14/02/2011

அ.கா. பெருமாள் - நேர்காணல்

பேராசிரியர் அ.கா. பெருமாள் நாட்டுப்புற வழக்காற்றியல் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தென்மாவட்டங்களில் பரவலாக கள ஆய்வு செய்தவர். நாட்டுப்புற இயல், வட்டார வரலாறு, கோயில்கள், ஓலை ஆவணங்கள், கதைப்பாடல்கள் குறித்து  38 நூல்கள் எழுதியுள்ளார். 14 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குறித்து இதுவரை பல புத்தகங்கள் வெளியாகியிருந்தாலும், 2004-ம் ஆண்டு இவர் எழுதி வெளியான `தென்குமரி கதை` தான் இன்று வரலாற்று ஆய்வாளர்களிடையேயும் தமிழறிஞர்களிடையேயும், அரசாலும் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்நூலுக்காகவும், 2003-ல் தென்னிந்திய தோல்பாவைக்கூத்து நூலுக்காகவும் தமிழக அரசால் பரிசும் விருதும் பெற்றவர். தெய்வங்கள் முளைக்கும் நிலம், கவிமணியின் இன்னொரு பக்கம், கோயில் சார்ந்த நாட்டார் கதைகள், முதலியார் ஆவணங்கள், தமிழ் இலக்கிய வரலாறு, சுண்ணாம்பு கேட்ட இசக்கி, ஆதிகேசவப்பெருமாள் ஆலயம், வேத சாட்சி தேவ சகாயம் பிள்ளை வரலாறு, காகங்களின் கதை, சனங்களின் சாமி கதைகள், நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி, கர்ப்பமாய் பெற்ற கன்னிகள், ஸ்ரீநாராயணகுரு வாழ்வும் வாக்கும் ஆகியன இவர் எழுதிய முக்கிய நூல்கள்.

பொதுவாக செய்திகளைத் திரட்ட புத்தகங்களை மட்டுமே நம்பும் வழக்கத்திலிருந்து வித்தியாசப்பட்டு கள ஆய்வுச் செய்திகள், வெளியாகாத ஆவணங்கள், கதைப்பாடல்கள் வழியும் தகவல்களைச் சேகரிப்பது இவரது ஆய்வு நெறிமுறை. இதற்காக இவர்கொண்ட பயணம் இப்போதும் தொடருகிறது.  முக்கியமாக தான் நேரில் பலமுறை பார்த்தபிறகுதான் நாட்டார் கலைகளைப்பற்றி எழுதுவது என்னும் வழக்கத்தைக்கொண்டவர் இவர்.

மருமக்கள் வழி மான்மியம், சடங்கில் கலைந்த கலைகள், சுசீந்திரம் கோயில், காலம் தோறும் தொன்மம், படிக்கக்கேட்ட கதைகள், ஆகிய நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக அ.கா. பெருமாள் உள்ளார். நாம் அவரிடம் நேர்காணல் கண்ட இரண்டு நாட்களிலும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நாட்டார் கலைகள் குறித்த சந்தேகங்களை, பலரும் தொலைபேசியில் இவரைத் தொடர்பு கொண்டு கேட்டு, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர் எழுதிய புத்தகங்களில் பெரும்பாலானவை பணியாற்றிய காலத்திலேயே வெளியானவை. இதற்காக கல்லூரி வேலை நேரத்தில் விடுமுறை எதுவும் எடுக்காமல் கல்லூரிப் பணி முடிந்தபின்னரும், விடுமுறை நாட்களிலும் அலைந்து அலைந்து தகவல்கள் சேகரித்துள்ளார். ராமச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து தமிழக அரசின் நிதியுதவியுடன் நாட்டார் நிகழ்த்து கலைக்களஞ்சியம் நூலை வெளியிட்டுள்ளார். `பதிவு செய்யப்படாத ஏராளமான விஷயங்கள் இந்த மண்ணில் புதைந்து கிடக்கிறது. முடிந்தவரை அவற்றை தமிழ்கூறும் உலகுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே என்னுடைய அவா!' என்கிறார் அ.கா.பெருமாள். 2006_ல்  ஓய்வு பெற்றபிறகு முழுநேர ஆராய்ச்சியாளராகச் செயல்படுகிறார். இதன்பிறகு இவர் வெளியிட்டவை 6 புத்தகங்கள். பகலில் கடுமையான வெயிலும் இரவில் கடுங்குளிருமாயிருந்த மார்கழிமாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து  மாலை வரை நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகே உள்ள மரங்கள், செடிகொடிகள் நிறைந்த அவரது வீடான `ரம்யா`விலும், அவரது வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில்  உள்ள சொத்தவிளை கடற்கரையிலுமாக நாம் கண்ட நேர்காணல் இது.

தீராநதி : உங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்..?

அ.கா. பெருமாள்: நாகர்கோவிலிலிருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள பறக்கை என்ற கிராமத்தில்தான் நான் பிறந்தேன்.  என் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருப்பது மணக்குடி கடல், பறக்கை கிராமத்தில் நிறையவே குளங்கள் உண்டு.  பரந்த வயல்வெளி, பெரிய தென்னந்தோப்புகள், தோட்டங்கள் என என்னுடைய கிராமம் ரம்மியமாக இருக்கும். இப்பவும் அப்படித்தான் இருக்கிறது. 1500 ஆண்டு பாரம்பரியமுடைய விஷ்ணு கோயிலுண்டு. இந்த அழகும் அமைதியும் இப்போதும் இங்கிருந்து போகவில்லை.

ஆரம்பகால பள்ளிப்படிப்பை இந்த ஊரில்தான் முடித்தேன்.  பறக்கை ஊரின் அருகே உள்ள சுசீந்திரம் ஊரில் உயர்நிலைப்படிப்பு,. சுசீந்திரம் ஊர் 1500 வருஷம் பாரம்பரியம் உடையது. இங்கே பிரமாண்டமான தாணுமாலயன் கோயில் இருக்கிறது. இந்த ஊர் நாஞ்சில் நாட்டிலேயே மலையாளக்கலாச்சாரத்தை முழுவதுமாக உட்கொண்டது. நான் இந்த ஊர் பள்ளியில் படித்த மூன்று ஆண்டுகளிலும் இந்த கோயிலில் பல மணி நேரங்களைச் செலவழித்திருக்கிறேன்.  அப்போது என் நண்பர்களாக இருந்த மலையாள பிராமணர்கள், நாயர்கள் வீடுகளுக்குப் போகும்போதும், கோயில் கலாச்சாரத்துடன் இணைந்திருந்த மலையாளச் செல்வாக்கைப் பார்த்தபோதும் ஏற்பட்ட தாக்கம் இப்போதும் என்னிடம் உள்ளது.
என் அப்பா மலையாள ஆசிரியராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் மலையாள ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் தற்காலிகப் பணியையும் செய்தவர். என் சிறுவயதில் என் தந்தையுடன் சுசீந்திரம் கோயில் விழா நிகழ்ச்சிகளில்  பார்த்த ஓட்டம் துள்ளல், ஹரிகதை, நங்கையார் கூத்து போன்றவை இன்றும் நினைவில் உள்ளன. இவை என் பிற்கால கலை ஊக்கத்துக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். என் குடும்பம் அடிப்படையில் நடுத்தரமானது, பட்டினி இல்லாமல்தான் என் ஆரம்பகால ஜீவிதம் நடந்திருக்கிறது. நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் அறிவியல் பாடங்களைத்தான் படித்தேன். பி.ஏ.யில்  நான் முதலில் சமூக இயலை எடுத்தேன்.  ஏதோ காரணத்தால் தொடரமுடியாமல் தமிழ் பாடத்திற்குப் போனேன்.  அப்போது முதலாண்டுத் தேர்வு கிடையாது. முதலாண்டு கடைசியில்தான் பி.ஏ. தமிழிற்குப்போனேன். அப்போது எனக்கு தமிழ்ப் பேராசிரியர்களாய் இருந்தவர்கள் எல்லோருமே ஜாம்பவான்கள்.  நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் போன்று  இலக்கணங்களை எடுத்தவர்கள் வெறுங்கையோடு வகுப்புக்கு வருவார்கள்.  சூத்திரங்களைச்சொல்லி, உரைகளையும் சொல்லி பாடம் நடத்திய விதம் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. இவை எல்லாம் இப்போது கனவு மாதிரி ஆகிவிட்டது. அந்த அஸ்திவாரம் மட்டும் என்னிடம் உறுதியாக உள்ளது.

பி.ஏ. கடைசி வருடத்தில் அப்பா இறந்தார்.  அம்மாவுக்கு கேன்சர். கூடப்பிறந்த இரண்டு அண்ணன், இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் என பெரிய குடும்பம். சாப்பாட்டுக்குத் தடுமாறிய காலம். ஸ்தம்பிச்சுப்போய் நின்னபோதுதான்  திருச்சி தினத்தந்தியில் வேலைக்குப்போனேன். ஒரு வகையில் தினத்தந்திதான் எனக்கு மொழியைக் கையாளும் வித்தை படித்த இடமாக இருந்தது என்று சொல்ல முடியும்.  அப்போது கையால் அச்சுக்கோத்து, கையால் புரூப் எடுத்த காலம். இரவு ஒரு மணிக்கு டெலி பிரிண்டரில் வரும் செய்தியை அச்சுக்கோத்து புரூப் பார்த்து பிரிண்டுக்குக் கொடுக்கிற அந்த வேகமான காலகட்டம் உண்மையிலேயே சிலிர்ப்பாதானிருந்துச்சி. தினத்தந்தியையைப்பற்றி சிலவிமர்சனம் இருந்தாலும் மொழிவிஷயத்துல உண்மையிலேயே அவங்க தரமாதான் இன்னிக்கும் இருக்காங்க.. தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் மொழி விஷயத்துல ரொம்ப கவனம் செலுத்தினார். முடிஞ்சவரை தமிழை சுத்தமா எழுதணும்கிறதுல வைராக்கியமா இருந்தார். மொழியில் பிழை போட்டால் அது பண்பாட்டுக்குறைச்சல் என்று சொல்வார். அந்தக் காலகட்டத்துல எல்லா பத்திரிகைகளும் சமஸ்கிருதம் கலந்துதான் எழுதுவாங்க. அப்ப தினமணியில் ஸர்வகலாசாலைன்னு எழுதுவாங்க. தினத்தந்திதான் பல்கலைக்கழகம்னு எழுதிச்சு. இரண்டோ, மூணோ மாசம் அங்கே  வேலை பார்த்தேன்.இந்த நிலையில அண்ணன் சுப்பிரமணியத்துக்கு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் வேலை கிடைத்தது. உடனே அவர் `தினத்தந்தி வேலையை விட்டுட்டு ஊருக்கு வா உன்னை படிக்க வைக்கிறேன்'னு சொன்னார். நான் ஊர் திரும்பினேன். எம்.ஏ. தமிழ் படிக்க முடிவு செய்து இங்கே  உள்ள கல்லூரிகளில் ஏறி இறங்கினா அட்மிஷன் முடிஞ்சிருந்தது. அப்போ கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட பாலக்காடு சித்தூர் விக்டோரியா கல்லூரியில் சீட் கிடைச்சது. வருஷத்தை வீணாக்கவேண்டாம்னுட்டு அங்கே போய்ச் சேர்ந்தேன். அப்போ தமிழ்த்துறைத்தலைவரா பேராசிரியர் ஜேசுதாசன் இருந்தார் (எழுத்தாளர் ஹெப்சிபாவின் கணவர்). அங்கே எம்.ஏ. தமிழ் துவங்கி ஒரு வருஷம்தான் ஆகியிருந்தது. அப்போது அங்கே தொல்காப்பியம் பாடம் நடத்த ஆசிரியர்  இல்லை. பேராசிரியர் பாடத்திட்டத்தையே மாற்றினார். தென்னிந்திய வரலாறு, இந்தியத்தத்துவம் என இரண்டு தாள்களைத் தொல்காப்பியத்துக்குப் பதிலாகச் சேர்த்தார். நான் படித்த கல்லூரியில் அப்போது வரலாறு, தத்துவம் இறையியல் பாடங்கள் இருந்தன.  அதனால் அந்தத்துறை ஆசிரியர்களே அந்தப் பாடங்களை ஆங்கிலம் வழி நடத்தினார்கள். சில நாட்கள் மலையாளத்தில்கூட வகுப்பெடுத்தார்கள். கோபிநாத மேனன் என்பவர் கேரள வரலாற்றை விரிவாகச் சொல்லித்தந்தார். ஆனால் கடைசியில் தமிழில்தான் தேர்வு எழுதினேன், மிகுந்த சிபாரிசின் பேரில்! நான் எம்.ஏ. முடித்தபிறகு சுயமாக தொல்காப்பியம் படிச்சேன்.

நான் பாலக்காட்டுல படிக்கிறப்போ மலையாளிகள்சுமுகமாத்தான் பழகினார்கள். தமிழ்மொழியையோ தமிழையோ எந்தச் சமயத்திலும் இழிவாகவோ, கிண்டலாவோ பேசியதில்லை. வடகேரளக்கிராமத்தில் இப்போதும் அந்தப் பண்பு உண்டு.  அப்போது பேராசிரியர் ஜேசுதாசன் பாடம் நடத்தியமுறை வித்தியாசமானது. மற்ற தமிழ்ப் பேராசிரியர்களிடமிருந்து அவர் வேறுபட்டதே அவரது ஆங்கிலப்புலமைக்குத்தான்.

அப்போது எங்களுக்கு பாடத்திட்டத்தில் இலக்கிய விமர்சனம் தனித்தாளாக இருந்தது.  தமிழக பாடத்திட்டத்தில் அப்போது  வேறு பல பாடங்களுடன் இலக்கிய விமர்சனம் ஒன்றாக இருந்தது.

பேராசிரியர் வகுப்புக்கு வரும்போதே ஐ.எ. ரிச்சர்ஸ், ஆபர்கிராம்பி, ரெனிவல்லாக் என பெரிய ஆட்களோடுதான் வருவார். Principle of Lieratury Criticism,Theory of Litereature என்ற சொற்களைப் பிரித்து வைத்துக்கொண்டு  ஆங்கிலம் & தமிழ் எனக்கலந்து பாடம் நடத்துவார். உதாரணத்துக்கு ஆண்டாள், கம்பன் என பாடல்களைச் சொல்வார்.

வகுப்பிலேயே சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் கதைகளைப் படித்துக்காட்டி விமர்சிப்பார். அந்தக் காலத்தில் (1970&72) தமிழகக்  கல்லூரிகளில் விமர்சனம் என்றால் மு.வ.வும்., அ.ச.ஞா.வும் தான். ஜேசுதாசன் சாருக்கு அவர்களைப் பிடிக்காது என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், சாமர்த்தியமாக ஐ.எ. ரிச்சர்ஸ்லிருந்து, எ.வி. சுப்பிரமணிய அய்யரின் தொனி பற்றி விளக்கி  நகர்ந்துவிடுவார்.

நான் படித்த பாலக்காடு சித்தூர் கல்லூரிக்கு புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர்கள் வருவார்கள்.எம்.டி. வாசுதேவன்நாயர், சச்சிதானந்தம் என்று அப்போது பேசியவர்களை தமிழ் மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் கட்டாயமாக இருந்தார்.  ஒரு முறை வைக்கம் முகமது பஷீரைப் பார்க்க அழைத்துச்சென்றார்.  இருமொழி கலாச்சார & இலக்கியத்தொடர்பு  இரண்டிற்கும் நல்லது. குறிப்பாக தமிழ் மலையாள உறவு தமிழிற்கு புதிய பார்வையைக் கொடுக்கும் என்று அடிக்கடி சொல்வார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சு.ரா., ஜெயமோகன், நாஞ்சில்நாடன், பொன்னீலன், நீல பத்மனாபன், ஹெப்சிபா என தரமான படைப்பாளிகள் கணிசமாக இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கேரளாவில் பிரபல பாடகியான பி.லீலா எம்.ஏ மியூசிக் வகுப்பில் பேச வருவாங்க. அவங்க பாடுறதைக் கேக்கும்போது ஆச்சரியப்பட்டுப்போயிருக்கேன். கல்லூரி இல்லாத நாட்களில் அவங்க வீடு வழியாகப் போனால் என்னிடம் அவர்கள் அன்போடு இன்னிக்கு கல்லூரி இல்லையான்னு விசாரிப்பாங்க. பிரபலங்கள் நம்மை விசாரிப்பது மனதுக்கு சந்தோஷமா இருந்தது. நான் படிச்ச விக்டோரியா கல்லூரி பெரிய கல்லூரி ஆனதுனால நிறைய பிரபலங்கள் வருவாங்க. அவர்களின் உரை மனதுக்கு புது உத்வேகத்தைத் தந்தது. மேலும் பிரபலங்களைச் சந்தித்துப் பேச நிறைய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பின்னணி பிற்காலத்தில் எனக்கு உதவியது.

தீராநதி : படிச்சு முடிச்சதும் என்ன பண்ணினீங்க...?

அ.கா. பெருமாள் : இங்கே ஆரல்வாய் மொழி அண்ணா கல்லூரியில் விரிவுரையாளர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் வந்தது. அப்ளை பண்ணினதும் இன்டர்வியூ வைச்சாங்க. தேர்வானேன். உடனே வேலையில சேரச்சொல்லிட்டாங்க. இப்ப உள்ளதுமாதிரி அப்ப வேலைக்கு கஷ்டம் ஒண்ணும் இல்லை. படிச்சு முடிச்சதும் வேலை கிடைச்சது சந்தோஷமா இருந்துச்சி. இருபத்தி நாலு வயசிலேயே வேலை கிடைச்சுட்டது.

தீராநதி : உங்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது.?

அ.கா. பெருமாள் : இந்துக் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறப்ப அங்கு உள்ள நூல்நிலையம்தான் எனக்கு பல வாசல்களைத் திறந்து வைத்தது. அங்கே உள்ள நூலகர் என் தூரத்து சொந்தக்காரர். என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு எத்தனை புத்தகம் வேணும்னாலும் படிக்க எடுத்துட்டுப் போலாம்னு அனுமதி கொடுத்தாரு. அப்போது  புத்தகங்களை  ஒரு வெறியோட படிச்சு முடிச்சேன். சகட்டு மேனிக்கு எல்லாவிதமான புத்தகங்களையும் படிச்சேன்.

அப்பவே எந்தப் புத்தகத்தைப் படிச்சாலும் குறிப்பு எடுத்து வைக்கிற பழக்கம் என்னிடம் உண்டு. தொடர்ந்து படிப்பிலும் எழுத்திலும் ஈடு படவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் எல்லாத்துக்கும் குறிப்பு எடுத்து வைச்சுகிட்டேன். என்னதான் நம் மனசில் சில விஷயங்கள் பதிந்தாலும் நாட்கள் சென்றதும் மறந்து விடும். அதனால் சிறு வயசிலேயே குறிப்பு வைச்சுக்கிற பழக்கம் என்கிட்டே இருந்தது.

தீராநதி : எழுத்தாளர் சுந்தரராமசாமியுடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது..?

அ.கா. பெருமாள் : நான் எம்.ஏ. முடித்த வருஷம் அம்மாவும் இறந்தாங்க.  நான் அண்ணன், தம்பி, தங்கைகளுடன் நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் என் மாமா அண்ணாமலைபிள்ளை வீட்டில் குடியேறினோம். நாங்கள் அனாதரவாய்க் கிடந்த சமயத்தில்  அவர் எங்களை ஏற்றுக்கொண்டார்.  அவரது வீட்டின் பக்கத்தில்தான் சுந்தரராமசாமியின் வீடு இருக்கிறது.

1972-ம் வருஷம் ஜூன் மாதம் இறுதியில் நான் சு.ரா. வீட்டுக்குப்போனேன். பேராசிரியர் ஜேசுதாசன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத்தொகுதியை சு.ரா.விடம் கொடுக்கும்படி சொல்லியிருந்தார்.  அப்போது நான் சு.ரா.வின் `பிரசாதம்' கதைத்தொகுதியைப் படித்திருந்தேன். அது பாடத்திட்டத்தில் இருந்தது என்பது முக்கிய காரணம். சு.ரா.வின் சுந்தர விலாசுக்கு நான் போனபோது சு.ரா.வின் தந்தை முன் திண்ணையில் நாற்காலியில் இருந்தார். அவர் முன்னே வழுவழுப்பான சிமென்ட் தரையில்  பிறந்து சில நாட்கள் ஆன பெண் குழந்தை  ஒன்று கையையும் காலையும் உதைத்துக்கொண்டு தடுக்கில் கிடந்தது.  சிறிது நேரத்தில் சுந்தர ராமசாமி அங்கே வந்தார். நான் நீலக்கடல் என்று ஆரம்பிப்பதற்கு முன்பே `ஜேசுதாசன் சார் அனுப்புனாரா; வாங்க'  என்று பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச்சென்றார். அப்போது சு.ரா.வுக்கு வயது நாற்பத்தி ஒன்று. என்னைப்பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.அங்கே போனது எனது இலக்கிய ஆர்வத்தை மேலும் வளர்த்து விட்டது. ..

நான் குடியிருந்த வீட்டிற்கு நாலு வீடு தள்ளிதான் சு.ரா.வின் வீடு. அதனால் தினமும் அவரைச்சந்திப்பேன். சு.ரா. வீட்டிற்கு அப்போதெல்லாம் தமிழகத்து சீரியஸ் எழுத்தாளர்கள் அடிக்கடி வருவார்கள்.  நான் முதலில் நா. பார்த்தசாரதியை சு.ரா.வின் வீட்டில் சந்தித்தேன்.  சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், அ. மாதவன், ஜி.நாகராஜன், நாஞ்சில் நாடன், கலாப்பிரியா, வண்ண நிலவன் முதற்கொண்டு ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் வரை உள்ளவர்களை எல்லாம் சந்தித்தது சு.ரா.வின் வீட்டில்தான்.

சுந்தரராமசாமி `காகங்கள்' என்னும் இலக்கியகூட்டத்தை அவரது வீட்டில் நடத்தினார். மாதந்தோறும் நடந்த இக்கூட்டத்தில்  தற்கால இலக்கியம் மட்டுமல்ல கலை, பண்பாடு குறித்த விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. கவிதை விவாதம், நூல் வெளியீடு எல்லாம் அங்கே நடக்கும். வெளியூரிலிருந்து வரும் பிரபலங்கள் இங்கே வந்தால் முக்கியமாக பத்மனாபபுரம் அரண்மனையைப் பார்க்கணும்னு ஆர்வம்காட்டுவாங்க. சு.ரா. காரில் அவர்களை அழைத்துக்கொண்டு முக்கிய சுற்றுலாத் தலங்களான திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், பத்மனாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய ஊர்களுக்குப் போவார். பெரும்பாலும் நானும் அவர்களுடன் இருப்பேன்.. காரில் போகும் போது எழுத்துலக ஜாம்பவான்கள் நிறைய பேசுவார்கள். அவற்றை உள்வாங்கிக்கொள்வேன். அவர்கள் பேச்சில் குறுக்கிடமட்டேன். நான் எப்போதும் கவனிப்பாளனாகவே இருந்தேன். என்னை வளப்படுத்த இது உதவியிருக்கிறது.

சு.ரா. ஒரு நூலைப் படிக்கத் தேர்ந்தெடுத்தபின் அதை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பார். சாதாரணமாக பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியர்கள் மாணவனுக்குக் கற்பிக்காதது இது. மாணவனைத் தேர்வுக்குத் தயாரிப்பதற்கு மட்டும் சம்பளம் வாங்கிய சின்சியரான ஆசிரியர்கள்கூட ஒரு நூலின் தேவையான பகுதிகளை மட்டுமே படித்தால்போதும் என்ற மரபில் வந்த  எனக்கு சு.ரா.வின் பேச்சு வித்தியாசமாக இருந்தது. மிக ஆரம்பத்தில் ஏற்பட்ட அந்தத் தாக்கம் முக்கியம் என நினைக்கிறேன்.  அவரோடு உள்ள உறவு என்னைச் செம்மைப்படுத்த உதவியது. 1985 அளவில் நான் நாட்டுப்புற இயலில் தீவிரமாக ஈடுபட்டபின்பு சு.ரா.விடம் இலக்கியம் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்.

தீராநதி : நீங்கள் தற்கால இலக்கியத்தில் ஆரம்பத்தில் ஈடுபாடு கொண்டிருந்தீர்கள். அப்புறம் எப்படி ஆய்வுக்கு வில்லுப்பாட்டை தேர்ந்தெடுத்தீர்கள்..?. நாட்டாரியலில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படக் காரணம் என்ன?

அ.கா. பெருமாள் : எனது சொந்த ஊரான பறக்கை   கிராமம் வயல்களும் குளங்களும் நிறைந்தது. செழிப்பானகிராமம். இளமைக்காலம் முழுவதும் பறக்கையிலேயே சுற்றித் திரிந்தேன். ஆண்டுதோறும் கிராமத்தில் நடக்கும் சுடலைமாடன் கோயில் விழாவிலும் வேறு நாட்டார் தெய்வங்களின் விழாவிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி, சித்திரை மாதங்களில் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி, எப்போதாவது  கழைக்கூத்து என நடந்தவற்றையும், அறுவடைக்காலங்களில் கிராமத்துக்கு வந்த கித்தோசி, பாடும் பரதேசி, ராப்பாடி, சங்கரன்காளைக்காரர் போன்ற  யாசகர்களின் பாடல்கள் செயல்பாடுகளையும் நேரில் பார்க்க கேட்க வாய்ப்பிருந்தது. இவை எனக்கு நாட்டார் வழக்காற்றில்  ஈடுபாடு கொள்ளக்காரணமாய் இருந்திருக்கலாம்.

என் கிராமத்தில் பெரிய ஏரியின் கரையில் உள்ள தென்னந்தோப்பில்  திருவாவடுதுறை மடம் இருக்கிறது. என் இளமைக்காலத்தில் இங்கேயே நான் தங்கினேன். இந்த மடத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முருகலிங்கத்தம்பிரான் என்ற சாமியார் இருந்தார். அவர் சித்த வைத்தியம், ஜோதிடம் தெரிந்தவர். முக்கியமாக தஞ்சை மண்ணைப்பற்றி, மராட்டிய ஆட்சியில் நிகழ்ந்த திருவிழா கலைகள் பற்றிப் பேசுவார். அவர் பேசுவது உ.வே.சா. `என் சரித்திரம்' படித்தது மாதிரி இருக்கும். அந்த சாமியாரைத் தேடி ஊரிலுள்ள வயதான முதியவர்கள் வருவார்கள். எல்லோருக்குமே பழைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் போட்டா போட்டி நடக்கும்.

நாகேந்திரன்பிள்ளை என்ற முதியவர் இருந்தார்.  அப்போது (1960&65) அவருக்கு 85 வயதுக்கு மேல். அவருக்கு நல்ல நினைவாற்றல். தென்திருவிதாங்கூர் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய நிகழ்ச்சிகள், மூலம் திருநாள் அரசர் நாஞ்சில் நாட்டுக்கு வந்தது, மகாத்மா காந்தியின் பேச்சைக்கேட்க நாகர்கோவிலுக்கு நடந்து போனது என பழைய விஷயங்களை ஒழுங்கு படுத்திச்சொல்லுவார். இந்தப் பின்னணிதான் என்னை நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் உடையவனாக ஆக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

என் பி.எச்.டி ஆய்விற்காக பேராசிரியர் நா. வானமாமலையைச் சந்தித்தது முக்கிய திருப்பம்.  என் மூத்த அண்ணனின் ஆசிரியர் என்ற உரிமையில் அவரைப் பார்க்க திருநெல்வேலிக்குப்போனேன். அவர் அப்போது நாட்டுப்புற இயலில் நீ எதாவது சாதிக்க முடியும்; அதற்கு இப்போது (1980) ஆட்களும் இல்லை என்றார்.  நான் தேர்ந்தெடுத்த தலைப்பைக் குறித்து விவாதித்தார்.

`நாஞ்சில்நாட்டு வில்லுப்பாடல்கள்' என்னும் தலைப்பில் பி.எச்.டிக்குப் பதிவு செய்த பிறகு முழுநேர ஆய்வாளனாகச் சுற்ற ஆரம்பித்தேன்.  43 வில்லிசை ஏடுகளைச் சேகரித்தேன். இவற்றில் சிலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. டேப்ரிக்கார்டருடன் வில்லுப்பாட்டு நடக்கும் இடத்துக்குப்போய் விடிய விடிய உட்கார்ந்து பாடல்களைப் பதிவு செய்தேன்.  இன்னிக்கு போல டி.வி. கம்யூட்டர்னு அன்னிக்கு பொழுதுபோக்கு அம்சம் எல்லாம் வீட்டில் கிடையாது. திருமணத்துக்குப் போவதும்,  வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோயிலுக்குப்போவதும்தான் மக்களின் முக்கிய பொழுது போக்காக இருந்தது. பத்திரிகை வைச்சா தவறாம கல்யாணத்துக்குப் போகும் பழக்கம் அப்போது இருந்தது.  எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமா பார்க்கும் வழக்கம் கிடையாது.  அதனால் ஊர் சுற்றுவது -  ஏடுகள் சேகரிப்பது - தகவலாளிகளைச் சந்திப்பது என்பது பொழுதுபோக்காக மாறியது.

மரபு வழி இலக்கியங்களைக் கவனித்தவர்கள் - படிப்பதில் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியவர்கள் நாட்டார் வழக்காறுகளை - கதைப்பாடல்களை எந்த அளவுக்குப் புறக்கணித்தார்கள் என்பதை 80-களில் நான் கள ஆய்வு செய்தபோது அறிந்தேன்.  எனக்குள் ஏற்பட்ட வெறிக்கு அது ஒரு காரணம்.
இந்தக் காலகட்டத்தில் ஆய்வு மாணவராக இருந்த ராமச்சந்திரனின் நட்பு ஏற்பட்டது. என் ஊக்கம் களைந்து போகாமலிருக்க அவரும் ஒரு காரணம்.

ராமச்சந்திரன் மூலம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை அறிமுகமும், அருள்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி அவர்களின் நட்பும் கிடைத்த பிறகு என் ஆய்வு நெறிமுறையில் ஒழுங்கு வந்தது.  ஜெயபதிபாதர், சு.ரா.வைப்போலவே என்னைப் பாதித்தவர்.  நாட்டார் வழக்காற்றியலின் வழி மனித சமூகத்தைப் புரிந்து கொள்ள வைத்தவரே ஜெயபதி அடிகள் என்று இப்போது நினைக்கிறேன். என்னை ஆராய்ச்சியாளனாக மட்டும் நான் எப்போதும் கருதவில்லை. என் தகவலாளிகளுடன் கொண்ட  சுமுகமான உறவும் இதனால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இந்நேரத்தில் சங்கப்பாடல்களில் சிலவற்றை எடுத்து `புதிய தமிழில் பழைய கவிதை' என்ற பெயரில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தேன். இதன் எளிமை பலராலும் பாராட்டப்பெற்றது.

தீராநதி : நாட்டாரியல் என்பதற்கு உரிய துறைசார் வரையறை என்ன?  நாட்டாரியலைப் பிரித்துப்பார்க்கும் அடிப்படை என்ன?

அ.கா. பெருமாள் : Folk lore என்னும் சொல்லை தமிழில் நாட்டுப்புறவியல், நாட்டாரியல், நாட்டார் வழக்காற்றியல் என்று சொல்வார்கள். Folk நாட்டார் என்றும் lore வழக்காறு என்றும் பொருள் கொள்ளலாம். தமிழகத்தில் இந்த துறை அறிஞரான பேராசிரியர் தெ. லூர்து உருவாக்கிய நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்  பொருத்தமாக உள்ளது. Folk loreஎன்னும் ஆங்கிலோ சாக்ஸன் சொல்லுக்கும் நாட்டார் வழக்காற்றியல் என்பதுதான் நேரடிப்பொருள். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேலை நாடுகளில் வரலாறு, சமூகம் போன்ற துறைகளைப்பற்றிய ஆராய்ச்சி வளர்ந்தபோது  அந்தத் துறைகளின் பிரிவுகளைக்குறிக்க Popular antiquities , Popular literature, Common mythology போன்ற சொற்களைப்பயன்படுத்தினர். இந்த நிலையில் 1847  அளவில் Folk loreஎன்ற சொல் உருவாக்கப்பட்டது. முந்தைய கலாச்சாரங்களால் எஞ்சி நிற்கும்  வழக்காறுகளையும் ஆரம்பகால வேளாண் தொழிலாளர்களின் மரபுநிலைச் செயல்பாடுகளின் எச்சத்தையும் குறிக்க இது உதவுவதால்தான் இந்த Folk loreஎன்ற சொல் உருவாக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்தனர்.

நாட்டார் வழக்காறு குறித்த வரையறைகளைத் துல்லியமாகத் தருவது சிரமம்தான். வேண்டுமானால் நாட்டார் வழக்காற்று வகைமைகளை வரிசையாகப் பட்டியலிட்டு விளக்கினால் நாட்டார் வழக்காற்றியலுக்கு ஓரளவு சரியான விளக்கம் கிடைக்கலாம். இந்த வகைமைகளின் பட்டியல் கூட மேலை நாட்டுக்கொள்கைகளைச்சாராமல் நம்முடைய மரபு சார்ந்து இருந்தால் விளக்கம் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். நாகரிக மக்களின் மரபு வழிப் படைப்புகளையும், பழங்குடி மக்களின் மரபுவழிப் படைப்புகளையும் நாட்டார் வழக்காற்றியலில் அடக்குவதை பொதுவானதாகக்கொள்ளலாம்.    எழுத்து வழக்கற்ற வாய்மொழி சார்ந்த பண்பாடுகளின் வெளிப்பாடுகள் எல்லாமே நாட்டார் வழக்காறுகள்தாம். இது வாய்மொழியாகப் பரப்பப்படுவது,  மரபு வழியாக வந்து கொண்டிருப்பது,  இதன் படைப்பாளி யார் என்றே அறிய முடியாதது, ஒரு வகையில் வாய்ப்பாட்டில் அடக்க முடிவது, திரிபடைவது. பகிர்ந்து கொள்ளப்படுவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

முக்கியமாக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைத் தொகுக்க சூழல் தேவைப்படுகிறது. ஒரு சமூகத்தின் வழக்காற்றை அதன் சூழலில் நிகழும்போது சேகரிப்பது நல்லது.  அந்தச் செய்திகளின் அடிப்படையில் எடுக்கும் கருத்தாக்கங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் சமூகக் குழுக்களின் பல்வேறுபட்ட பண்பாட்டின் வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீராநதி : முறையான தொகுப்பு இல்லாத போலிகளும் இருக்கிறார்களே...?

அ.கா. பெருமாள் : போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இதை ஆங்கிலத்தில் fakelore  என்பார்கள். 1950 அளவில் அமெரிக்க ஆய்வாளர்கள் folklore அல்லாத ஆய்வுகளைக்குறிக்க இந்த சொல்லைப் பயன்படுத்தினர். பண்டைய இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில்  உள்ள தகவல்களை வழக்காறுகளாக மாற்றுவதும் கள ஆய்வு செய்யாமலே முந்தைய அளவு ஆய்வுச்செய்திகளைத் தொகுத்து முடிவுக்கு வருவது எல்லாமே போலிகளே. ஆய்வாளர்கள் மட்டுமல்ல...  தகவலாளிகளும் போலி வழக்காறுகள் தோன்றக் காரணமாய் உள்ளனர்.

தீராநதி : பிற துறையிலிருந்து  நாட்டார் வழக்காற்றியலை எவ்வாறு வேறுபடுத்தலாம்..?

அ.கா. பெருமாள் : கல்வித்துறை சார்ந்த ஒரு புலம் அதனுடன் தொடர்புடைய இன்னொரு புலத்தை அல்லது வேறு புலங்கைளைச் சார்ந்து இணைந்துதான் செயல்பட முடியும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. இது நாட்டார் வழக்காற்றியலுக்கும் பொருந்தும்.   நாட்டார் வழக்கியல்கூட உலகளாவிய நிலையில் மொழியியல், மானுடவியல், சமூகவியல், உளவியல், வரலாற்றியல், அமைப்பியல், குறியியல், போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்துதான் செயல்படுகிறது.  எனவேதான் நாட்டார் வழக்காற்றியல் தனித்துறையாகச் செயல்பட முடியாது என ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். இதைக் கொஞ்சம் ஆழமாகவும் நுட்பமாகவும் பார்க்கிறவர்கள் இதை இலக்கியம், மானுடவியல் ஆகிய இரண்டின் கலப்பாகக் கூறுகின்றனர். நாட்டார் வழக்காற்றியலின் ஒரு கூறு பண்பாட்டு மானுடவியல் என்றும் பழைய கருத்தை மாற்றி பண்பாட்டு மானுடவியலின் ஒரு கூறாகவே நாட்டார் வழக்காற்றியலைக் கருதவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

நாட்டார் வழக்காற்றியலில் கருத்தாக்கத்தை முக்கியமாக மானுடவியல் பாதித்துள்ளது. நாட்டார் வழக்காற்றியலில் அழகியல் கூறுகள் கொண்ட நுட்பங்கள் உண்டு.  அது இலக்கியம் சார்ந்ததும்கூட என்பதைக் கற்பித்ததும் மானுடவியலே.  மேலும் கள ஆய்வு செய்து செய்திகளைச் சேகரித்து வழக்காறுகளை ஒழுங்குபடுத்துவதையும் அவற்றின் சூழலின் அடிப்படையில் தொகுக்கவேண்டும் என்பதையும் நாட்டார் வழக்காற்றியலாளர்களுக்கு மானிடவியலாளர்களே கற்பித்தனர்.

தீராநதி : நாட்டார் கலைகளில் உள்ள முக்கியமான கலைக்கூறு என்ன?

அ.கா. பெருமாள் : நாட்டார் நிகழ் கலைகளில்  நாடகத்தன்மை கொண்ட வடிவத்தைப் பார்க்கின்றவர்கள் உணர்வார்கள். கோயில் சடங்குக்கூறுகள் கலந்த கலைவடிவத்தில் நாட்டார் கலைகளை உணர்ந்து கொள்ளமுடியும். பெரும்பாலும் நாட்டார் தெய்வக்கோயில் விழாக்களில் சாமியாடுபவர்கள், அக்கோயில் தொடர்பான கதைகளை நிகழ்த்திக்காட்டுபவர்களாகவும் செயல்படுவார்கள். இங்கு  கலை மாற்றப்பட்டு  சடங்காக ஆகிப் பின்பு நிகழ்த்துபவனாக எண்ணச்செய்யும் செயல்பாட்டைக் காணமுடியும். கர்நாடகக் கலையான யட்சகான நிகழ்ச்சி ஒன்றில், கீசக வதைக்காட்சியில் பீமன் உண்மையிலேயே கீசகனைக் கொன்றதும் தேவராட்டக்கலைஞன் சுயப்பிரக்ஞையற்று விழுவதும் கற்பனை அல்ல.  ஒன்றிலிருந்து வேறு ஒன்றாக மாறும் இந்த நிலையை நாட்டார் கலைஞர்கள் உன்னதமாகக்கொள்வதால்தான் அதைத் தொழிலாக மட்டும் கருதவில்லை.

தீராநதி : தமிழ்நாட்டில் தமிழ் கல்விப்புலம் சார்ந்தவர்கள் மட்டுமே நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் காட்டுகிறார்களே...

அ.கா. பெருமாள் : நாட்டார் வழக்காற்றியலுடன் இலக்கியம் நெருங்கிய தொடர்பு கொண்டதன் காரணமாகவே இந்தியாவில் பிற மாநிலங்களிலும் இலக்கியம், மொழியியல்  துறை சார்ந்தவர்கள் இத்துறையில் ஆர்வம் காட்டினர். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நாட்டார் வழக்காற்றியல் துறையில் அதிக ஆர்வம் காட்டிய கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் இலக்கியச்சார்புடையவையாக இருந்தன. தமிழகத்திலும் இதே நிலைதான். ஜவஹர்லால் ஹண்ட் என்ற அறிஞர் இந்திய நாட்டார் வழக்காற்றியலின் காலகட்டத்தை மூன்று வகையாகப் பிரித்தார். அதில் கல்விப்புல காலகட்டமும் ஒன்று. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில்  எம்.பில். பி.ஹெச்டி பட்டங்களுக்கு நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் தலைப்பாக அமைய ஆரம்பித்த பின்னர்  சேகரிப்புகள் அதிகரித்தன. முறையான நாட்டார் வழக்காற்றியல் அறிவுடன் இந்தக் காரியம் நடந்ததா என்பது ஒருபுறம் இருந்தாலும், பெருமளவிலான  வழக்காற்றியல் செய்திகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழ் இலக்கியம் தொடர்பானவர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியதற்கு கல்விப்புலம் சார்ந்த பிற துறையினர் கூட இதில் கவனம் செலுத்தாததும் ஒரு முக்கிய காரணம் என்று கூற முடியும்.   ஆங்கிலப் பேராசிரியர்கள்  தமிழ் இலக்கியத்தைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாதது  மாதிரியே இந்தத் துறையையும் கண்டு கொள்ளவில்லை. வரலாற்றுத்துறையுடன்  நாட்டார் வழக்காற்றியலுக்குத் தொடர்பிருந்தாலும் அவர்கள் இதைத் தங்களின் துறைக்கு ஆதாரமாக இருக்கும் என்று கனவிலும்கூட நினைக்கவில்லை. தற்போது கல்விப்புலம் சாராத சிலர் நாட்டார் வழக்காற்றியலைக் கவனிக்கத் துவங்கியுள்ளனர்.

தீராநதி : உங்களின் ஆய்வுக்களம் என்ன?  எது குறித்தெல்லாம் நீங்கள் ஆய்வு செய்திருக்கிறீர்கள்..?

அ.கா. பெருமாள் : என்னுடைய பி.ஹெச்டி ஆய்வுக்காக முதலில் நான் சேகரிக்கத் தொடங்கியது நாட்டார் தெய்வங்களைப்பற்றித்தான்.  ஆனால் முறைப்படி ஆராய்ச்சித் தலைப்பைப் பதிவு செய்த பின் வில்லுப்பாடல்களைக் குறித்து செய்தி சேகரிக்கத்துவங்கினேன். என் ஆய்வுப் பரப்பைத்தாண்டியே செய்தி சேகரிக்கத் துவங்கினேன்.  கதைப்பாடல்களைத்தொகுப்பது தென்மாவட்ட சமூகத்தின் பின்புலத்துக்கு உதவும் என்பதால் அதில் கவனம் செலுத்தினேன்.

1988-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமியக்கலைஞன் முன்னேற்ற சங்கத்தை நிறுவியதும், 1990-ல் தோல் பாவைக்கூத்து  நிகழ்த்தும் பண்டிகர்  சாதிச்சங்கத்தை நிறுவியதும் ஆன என் முயற்சி, நாட்டார் நிகழ்த்து கலைகளைப்பற்றிய  செய்தி சேகரிப்பில்  திரும்பியது.  தமிழ்நாடு அரசு இயலிசை நாடக மன்றத்திற்காக நானும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ராமச்சந்திரனும் தமிழக நாட்டார் கலைகளைப்பற்றிய செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியது என் முக்கிய அனுபவம்.  1998-ல் தமிழக அளவிலான கிராமியக்கலைஞர்கள் மாநாட்டை நடத்தியபோது, தமிழகம் முழுக்க கிராமியக்கலைஞர்களைச் சந்திக்கச் சென்றேன். இந்த அனுபவமும் செய்தி சேகரிப்பும் எனக்கு புத்தகங்களில் கிடைக்காதவை.  இவை தவிர கன்னியாகுமரி மாவட்ட அளவில் சித்தர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஊர்ப் பெயர்கள் பற்றியும்,  தென்குமரியின் கதை நூலுக்காக தகவல் சேகரிக்கச்சென்றதும் ஒரு அனுபவம்தான்.

தீராநதி : நாட்டார் வழக்காற்றியலுக்கும் செவ்விலக்கியத்துக்கும் உள்ள உறவு குறித்த நிலை என்ன?  தமிழில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா?

அ.கா. பெருமாள் : முந்தைய செவ்விலக்கிய படைப்பாளிகள் நாட்டார் இலக்கியக்கூறுகளை எளிதாக உள்வாங்கிக்கொண்டு வடிவமாற்றம் செய்திருக்கின்றனர். இதற்கு தமிழிலக்கியங்களில் நிறைய உதாரணம் காட்ட முடியும். பெரியாழ்வார் தாலாட்டு வடிவத்தைப் பயன்படுத்தியதையும், பிற்காலத்தில் இது பிள்ளைத்தமிழ் வகையில் தனிப்பருவமாக இடம் பெற்றதையும் குறவஞ்சி, பள்ளு  போன்ற சிற்றிலக்கிய வகைகளின் நாட்டார் செல்வாக்கையும் பலரும் ஆராய்ந்திருக்கின்றனர்.  பிற்காலச்சோழர் காலத்துக்கு முன்பு வழங்கிய பழமரபுக்கதைகள் பெரிய புராணத்தில்  வருவதைப்போன்று  பல உதாரணங்கள் உள்ளன.  கூனி மந்தரைக்கு ராமனிடம் ஏற்பட்ட வெறுப்பிற்கான நிகழ்ச்சியை கம்பன் பெரியாழ்வாரிடமிருந்தே எடுத்துள்ளான். பெரியாழ்வாருக்கு இது வாய்மொழி மரபிலிருந்து கிடைத்திருக்க வேண்டும். தமிழகத்தின் வாய்மொழிக்கூறுகளில் கதைப்பாடல்களும் பழமரபுக்கதைகளும் பெருமளவில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டார் வழக்காற்றிலிருந்து செவ்விலக்கியத்துக்குச்சென்ற வடிவங்கள் பற்றியும், இசைக்கூறுகள் பற்றியும் பெருமளவில் ஆராயப்படவில்லை. புலவர் குழந்தை சிந்து, கண்ணி போன்ற வடிவங்களைப்பற்றிக் கொஞ்சமாவது சொல்லியிருக்கிறார். என்றாலும் அவர் அந்த வடிவங்களுக்குப் பெருமளவு உதாரணங்களை செவ்விலக்கியங்களிலிருந்தே எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வகையில் சொன்னால் ஆரம்பகாலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்களும் வாசகர்களும் நாட்டார் வழக்காற்றின் முழுமையான வகைமைகளை அறிந்திருக்கவில்லை. மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்கள் கூட தமிழக சமூக வரலாற்றை எழுதியபோது நாட்டார் வழக்காற்றைப் பெருமளவில் பயன்படுத்தவில்லை. `மதுரை நாயக்கர் அரசர்களான திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் ஆகியோரைப்பற்றி வாய்மொழி மரபை நான் கணக்கில் எடுக்காமலேயே நாயக்க வரலாற்றை எழுதினேன்' என்று அ.கி. பரந்தாமன் ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார். பிற்காலப் பாண்டியர்கள் தென்மாவட்டத்துக்கு ஒதுங்கிய  பாண்டிய மன்னர்களைப்பற்றிய வரலாறு முழுமையடையாமல் இருப்பதற்கு 17,18,19 ஆம் நூற்றாண்டு கதைப்பாடல்களைப்பற்றிய அறிவு வரலாற்றாசிரியர்களுக்கு இல்லாமல் இருந்ததுதான் காரணம். கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் கூட தனது பாண்டியர் வரலாறு நூலில் கதைப்பாடல்களைக் கணக்கில் எடுக்காமல் ஆராய்கிறார்.  ஆரம்ப காலத் தமிழ் அறிஞர்கள்  தம் சமகாலத்தில் உள்ள பிற  துறைகளையும், மேலை நாட்டுப் புதிய இலக்கியக் கொள்கைகளையும் வடிவங்களையும் அறிந்தவர்களாய் இருப்பினும் அதே காலத்தில் மேலை நாடுகளில் வளர்ச்சியடைந்திருந்த நாட்டார் வழக்காற்றியலை அறிய விருப்பப்படவில்லை. மூன்றாம் தர பழைய எழுத்துகளையும் இலக்கியங்களையும் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட சிரத்தை, அவற்றை அச்சில் ஏற்றி விட வேண்டும் என்ற ஆவேசம் எல்லாம் முதல்தர நாட்டார் நிகழ்கால வடிவங்களைப்பற்றி யோசிக்க இடம் தரவில்லை. தொல்காப்பியர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய இலக்கணங்களில்  பரவிக்கிடக்கும் நாட்டார் வழக்காறுகள் குறிப்பாக மொழி சார்பானவை குறித்த செய்திகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. தமிழ்ப் புராண இலக்கிய மரபு எது என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை. உலகம் உருவானது குறித்த _ உலக அழிவு குறித்த பழ மரபுத்தமிழ்ப்புராணக் கதைகள் தேடப்படவில்லை என்று டாக்டர் தே. லூர்து கூறும் கருத்தை இங்கு குறிப்பிடவேண்டும். தென் மாவட்டங்களில் அண்மையில் கிடைத்துள்ள கதைப்பாடல்கள் சிலவற்றில் உலகத்தோற்றம் குறித்தும் உலக அழிவு குறித்தும் செய்திகள் உள்ளன. இவை அண்மையில் கிடைத்தவை ஆகும்.

தீராநதி : தமிழகத்தில் நாட்டாரியல் ஆய்வின் தொடக்கம் எது? முன்னோடி ஆய்வுகள் எவை.? பொதுவாகத் தென்மாவட்டங்களில் இருந்து ஆய்வாளர்கள் அதிக அளவில் இருப்பதற்கு தனியான காரணங்கள் உண்டா..?

அ.கா. பெருமாள் : 1835-ல் வெளிவந்த Deutsche Mythologic என்னும் ஜெர்மன் நூலை  அதிகாரப்பூர்வமான நாட்டார் வழக்காற்றியல் நூலாகக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மதம் பரப்புவதற்காக வந்த ஜெர்மன் இறைப்பணியாளர் பார்த்தலோமியன் சீகன்பால்கு என்பவர் தமிழக நாட்டார் தெய்வங்களைப்பற்றிய செய்திகளை 1713-ல் தொகுத்திருக்கிறார்.  பெர்சிவல் பாதிரியார் 1842-ல் தமிழகப் பழமொழிகளைச் சேகரித்திருக்கிறார்.  சார்லஸ் இ. கோவார்  தென்னிந்திய நாட்டார் பாடல்களை 1871-ல் வெளியிட்டார்.  1869-ல் நல்லதங்காள் கதை, மதுரை வீரன் கதைப்பாடல்கள் வெளிவந்தன. இதன் பிறகு  ஹென்றி ஒயிட் ஹெட், எல்மோர்  போன்றோர் நாட்டார் தெய்வங்களைக் குறித்து செய்திகளைச் சேகரித்தனர்.  இவர்கள்  தாங்கள் தொகுத்த செய்தியின் அடிப்படையில்  தங்களின் பார்வையில் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்திருக்கின்றனர்.  இவர்களைப்போன்று மேலை நாட்டினர்  சிலர் தொடர்ந்து இத்துறையில் ஈடுபட்டதற்கு தமிழ்க் கலாச்சாரத்தின் மீது கொண்ட அபிமானம் என்றோ ஆராய்ச்சி மனோபாவம் என்றோ முழுவதுமாக கூறிவிடமுடியாது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டார் வழக்காற்றியல் துறைத்தலைவர் டாக்டர் ஆறு. இராமநாதன், ``இவர்களின் நோக்கங்கள் மதங்களைப் பரப்புதல் மற்றும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைப்படுத்திக்கொள்ளல் என்பதே; இதற்கு இவர்கள் மக்கள் மொழியையும் மக்களையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியிருந்தது'' என்கிறார். இவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் தென்மாவட்டங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே உருவானதற்குத் தனியான காரணங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. தென்மாவட்டங்களைச் சார்ந்த மொழியியல்துறை ஆய்வாளர்களான டாக்டர் வ.அய். சுப்பிரமணியம், அகஸ்தியலிங்கம், முத்துச்சண்முகம்  ஆகியோர் நாட்டார் வழக்காறு, மானிடவியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினர்.   1961-ல் கே.பி.எஸ். ஹமீது என்பவர் Folklore of Tamilnadu என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். இவரது வழிகாட்டி வ.அய். சுப்பிரமணியம், இவர்கள் டாக்டர் தெ. லூர்து, ஏ.என். பெருமாள் ஆகிய ஆய்வாளர்களுக்கு ஆதர்சமாய் இருந்துள்ளார்கள். நாட்டார் வழக்காற்றியலுக்கு பேரா. நா. வானமாமலையின்  பங்களிப்பு அபரிமிதமானது. இவர்களில் ஆ. சிவசுப்பிரமணியம், என். ராமச்சந்திரன் எனச் சிலரைக் குறிப்பிடலாம்.  1986-ல் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் தோன்றிய பிறகு ஆய்வின் வேகம் துரிதமாகியிருக்கிறது. தென்மாவட்ட ஆய்வாளர்களுக்கு இம்மையம் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது.

தீராநதி : நாட்டாரியல் ஆய்வுகள் தமிழகத்தில் தொடக்கத்தில் தொய்வுற்றிருந்ததற்கு தனியான காரணங்கள் ஏதேனும் உண்டா?

அ.கா. பெருமாள் : தமிழ்மொழி பழமையானது, கவிதைப்பாரம்பரியம் உடையது, இலக்கியச் செறிவுடையது என்னும் உயர்வு மனப்பான்மை நாட்டார் வழக்காற்றியலைத் தொகுக்கவும் ஆய்வு செய்யவும் ஆரம்ப காலத்தில் தடையாக இருந்திருக்கிறது. தமிழர்களுக்குப்பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. தமிழ் மொழி சிறந்தது, உயர்ந்தது செவ்விலக்கிய பாரம்பரியம் உள்ளது , உலகின் முதன் மொழி கல்தோன்றி மண் தோன்றா காலத்தது என்று தொடக்ககால வரலாற்றாசிரியர்கள் தென்னிய மொழிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பேசினர். இந்த விஷயம் தமிழர்களுக்கு உயர்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறது. இந்த எண்ணம் வாய்மொழி மரபைப் புறக்கணித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் செவ்விலக்கியங்களின் தொன்மையைச் சந்தேகித்தவர்களும், நீதி இலக்கியங்களில் கவித்துவம் குறைவு என்றவர்களும் கூட இக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே போக்கில் நடந்திருக்கின்றன. கல்விப்புலத்திற்கு வெளியே நா. முத்துசாமி போன்ற படைப்பாளர்கள் நிகழ் கலைகளை உயர்த்தப் பாடுபட்டதும், நா. வானமாமலை போன்ற  ஆய்வாளர்கள் வாய்மொழி மரபின் செவ்விலக்கியத்தை எழுத ஆரம்பித்ததும் பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களும்  கல்லூரிகளும் பெருக ஆரம்பித்த பின்னர் எம்.பில், பி.ஹெச்.டி ஆய்வுப்பட்டங்கள் எளிதாக பெறலாம் என்ற சூழல் உருவானது; தமிழ்த்துறை சட்ட திட்டங்களை வெகுவாகத் தளர்த்தியது எல்லாம் ஆய்வு மாணவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் அதிக அளவில் ஈடுபடக் காரணமானது. இதில் ஒரு நன்மையும் ஏற்பட்டது. குறிப்பிட்ட வட்டாரத்தைச் சார்ந்த மாணவர்கள் அந்த வட்டாரத்தின் நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்துக் கொடுத்தனர். வாய்மொழிக்கதைப்பாடல்களும், ஏட்டில் இருந்த கதைப்பாடல்களும் தட்டச்சுப்பிரதிகளாகவும் அச்சுப்புத்தகங்களாகவும் மாறின. இது நாட்டார் வழக்காற்றுக்குக் கிடைத்த லாபம் என்றுதான் கூறவேண்டும்.

தீராநதி : நாட்டார் கலைகளை கலை அனுபவத்திற்காக ரசிக்க முடியுமா?

அ.கா. பெருமாள் : இலக்கியத்தை, சாஸ்திரிய சங்கீதத்தை விமர்சிக்கும் அனுபவம்  போன்றதுதான் இதுவும். கர்நாடக இசை, நாடக, இலக்கிய ஆய்வாளர்கள் எல்லோருமே ரசனையாளர்கள் என்று கூறிவிடமுடியாது. இவர்களில் தொழிலுக்காகவும், பட்டத்திற்காகவும் ஆராய்ச்சி செய்பவர்கள் உண்டு. இதைப்போலத்தான் நாட்டார் கலை ஆய்வும். தஞ்சைப்பல்கலைக்கழகப்பேராசிரியர் பொய்க்கால் குதிரை ஆட்டத்தைக் கற்று ஆடியிருக்கிறார். கரகாட்டத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்யப்போன பேராசிரியர் அந்த கலையைப்படித்து கரகாட்டக்கலைஞனாகிவிட்டார்.  டாக்டர் மு. ராமசாமி ஆராய்ச்சியாளர் என்றாலும் அவர் தெருக்கூத்துக் கலைஞரும் கூட. இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்.

பொதுவாக நாட்டார் நிகழ்கலைகள் வட்டாரத்தொடர்புடையவை. குறிப்பிட்ட வட்டாரத்தைச் சார்ந்தவன் அந்த வட்டாரக்கலையை அனுபவிக்க முடியும். முக்கியமாக அந்தப் பண்பாட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டுமே, அதற்குத்தகுந்த மனம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தன்னைக்குறிப்பிட்ட பண்பாட்டிலிருந்து பிரித்துக்காட்டுவதோ அல்லது அந்தப் பண்பாட்டிலிருந்து  தன்னை உயர்ந்த ஸ்தானத்தில்  இருத்திக்கொள்ளுவதோ உள்ள ஆணவப்போக்கு  மூளையில் வியாபித்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு விஷயம் இந்த நிகழ்த்துகலைகள் கூட ஒவ்வொரு முறையும் நுட்பமான மாற்றங்களுடனும் நிகழ்த்தப்படுகின்றன.

சாஸ்திரியக்கலைஞர்கள் எல்லோருமே தரமானவர்கள் அல்லர். அவர்களில் பலர் பணம், புகழ் என்பதற்காக வந்தவர்கள்.  நாட்டார் கலைஞர்களில் வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழில் தெரியாமையால் வந்தவர்கள் அதிகம். இவர்களில் உன்னதமான கலைஞர்கள் இனம் கண்டிருக்கிறார்கள்.  நா. முத்துசாமியின் `அன்று பூட்டிய வண்டி' புத்தகத்தைப்படித்தவருக்கு இந்த உன்னதம் தெரியும்.

தீராநதி : தமிழக அரசின் விருது பெற்ற தென்குமரி புத்தகம் எழுத வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது...? உங்களது நூலுக்கு முன்னரும் குமரி மாவட்டம் குறித்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளதே...?

அ.கா. பெருமாள் : கன்னியாகுமரி மாவட்டத்துல உள்ள நடுத்தர வயதைத்தாண்டியவர்களிடம் நீங்கள் பேசினால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்த்தாயின் வளர்ப்புக்குழந்தை, சவலைக்குழந்தை என்ற முனங்கலை கேட்கலாம். தமிழர்களால் மலையாளிகள் என்றும், மலையாளிகளால் தமிழ் அண்ணாச்சிகள் என்றும் பரிகசிக்கப்படும் குரலைக்கேட்டுக்கேட்டு இந்த மாவட்ட மக்கள் பழக்கப்பட்டு விட்டனர்.  இத்தனைக்கும் திருவனந்தபுரத்துக்காரர்கள்  நாகர்கோவில் காய்கறிச்சந்தையையும் கோட்டாறு அரிசிக்கடைகளையும் எதிர்பார்த்துதான் சாப்பாட்டு மேஜையில் உட்காருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் மிதமான சூடும், மிதமான குளிரும் உள்ள காலநிலை கொண்டது. தோட்டப்பயிர்கள் நிறைந்தது. மூன்றில் ஒரு பங்கு மலைக்காடுகளையும் சமூகக்காடுகளையும் கொண்டது. கோயம்புத்தூருக்கு அடுத்தபடியா படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். பிரிட்டிஷ் அரசுக்குக் கீழடங்கிய  இந்திய சமஸ்தானங்களில் திருவிதாங்கூருக்குத் தனியிடம் உண்டு. சாதியக்காழ்ப்பும், கொடுமையும் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்ததோ அந்த அளவுக்கு அதைத் தூக்கி எறிவதிலும்  முன்னணியில் நின்ற சமஸ்தானம் இது. அடிமை முறை ஒழிப்பு,தேவதாசி ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற சமூக விடுதலையை ஆரவாரமின்றி நடைமுறைப்படுத்திய இடம் இது.  கன்னியாகுமரி மாவட்டம் மற்ற மாவட்டங்களைப்போல் அல்ல. இந்த மாவட்டத்துக்கு அல்லல் மிகுந்த வாழ்க்கையும் உண்டு; அதன் வரலாறும் உண்டு.

வரலாற்றுப்பாரம்பரியம்மிக்க இந்த மாவட்டத்தைப்பற்றி முழுமையான வரலாற்றை எழுதவேண்டும் என்ற முயற்சியை ஆரம்ப கால ஆசிரியர்கள் யாரும் மேற்கொள்ளவில்லை.  டாக்டர், கே.கே. பிள்ளை, டாக்டர் எஸ்.பத்மனாபன், ஜாய் ஞானதாசன், ஐ.வி.பீட்டர் உட்பட சிலர் நூல்கள் எழுதியிருக்காங்க.  கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை அச்சில் வந்து விட்டன. கிறிஸ்துவ பணியாளர்கள் இந்த மாவட்ட மக்கள் குறித்தும் நிறையவே எழுதியிருக்காங்க. ஆனால் 2000 ஆண்டுகள் வரலாறுடைய இந்த மாவட்டத்தின் வரலாற்றை ஒட்டுமொத்த பார்வையில் சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும் படியான நூல் வரவில்லையே என்ற வருத்தம் என் மனதில் நெடுநாட்களாக ஓடிக்கொண்டிருந்தது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த ஒரு கருத்தரங்கில் தொல்பொருள்துறை இயக்குநராக இருந்த நடன காசிநாதன் இந்த மாவட்ட வரலாற்றை யாராவது முழுமையாக எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோது,  என் நண்பர் பூதை சொ.அண்ணாமலை, அவரது `கைவிளக்கு' மாத இதழில் என்னை எழுதச்சொன்னார். அப்போது நான் 12 மாதங்களாகத் தொடர்ந்து எழுதியதை நாகர்கோவில் சுபா பதிப்பகம் சிறு புத்தகமாக வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை மறுபதிப்பு வெளியிடவேண்டும் என பதிப்பகத்தார் விரும்பிய போது நான் விரும்பவில்லை.  நான் எழுதிய இந்த சிறு வெளியீட்டைப் படித்த எழுத்தாளர் ஜெயமோகன் `உங்கள்துறையான நாட்டார் வழக்கியல் சார்ந்து குமரிமாவட்ட வரலாற்றைப் பதிவு செய்யுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.   அவருடன் இது குறித்து பலமுறை விவாதித்தேன். அதன்பின் மாவட்டம் தொடர்பான புத்தகங்களையும் கல்வெட்டுகளையும் தொடர்ந்து படித்தேன்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரிக்கச்சென்றபோது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும், கிறிஸ்துவ பாதிரியார்களும் கோயில் ஆவணங்களும் சொல்லாத வரலாற்றையும்  தகவல்களையும் பலரிடமும் பேசியபோது அறிந்து கொள்ள முடிந்தது. எனவே குமரி மாவட்ட வரலாற்றுக்கு நாட்டார் வழக்காறுகளைப் பயன்படுத்தவேண்டும் என்ற முடிவுடன் மேலும் செய்திகளைச்சேகரித்தேன். பிரிட்டிஷ் காலத்தில் எழுதிய ஆரம்பகால மேனுவலை  முழுவதும் நம்பி அதை அப்படியே  மொழிமாற்றம் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்று நடை முறையில் உணர்ந்தேன். குமரி மாவட்டத்தில்  புதுக்கடை ஊர் அருகே  உதச்சிக்கோட்டை உண்டு என்று முந்தைய ஸ்டே மேனுவல் தகவலை நம்பி தொடர்ந்து  எழுதியவர்களைப்படித்துவிட்டு  நேரடியாக அந்த இடத்துக்குச் சென்றபோது  அந்த கோட்டை தரைமட்டமாகி எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்த பிறகு எல்லா இடங்களுக்கும் நேரடியாகச்சென்று தகவல்களைச்சேகரிக்க ஆரம்பித்தேன். நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரிக்கச்சென்ற போது சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகள், சந்நியாசிகள் ஆகியோரையும் சந்தித்தேன். சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலரது கதை நெஞ்சைப் பதறவைத்தன. சிலரது கதை சிரிப்பை வரவழைத்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டம் நடைபெற்ற காலகட்டம்.  ஒரு ஊரில் ஒரு மனிதர் ஆட்டுக்குத் தழை பறிக்க மரத்தில் ஏறியுள்ளார். அப்போது திருவாங்கூர் படையினர் வந்த ஜீப்பின் முன்பு இவர் ஒடித்த மரக்கிளை  விழுந்துள்ளது. திருவாங்கூர் அரசுக்கு எதிராக மரக்கிளையை இவர் ஒடித்துப்போட்டுள்ளார் என்று ஜீப்பில் இருந்த போலீசார் பிடித்து திருவனந்தபுரம் ஜெயிலில் போட்டுள்ளனர். இவர் ஆட்டுக்குத் தழை பறிக்க மரத்தில் ஏறியதாகக் கூறியதை போலீசார் நம்பவில்லை. சிலநாட்களுக்குப்பின் விடுதலையான அவர் மொழிப்போர்த் தியாகி என்ற பட்டத்துடன் வெளியே வருகிறார். அதுபோல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இருவரை ஜெயிலில் போட, அவர்களும் மொழிப்போர் தியாகியாகியுள்ளனர். இப்படி சிரிப்பான தகவல்களும் கிடைத்தன.

குமரி மாவட்டத்தில் உள்ள 68 கி.மீ. தூரமுள்ள கடற்கரைக்கு நடந்தும், பைக்கிலும் சென்று சேகரித்த தகவல்கள், கோதையாறு தொடக்கத்திலிருந்து  அது கடலில் சேரும் இடம் வரை  பஸ்சிலும், பைக்கிலும் தனியாகச் சேகரித்த தகவல்கள்  ஏராளம். எழுத்தாளர் ஜெயமோகன், நண்பர் வசந்தகுமார் போன்றோருடன் வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, சிதறால் என பல இடங்களுக்கும் புகைப்படம் எடுக்கச் சென்றேன். சேகரிக்கச்சேகரிக்க மலைபோல் தகவல்கள் கிடைத்தன. அவற்றைத் தொகுத்து புத்தகமாக்க திணறித்தான் போனேன்.  வட்டார ரீதியான பண்பாட்டு வரலாற்றை  நாட்டார் வழக்காற்றியலின் அடிப்படையில்  எழுதுவது என்ற என் முயற்சிதான் தென்குமரியின் கதை. முடிந்த அளவு அதில் அனைத்துத் தகவல்களையும் தந்திருக்கிறேன் என நம்புகிறேன். `தென்குமரியின் கதை` புத்தகம் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது என்றால் அது மிகையல்ல.!

தீராநதி : தென்குமரின் கதையில் சாதி தொடர்பான முரண்பாடுகள் குறைவாக உள்ளன.  குறிப்பாக மண்டைக்காடு கலவரம் பற்றி நீங்கள் அதிகம் பேசவில்லையே..?

அ.கா. பெருமாள் : நாட்டுப்புறக் கலைகளில்  வண்ணான் - வண்ணாத்தி சண்டை, கல்யாண காமிக்,  கோனார் நாடகம் போன்ற துணைக்கலைகள் உண்டு. இந்தக் கலைகள் தங்கள் ஜாதியையும், பிற ஜாதியையும் கிண்டல் செய்து நிகழ்த்துவன.  இந்த கிண்டல்கூட விரசமாக இருக்கும்.  இவற்றைப் பார்க்கின்ற பார்வையாளர்கள் இந்த கிண்டல்களை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டனர்.  இதெல்லாம் எழுபதின் நிகழ்வுகள்.  தென்மாவட்டங்களில் நிகழ்ந்த இந்தக் கலைகளின்  செய்திகளைக்கூட இப்போது அச்சில் கொண்டு வர முடியாது.  தனிப்பட்ட உரையாடல்களில் கூடச் சொல்லத்தயங்கிய தகவலாளிகள் உள்ளனர்.

இதுபோன்ற நிலைதான் ஆராய்ச்சியாளனுக்கும்.  நான் மண்டைக்காடு கலவரம்  தொடர்பாக சேகரித்த செய்திகளை முழுவதுமாக எழுத முடியாத சூழ்நிலை  இன்று ஆகிவிட்டது.  எதையுமே சாதி, மதம் கண் கொண்டு பார்க்கின்ற காலகட்டம் இது.  தென்குமரி நூலில் ஒரு வரியில் சொன்ன சில செய்திகளுக்காக என் சாதியைத் திட்டி, என்னைப் பழித்து  நான் சார்ந்த மதத்தை விமர்சித்து வெளியிடப்பட்ட சிறு துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தது உங்களுக்கேத் தெரியும்.  இந்த நிலையில் நான் எப்படி இந்த கலவரங்களைப்பற்றி எழுதமுடியும்.? தென்குமரி கதை நூலில் சில விஷயங்களை மறைத்ததில் எனக்கும் வருத்தம்தான்..!

தீராநதி : தோல்பாவைக் கூத்து கலைஞர்கள் தொடர்பாக ஆய்வு செய்தீர்களே.. அது பற்றி கூறுங்களேன்..?

அ.கா. பெருமாள் : நான் முதன் முதலில் என் கிராமத்தில் 1956-ல்  பார்த்த தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியை நினைவில் வைத்து  மறுபடியும் 1972-ல் பார்த்தேன்.  பின் 1978-ல் பார்வையாளனாக அல்லாமல் செய்தி சேகரிப்பாளனாக பார்த்தேன்.  அப்போது இது பற்றி `தினத்தந்தி' பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைக்குப் பலன் கிடைத்தது.  தொடர்ந்து செய்திகளைச் சேகரித்தேன்.  1998-ல் பல்கலைக்கழக மானியம் கிடைத்தபோது தோல்பாவைக்கூத்து தொடர்பான செய்திகளைச் சேகரிக்க தென்மாவட்டங்கள் முழுதும் பயணம் செய்தேன்.  அவ்வாறு சேகரித்த செய்திகளை தோல்பாவைக்கூத்து, ராமாயணத்தோல்பாவைக்கூத்து, தென்னிந்திய தோல்பாவைக்கூத்து என்னும் மூன்று புத்தகங்களாக வெளியிட்டேன்.  சிறு இதழ்களிலும் `குமுதம்' போன்ற  பெரிய இதழ்களிலும்  அது பற்றி எழுதினேன். இந்தக் கலைபற்றி  செய்தி சேகரித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை `சுண்ணாம்பு கேட்ட இசக்கி' நூலில் விரிவாகச்சொல்லியிருக்கிறேன்.

தோல் பாவைக்கூத்து நடத்திய மண்டிகர் ஜாதியினரிடம் சென்று ஆரம்ப காலத்தில் ஆய்வாளனாக மட்டும்தான் இருந்தேன்.  தொடர்ந்து நான் அந்த மராட்டிய சாதியினருடன் பழகிய போது உறவில் நெருக்கம் ஏற்பட்டது. சென்னையில் 1998-ல் கிராமியக்கலைஞர்கள் மாநாடு நடந்தபோது தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களின் இழிநிலை பற்றி நான் விரிவாகப்பேசினேன். ஜெர்மன் ஹாலில் நடந்த அந்தக்கூட்டத்தில்  மண்டிகர் சாதியினர் சிலர், தங்கள் கலைக்கென்று தனிச்சங்கம் அமைக்கத் தீர்மானித்தார்கள்.

இதன்பிறகு தோல்பாவைக்கூத்து கலைஞர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான கூட்டம் என் வீட்டில் நடந்தது.   இதே சங்கம் பின்னர் மராட்டிய மண்டிகர்-கணிகர் சங்கமாக மாறியது.  இதற்கு நானே ஆலோசகராக இருந்தேன். இதற்குப்பிறகு  எனக்கு இக்கலை பற்றியும், சாதி பற்றியும் நிறையவே தகவல்கள் கிடைத்தன.

தீராநதி : இந்த சாதிப்பெண்களைப்பற்றிய செய்திகளைத் திரித்து வெளியிட்டதுபற்றி நீங்கள் ஒரு பத்திரிகையில் வேகமாகச் சாடியிருந்தீர்களே...?

அ.கா. பெருமாள் : ஆமாம். இந்த சாதி ஆண், பெண் உறவு வரன்முறை கடந்து இருக்கும். இவர்களில் சிலர் வயிற்றுப்பிழைப்புக்காக சில தவறான காரியங்களைச் செய்தார்கள்.  இதை ஒரு பெண் ஆய்வாளர், தோல்பாவைக்கலைஞர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று எழுதியபோது எதிர்வினையாற்றினேன். கிடைத்த தகவல்களை எல்லாம் அப்படியே எழுதுவது  ஆய்வு நெறிமுறை என்று நான் நினைக்கவில்லை.  தென் மாவட்டத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியைப்பற்றிய செய்திகளை நான் திரட்டச்சென்றபோது, அவர்களிடம் தன் மனைவியை சொந்த சாதிக்காரனிடம் அடகு வைக்கும் பழக்கம் இருப்பதை அறிந்தேன். இது தொடர்பாக நான் சேகரித்த செய்திகளை எந்த இடத்திலும்  எழுதவில்லை.  இது போலவே மண்டிகர் சாதியினரின் தகாத உறவு, மண உறவு குறித்த தகவல்களை அச்சில் கொண்டுவரவில்லை.

இதுபோன்ற செய்தி வெளிநாட்டுக்காரனுக்குக்கிடைத்தால் அவன் இதை மானுடவியல் தகவல் வழி பொருத்தி மொத்த இந்திய சமூக்கத்திற்கு என்று கருத்தாக்கத்தை  உருவாக்கி அதை மேலை நாடுகளில் நம்பும்படிச் செய்து விடுவான்.

தீராநதி : தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி பதிவு செய்யப்போனபோது பார்த்த - கேட்ட  சுவாரஸ்யமான செய்தி ஒன்றைச்சொல்லுங்களேன்.?

அ.கா. பெருமாள் : கோபாலராவ் நிகழ்ச்சி நடத்திய அனுபவத்தை சுப்பையாராவ் சொல்லியிருக்கிறார்.

திருநெல்வேலி  மாவட்டம் தென்பகுதியில் ஒரு கிராமம்.  கோபாலராவ் அங்கு நிகழ்ச்சி நடத்தப்போனார். ஊர்த்தலைவர் சாமித்தேவர் ஊரில் இல்லை; வேறு யாரோ சிபாரிசு செய்ய கூத்து நடத்தும் இடத்தைத் தெரிவு செய்து விட்டனர்.  சாமித்தேவரின் ஆட்கள் கூத்து நடத்தும்போது சிறு சிறு  தொந்தரவு கொடுத்தனர்.  ராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஒருநாள் கூத்து பார்க்க சாமித்தேவர் வந்தார்.  அன்று ராமன் மாயமானைத்தேடும் நிகழ்ச்சி. ராமன் மானைத்தேடி  களைத்துவிட்டார்.  மானைக்கொன்று தோலையாவது சீதையிடம்  கொடுக்கலாம் என்று தனக்குத்தானே சொல்லுகிறான். அப்போது ஈனஸ்வரத்தில் முனகல் கேட்கிறது. இராமனின் காலடியில் சப்தம்;  இராமன் குனிந்து பார்க்கிறான். ஒரு தேரை. அது சொல்கிறது `ராமா, உன் கோதண்டத்தை என் முதுகில் ஊன்றிவிட்டாயே!' என்று. இராமன் வில்லை எடுத்துவிட்டு, `தேரையே! ராமா என நீ என்னை அழைத்துச்சொல்லலாமே; வில்லை எடுத்து விடுவேனே!' என்றான். அதற்கு தேரை,`வேறு யாராவது வில்லை ஊன்றினால் ராமா என அழைக்கலாம். இராமனே என்னைத் துன்புறுத்தினால் யாரை அழைப்பேன். பகவானே!' என்கிறது.

இந்தச் சமயத்தில் உச்சிக்குடும்பன் என்ற தமாஷ் பாத்திரம்  திரையில் தோன்றி,``ஆமா நமக்கு கஷ்டம் வந்தா பகவானைக்கூப்பிடலாம். பகவானே கஷ்டப்படுத்தினா? யாருட்ட சொல்றது.? பெரியவர் சாமித்தேவர நம்பித்தான் இந்த ஊருக்கு வந்தோம்.  ராமா.. சாமி.. தேவரே..ன்னு கூப்பிடுறோம். எங்க கஷ்டத்த அவர்தான் புரிஞ்சுக்கணும்.' என்று சொல்லிவிட்டுச்சென்றது.

இந்த உரையாடல் பலனைக்கொடுத்தது.  அதன்பிறகு கோபால ராவ்க்கு சாமித்தேவரின் ஆட்களால் தொந்தரவு இல்லை.

அது போல்  ஒரு முறை ஒரு ஊரில் இராமனை காட்டுக்கு அனுப்பும் காட்சி தோல்பாவைக்கூத்து நடந்து கொண்டிருந்தது.  அன்று நல்ல வசூல். பரமசிவராவ் என்ற தோல்பாவைக்கூத்துக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்தினார். அவரது மனைவி கோமதிபாய் ஆர்மோனியம் வாசிப்பார். முந்தையநாள் நடந்த நிகழ்ச்சியின் போது நல்ல வசூல். மனைவி கோமதி பாய் பரமசிவராவுக்கு சரியாக பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த கோபம் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. தசரதன் கைகேயியைத் திட்டுவது போல் பரமசிவராவ் வாய்ப்பேச்சிலேயே கோமதிபாயைத் திட்டுகிறார். நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு தசரதன் கைகேயியைத் திட்டுவது போலிருக்கும். ``பாவி கைகேயி, கணவனை மதிக்காத நீ இரந்து குடிக்கப்போகிறாய். உனக்குக்கணவனால்தான் சமூகத்தில் மதிப்பு. நீ தெருத்தெருவாய் பிச்சை எடுக்கப் போகிறாய்!'' என பரமசிவராவ் கைகேயியைத் திட்டுவதுபோல் மனைவியைத் திட்ட சொல்லின் வேதனையால் ஆர்மோனியப்பெட்டியை வைத்துவிட்டு வெளிநடப்புச் செய்கிறார் கோமதிபாய். பின்னர் நான் சமாதானம் செய்து கோமதிபாயிடம் பேசி நிகழ்ச்சியைத் தொடரச்செய்தேன். இப்படி நிறைய சொல்ல முடியும்.

இப்படியாகத்தான் நாட்டார் கலைஞர்கள் இருந்தார்கள்.  நாகஸ்வரக்கலைஞர் ராஜரத்தினம் பிள்ளையிடம்  இருந்த கலை ஆணவம் நாட்டார் கலைஞர்களிடம் கிடையாது. இவர்கள் வயிற்றுக்காக கலை நடத்தினால் எப்படித் திமிர் வரும்?

தோல்பாவைக்கூத்து,  இராமாயண தோல்பாவைக்கூத்து, தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து, சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஆகிய நூல்களில் தோல்பாவைக்கூத்து குறித்து நிறைய கூறியிருக்கிறேன்.

தீராநதி : மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. தோல்பாவைக்கூத்து இன்று  இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. அம்மன் கோயில் விழாக்களில் மட்டும் இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டார் வழக்காற்றியல் கூறுகள் காலப்போக்கில் அழிந்து விடும்போல் உள்ளதே.. இவற்றின் எதிர்காலம் எப்படி  இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?

அ.கா. பெருமாள் : மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.   அதோடு மாற்றம்மட்டும்தான் நிலையானது. ஒன்று அழிகிறது என்றால், இன்னொன்று உருவாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஏற்றம் இறைக்கும் தொழில் எங்காவது நடக்கிறதா என்ன? அது தொடர்பான பாடல்களும் அழிந்து விட்டன. காட்டில் மரம் அறுக்கும்போது பாடுவார்கள்.இன்று எங்கே கையால் மரத்தை அறுக்கிறார்கள்..?எல்லாமே இயந்திரம்தான். பலகைகளில் டிசைன்கூட மிஷின்தான் போடுகிறது.சில வகைமைகள் மட்டும் புதிய வடிவம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும். நாட்டார் நிகழ்கலையின் கூறுகள் இன்றைய நவீன நாடக மரபில்  வாழ்வது மாதிரி நாட்டார் வழக்காறுகள் மட்டுமல்ல நெறிப்படுத்தப்பட்ட நம்  பண்பாடுகள் கூட சமூக மாற்றத்தால் மாறத்தான் செய்கின்றன. நாட்டார் வழக்காற்றின் பாதிப்பு பண்பாட்டில் பதிவு செய்துவிட்டு மாறும் என்பது அதன் சிறப்பு. தமிழகத்தின் நாட்டார் நிகழ்த்துக்கலைகள் எல்லாம் தொடர்ந்து வாழும் என்று கூறமுடியாது. இன்றைய வெகுஜன ஊடகங்களின் போக்குதான் கிராமியக்கலைகள் அழியக்காரணம்.  நாட்டார் கோயில்கள்  மேல்நிலையாக்கம் பெறுகின்றன. இதனால் கோயில் விழா நிகழ்ச்சிகளில் பட்டிமன்றம், சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. நாட்டார் கலைஞர் கலைநிகழ்ச்சிகளுக்குப் பெறும் கூலி பிற கலைஞர்கள் பெறும் கூலியை விட மிக மிகக்குறைவு. இதனால் பரம்பரையாய் இந்த கலையை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வேறு தொழிலுக்குப்போய்விட்டர்கள். அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஜாதிமுரண் கலை நிகழ்ச்சிகளின் யதார்த்தத்தைப் பாதித்துவிட்டது. முன்பு கலைநிகழ்ச்சிகளுக்குரிய ஒப்பனை  சாதனங்களையும் பிற உபகரணங்களையும் கோயிலைச்சார்ந்தோர் கொடுத்த காலம் போய்விட்டது.இவற்றை கலைஞர்களே விலைக்கு வாங்க வேண்டிய சூழல். இது நாட்டார் கலைஞர்களைச் சோர்வுறச்செய்துவிட்டது. நானும் பாளையங்கோட்டை  தூயசவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைப்பேராசிரியர் ராமச்சந்திரனும் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்துக்காக  தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகளைப்பற்றிய செய்திகளைச்சேகரித்து ஒரு களஞ்சியம் வெளியிட்டுள்ளோம். இந்த கலைக்களஞ்சியத்துக்கு தகவல் சேகரிக்க தமிழ்நாடு முழுக்க அலைந்தோம். தகவல் சேகரித்தோம். தொகுத்தோம். 1997-ல் தகவல் சேகரித்து 2000 ஆண்டில் களஞ்சியம் வெளியானபோது வாழ்ந்த கலைகளில் சில மறைந்துவிட்டன.  தமிழகத்தில் 50 களில் 170 அளவில் இருந்த கலைகள் இன்று 90 அளவில் ஆகிவிட்டது. 2050-ல் 15 முதல் 20 கலைகள் மட்டும்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

தீராநதி : நாட்டார் கலைகளுக்கு அரசு உதவுகிறதா..?

அ.கா. பெருமாள் : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். தென்மண்டல பண்பாட்டு மையம் மற்றும் தனிப்பட்ட தொண்டு நிறுவனங்களும் உதவுகின்றன. இந்த அமைப்புகளின் உதவியால்தான் நாட்டார் கலைகள் கொஞ்சமாவது உயிர்வாழ்கின்றன.

தீராநதி : கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தால் இன்னும் நன்மைகள் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுகிறார்களே.. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்ததால் நன்மை அதிகமா? தீமை அதிகமா?

அ.கா. பெருமாள் : நன்மைதான்  அதிகம். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபது  இன்ஜினீயரிங்,  அலோபதி,   ஹோமியோபதி, நேச்சுரோபதி, பிசியோதெரபி, சித்தா மருத்துவக்கல்லூரிகள் நிறைய. ஏராளமான தொழில் வாய்ப்புகள், பஸ் போக்குவரத்து எல்லாமே வளர்ந்திருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் கோலோச்சுகின்றனர். தமிழகத்துடன் இணைந்ததால் தமிழ் மொழிப் பண்பாட்டுடனான உறவு வலுப்பெற்றது. மாவட்டத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சில கேரளத்தைச்சேர்ந்த முதலாளிகளுக்குரியவை. அங்கே பிரச்சனை என்பதால் இங்கே வந்திருக்கிறார்கள். கேரளாவுடன் கன்னியாகுமரி இருந்திருந்தால் ரஜினிகாந்தின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் நடத்துவது மாதிரியான மோசமான சினிமா ரசனையிலிருந்து விடுபட்டிருந்திருக்கலாம். மற்றபடி தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்திருப்பதால் கல்வி, தொழில், சுற்றுலா என அனைத்து துறைகளிலும் பலமடங்கு முன்னேறி உள்ளோம்.

தீராநதி : நாட்டார் வழக்காற்றியலில் இன்னும் தொடாத பகுதிகள் உண்டா?

அ.கா. பெருமாள் : நாட்டார் வழக்காற்று வகைமைகளில் சுவரோவியங்கள், வாய்மொழி மருத்துவம், மரபு சார்ந்த தொழில் சார்ந்த தொழில் நுட்பங்கள் (உழவு, மீன்பிடித்தல், சுடுமண் பொருட்கள்) குறித்த தகவல்கள் இன்னும் முழுமையான   அளவுக்குச் சேகரிக்கப்படவில்லை.  வட்டார ரீதியான சுவரோவியங்களின் பண்பாடு 200 ஆண்டுகள் வரை எட்டும். பண்பாடு வரலாற்றில் தொடாத பகுதி இது. நாட்டார் இசை குறித்தும் பரவலாக ஆராயப்படவில்லை.

தீராநதி : பொதுவாக உங்களைப்போன்ற ஆராய்ச்சியாளர்களை சமூகம் கண்டு கொள்வதில்லை; அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் மரியாதை கிடையாது என்பது சரியா?

அ.கா.பெருமாள் : என் அனுபவத்தில் இது சரிதான். நான் வேலை பார்த்த கல்லூரியில் கடைசிவரை என் உழைப்பு, ஆய்வுப்பணியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. நாட்டார் வழக்கியல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க  கல்லூரி முடிந்ததும் கையில் டேப் ரெக்கார்டருடன் வில்லுப்பாட்டு, தோல்பாவைக்கூத்து நடக்கும் இடத்துக்குச் செல்வேன். நள்ளிரவில் தகவல்களைச் சேகரித்துவிட்டு அதிகாலை வீட்டுக்குச்சென்று குளித்து தயாராகி மீண்டும் கல்லூரிக்குச்சென்று விடுவேன். தகவல் சேகரிப்பது, பதிவு செய்வது, புத்தகம் வெளியிடுவது என பரபரப்பாக இருந்துள்ளேன். ஆனால் கல்லூரி தரப்பில் இதற்கு பெரிய அளவில் ஆதரவு ஒன்றும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் இது மனதுக்கு ஆதங்கத்தைத் தந்தது. இப்போது இதை நான் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறேன். சுந்தரராமசாமியை கடைசியாகச் சந்தித்தபோது, ``நம்முடைய மொழி கலாச்சாரம் குறித்த தீவிர உழைப்பின் பெரும்பாலான பகுதி  நிறுவனங்களுக்கு அப்பால்தான் செயல்பட்டிருக்கின்றன.  உண்மையைத் தேடும் முயற்சியும் நிறுவனங்களுக்கு அப்பால்தான் நடந்திருக்கின்றன.  பலருக்கு அவர்களின் இறுதிக்காலம்வரை அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கிறது.  காலம்தான் அங்கீகாரம்; நிறுவனமோ தனிமனிதரோ அல்ல!'' என்றார். அவரது கருத்துதான் எனது கருத்தும். இந்தக் கேள்விக்கு வேறு கூடுதலாக பதில் சொல்ல விரும்பவில்லை.

தீராநதி: தற்போது கல்வெட்டியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்போல...?

அ.கா. பெருமாள்: ஆமாம். தமிழனுக்கு அடையாளமே சிற்பங்கள்தான். அதன் பிறகு தான் மற்றதெல்லாம். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்குச்சென்று பாருங்கள். சிலைகள் ஒவ்வொன்றும் கதை சொல்லும். வடிவமைப்பின் நேர்த்தியை சிற்பங்களில்தான் காணமுடியும். ஆய்வாளர் செந்தீ நடராஜனும் நானும் சேர்ந்து `தமிழக சிற்பக்கலைக்களஞ்சியம்' தயாராக்கி வருகிறோம். இதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் சென்று சிற்பங்களை ஆய்வு செய்து புகைப்படங்கள் எடுத்துள்ளோம். ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களுடன் தமிழினி வெளியீடாக இந்த கலைக்களஞ்சியம் வெளிவர உள்ளது. தமிழில் இது முதல் முயற்சி. இந்த களஞ்சியத்தைப் பார்த்துவிட்டு உலகம் உண்மையிலேயே வியக்கும்.

தீராநதி : உங்கள் நீண்டகால உழைப்பின் பலனாக எதை நீங்கள் கருதுகிறீர்கள்.?

அ.கா. பெருமாள் : வட்டார ரீதியிலான வழக்காறுகளைத்  தொகுத்துள்ளேன். இது மக்களைப் புரிந்து கொள்ள உதவும்.  முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும். இதை கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொகுத்து பதிவு செய்துள்ளேன்.ஆய்வாளர் செந்தீ நடராஜன் உதவியுடன்  பல கல்வெட்டுகளை அடையாளம் கண்டுள்ளேன்.  சுவரோவியங்கள், பழைய சிற்பங்கள் என இப்படி அடையாளம் கண்டவை பல. அழிந்து போகும் நிலையிலுள்ள  ஓலைச்சுவடிகளைத் தொகுத்து அவற்றை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளேன். சிலவற்றை தமிழக அரசுக்குத் தந்துள்ளேன்.

நான் தொகுத்து வெளியிட்டுள்ள பல தகவல்களின் அடிப்படையில் தென்மாவட்ட பண்பாட்டு வரலாற்றை எழுதமுடியும். எதிர்கால ஆய்வாளர்கள் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சந்திப்பு, படங்கள் :
திருவட்டாறு சிந்துகுமார்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக