03/02/2011

சிவப்பிரகாச சுவாமிகள் பாடல்களில் ''பெரியநாயகியம்மை'' - கி. சிவகுமார்

சிற்றிலக்கிய மூவேந்தர்களாகப் போற்றப்பெறுபவர்கள் குமரகுருபர சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், சிவஞான முனிவர் ஆகிய மூவருமாவர். அவர்களுள் ''கற்பனைக் களஞ்சியம்'', ''கவிசார்வ பௌமர்'' எனத் தமிழ்மொழி, வடமொழி அறிஞர்களால் ஒருங்கே போற்றப்பெறுபவர் சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார். இவர் திருக்கயிலாய பரம்பரை மயிலம் - பொம்மபுர ஆதீனத்தின் முதன்மை அருட்சீடர் ஆவார். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய்மை நலம் சான்ற துறவியாகிய இவர் படைத்த 32 நூல்களுள் இரண்டு திருமுதுகுன்றம் பெரியநாயகியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்ட புகழ்நூல்களாகும். அவற்றுள் பெரியநாயகியம்மை கலித்துறை என்பது கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆன 19 பாடல்களையுடையது. பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடில் ஆசிரிய விருத்தம் என்னும் மற்றொரு நூல் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆன 10 பாடல்களைக் கொண்டது.

இந்நூல்களுள் காணலாகும் பல்வேறு கூறுகளுள் பெண்ணியச் சிந்தனைகளும், நகைச்சுவை நயங்களும் ஆகிய இரு கூறுகள் மட்டுமே இக்கட்டுரையுள் ஆராயப்பெறுகின்றன.

பெண்ணியச் சிந்தனைகள்:-

சிவப்பிரகாசர், தம் வாழ்வில் பெண்ணைத் தவிர்த்துத் துறவியாக வாழ்ந்தவர் எனினும், பொதுநிலையில் பெண்மையை இகழாதவர். இறைமையில் இறைவனோடு இறைவியை ஒருங்கு போற்றியவர். சமுதாய மேம்பாட்டிற்குப் பெண்டிரின் கல்வியும் பண்பும் சார்ந்த வளர்ச்சி இன்றியமையாதது என உணர்ந்து, பிறர்க்கும் தம் நூல்களின் வழி உணர்த்தியவர். அவ்வகையில், விருத்தாசலம் என்று இன்று வழங்கப்பெறும் திருமுதுகுன்றத்து இறைவியைப் போற்றும் பாடல்களில், பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் பெண்ணின் நல்லாளாக இறைவியைக் குறித்துத் துதிக்கின்றார்.

தற்கொண்டான் பேணல்:-

உலகில் கணவனின் பதவியாலும் நற்செயல்களாலும் பெருமை பெறும் மனைவியரே மிகுதி. தற்போதைய 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மனைவியரால் பெருமைபெறும் கணவன்மார் உளரெனும், 17-ஆம் நூற்றாண்டில் இவ்வாறான வளர்ச்சிக்கெல்லாம் ஒரு முன்னோடியாக, இறைவியைச் சிவப்பிரகாசர் துதிக்கும் பகுதி அமைகின்றது.

சிவபெருமான் பிச்சையேற்றுத் திரிகிறார்; அம்பிகை இருநாழி நெல்கொண்டு உலகுக்கே படியளக்கிறாள். எனவே, இங்குக் கணவனால் மனைவிக்குப் பெருமையில்லை; மனைவியால் கணவனுக்குப் பெருமை ஏற்படுகின்றது (பெரியநாயகியம்மை கலித்துறை - 1) என்கிறார் சிவப்பிரகாசர். சிவபெருமானின் பிட்சாடனக் கோலத்தையும், காஞ்சியில் நெல்கொண்டு படியளக்கும் காமாட்சியையும், காசியில் அன்னபூரணியாய்த் திகழும் விசாலாட்சியையும் கொண்டு கூறப்பட்ட கருத்து இது.

வளத்தக்காள்:-

''தற்கொண்டான் வளர்த்தக்காள் வாழ்க்கைத் துணை'' (குறள் - 51) என்னும் குறட்பாவிற்குத் ''தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கையை உடையாள் மனையறத்திறகுத் தக்க துணையாவாள்'' எனப் பரிமேலழகர் உரை வரைகின்றார்.

உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு இறைவன் அளித்ததோ இருநாழி நெல் மட்டுமே. அதனைக் கொண்டே மிகச் சாமர்த்தியமாக இறைவி உலகைப் புரக்கின்றாள். இவ்வாறான ''வினைமாட்சியால் நீ மனைமாட்சி உடையவளாய்த் திகழ்கின்றாய்'' (பெ.க.17) என்கிறார் சிவப்பிரகாசர். ''ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம்செய்யும் அன்னை'' (57) என்பார் அபிராமிப்பட்டர்.

புகழ் வருவாயை ஈட்டியளித்த இறைவி, இறைவனின் பொருள் வருவாய்க்கேற்ப உலகமாகிய குடும்பத்€யும் உயிர்களாகிய குழந்தைகளையும் பேணும் பெருந்தகைமையை இதனால் அறியலாம்.

பிற தெய்வம் தொழாமை:-

உலக உயிர்கள் மட்டுமின்றி, விண்ணுலகில் உள்ள பிரமன், திருமால் முதலிய தெய்வங்களும் சிவனும் சக்தியுமாகிய பரம்பொருளுக்குக் குழந்தைகளே ஆவர். எனவே, பிற மகளிர்போல் தம் கணவனுக்கு எவ்வித நலிவும் ஏற்படாமைப் பொருட்டு, உயர்ந்ததொரு தெய்வத்தைத் துதிக்கும் நிலை கலைமகளுக்கும் திருமகளுக்கும் ஏற்பட்டாலும் கூட, பெரியநாயகிக்கு அந்நிலை ஏற்படாது. ஏனெனில் ''சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை'' என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வம் தொழாமல் கொழுநனைத் தொழும் பேறுடையாய் (பெ.க. 9) எனப் போற்றுகிறார் சிவப்பிரகாசர்.

உரிமையில் எல்லை மீறாமை:-

கணவன், மனைவியைத் தனக்குச் சமமாக நடத்தும்பொழுது அவ்வுரிமை கருதிக் கணவனை அடிமையாக்கிவிடாமல் மனைவி நடந்து கொள்ள வேண்டும். சிவபெருமானின் மனைவியர் இருவருள் உமையம்மை அவர்தம் இடப்பாகத்திலும், கங்கை அவர்தம் சடையிலும் இடம் பெற்றுள்ளனர். இக்காட்சி கண்ட சிவப்பிரகாசர், ''வேனிற்காலத்தில் மரத்தின் உச்சியில் இருப்பவனைவிட மரநிழலில் இருப்பவனே நிழற் பயன் பெறுபவனாவான். அவ்வாறே இறைவியாகிய நீ உரிமையை உரிய அளவில் பயன்கொண்டு பாகம்பிரியாளாய் உள்ளாய்'' (பெ.க.6) எனக் குறிப்பிடுகின்றார். நன்மை நோக்காது, மனைவி சொல்லே மந்திரம் எனத் திரிவது, ''பெண்வழிச்சேறல்'' என நீதிநூல்களில் கடியப்படுகின்றது. அந்நிலைக்கு இறைவனை ஆளாக்காத இறைவியின் இயல்பு போற்றற்குரியதாகும்.

கணவனைத் திருத்துதல்:-

கணவனின் தொழில், வருமானம், நண்பர்கள் குறித்து மனைவி ஓரளவேனும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். தகாத நட்பு போன்றவற்றிலிருந்து அன்புடன் அறிவுரைகூறித் திருத்த முற்படுதலும் மனைவியின் கடமையாகும்.

''சிவன் திறந்த மேனியுடன், பாம்பை இடுப்பில் அணிந்து, கபாலமாகிய பாத்திரத்தை ஏந்தி மகளிரிடம் சென்று இரக்கும் பிச்சைத் தொழிலை நீக்குமாறு இறைவியாகிய நீதான் அறிவுரை கூறித் திருத்த வேண்டும்'' (பெ.க.8) என முறையிடுகின்றார் சிவப்பிரகாசர். பிரமகபாலம் ஏந்துதலும், தாருகவனத்து முனிவர்தம் செருக்கடக்க அவர்தம் இல்லந்தோறும் பிட்சாடன வடிவுடன் சென்றிரந்ததுமாகிய சிவபெருமானின் செயல்களை ஒட்டி எழுந்த கருத்து இது.

பொறையுடைமை:-

திருக்குறளில் ''பிறனில் விழையாமை''யை அடுத்துப் ''பொறையுடைமை'' இடம்பெற்ற வைப்புமுறைக்கு, ''நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுத்தற் பொருட்டு'' இவ்வாறு வைக்கப்பட்டது என உரை காண்பார் பரிமேலழகர்.

''நீரானது மூன்று பிழை பொறுக்கும் தன்மைபோல் இயற்பகை மனைவியைப் பெறச்சென்ற இறைவனின் பெரும்பிழையைப் பொறுத்துக் கொண்டது மிக நன்று'' என்று போற்றுகின்றார் சிவப்பிரகாசர் (பெ.க.3)

''பொறுமை பெண்மைக்குப் பெருமை'' என்னும் நிலையில் நளாயினி கதைகளெல்லாம் இடம்பெற்ற நாடு இது. நவீனயுகப் பெண்டிர் பிறன்மனை விழையும் கணவரைக் கண்டித்தல் / தண்டித்தல் அன்றி மன்னித்தல் பொருந்தாதென்பர். ஆம், இன்றைய நிலையில் இவ்வாறான பொறுமை மகளிர்க்குத் தேவையில்லை.

இழுக்குடைச் செயலுக்கு இசையாமை:-

''சிறுத்தொண்ட நாயனாரைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று அவர் மகன் சீராளனைப் பெற்றோரைக் கொண்டே அரியச்செய்து, பிள்ளைக்கறி சமைக்கவைத்து உண்ணமுற்பட்டார் தூர்த்த வேதியனாய்ச் சென்ற நின்கணவர் சிவபிரான், நல்லவேளை! நீ இக்கொடுஞ் செயலுக்குத் துணை போகாதிருந்தாய்; இனிமேலும் இவ்வாறான செயலுக்குத் துணை போகாதே; அவர் செய்யவும் அனுமதிக்காதே'' என்கிறார் சிவப்பிரகாசர் (பெ.க.7. பெ.நெ.ஆ.வி. 9).

தன் கணவரின் / குடும்பத்தாரின் செயல்களால் சமுதாயத்திற்கு நன்மை விளையுமாறும் தீமை ஏற்படாதவாறும் பாதுகாத்தல் பெண்ணின் கடமையாகும்.

பிறமகளிர் நலம் பேணல்:-

கலைமகள் உறையும் வெண்டாமரையையும், திருமகள் உறையும் செந்தாமரையையும் சிவபெருமானின் கண்களுள் ஒன்றாகிய சந்திரன் வறுத்திக் குவியச் செய்தலால் வறுந்திய அவர்கள் இருவரும் இறைவியைச் சரண் அடைந்தனர். இறைவி அவ்விருவருக்கும் தம் இருகண்களிலும் இடமளித்தாள் (பெ.க.14). கணவன் கண்ணால் ஏற்பட்ட வறுத்தத்தைத் தன் கண்ணால் தீர்த்தாள் எனலாம்.

கா+மா+அட்சி - காமாட்சி; கா-கலைமகள்; மா-திருமகள்; அட்சி - கண்களையுடையவள் என்னும் பெயர் விளக்க முறையால் இவ்வாறு பாடப்பட்டதென்பார் இந்நூற்கு உரை வரைந்த பெரும்புலவர் ஆ. சிவலிங்கனார் (பக். 53).

பெண்மைக்குப் பெருமை சேர்த்தல்:-

''பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற'' (61)

என்னும் குறட்பாவிற்கு, ''அறிவறிந்த'' என்றதனால், ''மக்கள்'' என்னும் பெயர், ''பெண் ஒழித்து நின்றது'' எனவும்,

''ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்'' (69)

என்னும் குறட்பாவிற்கு, பெண்ணியல்பால் தானாக அறியாமையின் ''கேட்ட தாய்'' என்றார் எனவும் உரை வரைந்துள்ளார் பரிமேலழகர்.

நகைச்சுவை நயங்கள்:-

சிரிக்கத் தெரியாதவர்களுக்குப் பகலும் இரவுக்குச் சமம் என்பார் திருவள்ளுவர் (குறள் - 999). சிவபெருமானின் செயல்களை எடுத்துரைத்து, பெரியநாயகிக்கு யோசனை கூறுமுகமாய் நகைச்சுவை ததும்பச் சில பாடல்களைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.

பித்தனின் பேரறிவு:-

இறைவியின் திருவடி அன்பரின் இதயதாமரையில் பதிவது. அதனைத் திருமணச் சடங்கின்போது அம்மி மிதித்தல் தறுவாயில் அம்மிக்கல்லில் சிவன் எடுத்து வைக்கின்றார். மலரில் பதிவதைக் கல்லில் எடுத்துவைத்ததும் அல்லாமல் தம்மை மதியுடையன் (அறிவு, சந்திரன்) என்று வேறு கூறிக்கொள்கிறார். என்னே பைத்தியக்காரத்தனம் என்கிறார் சிவப்பிரகாசர் (பெ.க. 2). பித்தனாயினம் திருமணச் சடங்கு முறை தெரிந்துள்ளதே என எரல்எழுத்துப் போல்வதோர் விழுக்காடாகவும் இதனைக் கொள்ளலாம் என்பது உரையாளர் ஆ. சிவலிங்கனார் கருத்து (ப.22).

பெய்யுரை நம்பாதே!:-

தலையில் கங்கைப்பெண் இல்லை; வெறும் நீரே உள்ளது என்பார் சிவபெருமான். அவளின் கையைத் தாமரை என்பார்; கண்ணை மீன் என்பார், நீ நம்பாதே. ''நீராயின் நீர்அதனை எம்கையில் பெய்ய விடும்'' எனக் கேள். அப்போது குட்டு வெளிப்படும். இவ்வாறு யோசனை கூறுகின்றார் சிவப்பிரகாசர் (பெ.க.4).

நிறைவுரை:-

பெண்கள் வரவறிந்து செலவு செய்தல், கணவனின் நடத்தையில் அக்கறை கொள்ளல், தம்மாலான நற்பணிகளைப் புரிதல், உரிமையில் எல்லை மீறாமை போன்ற பல்வேறு இயல்புகளைப் பெற்றுத் திகழப் பெரியநாயகியம்மையை முன்னோடியாக்கிப் பல கருத்துக்களைச் சிவப்பிரகாசர் எடுத்துரைத்துள்ளார். இவை திருக்குறளை அடியொற்றியுள்ளமை ''வள்ளுவப் பிரகாசர்'' என்னும் பெயர் இவருக்குப் பொருந்துவதை உறுதிப்படுத்துவனவாகும். அணிநயம் செறிய அமைந்துள்ள நகைச்சுவைப் பகுதிகள், ''கற்பனைக் களஞ்சியம்'' என்னும் விருதுப்பெயர்க்கு அணி சேர்க்கின்றன.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக