14/02/2011

கவிஞர் நந்தலாலா - நேர்காணல்

கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் என இலக்கிய தளத்திலும், சமூக தளத்திலும் தனது தடங்களை ஆழப்பதித்து வருபவர் கவிஞர் நந்தலாலா. த.மு.எ.ச.வின் கலை, இலக்கிய இரவுக்காக தமிழகம்தோறும் சென்று, தனது இனிய உரைவீச்சால் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களை வசீகரித்து வருபவர். இளங் கவிஞர்களை இனங்கண்டு அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதையும், அவர்களின் கவிதைகளை மேற்கோள் களாகத் தனது உரையில் குறிப்பிட்டு அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளவர். நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற முனைப்போடு இலக்கியப்பணி ஆற்றி இரவுவலம் வருகிற கவிஞர். ஒரு மாலைப்பொழுதில் "இனிய உதயம்' இதழுக்காக நந்தலாலா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

நீங்கள் ஒரு பொதுவுடைமைவாத இயக்கத்தில் இருந்து செயல்பட்டு வருபவர். ஆனால் பெரியாரைப் பற்றி அதிக அளவு பேசி, அவரது கருத்துக்களை மேடைதோறும் முழங்கி வருகிறீர்கள். இது குறித்து...

""பெரியார் ஒரு கட்சிக்குள்ளோ, ஒரு அமைப்புக்குள்ளோ அடங்காதவர்; அடக்க முடியாதவர். புரியச் சொல்ல வேண்டு மென்றால் காற்றைப்போல், நீரைப்போல் பொதுமையானவர். உதாரணத்திற்கு, கடவுள் மறுப்பு என்னும் ஒரு விஷயத்தைப் பெரியார் ஏன் கையிலெடுத்தார்? தீண்டாமைக் கொடுமையைத் தகர்க்கவே கடவுள் மறுப்பைக் கையிலெடுத்தார். தீண்டாமை வர்ணாசிரமத்தால் வந்தது. வர்ணாசிரமம் வேதத்திலிருந்து வந்தது. வேதம் கடவுளால் படைக்கப்பட்டது. அப்போது கடவுள்தான் தீண்டாமைக்கு மூலகாரணமாகிறார். கடவுள் இல்லையெனில் தீண்டாமையும் இல்லை. கிளைகளை வெட்டிக் கொண்டு இருப்பதைவிட ஆணிவேரை அகற்றும் பணியாகவே பெரியாரால் கடவுள் மறுப்பு கைக்கொள்ளப்பட்டது. கடவுள் இல்லையென்று சொன்னதோடு அவரின் கடமைகள் முடிந்துபோகவில்லை. பெண்களுக்கான விடுதலை ஆணிடமிருந்தல்ல; ஆண்மைத் தத்துவத்திலிருந்தே வேண்டும் என்று முழங்கியவர். வாழ்க்கையை உற்று நோக்கி, "புத்தியுள்ளவன் புத்தன்; சித்தமுள்ளவன் சித்தன்' என்றார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொதுவுடைமை இயக்கத்தோடு பெரியார் நட்பு பாராட்டியே வந்துள்ளார். "தோழர்' என்று அழைத்திருக்கிறார். குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போதுகூட "ரஷ்யா' என்றே பெயர் வைத்துள்ளார். பெரியவர் சிங்காரவேலருடன் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டவர் பெரியார். பகத்சிங்கின் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்' நூலை முதலில் தமிழில் வெளியிட்டதும் பெரியார்தான். இப்படி பொதுவுடைமை இயக்கத்தின் உற்ற நண்பராகவே அவர் திகழ்ந்துள்ளார். சொல்லப் போனால் நாங்கள் மிகவும் முயன்று பெரியாரை பொதுவுடைமையாக்கி இருக்கிறோம். இதில் எங்களையும் அவரையும் வியந்து பார்க்கவோ, பிரித்துப் பார்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான் என் கருத்து.''

தங்களைப் பொறுத்தவரை திராவிடப் பின்புலத்தில் இருந்து வந்தவர் என்றாலும், பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

""நான் பிறந்தது புதுக்கோட்டை அருகில் உள்ள குன்றாண்டார் கோவில் என்றாலும், வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தில் தான். அப்பா, பட்டுக்கோட்டை டி. சிங்காரவேலு என்ற பெயரில் எழுதி வந்த திராவிட இயக்க எழுத்தாளர். என்.வி. நடராஜனின் "திராவிடன்' பத்திரிகையில் அப்பாவின் எழுத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அப்பாவிடமிருந்த புத்தகங்கள் எனக்கு வயதுக்கு மீறிய எண்ணங்களை வளர்த்தன. அப்பாவோடு சென்று பார்த்த பெரியார், அண்ணாவின் கூட்டங்கள் என்னுள் மிகுந்த பாதிப்பை அந்த வயதில் ஏற்படுத்தவே செய்தன. அந்த சிறு வயதிலேயே "அறிவு' என்னும் கையெழுத்துப் பிரதி நடத்தும் அளவிற்கு இலக்கியத் தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. தொடர்ந்த வாசிப்பு என்னுள் நிறை- குறைகளைப் பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தின.

இப்படியான சூழலில் கல்லூரிப் படிப்பு முடிந்து பெங்களூரில் பணியில் சேர்ந்தேன். அப்போதுதான் நகுலன் முதலானோரை வாசிக்கத் தொடங்கினேன். சா. கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்' மிகவும் கவர்ந்தது. மனநுட்பம் பற்றிய விழிப்புணர் வையும் மலர்ச்சியையும் நூலகம்தான் எனக்குக் கற்றுத் தந்தது. தத்துவப் புத்தகங்களைக் காட்டிலும் இலக்கியம் மூலமாகவே நான் அரசியலைக் கற்றுக்கொண்டேன். இன்குலாப், தணிகைச் செல்வன் போன்றவர்களின் கவிதைகள் புதிய அரசியலை எனக்குச் சுட்டிக்காட்டின. பெங்களூரிலிருந்து பார்த்த எனக்கு தமிழகத்தில் நடப்பதெல்லாம் சரியா என்ற கேள்வி பிறந்தது. அந்தக் கேள்வியின் விளைவு என்னைப் பொதுவுடைமை இயக்கத்தில் இன்றளவும் செயல்பட வைத்துள்ளது.''

தற்போது தமிழகம் அறிந்த பேச்சாளராக இருப்பினும் "கவிஞர்' என்றே அழைக்கப்படுகிறீர்கள். தங்கள் கவிதைகள் குறித்து...

""நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது வெளிவந்த ஆண்டுமலரில் எனது முதல்கவிதை பிரசுரமானது. அதன்பின்னர் கவிதைகள் எழுதுவதில் தீவிரம் மிகுந்ததே தவிர குறையவில்லை. திருச்சியில் முகிலனுடன் இணைந்து "சோலைக் குயில்கள்' என்ற பெயரில் கவிதைக்களம் ஒன்றை அமைத்தோம். பழக்கடைப் பூங்காவில் கூட்டம் நடைபெறும். கோ. கேசவன், ஆல்பர்ட் முதலியவர்கள் கவிதை வாசித்துள்ளார்கள். மாதம் முழுதும் வாசிக்கப்பட்ட கவிதைகளைப் புத்தகமாகப் போடுவோம். ஆசிரியர் போராட்டம் நடைபெற்றபோது "சோலைக்குயி'லில் வெளியான,

"பஞ்சாயத்து தலைவருக்கு காய் வாங்கணும் - அவர்

பொஞ்சாதிக்கு சமயத்தில பேன் பார்க்கணும்

சேர்மனோட பையனுக்கு மதிப்பெண் போடணும்- நாங்க

சலாம் சொல்லி, சலாம் சொல்லி

காலந்தள்ளணும்'

என்ற என்னுடைய கவிதை, அந்தப் போராட்டம் சம்பந்தப்பட்ட எல்லா மேடைகளிலும் மேற்கோளாகப் பேசப்பட்டது.

"கீழத்தஞ்சை சேரிகளே - நீங்கள்

கிழக்கே ஆனது எப்போது?'

என்ற கவிதை இலக்கிய உலகின் நண்பர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட கவிதை.

பெண்ணைப் பற்றிய ஒரு கவிதையில் பெண்ணினத்தின்மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடாய்,

"ஓ பெண்ணே!

நீ அரைத்து வைக்கும் மாவுகூட

அடுத்தநாள் பொங்கிவிடுகிறது

இத்தனை தலைமுறை கடந்தும்

நீ பொங்காதிருத்தல் என்ன நியாயம்?'

என்ற கவிதையும் பல மாதர்சங்க மேடைகளில் பேசப்பட்டது. அழகியலுக்கு அப்பாற்பட்டு சமூகம் குறித்த உணர்வுகளை என் கவிதைகளில் பெரும்பாலானவை பிரதிபலித்துள்ளன.''

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு தங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

""திருச்சி மாவட்டத்தில் த.மு.எ.ச. ஆரம்பிக்கப்பட்டபோதே நான் தலைவராகவும் முகில் மாவட்டச் செயலாளராகவும் பணி புரிந்தோம். என்னை வளர்த்ததும், நான் வளர்ந்ததும் த.மு.எ.ச.வினால்தான். பின்னர் நாகப்பட்டினத்தில் எனக்கு வங்கியில் வேலை கிடைத்ததும், மாலியுடன் இணைந்து நாகை த.மு.எ.ச.வைத் தொடங்கினோம். இங்கு வந்த பின்புதான் கவிஞனாக மட்டும் இருந்த நான் பேச்சாளன் ஆனேன். தொடர்ந்து எல்லா ஊர்களிலும் நடைபெற்ற "கலை இரவு' நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்படிப் போனதில் விருதுநகர் கலை, இலக்கிய இரவு என்னை மிளிர வைத்தது. சாத்தூரில் "சாதிகளே வெளியேறு' என்ற அந்தக் கலை இரவில் "காற்றுக்கென்ன வேலி' என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகவே கருதுகிறேன். அன்று தொடங்கிய கலை இரவுப் பயணம் இன்னும் தொடர்ந்தபடியே இருப்பதை எனக்குக் கிடைத்த வெகுமதியாகவே கருதுகிறேன்.''

எழுத்திலிருந்து (கவிதையிலிருந்து) பேச்சுக்கு மாறியதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?

""நான் முற்றாக எழுத்தைத் தவிர்த்துவிட்டுப் பேச்சுக்கு சென்று விடவில்லை. எழுத்தின் பதிவு காலங்கடந்தது. ஆனால் வாசக விழுக்காடு மிகக்குறைவாக உள்ள நமது நாட்டில், எழுதுவதைவிட பேச்சானது நிறைய நபர்களைச் சென்றடையும் என்பதும் ஒரு காரணம். அதை உணர்ந்தே பெரியார், அண்ணா, ஜீவா, பி. ராமமூர்த்தி போன்றவர்கள் எழுதுவதுடன் பேசவும் செய்தனர்.''

என்னதான் த.மு.எ.ச. பற்றி நீங்கள் பேசினாலும் ஒரு கட்சி சார்பான நோக்கில்தானே பொதுமக்கள் அதைப் பார்க்கிறார்கள்?

""தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமானாலும் சரி; கலை, இலக்கியப் பெருமன்றமானாலும் சரி- மக்கள்மீது சாதி கடந்த, மதம் கடந்த, கட்சி கடந்த அக்கறையோடுதான் செயல்பட்டு வருகின்றன.

எங்களது கலை, இலக்கிய இரவுகளில் ஞாநி, நம்மாழ்வார், தங்கர் பச்சான், சீமான், தொ. பரமசிவம் போன்றவர்களெல்லாம் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் எல்லாம் எங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லர். ஏன்... குற்றாலீசுவரனைக்கூட அழைத்துப் பேச வைத்துள் ளோம். அவர் எங்கள் இயக்க உறுப்பினரா என்ன? கலை, இலக்கிய இரவுகள் வந்த பின்புதான் நமது தமிழகத்தில் இலக்கியத்தில், உரைவீச்சில், நாட்டுப்புற இசை பற்றிய புரிந்துணர்வில், ஓவியம் பற்றிய ரசனை உணர்வில்- ஒரு மிகப்பெரிய ஆர்வமும் ரசனை மேம்பாடும் தேடுதலும் கிடைத்துள்ளது என்பதை உணர்வாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். நீங்கள் சொல்லும் கருத்து அப்படிப் பேசுபவ ரின் கருத்தே தவிர, அது பொதுக் கருத்தாக இருக்க முடியாது.''

உங்கள் இலக்கியப் பயணத்தில் பட்டிமன்றங்கள் முக்கிய பங்க ளித்துள்ளன. அந்தப் பட்டிமன்றங்கள் வெறும் பாட்டுமன்றங்க ளாக இருப்பது தேவைதானா?

""பட்டிமன்றங்கள் வெறும் துணுக்குத் தோரணங்களாக - நீங்கள் சொல்வதுபோல் பாட்டுமன்றங்களாக இருக்கின்றன என்கிற ஒரு குற்றச்சாட்டு இருக்கவே செய்கின்றது. ஒரு பொழுதுபோக்குபோல பட்டிமன்றங்கள் தோன்றினாலும், அதன் பணியை அது சிறப்பா கவே செய்து வருகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் இப்போது இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆன்மிகம் இப்போது இல்லை. இதுபோன்ற சரிவுகள் வரும்போது வடிவங்கள் மீது மட்டும் வருத்தப்பட்டுப் பயனில்லை. அந்த வடிவத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். மற்றைய துறைகளைக் காட்டிலும் இலக்கிய உலகில் பட்டிமன்றம் போன்ற வடிவங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு.''

தங்களின் "நடந்தாய் வாழி காவேரி' தொகுப்பு பற்றிச் சொல்லுங்களேன்?

""திருச்சியில் இரண்டாயிரமாவது ஆண்டு பிறக்கப் போவதை பலரும் பலவிதமாகக் கொண்டாட நினைத்திருந்த அந்த காலகட்டத்தில், எங்களுக்கு ஏற்பட்ட யோசனையின் வெளிப்பாடே அந்தத் தொகுப்பு. 1900 முதல் 2000 வரையிலான இந்த நூறு வருடங் களில் திருச்சியின் வரலாறு என்ன... வளர்ச்சி என்ன என்பதைத் தொகுப்பாக வெளியிட எண்ணினோம். பைம்பொழில் மீரான், திருக்குறள் முருகானந்தம், இ.மா. சரவணன், நான் ஆகிய நால்வரும் சேர்ந்து "நடந்தாய் வாழி காவேரி' தொகுப்பை வெளியிட்டோம்.

தமிழ்நாட்டில் பெரியாரின் முதல் சிலையை அவரே திறந்து வைத்த நிகழ்வு, கருப்புத் துண்டு அணிந்த காமராஜரின் புகைப் படம், மலைக்கோட்டையின் பழைய எஞ்ஜினியரிங் ஸ்கெட்ச் படம், எதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம் ஆகியோரின் நாடகங்கள் நடந்த தேவர் ஹால் பற்றிய செய்திகள், நத்தர்ஷா பழம்பள்ளி வாசல் பற்றிய செய்திகள் என திருச்சி பற்றிய முழுமையான நூறாண்டு தகவல் களஞ்சியமாகவே அது வெளி வந்தது. எழுத்தாளர் சுஜாதா தொகுப்பைப் பார்த்துவிட்டுப் பாராட் டிக் கடிதம் எழுதினார். அதுபோன்ற தொகுப்புகள் ஒவ்வொரு மாவட்டந்தோறும் வருமானால், வருங்கால சமுதாயத்திற்குத் தமிழகம் பற்றிய தனியான வரலாற்று நூல் தேவையில்லை என நண்பர்கள் பாராட்டியது இன்னும் நெஞ்சில் பசுமையாக உள்ளது.''

தமிழ் இலக்கிய உலகில் மலிந்து கிடக்கும் குழு மனப்பான்மை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

""குழு மனப்பான்மை எனும் அசிங்கமான சூழல், தற்போதைய தமிழ் இலக்கிய உலகில் அளவுக்கதிகமாகவே காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் போன்ற குரோதம், பழி வாங்குதல், ஒழித்துக் கட்டுதல் போன்றவை சிறுபத்திரிகைகளில் நடக்கின்றன. அளவுக்கதிகமான குழு மனப்பான்மையோடுதான் இப்போது சிறு பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. ஒரு படைப்பைத் தனது ஆளாய் இருந்தால் பாராட்டுவதும், அவ்வாறு இல்லாத நபரின் படைப்பை கண்டுகொள்ளாமல் விடுவதும் இலக்கிய அவலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் என்று இயங்குகிற பலவற்றில் அரசியலே இல்லை. ஆனால் இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிற அந்த அமைப்புகளில் ஏகப்பட்ட அரசியல்.''

பெண் கவிஞர்கள் அளவுக்கதிகமாக உடல்மொழி பற்றித் தங்கள் கவிதைகளில் பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத் தாங்கள் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்?

""நீண்டகாலமாக அடக்கப்பட்டு வந்த ஒரு விஷயம், வெடித்துப் பீறிடும்போது இதுபோன்ற ஒரு அதீத வேகம் ஆரம்பத்தில் இருக்கவே செய்யும். கொஞ்சகாலம் போனால் சரியாகிவிடும். ஒரு ஆண் எங்களது உடலை வர்ணித்து எழுதுகிறபோது, ஒரு பெண் ஏன் தன்னை- தனது அங்கங்களைக் குறித்து எழுதக்கூடாது என்பது கேள்வியாக பெண் கவிஞர்கள் தரப்பிலிருந்து வருகிறது. இந்த ஆணாதிக்க எதிர்ப்புக் குரல் சிலரிடமிருந்து அதீதமாகவே ஒலிக் கிறது. இதுவும் தலித் கவிஞர்களைப் போன்ற- கவிதைகளைப் போன்ற ஒரு ஆக்ரோஷ வெளிப்பாடுதான். ஆனாலும் சில பெண் கவிஞர்கள் படைப்பைத் தாண்டி இவர்கள் மேடைகளிலும், பொது இடங்களிலும் நடந்துகொள்கிற விஷயங்கள் முகச்சுளிப்பைத் தருகி றது. இதுவெல்லாம் அற்ப அரசியல். அடுத்தவர்களின் கவனத்தைப் பெற செய்யப்படும் மலிவுச் செயல் என்பதே என் கருத்து.''

தமிழகத்தில் கவிஞர்கள் என்றால் திரைப்பாடல் எழுதுபவர் என்பதுபோல ஒரு பார்வையும்; அம்மி கொத்த சிற்பி எதற்கு? கவிஞன் கவிஞனாகவே இருக்க வேண்டியவன் என ஒரு பார்வையும் உள்ளதே!

""திரைப் பாடலாசிரியருக்கு மட்டும் இது பொருந்தாது. மொத்த தமிழகத்துக்குமே உள்ள நோய் இது. இங்கு கேட்கப்படும் எல்லா கேள்விகளுமே புகழ் வாய்ந்தவனிடம் மட்டும்தான் கேட்கப் படுகின்றன. அந்தந்த துறைசார்ந்தவனிடம் கேட்கும் மனோபாவம் வந்தால்தான் நாம் விளங்க முடியும். திரைப்பாடல் ஜனரஞ்சக மதிப்பையும், பணம் தரும் தொழிலாகவும் இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை. ஆனால் திரைப்பாடல் என்ற வடிவம் எந்தத் தவறும் செய்யவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்த "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' பாடலை ஏர் நடத்தும் பாமரனும் கேட்க முடிகிறது என்றால் அந்த வடிவம் நல்ல வடிவம்தானே!

சிற்பிகள் அம்மி கொத்துவதில்லை என்று வைத்துக்கொண்டால் வீடு முழுக்க சிற்பம்தான் இருக்கும். அம்மி வேண்டாமா? சிற்பத்துக்கென்று ஒரு பயன்பாடு உண்டு; அம்மிக்கென்று ஒரு பயன்பாடு உண்டு. அதனதன் தேவை இருப்பதனால்தான் சமூகத்தில் இடம்பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அம்மியும் தேவை; சிற்பமும் தேவை என்பதை இலக்கியவாதிகள் உணருதல் அவசியம்.''

வட்டார இலக்கியம் பரவலான வாசிப்புக்கும் கவனத்துக்கும் உள்ளாகாது என்ற கருத்து தங்களுக்கு ஏற்புடையதா?

""தன் மண்சார்ந்த விஷயங்களை- தனது வட்டார மொழியில் ஒருவர் எழுதும்போது, அதை வாசிக்கும் அந்த மண்ணின் வாசகனுக்கு மட்டுமே அந்த முழுமை கிடைக்கும். நிலத்தில் உள்ள ஒரு செடியை வேறோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி நுகர்ந்து பார்ப்பது போன்ற சுகம் அந்த மண்ணுக்குரிய வாசகனுக்கு மட்டுமே அதிகம் சாத்தியம். பரவலான வாசிப்பு தளத்தில் வாசகன் அந்த வட்டார மொழி புரியாமல் சற்று தடுமாறுவான் என்பதே உண்மை. வட்டார இலக்கியம் படைப்பவர், அந்த மக்களின் பேச்சு வழக்கை வட்டார மொழியிலும், தனது பொதுக்கருத்தைப் பொதுமொழி யிலும் கூறினால், இந்த இடைவெளி குறையும். வட்டார இலக்கியம் பரவலான வாசிப்பு பெறும். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கு.ப.ரா., கி. ராஜநாராயணன் போன்ற ஒருசிலரின் எழுத்துகள் கண்களைக் கலங்க வைத்து நெஞ்சை கனக்க வைக்கும் படைப்புகளாகவே உள்ளன.''

தமிழ் செம்மொழித் தகுதி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் மொழியின் நிலை பற்றித் தங்களின் கருத்து...

""தாய்மொழிக் கல்வி அவசியமென்பதை மேடைதோறும் எங்கள் த.மு.எ.ச. சொல்லி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் படி என்றால் மொழிவெறி என்கிறார்கள். ஆங்கிலத்தில் படி என்பதை தேசபக்தி என்கிறார்கள். ஆங்கிலம் என்கிற அந்த மொழியைக் கற்பதிலேயே பாதிக்காலம் கழிகிறது. பெரும்பான்மை சமூகம் படித்துவிட்டால் சங்கடம் என்பதால், இவ்வாறு ஒரு நிலைப் பாட்டை எடுக்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. தாய் மொழிக்கு வாழ்த்துச் சொல்லும் இன்னொரு அவலம் நடைபெறு வதும் தமிழகத்தில்தான். வேறு எந்த மொழிக்காரனும் எந்த மாநிலத்துக்காரனும் மொழியை வாழ்த்துவதில்லை. ஏனென்றால் அவன் தன்னையும் தன் மொழியையும் பிரித்துப் பார்ப்பதில்லை. நாம் மட்டும்தான் நம் மொழியை சடங்காக்கி சட்டத்துக்குள் போட்டுத் தொங்க விட்டுவிட்டோம். இந்த அவலம் மாறவேண்டும்.''

அப்படியென்றால் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது எது?

""மொழி ஒரு கருவி. அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்கிற ஒரு கருத்தும்; கலப்படம் இல்லாத தூய சொற்களைக் கொண்டு தான் தமிழை எழுத வேண்டும் என்கிற- மொழித் தூய்மை வாதம் என்கிற மற்றொரு கருத்தும்தான் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடைக்கற்கள். எழுத்துச் சீர்திருத்தமும், புதிய சொற்கள் கண்டறியப் படுவதும், அளவான விகிதத்தில் பிறமொழிப் பெயர்ச்சொற்களை அனுமதிப்பதும், அரசியல் கலப்பற்ற ஒரு நிலைப்பாடுமே தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும்.''

மொழி பற்றிய சிக்கல்களிலிருந்து மீளும் அதேசமயம், தமிழிசை பற்றிய தாக்கங்கள் நம்மிடையே குறைவாக இருக்கக் காரணம் என்ன?

""தமிழ் இலக்கியம்போல, நம்முடைய கலைகள் புத்துயிர்ப்பு பெறுகிறதா என்ற சந்தேகம் எனக்கு நிறைய உண்டு. தமிழிசை என்கி றோம். எது தமிழிசை? தமிழில் பாடினால் தமிழிசையென்றால் திரைப்பாடலும் தமிழிசைதான். கர்நாடக சங்கீதம் தமிழில் பாடப் பெற்றால் அது தமிழிசையாகுமா? வாத்தியத்துக்கு மொழி உண்டா? வாய்ப்பாட்டுதான் தமிழிசையா? அது குறித்த விவாதம், புரிதல் வேண்டும். இதுபற்றிய ஒரு நுண்ணிய பயணத்தை அறிவுலகம் மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் தாங்கள் பயன்படுத்தும் அத்தனை தோல் கருவிகளைப் பற்றியும் பயன்பாடு பற்றியும் டாக்குமெண்டரி படங்கள் எடுத்துள்ளார்கள். நம் தமிழகத்தில், ரவிசுப்பிரமணியம் மட்டுமே நாதசுரம் பற்றிய டாக்குமெண்டரி எடுத்துள்ளார் என்ற மகிழ்ச்சியோடு மட்டும் நாம் இருக்க வேண்டிய சூழல். "பஞ்சமுகம்' என்ற பழம்பெரும் வாத்தியம் சிதம்பரம் கோவிலிலும், திருத்துறைப்பூண்டி கோவிலிலும் இருக்கிறது. அதை இசைக்க இப்போது தமிழகத்தில் ஆட்கள் இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. ஓவியமும் சிற்பமும் இன்னும் நம்முடைய வாழ்க்கைக்குள் வந்துசேரவில்லை. சிறப்பான ஓவியர்கள் பலர் இருந்தும் மக்களிலிருந்து அவர்கள் விலகி நிற்கவேண்டிய அளவுக்கு ஓவியம் பொதுமையாக்கப் படவில்லை. நம்முடைய அதிகபட்ச சிற்ப ரசனை பிள்ளையார் சிலையோடு முடிந்துவிட்டது என்ற பரிதாப நிலையும் உள்ளது. அதுபற்றிய விழிப்புணர்வும் ரசனையும் வளர சமுதாய நிலையின் உயர்வோடு, அரசாங்கத்தின் கவனிப்பும் தனிமனித ரசனை உயர வேண்டுவதும் அவசியம்.''

அமைதிப் பூங்கா என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், முன் எப்போதும் இல்லாத ஒரு பதட்டம் (சென்சிட்டிவ்) மக்களிடம் நிலவுவதன் காரணம் என்ன?

""எதுபற்றிப் பேசினாலும் இப்போது பரபரப்பு அதிகமாகி விடுகிறது. ராமர் என்று சொல்லிவிட்டால் போதும்; ஒரே கூச்சல், குழப்பம். காரணம் துதிபாடிகள் அதிகமாகிவிட்டனர். "தொட்டால் தீட்டு என்கிறீர்களே! தொட்டவுடன் தீட்டுப்படும் அளவுக்கு உங்கள் புனிதம் என்ன அவ்வளவு பலவீனமானதா?' என்று விவேகானந்தர் கேள்வி எழுப்பினார். சமூகத்துக்கும் அதுதான். ஒரு சமூகம் புனிதமான சமூகம் என்றால், அது பலமிக்கதாக இருக்க வேண்டும். இப்படி பலவீனமாக, தொட்டதற்கெல்லாம் பதட்டம் அடைகிற சமூகமாய் இருக்கக்கூடாது. பலவீனமான விஷயங்களை ஒரு சமூகம் புனிதம் என்று ஏற்று நடந்தால், இப்படிப்பட்ட பதட்டத்தில்தான் அந்த சமூகம் இருக்க முடியும்.''

இசங்கள் மற்றும் தற்காலத் தமிழ் இலக்கியச் சூழல் பற்றித் தங்கள் கருத்து என்ன?

""எல்லா இசங்களுமே வாழ்க்கை நெருக்கடியில் தோன்றியவை தான். வாழ்க்கையின் வாசல் போன்றவை அவை. அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதுதான். தற்காலத் தமிழ் இலக்கியச் சூழல் தன்னம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. புதுமையான படைப்புகள், துறைசார்ந்த படைப்புகள், இதுவரை பார்க்கப்படாத வாழ்க்கை சார்ந்த படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மண் வனையும் கைகளைப்போல் பிசுபிசுப்போடு தலித்திய, அருந்ததிய வாழ்க்கை இலக்கியங்கள் வடித்தெடுக்கப்படுகின்றன. பெண்களின் மன உலகம் பெரிய அளவிற்குப் பேசப்படுகிறது. புதுமைப்பித்தனைப்போல, விந்தனைப்போல அநேகர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. முன்னெப்போதைக் காட்டிலும் எனக்குத் தமிழ் இலக்கியச்சூழல் நம்பிக்கை தரக்கூடியதாகவே காணப்படுகிறது.''

தமிழ் எழுத்துலகில் தங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர் யார்?

""இந்தக் கேள்விக்கு மிகுந்த நேர்மையோடும் சாய்வு இல்லாத தன்மையோடும் பதில் சொல்வது என் கடமை. மிகுந்த மேதைமையும் படிப்பாற்றலும் ஆழ்ந்த ஆய்வும் கொண்டு எழுதுகிற பேராசிரியர் அருணன் என்னை மிகவும் கவர்ந்துள்ள எழுத்தாளர். "தத்துவ மரபுகள்' என்னும் இவரது நூல், ஆழ்ந்த ஆய்வுக்குட்பட்ட தத்துவங்கள் குறித்த விசாரணை நூல் ஆகும். புத்தர் குறித்தும் ஓஷோவின் போக்குகளைச் சாடியும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர். அரசியல் ஆளுமைகளாய் வளர்ந்தது எப்படி என்பதை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். சிறியதானாலும் "ஸ்ரீராமன் ஸ்ரீலங்கா சென்றதில்லை' என்ற நூலில் ராமர் பாலத்தின் கற்பனைக் கதைகளை அழகாகச் சாடியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் என் மனங்கவர்ந்த எழுத்தாளராக நான் காட்டக் கடமைப்பட்டிருப்பது பேராசிரியர் அருணன் அவர்களைத்தான்.''
நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக