ஆளவந்தாரால் திருவாய் மலர்ந்தருளிய ஞானவாசிட்டம் என்ற நூலில் ஆறு பிரகரணங்கள் உள்ளன. இரண்டாவது பிரகரணம் முமூட்சுப் பிரகரணம். இதில் இருபத்தெட்டு பாடல்கள் உள்ளன. இப்பகுதியில் வாசனையை நீக்கி, குரு அறிவுரையாலும் ஞானநூல் பயிற்சியாலும் முயற்சி செய்து சீவன் முத்தர்களாக வாழ்ந்தால் வீடு பேற்றை அடையலாம் என்ற சிந்தனைகள் உள்ளன. அவற்றை வகை தொகை செய்தி விளக்கிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முமூட்சு பிரகரணத்தில் கதை அமைப்புக் கிடையாது. இராமனுக்கு வசிட்டர் வீடுபேற்றில் விருப்பம் உடையவர்கள் எப்படிப்பட்ட நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இராமன் வீடுபேற்றை அடைய வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தார் என்பதை முதல் பிரகரணத்தில் விளக்கியுள்ளார்.
முமூட்சு என்பதற்கு வீடுபேற்றில் விருப்பம் உடையவர் என்பது பொருள். விருப்பம் உடையவர்கள் எப்படி இருக்கவேண்டும் எனக் குறிப்பிடுவதால் இதற்கு முமூட்சு பிரகரணம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிறப்பு:-
முற்பிறப்புகளின் வாதனை வயத்ததினால்தான் பிறப்பு ஏற்படுகிறது. வாதனை என்பதை வாசனை என்பர். வாதனை என்றால் தடை அல்லது வருத்தம் என்பதாகும். ஒரு பிறவியில் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாகப் பல பிறவிக்கு வித்தாகின்றது. வயத்தன் என்றால் அடிமை. முற்பிறப்பில் வாசனை காரணமாக அடிமைப்பட்டுக் கிடக்கின்றது ஆன்மா என்பர்.
வாசனை:-
பூர்வ வாசனையை, சுத்தவாசனை என்றும் பந்தவாசனை என்றும் வகைப்படுத்துவர். சுத்தவாசனையைச் சார்ந்தால் வீடுபேறு கிடைக்கும். பந்தவாசனையைச் சார்ந்தால் துன்பம் ஏற்படும். இதனால் பிறவி தோன்றும். இதனை ஆசிரியர்,
''சுத்த வாதனை தொடரில் அதனான் மெல்லத்
தூய பரபதம் பெறுவைச் சுத்தமல்லாப்
பெத்த வாதனை தொடரில் துன்பமாக்கும்
பெரிது வருந்தியு மிதனைப் போக்க வேண்டும்'' (முமூட்சு. 3.1,2)
இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
வாசனை நீக்கும் நெறி:-
மனம் என்னும் சிறு குழந்தையை அசுப வாசனையில் செல்லாமல் தடுத்து சுப வாசனையில் நிறுத்த வேண்டும். ஆசாரியரும் நூல்களும் சொல்லுகின்ற வழியில் சென்றால் வாசனை மாறும்.
ஆத்ம விசாரணை:-
நல்ல ஞான சாத்திரங்களினால் தெளிவான சுத்தமுள்ள நுட்ப அறிவினால் ஆத்ம விசாரணையைப் பூரணமாகச் செய்ய முடியும். ஆத்ம விசாரணைப் பூரணமானால் அதிநுட்பமான பரமபதத்தை அறியமுடியும். ஆத்ம விசாரணையே காரியக் காரணங்களைக் குறித்தறியும். அறிவுள்ளவர்களுக்குண்டான கொடிய பிறவி வியாதிக்கு அரிதான மருந்தாகும்.
விசாரணை எல்லை:-
ஆத்ம விசாரணைச் செய்வதற்கு அறிவில் சிறந்த சத்துக்கள் சங்கம் இல்லாத சமயத்தில் தருமத்துடன் தாம் ஈட்டிய பொருட்களால் தேடும் தொழிலை உடையோராய் குற்றமற்ற ஆத்மாவில் இளைப்பாறி, நீங்காத துரியம் என்னும் சாந்தி நிலைதோன்றுமட்டும் சாத்திரங்களும் மன அமைதியும் நன்னடையும் உயர்ந்த அறிவும் கொண்டு சாதுக்கள் கூட்டத்தினால் ஆன்ம ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதுதான் சமானமில்லாத ஆராய்ச்சியினால் உண்டாயிருக்கின்ற நிருமலமான துரிய நிச்சயத்தைக் கொல்லும் தன்மையுடையது.
ஆத்ம விசாரணையால் அடையும் பலன்:-
எந்தப் பொருளின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத துயரமில்லாத நிலையில் ஆனந்தம் கிடைக்கும். நடுக்கம் வரச் செய்கின்ற மாயையினால் மனம் வருந்தாது. அலையில்லாத கடலைப்போல மனம் சமத்துவத்தை அடையும். விசாரணையினால் அனைவர்க்கும் கடலின் ஆழம் போல வீரமும் மகா மேருவினைப் போல வலியையும் பூரணச் சந்திரனைப் போலக் குளிர்ச்சியும் இன்பமும் வரும். இதனால் சீவன் முத்தி நிலை முறையாக ஏற்படும். அதனால் விடய போகம் கிடைக்கும். இந்நிலையில் மகாதவசிகளும் நரேந்திரரும் வணங்குவர்.
சாதுசங்கம்:-
வீடுபேற்றிற்கு ஆசைபடுபவர்கள் அடியார்கள் கூட்டத்தோடு சேர வேண்டும். அப்படிச் சேர்ந்தால் உலகம் என்னும் மாயையை வெல்லத்தக்க பயிற்சி கிடைக்கும். இதற்குச் சாதுக்கள் சங்கமமானது உதவியாகும். அது மட்டுமின்றி,
அறக்குறைவை நிறைவாக்கும் சம்பத்தாக்கும்
ஆபத்தைச் சுபமாக்கும் அசுபந்தன்னைச்
சிறக்கும் உயர்ந்தவர் கூட்டம் என்னுங்கங்கைச்
சீத நீராடினர்க்குச் செந்தீ கேள்வி
யிறக்கரிய தவந்தானம் தீர்த்தம் வேண்டாம்
இடர் பந்தம் அறுந்தெவர்க்கும் இனியோராகிப்
பிறப்பெனும் வேலைப் புணையாம் உணர்வு சான்ற
பெரியோரை யெவ்வகையும் பேணல் வேண்டும் (முமுட்சு. 20)
போன்ற நல்ல செயல்கள் கூட்டி வைக்கும் என ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குரு:-
வீடுபேற்றை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தம் எண்ணங்களில் தோன்றும் துக்கம் என்ன; மாயை யாது; எவ்வாறு உண்டாயிற்று; அது நீங்கி வீடுபேறு அடையும் நெறி யாது போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெளியவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்குப் பதில் கூறி நெறிப்படுத்துபவரே உண்மையான குருவாவார். இந்த எண்ணம் உடையவர்களுக்கு மட்டும்தான் குரு உபதேசம் செய்வார். இதனை,
''ஓதுகின்ற பொருண் முழுது முன்பின் கூட்டி
யுணர்பவர்க்கல்லது பசுவையொப் போர்க் கெல்லாம்
தீதகன்ற குருவுண்மை செப்பாரன்றே'' (முமூட்சு. 11.1,2)
என்றும்
....... விரைவின் மேவித்
தான் மாளாக் கிரியினர்க்குக் கிரியைச் சாற்றி
சாதனமுள்ளேர்க் குணர்வைச் சாற்று கென்றான்'' (முமூட்சு. 9.3,4)
என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
குருவானவர், விரைவில் நான் என்னும் அகம் நீங்க வேண்டும் என்ற கரும உணர்வுடையவர்க்குக் கிரியையைக் கூறி முயற்சி உடையவர்களுக்கு ஞானத்தைச் சாற்றுவார். தாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தில் முயற்சி உடையவர்களுக்கே அறிவுரை கூற வேண்டும் என்பது நியதி. இதனையே ஞானவாசிட்டமும் உறுதி செய்கிறது. பக்குவமற்றவர்களுக்குக் குருவானவர் உபதேசிக்க மாட்டார். இவர்கள் துக்கமாகிய பந்தநாசம் செய்து யாவர்க்கும் இனிமையுள்ளவராயும் பிறப்பு என்னும் கடலைக் கடப்பதற்குக் கப்பலாயும் இருப்பார்.
சீடர்:-
முயற்சியுடன் ஆசிரியர் ஞான நிறைவையும், அஞ்ஞானத்தையும் ஆசார விவகாரங்களால் பகுத்தறிவோடு விசாரித்து ஆத்மாவை அறிய முற்படுபவர்களே அறிவில் சிறந்த உண்மைச் சீடர்களாவார்.
வீடுபேற்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்குக் கீழ்வரும் நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்பதை நூலில் வலியுறுத்துகிறார்.
''திகழ்சாந்தி விசாரமொடு செறிசந்தோடஞ்
சாது சங்கமென வீட்டின் வாயல் காக்குஞ்
சதுஷ்டயரு முறவாகிற் றடை வேறுண்டோ
மேதினி காவலர் மனைவிற் கடை காப்பாளர்
விடுவது போல வீட்டிலவர் விடுவரன்றே'' (முமூட்சு. 11.2-4)
முயற்சி:-
வீடுபேறு அடைய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் சாந்தி முதலான நான்கு குணங்களில் ஒன்றைப் பற்றிக் கொண்டு முயற்சி செய்தோமானால் எண்ணிய எண்ணம் கிட்டும். இதனைக் கீழ்வரும் பாடலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
அன்னால்வர தமிலொருவர் அன்பாலும்
அனைவரும் ஒத்தன்பாவர் ஆதலாலே
பன்னாளும் மிக முயன்று யாது நீத்தும்
பற்றியொரு வரையேனும் பழகவேண்டும்
அன்னாத பிறப்பறுக்க நல்லோர் நன்னூன்
மாதவத்தால் அறிவை முதல் வளர்க்க வேண்டும்
இன்னாத மாயையெனு நஞ்சம் போதம்
என்கின்ற காருட மந்திரத்தான் மீளும். (முமூட்சு. 12)
இப்பாடல் மூலம் வீடுபேற்றிற்கு எண்ணம் உடையவர்கள் நூற்களின் உதவியாலும் குருவின் அறிவுரையாலும் அறிவை முதன்மையாகக் கொண்டு தவமேற்கொண்டு முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை அறிய முடிகிறது.
சீவன் முத்தர்கள்;-
வீடுபேற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு வேதத்தின் முடிவாகிய ஆத்ம ஞானமானது முயற்சி செய்கின்றபோது வரும். அதனால் காமமாதி மயக்கங்கள் தீரும். மழைக்காலத் தடாக நீர் போல களங்கம் அற்று மனம் தெளியும். கவசங்கள் தரித்தவரைப் பாணங்கள் ஒன்றும் செய்யாதது போல தரித்திர முதலாகிய துன்பங்கள் தாக்காது.
இவர்கள் சொற்புலனுக்கு எட்டாதவராய் உலகத்தாரைப் போலக் காணப்படுவார். அறிவில், ஒரு கருமங்களில் பிடிப்பற்றவன், நல்ல பயனாலும், பொல்லாப் பயனாலும் சுகமும் துக்கமும் இல்லாதவன். கிடைத்ததை அன்பாக அனுபவித்து நன்றாக வாழ்பவன். சத்துக்கள் ஒழுக்கத்துக்கு வேறாகிய போகங்கள் இடத்தில் சிறிதும் சம்பந்தப்படாமல் இருப்பான்.
ஒரு கணமும் நீங்காத இன்பத்தையுடையவனாயும், உடல் மரணம் வரும்படி ஆராயாமல், சத்துக்களிடத்தில் வினாவுதலினால் வளர்ந்த வீடுபேற்று நெறியை ஆராய்வான். பிறவி தீர்க்கின்ற மெய்ஞ்ஞானம் பெற்றோனாகி மயங்குகின்ற மறுபிறப்பில் அடைந்து தாயார் யோனியில் வேதனையைச் செய்யான். அற்பமான போகத்தில் மயங்குகின்ற மனதையுடைய பாவிகளாய் இருக்கமாட்டான்.
பிறவி என்கிற கடலைத் தாண்டி வீடுபேற்றின் ஓரத்தை அடைந்தவன் சீவத்தன்மையோடிருந்தாலும் சீவத்தன்மை தீர்த்துச் சிவமயமாயிருந்தாலும், குடும்பத்தில் பொருந்தியிருந்தாலும் தனிமையான துறவியாயிருந்தாலும் மந்திரங்களால் கட்டுப்பட்டாலும் எல்லாவற்றையும் செய்தாலும் தவிர்த்தாலும் பயன் ஒன்றில்லாமல் இயல்பினில் இருப்பான்.
வீடுபேறுக்கு வழி:-
சாந்தியை அடைந்து ஆத்ம விசாரம் செய்தால் பிறவிகெடும். நரம்பிலுண்டாகும் நாதம் போல சாந்தி முதலாகிய நற்குணங்களால் ஆத்மஞானம் உதயமாகும். அதனால் ஞானம் பிறக்கும். அந்த ஞானம் முத்தி நல்கும். ஆத்ம ஞானம் நல்ல நூற்களின் முயற்சியாலும், சத்துக்களின் சங்கத்தாலும், ஆத்ம விசாரத்தாலும் கிடைக்கும். நூலில்லாத ஞானவழி துன்பமாகும். சீவன்முத்தி நிலை தகுந்த பயிற்சியாகும்.
எனவே பாலபருவத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற நூலினாலும் மயக்கமில்லாத நல்லோர் கூட்டங்களினாலும் முயற்சி செய்கின்றவர்களுக்கு இப்பிறவியிலே முத்தி உண்டாகும்.
ஆத்ம விசாரணை வேண்டும். அது குருவினால்தான் பெறப்படும். நல்ல நூல் பயிற்சி, சாதுக்கள் சங்கமம் ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும். அவை சீவன்முத்தி நிலைக்கு வழிவகுக்கும். சீவன்முத்தி நிலை அடைந்தவர்கள் இந்தப் பிறவியிலே வீடுபேற்றினை அடைவர். இச்செய்திகளை, வீடுபேற்றிற்கு ஆசைப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதால் முமூட்சுப் பிரகரணம் என ஆசிரியர் கொடுத்திருப்பது பொருத்தமாக உள்ளது எனலாம்.
நன்றி: ஆய்வுக்கோவை
Dear Sir,
பதிலளிநீக்குI appreciate your post. It is very informative. I would like to read more. I am looking for the book on Gnana vasitam, written by Thiru. S. Thangadurai. If you happen to know the address of the publisher, please let me know.
thanks,
Magesh