பினான். அப்பொழுது உன்னைப் போலவே நான் வேண்டாவெறுப்புடன் மறுத்து, பின்பு போனேன். சிறிது தூரத்திலேயே உதவி கிடைத்தது. இப்பொழுது அந்த நண்பன் இன்னும் உயிரோடிருக்கிறான்" என்றான்.
"நான் சமயத்தில் வந்து உம்மைக் காப்பாற்ற முடியுமென்று நினைக்கிறீரா?" என்று ரூபன் வயோதிகனைக் கேட்டான். "அன்று நான் அவனைக் காப்பாற்றினேன்" என்றான் வயோதிக ரோஜர் மால்வின்.
இதைக் கேட்டதும், போனால் சீக்கிரம் உதவி அழைத்துக் கொண்டு வரலாம் என்று ரூபனுக்குப் பட்டது.
"என்னை இந்தப் பாறையின் மீது சாய்ந்து உட்கார்ந்திருக்கும்படியாகத் தூக்கி வை. அப்பொழுது நீ நெடுந்தூரம் போகும் வரையில் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். என்னைத் தூக்கி வைத்து விட்டு நீ சீக்கிரம் புறப்படு!" என்றான் வயோதிகன்.
ரூபன், கிழவன் இஷ்டப்படியே அவனைப் பாறையில் சாய வைத்துவிட்டு, அவன் உணவுக்காகச் சில கிழங்குகளையும், அவன் படுத்திருப்பதற்காகத் தழைகளையும் சேகரித்து வைத்துவிட்டு, மனம் இருபக்கமும் இழுக்க, ரணம் ஒருபுறம் வருத்த, தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றான்.
ரூபன் புறப்பட்ட நேரம் நல்ல நேரம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். வழியிலே புயலும் சண்டமாருதமாக ஆரம்பித்துத் திசை தெரியாமல் செய்து விட்டது. ரூபன் வழி தவறினான். காடுகளில் வழி தவறினவர்களுக்கு, என்ன கதி தெரியுமா? சித்தப்பிரமை ஏற்படுவது இலகு; ரூபனுக்கும் அந்தக் கதிதான் கிடைத்தது. வயிற்றில் பசி, சிறுகுடல் பெருங்குடலைத் தின்னும் பசி. எதிரே மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்ன பயன்? கையில் இருந்த துப்பாக்கிக்கு மருந்து இல்லை. வழியில் முளைத்த பெயர் தெரியாத செடிகளின் பழங்கள் அவனுடைய உயிரை உடலுடன் ஒட்டவைத்தன.
இந்த நிலையில் அவனைக் கண்ட சிலர் காட்டிற்கு மிகவும் அருகில் உள்ள ஒரு ஊருக்கு அழைத்துச் சென்றனர். நல்ல காலம், அது அவனுடைய ஊராக இருந்தது. ரணத்தால் புத்தி கலங்கியவன் என்ன சமாசாரத்தைச் சொல்ல முடியும்?
டோ ர்க்காஸ் (அதுதான் அந்த வயோதிக ரோஜர் மால்வினின் மகள் பெயர்) வியாதியஸ்தனான ரூபனை ஏற்று சிகிச்சை செய்து வந்தாள். நெடுநாள் வரை ரூபன் ஜன்னி கண்டு பிதற்றினான். ஆனால், காயம் வரவரக் குணம் அடைந்துகொண்டு வந்தது.
ரூபனுக்குப் புத்தியும் தெளிந்தது.
ரூபன் குணம் அடைந்தான் என்பதைக் கண்டதும் டோ ர்க்காஸுக்குத் தகப்பனாரைப் பற்றிய விவரங்களை அறிய வேண்டுமென்று பல நாள் ஆவல் கட்டை மீறியது.
"ரூபன்! என் தகப்பனார் கதி என்ன?" என்று அவனைக் கேட்டுவிட்டு, முகத்தையே கவனித்தாள்.
"உன் தகப்பனாருக்கு, சண்டையில் பலத்த காயம்பட்டது. மெதுவாக நான் அவரை அழைத்துக்கொண்டு ஒரு குளக்கரைக்கு வந்தேன். அங்கே தண்ணீர் குடித்துவிட்டு, மெதுவாகக் கைத்தாங்கலாக அவரை அழைத்துக்கொண்டு, காட்டுவழியாக வந்தேன். மூன்று நாள் இப்படிக் காட்டு வழியாக நடந்து வந்தோம். நான் எதிர்பார்த்ததை விட அதிக தூரம் அவரால் நடக்க முடிந்தது. நான்காவது நாள் காலை, அவரால் எழுந்திருக்க முடியவில்லை. உயிர் மெதுவாக..."
"பின்பு, இறந்து போனார்!" என்று மெதுவாக முடித்தாள் டோ ர்க்காஸ்.
ரூபன் பதில் பேசவில்லை. வெட்கத்தாலும் பலவீனத்தாலும் தலையணையில் முகத்தை மறைத்துக் கொண்டான். டோ ர்க்காஸ் இதை நெடுநாளாக எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் அவளுக்கு வருத்தம் சகிக்க முடியவில்லை; கண்ணீர் விட்டாள்.
"எனது தகப்பனாருக்குக் கடைசிக் கிரியைகளைச் சரிவரச் செய்தாயா?" என்று ஏங்கிக்கொண்டே கேட்டாள்.
"எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. ஆனாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன். அவர் தலைப்பக்கத்தில் உயர்ந்த தலைக் கல் இருக்கிறது. ஐயோ, அவர் இருக்கும் இடத்தில் நானும் இருக்கக்கூடாதா?" என்றான்.
இந்தச் செய்தி ஊரில் பரவியது. ஊரார் எல்லோரும் அவனைப் புகழ்ந்தார்கள்.
நீங்களும் எதிர்பார்க்கிறபடி, டோ ர்க்காஸுக்கும் ரூபனுக்கும் கலியாணம் நடந்தது. ஆனால், என் கதை காதல் கதை அன்று. கலியாணச் சமயத்தில் புதுப் பெண், சந்தோஷத்தில் ஏற்பட்ட நாணத்தால் முகம் சிவந்தாள்; ஆனால், கலியாண மாப்பிள்ளையின் முகம் சவம் போல் வெளுத்திருந்தது.
ரூபன் மனத்தில் ஒரே எண்ணம் பேய் போல் நின்று தலை விரித்தாடியது. அவன் தனது கோழைத்தனத்திற்காக எப்பொழுதும் வருந்தினான். ரோஜர் மால்வினை விட்டுவிட்டு வந்ததற்கு ஊரார் சுடுசொல் ஏற்படாவிட்டாலும், உள்ளம் அவனை இடித்து இடித்துக் காண்பித்தது.
வருஷங்கள் கழிந்தால் ஞாபகம் மறையும் என்பார்கள். ஆனால், ரூபன் விஷயத்தில், அதற்கு நேர் மாறாக நடந்தது.
அவன் காதில் யாரோ ஒருவர், இடைவிடாது, "நீ அவ்விடத்திற்குப் போய் உனது பிரதிக்ஞையை நிறைவேற்று" என்று கூறுவது போல் கேட்டுக் கொண்டே இருந்தது.
வருஷங்கள் ஏற ஏற, துன்பம் வளர்ந்ததே ஒழியக் குறைந்தபாடில்லை.
ரூபனின் குடும்ப வாழ்க்கையும் அப்படித்தான். டோ ர்க்காஸுக்கு ஏராளமான சொத்து இருந்தது. இருந்தும், ரூபனுக்கு அதைப் பண்படுத்தி வளர்க்கத் தெரியவில்லை. காலப்போக்கில் வறுமையும் வீட்டில் குடியேறியது.
இந்தச் சம்பிரமத்தில் டோ ர்க்காஸுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளையின் அச்சும் அசலும் தகப்பனாரைப் போல இருந்தன. அதற்கு ஸைரஸ் என்று பெயரிட்டான்.
குழந்தையைப் பார்க்கும்பொழுதெல்லாம் ரூபனுக்குத் தனது குழந்தைப்பருவ ஞாபகம் வந்தது. தன்னை, சென்று போன தனது வாழ்க்கையை, மீண்டும் ஞாபகப்படுத்தும் குழந்தையின் மீது வெறுப்பு அதிகரித்தது.
இப்படியாகப் பதினாறு வருஷங்கள் கழிந்தன. அதற்குள் ரூபனும் காட்டில் போய் மரங்கள் வெட்டி வந்து ஜீவனம் செய்ய வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டான்.
மே மாதம் ஆரம்பம், ரூபன் காட்டிற்குப் புறப்பட்டான். அங்கெல்லாம் காடுகளுக்குப் போவது என்றால் ஒரு நாளில் திரும்பும் வியாபாரம் அல்ல. குடும்பத்துடனேயே செல்ல வேண்டியிருக்கும். ரூபனும் அவ்வாறு புறப்பட்டான்.
காடுகள் வழியாகச் செல்வதற்கு, மனத்தில் கவலை இல்லாவிட்டால், அந்தரங்கமான வேறொரு ஆசை இல்லாவிட்டால், சந்தோஷமாக இருக்கும். டோ ர்க்காஸுக்கும் அவளுடைய மகனுக்கும் அப்படித்தான். ஆனால் ரூபன்?
ரூபன் சாதாரணமாகப் போகும் பாதைகளை விட்டு வேறு ஒரு திசை நோக்கியே சென்றான். அவன் மகன் இதைக் குறித்துக் கேட்டும் பதில் அளிக்காததினால் அவனும் கேட்பதை விட்டு விட்டான்.
இப்படியாக நெடுந்தூரம் சென்று, ஒருநாள் சாயங்காலம் ஓர் இடத்தில் தங்கினார்கள்.
ரூபனுக்கு அந்த இடத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வந்தது. அவர்களை ஒரு மரத்தடியில் தங்கும்படி சொல்லிவிட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அப்பொழுது டோ ர்க்காஸ், "இன்று என்ன நாள் என்பது ஞாபகம் இருக்கிறதா?" என்றாள்.
ரூபன் பதில் பேசாது திரும்பி ஏறிட்டுப் பார்த்தான்.
சிறிது நேரம் கழித்து, "எனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமா?" என்று சொல்லிக்கொண்டு தலைகுனிந்தபடியே போய்விட்டான்.
சிறிது நேரம் சென்றபின் அவனுக்கு சுயபிரக்ஞை வந்தது போல் நின்று விழித்துப் பார்த்தான். அதே இடந்தான். தனது பாவத்தைத் தீர்க்க வேண்டிய இடம். இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சற்று உயர்ந்த இடத்தில் புதருக்குள் சலசலவென்று சப்தம் கேட்டது. உடனே துப்பாக்கி எடுத்துச் சுட்டான். அந்த இடத்திலிருந்து ஏதோ ஒரு ஹீன சுரத்தில் குரல் ஓங்கி மடிந்தது.
டோ ர்க்காஸ் வெகு நேரமாக உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்த பையன் தகப்பனார் வருகிறதற்கு நேரம் ஆகிறது என்று தானாவது உணவுக்கு ஏதாவது மிருகம் அடித்துக் கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டான். காட்டில் நன்றாகப் பழகிய மகனை அனுப்புவதற்குத் தாயாருக்கு ஏன் பயம் தோன்றப் போகிறது!
இவன் போய் நெடுநேரம் ஆகியும் ஒருவராவது திரும்பவில்லை.
தூரத்தில் எங்கோ துப்பாக்கி வெடிச்சப்தம் கேட்டது. டோ ர்க்காஸ் தனது மகன் தான் ஏதோ ஒரு மானைச் சுட்டிவிட்டான் என்று நினைத்து, சப்தம் கேட்ட திசையை நோக்கி, மகன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு நடந்தாள். அந்த ஒரு சப்தத்தைத் தவிர வேறு கேட்காததினால் உத்தேசமாக அத்திசையையே நோக்கி நடந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் எதிரே ஒரு பாறை தென்பட்டது. அதைச் சுற்றிக் கொண்டு, மகன் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டு நடந்தாள்.
எதிரில் ரூபனும் வேறு திசையில் அவளை நோக்கி வந்தான்.
இவர்களுக்கிடையில் ஏதோ ஒரு உருவம் கீழே கிடந்தது. முதலில் டோ ர்க்காஸ் அது ஒரு மான் என்று நினைத்தாள். நெருங்கியதும் ஸைரஸ் தலையைக் கையில் வைத்துப் படுத்துத் தூங்குவது போல் இருந்தது. இங்கே தனியாகத் தூங்குகிறானே என்று, அவன் பெயரை உரக்கச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு குனிந்தாள். அவன் எழுந்திராத தூக்கம் தூங்குகிறான் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?
தெய்வம் இரத்தத்திற்கு இரத்தம் ஏற்றுப் பாபத்தைப் போக்கிவிட்டது என்று ரூபன் உணர்ந்தான். மகன் இறந்ததினால் அவனுக்குத் துயரம் ஏற்படவில்லை. ஆனால் இத்தனை வருஷங்களாகத் தன்னை விட்டு நீங்காத சுமை ஒன்று கீழே விழுந்து தன்னைப் பரிசுத்தமாக்கியது என்ற மன நிம்மதி ஏற்பட்டது. உள்ளத்தில், இத்தனை காலம் தெய்வம் என்ற வார்த்தையைக் கூட நினைத்தறியாத உள்ளத்தில், ஒரு பிரார்த்தனை எழுந்தது.
அமைதியான குரலில், "இவ்விடத்தில்தான் உன் இரண்டு இரத்தமும் மரணத்தில் சந்திக்கிறது. இந்த இடந்தான் உன் தகப்பனாருக்கும் மகனுக்கும் ஏற்பட்ட ஒரே கல்லறை" என்றான்.
டோ ர்க்காஸ் மகன் மீது விழுந்து அழுதாள்.
அன்று முதல் ரூபன் மனதில் சாந்தி பிறந்தது.
லவல் சண்டையிலே போர்க்களத்தில் குண்டு பட்டு வீர மரணத்தை ஏற்பது ஒன்று; தர்மசங்கடத்தால், உள்ளத்தின் சுடு சொல்லால், பல வருஷங்கள் ஒரு பெரும் இரத்தச் சுமையைத் தாங்குவது வேறு ஒன்று. இது சரித்திரமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் வாழ்க்கையின் சிலுவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக