03/02/2011

நிகண்டுகளில் உணவு - ஒரு கண்ணோட்டம் - சு. சாரதா

''நிகண்டுகளில் சொற்கள் பல்வேறு பொருட் புலங்களாகப் பிரிக்கப்பட்டுச் சொற்பொருளிலும் சொற்றொகுதியின் வகைப்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தன. சொற்களின் பல்பொருள், ஒருபொருட் பன்மொழி, தொகைவகை கலைக் களஞ்சியச் செய்தி மற்றும் யாப்புத் தொடர்பான விளக்கங்களை ஒருவர் நிகண்டுகளின் வழித் தெரிந்துகொள்ள இயலும்'' (எச். சித்திரகுப்தன், தமிழ் அகராதியியல், ப.92).

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அமைப்புகளில் அடுத்தடுத்துப் பல நிகண்டுகள் தோனறி வளர்ந்துள்ளன. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நிகண்டு திவாகரம். அடுத்துத் தோன்றியது பிங்கல நிகண்டாகும் (10-ஆம் நூற்). அதற்குப் பின்னர்ப் பல நிகண்டுகள் தோன்றின. நிகண்டுகளுள் பெரிதும் போற்றிப் பயிலப்பட்ட சூடாமணி நிகண்டு (16-ஆம் நூற்) இவ்விரண்டு நிகண்டுகளையும் அடியொற்றி எழுதப்பட்டதாகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இம்மூன்று நிகண்டுகளிலும் உணவு சம்பந்தப்பட்ட செய்திகளை அகராதியியல் முறைப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இங்கு உணவு பற்றிய செய்திகள் திவாகர, பிங்கல நிகண்டுகளிலுள்ள ஆறாவது தொகுதியாக அமைந்துள்ள பல்பொருட் தொகுதியிலிருந்தும், பிங்கலந்தையில் ஆறாவது வகையாக அமையும் அநுபோக வகையில் உணவின் வகை என்ற பகுப்பிலிருந்தும் எடுக்கப் பெறுகின்றன.

''மொழியியலார் Lexical Unit, Entry Word, Citation Form, Head Word, Dictionary Word, Lexeme, Lexicographic Word எனப் பலப் பெயர்களால் அகராதிச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர். தமிழில் இவை அகராதிச் சொல், பதிவுச் சொல், தலைச் சொல் எனக் குறிப்பிடப் பெறுகின்றன'' (பெ. மாதையன், அகராதியியல், ப. 151).

மூன்று நிகண்டுகளிலும் உணவு தொடர்பான தலைச் சொற்கள் மற்றும் ஒருபொருள் பல்பெயர்களும் (Synonyms) இடம் பெறுகின்றன. இங்கு இக்கட்டுரைக்கு உணவு தொடர்பான தலைச் சொற்கள் கையாளப்படுகின்றன. திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி ஆகிய மூன்று நிகண்டுகளிலும் இடம்பெறுவன, திவாகரம் பிங்கலந்தையில் இடம்பெறுவன, திவாகரம் சூடாமணியில் இடம்பெறுவன, பிங்கலம் சூடாமணியில் இடம் பெறுவன, திவாகரத்தில் மட்டும் இடம்பெறுவன, பிங்கலந்தையில் மட்டும் இடம்பெறுவன, சூடாமணியில் மட்டும் இடம்பெறுவன என்ற நிலையில் பகுக்கப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன.

திவாகரம் பிங்கலம் சூடாமணி தலைச்சொற்கள்:-

சோறு, கஞ்சி, பிட்டு, உக்காரி, மா, அப்ப வருக்கம், கறி, பொரியல், புளிங்கறி, குழம்பு, வறையல், பிண்ணாக்கு, பால், தயிர், மோர், நெய், தேன், கண்ட சருக்கரை, சருக்கரை, கள், உண்பன, தின்பன.

திவாகர பிங்கலத் தலைச்சொற்கள்:-

அவிழ், மோதகம், பில்லடை, தினைமா, புழுங்கல், உணவு, பருகுவன.

திவாகர சூடாமணித் தலைச்சொற்கள்:-

அமிழ்து, விண்ணோரூண், நஞ்சு.

பிங்கல சூடாமணித் தலைச்சொற்கள்:-

பாற்சோறு, வழியுணவு, வெண்ணெய், எண்ணெய், எச்சில், பேருண்டி.

திவாகரத்தில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

உண்டல், கூழ்.

பிங்கலத்தில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

ததியுணவு, அடை, நென்மா, தோசை, பூரிகை, கறிவர்க்கம், பச்சடி, சூட்டிறைச்சி, மீன் முள் அரிந்திடுங் கருவி, செறி குழம்பு, மணற்பாகு, வேறொரு வகைச் சருக்கரை, தேன்கூடு, பலபண்டம், அரும்பண்டம், தித்திப்பு, கைப்பு, காழ்த்தல், துவர்ப்பு, உவர்த்தல்.

சூடாமணியில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

மிகுபொருள், பானம்

மூன்று நிகண்டுகளும் அப்ப வருக்கம் எவையெவை சிற்றுண்டி எவையெவை என்பனவற்றைத் தருகின்றன.

திவாகரம்:-

அப்ப வருக்கமாகப் பூரிகம், நொலையல், கஞ்சனம், தோய்வை என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டி வகையாக அப்பம், பிட்டு, அஃகுல்லி, இடி என்பனவற்றைத் தருகின்றது.

பிங்கலம்:-

அப்பவருக்கமாக அபூபம், கஞ்சம், இலையடை, மெல்லடை, நொலையல், பூரிகை, சஃகுல்லி, போனகம், மண்டிகை, பொள்ளல் என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டி வகையாக அப்பம், பிட்டு, அஃகுல்லி, இடி என்பனவற்றைத் தருகின்றது.

சூடாமணி:-

அப்ப வருக்கமாக இலட்டுகம், மோதகம், தோசை, அடை, நொலை, அபூபம், கஞ்சம், அண்டகை என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டியும் மேற்கூரிய அனைத்தும் என்கிறது.

விளக்கப் பகுதிகள் என்ற நிலையில் புழுக்குவது புழுங்கல்; கூழ் - உண்ணும் எப்பொருளுக்கும் உரியது; கருணை - பதன் அமைத்துக் கரிக்கும் சிற்றுணவு; புளிங்கறி - துவை, கூட்டமைத்து அடுவதும் பருகுவனவாயும் இருப்பது;

பானம் - பருகுவன எவற்றிற்கும் பெயரே; அடிசில் - அடப்படுவது; ததியுணவு - தயிரிற் றிமிரல் என்பன இடம் பெறுகின்றன.

மதிப்பீடு:-

திவாகரம் புழுக்கல் என்ற தலைச் சொல்லைத் தர அதைப் புழுங்கல் என்று பிங்கலம் கூறுமாற்றைக் காணலாம். சோற்றின் பன்மொழிகளுள் ஒன்றான உணவை உணவு என்று பிங்கலமும் திவாகரமும் குறிப்பிட உணர என்று சூடாமணி குறிப்பிடுமாற்றைக் காணலாம். பாலுக்கு அமிழ்து என்று பிங்கலமும் சூடாமணியும் கூற திவாகரம் அமுதம் என்று கூறுமாற்றைக் காணலாம். கண்ட சருக்கரையைப் பிங்கலமும் சூடாமணியும் கண்டம் என்று கூற திவாகரம் கண்டை என்று கூறுமாற்றைக் காணலாம்.

பிங்கலம் அடையை மெல்லடை இலையடை என்று இரண்டு வகையாக்குமாற்றைக் காணலாம்.

அன்றைய உணவில் கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமை தெரியவருகிறது. மூன்று நிகண்டுகளுமே கள்ளை எடுத்தாளுகின்றன. திவாகரம் கள் என்ற தலைச்சொல்லின் கீழ் 25 பன்மொழிப் பெயர்களையும் தருகின்றன. பிங்கலமோ 61 பன்மொழிப் பெயர்களையும் சூடாமணி 48 பன்மொழிப் பெயர்களையும் தருகின்றன. கள்ளை ஆசபம் என்று பிங்கலந்தை கூற ஆசவம் என்று சூடாமணி இயம்புகிறது. திவாகரம் விளம்பி என்று கையாளும்போது சூடாமணி சொல்விளம்பி என்று கூறுமாற்றையும் காணலாம். சூடாமணியும் பிங்கலமும் கௌவை என்று எடுத்தியம்பும்போது கவ்வை என்று எடுத்தியம்புவதைக் காணலாம்.

பிங்கலம் வழியுணவு என்ற தலைச்சொல்லைத் தர சூடாமணி அந்த இடத்தில் பொதிச் சோறு என்ற தலைச்சொல்லைத் தருகிறது.

பிங்கலந்தை வழியாகச் சூட்டிறைச்சி, மீன் முள் அரிந்திடும் கருவி என்பன தெரிய வருகின்றன. அசைவ முறையும் அக்காலத்தில் நிலவியிருந்தமை தெரிய வருகிறது.

பிங்கலந்தையில் வேறொரு சர்க்கரை என்ற தலைச்சொல்லில் அயிர், புல்லகண்டம் என்பன இடம்பெறுகின்றன. சூடாமணியில் கண்ட சருக்கரையில் இந்த இரண்டு பெயரையும் காணலாம். திவாகரத்தில் சருக்கரையின் பெயர்களில் புல்லகண்டம் இடம் பெறுமாற்றைக் காணலாம்.

நஞ்சு என்ற தலைச்சொல் பிங்கலந்தையில் இல்லை. திவாகரமும் சூடாமணியும் எடுத்தாளுகின்றன.

அவிழ் என்னும் தலைச்சொல்லுக்குத் திவாகரம் உண்டி, பதம், வல்சி, உரை என்பனவாகிய பன்மொழிப் பெயர்கள் இடம் பெறுகின்றன. பிங்கலமோ பதம் என்ற சொல்லைத் தலைச்சொல்லாகக் கொண்டு பதம் அவிழாகும் என்று கூறுவதைக் காணலாம்.

தினைமாவின் பெயர்களாகத் திவாகரம் நுவணை, இடி என்ற இரண்டையும் தந்து நிற்க பிங்கலமோ தினைமாவுக்கு ''நுவணை''யையும் நென்மாவுக்கு ''இடி''யையும் பாகுபடுத்திக் காட்டுவதைக் காணலாம்.

ஒன்றோடொன்று தொடர்புடைய நிகண்டுகள் மூன்றும் சிறப்புத் தன்மைகள் பல பெற்று ஒளிரும் தன்மையைக் காணலாம். நிகண்டுகள் தமிழ்ப் புலமை விரும்புவோர்க்கு ஒரு பொற்களஞ்சியமே. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவினவே என்பதற்கேற்பச் சொற்கள் பெருகியும் குறைந்தும் வழக்கில் நிற்பனவாகவும் திகழ்கின்றன. திவாகரம் முதல் நிகண்டு நூலாக அமைந்து பிற நிகண்டுகளுக்கு வழிகாட்டியாக அமைகிறது. பிங்கலந்தையோ சொற்களஞ்சியக் கிடங்காக மேலும் மேலும் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டுமாறு அமைகின்றது. சூடாமணியோ விருத்தப்பாவில் அமைந்து மனப்பாடம் செய்ய ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது.

நன்றி: ஆய்வுக்கோவை

 

2 கருத்துகள்: