27/03/2011

தாலாட்டுப்பாடல்களில் உறவுமுறை - முனைவர் ச. அருணாசலம்

நாட்டுப்புறப்பாடல்களில் முக்கிய இடத்தையும், முதலிடத்தையும் பெறுவது தாலாட்டுப்பாடல்களாகும். பாடத்தெரிந்த மனித இனம் குழந்தை பெற்று மகிழ்ந்த காலத்தினில் தாலாட்டு இலக்கியம் தோன்றி விட்டது. தொடக்கமும் முடிவும் அறிய முடியாத வரலாற்றுச் சிறப்புடையது தாலாட்டு ஆகும்.

தாலாட்டுப்பாடல்களில் தாய்மை உணர்ச்சியின் ஆழம், மக்களைப் பற்றிய வருங்காலக் கற்பனை, குறிக்கோள் உடைய சிந்தனை, பிறந்த வீட்டுப் பெருமை, புகுந்த வீட்டுப் பிரச்சினை ஆகியவற்றைக் காணலாம். தாலாட்டின் பாடற்பொருளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்பார் சு. சக்திவேல். 1. குழந்தையைப் பற்றியன, 2. குழந்தைக்குரிய கருவிகளைப்பற்றியன, 3. குழந்தைகளின் உறவினரைப்பற்றியன. தாய் தானே ஆசிரியனாய் நின்று தன் மக்களுக்கு தாலாட்டின் மூலமாக உறவினர்களின் உறவு முறைகளை அறிமுகப்படுத்துகிறாள். தந்தை, தாய், தங்கை, தம்பி, அண்ணன், அண்ணி, மாமா, மருமகன், மாமி, தாத்தா, பாட்டி என்கிற உறவுச் சொல்லாட்சிகள் தாலாட்டுப் பாடல்கள் வழி வெளிப்படுத்தப்படுவதை இவ்வாய்வுக் கட்டுரை ஆராய்கிறது.

தந்தை உறவு:-

தாலாட்டில் தந்தையின் பெருமை பேசுகிறாள் தாய். அரைக்காசு சம்பளமென்றாலும் அரண்மனைச் சேவகமல்லவா? கைக்கட்டி வாய்பொத்தி ஜமீன்தாரிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரன் மனைவியின் கற்பனையில்

தொந்தி குலுங்க

துடை குலுங்க வேட்டி கட்டி

அந்தி நடை நடந்து உங்களப்பா

அதிகாரி வந்திறங்கி

கோர்ட்டு துறந்து

குறிஞ்சி மேல் உட்கார்ந்து

கேசை விசாரிக்கும்

கவர்னரோ உங்களப்பா

என்று அப்பா (தந்தை) என்ற உறவினைப் பெருமையுடன் வெளிப்படுத்துகிறாள்.

தாய் உறவு:-

அருமை மகன் அழுகிறான். அழுகைக்கான காரணம் கேட்கிறாள் தாலாட்டில்

அம்மா அடித்தாளோ கண்ணே

அமுதூட்டும் கையாலே

என்றும்,

ஆரும் அடிக்கவில்லை

அன்னியரும் தீண்டவில்லை

தானே அழுகிறான்

தாயார் மடிதேடி

என்றும், இன்னொறு பாடலில்

ஆரும் அடிக்கவில்லை

ஐவிரலுந் தீண்டவில்லை

அவனா அழுகிறான்

ஆத்தாள் மடிதேடி

என்று அம்மா, தாய், ஆத்தாள் என்ற சொற்றொடர்களை கையாண்டு அறிமுகப்படுத்துகிறாள்.

தங்கை உறவு:-

இன்றைய கவிஞர்கள் தாலாட்டுப்பாடல்கள் இயற்றும்போது ஆண் குழந்தைக்குத் தனியாகவும், பெண் குழந்தைக்குத் தனியாகவும் பாடல்கள் புனைகின்றனர். தாய்மார்கள் பாடும் தாலாட்டில் இக்குறை கிடையாது. ஒரே தாலாட்டினைக் குழந்தைக்கு ஏற்றபடி மாற்றிப்பாடுவதே அவர்களின் வழக்கம்.

மாறுடி ஓடுது

மறியடி நல்ல தங்கை

மானோடும் வீதியெல்லாம் - தங்கை

தானோடி வந்தாளோ

என்று பெண் குழந்தைக்குப் பாடும் பாடலில் தங்கையை அறிமுகப்படுத்துகிறாள்.

தம்பி உறவு:-

ஆண்குழந்தைக்குப் பாடும் தாலாட்டில்

மாறுடா ஓடுது

மறியடா நல்லதம்பி

மானோடும் வீதியெல்லாம் - தம்பி

தானோடி வந்தேனோ.

என்று பாடி தம்பி என்னும் உறவு முறையை அறிமுகம் செய்கிறாள்.

அண்ணன் உறவு:-

தாய் தன்னுடைய அண்ணனை அதாவது குழந்தைக்கு மாமனை அறிமுகப்படுத்தும் பாடலில்

ஆனை விற்கும் வர்த்தகராம் - உன் மாமன்

சேனைக்கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே - உனக்கு

சின்ன சட்டை கொடுத்தானோ உனக்கு

என்று அண்ணன் என்ற உறவு சொல்லாட்சியைக் கையாளுவதை அறிய முடிகிறது.

அண்ணி உறவு:-

குழந்தையின் அழகை வெளிப்படுத்தும் தாலாட்டில்,

அரைச்சவரன் கொண்டுபோய் - கண்ணே அதை

அரைமூடியாய் செய்யச் சொன்னேன்

அரைமூடியை அரைக்குப்போட்டுக் கண்ணே நான்

அழகு பார்த்தேன் ஆலத்தியிட்டு

அத்தைமாரும் அண்ணிமாரும் - கண்ணே உன்

அழகைப் பார்த்து அரண்டார்களே.

தனக்கு அண்ணி குழந்தைக்கு அத்தை என்ற உறவு முறையைச் சொல்வதால் அறிய முடிகிறது.

மாமா உறவு:-

மாமனை அறிமுகப்படுத்தும் பாடலில்

செக்கச்சிவப்பரோ - உங்கமாமா

சீமைக்கோர் அதிபதியோ

அழகுச் சிவப்பரோ - ஐயா நீ

அருமை மருமகளோ?

என குழந்தைக்கு மாமாவின் பெருமையை உறவோடு சொல்லி, தன் மகளை அவருக்கு மருமகளாகவும் அறிமுகப்படுத்துகிறாள். மாமா, மருமகள் எனும் சொற்றொடர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மாமி உறவு:-

குழந்தை அழும்போது பாடும் தாலாட்டில்,

மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு

மைதீட்டும் கையாலே

என்று மாமியை அறிமுகமாக்குகிறாள்

தாத்தா உறவு:-

தாத்தாவின் பெருமையை,

கடலுக்கு சம்சாரி

கப்பலுக்கு வியாபாரி

இனி வார கப்பலுக்கு

உங்க தாத்தா தீர்த்த கணக்காளி

என்று தாத்தாவின் உறவைச் சொல்லுகின்றாள்.

பாட்டி உறவு:-

பாட்டியைக் குறிப்பிடும்போது

பாட்டி அடித்தாளோ கண்ணே

பால் வார்க்கும் சங்காலே

என்று பாட்டியின் உறவை வெளிப்படுத்துகிறாள்.

உறவு முறை வெளிப்பாடுகள்:-

தலாட்டுப்பாடல்கள் தாயின் கற்பனை வளத்தினையும் மன நிலையையும் பொறுத்து அமைகின்றன. தாலாட்டுப்பாடல்கள் தாய்பாடும் பாடல்களின் இடையே ஊ.. ஊ.. ஊ என்றும் ரீரீரீரீ எனவும் ரா.... ரா..., என்றும் வெற்றுச்சொற்கள் பல்லவியைப் போன்று அமையும் இது குழந்தையின் நாவசைவிற்குப் பயிற்சியைத் தருகிறது.

தாலாட்டுப்பாடல் யாருக்காகப் பாடப்படுகிறதோ. அதனை அக்குழந்தை கேட்டுணரும் நிலையில் இல்லை. தாலாட்டின் வழியாக வெளியுலகத்திற்கு அளிக்கும் செய்தியோ முதியவரும், ஏனையோரும் அறிந்து கொள்ள வேண்டியவை. தாய் குழந்தையைத் தாலாட்டுவதன் வாயிலாகப் பல்வேறு செய்திகளை வெளியிடுகிறாள். அதில் ஒன்று உறவு முறைகளை வெளிப்படுத்துதல் ஆகும், பிஞ்சு உள்ளத்தில் தாய் சொல்லும் வார்த்தைகளைக் குழந்தை அப்படியே சொல்லும், அதனைத் தொடர்ந்த நிலையில் உறவு முறை சொல்லாட்சிகளைத் தாய் அறிமுகமாய் கூற, குழந்தை தன்நெஞ்சில் நினைவில் நிறுத்திக் கொள்கிறது. வளரும் நிலையில் புரிந்து கொள்கிறது. ஆகையால் தாலாட்டுப் பாடல்கள் தாயின் அறிமுக உறவு முறைகளை வெளிப்படுத்துகிறது.

தாலாட்டுப்பாடல்களில் உறவு முறையைத் தாய் அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அறியமுடிகிறது. குழந்தை வளர்நிலையிலேயே தாய் ஒரு ஆசிரியனாய் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைக்கு உறவு முறைகளைச் சொல்லி அதன் வழி உறவுகளை நிலைக்க வைக்க முடிகிறது. தாயானவள் தாலாட்டில் தொடங்கும் அறிமுக உறவு முறையானது பின்னர் பல்வேறு பாடல்களிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது.

நன்றி: வேர்களைத் தேடி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக