12/02/2011

யாயும் ஞாயும் - அகமா புறமா - பொ. தமிழ்ச்செல்வன்

தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றைப் படிக்க முயலும் பொழுது ஆய்வுக் கண்ணும் தேவைப்படுகிறது. ஓர் இலக்கியம் அது தனிப் பாடலாக இருந்தாலோ, தொகுப்பாக இருந்தாலோ அது அகம் சார்ந்ததா புறம் சார்ந்ததா என்ற கேள்வியை நம் மனம் எழுப்புகிறது. இதற்கு என்ன காரணம்? அகம் இல்வாழ்க்கை தொடர்பானது. புறம் இல்வாழ்க்கையைச் செம்மையுற அமைக்க வேண்டி செயல்படும் போர் முதலிய செயல்களைக் கொண்டமைவது. இவற்றில் மனித மனம் அகத்தையே மிகுதியாக விரும்புகிறது. வன்மையில் கால் பதித்துள்ள போர், புகழ் தொடர்பான புறச் செயல்கள் மனிதன் தன்னுடைய வெறியைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு தளமாக வைத்துக்கொண்டு மனம் நிறைவை எய்துகிறது என்பன போன்ற விளக்கங்களையே தரமுடிகிறது. ஆனால் இது வரையறுக்க முடியாத ஒரு தளம். எனவே தான் தொல்காப்பியர்,

''மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்''

என்ற நூற்பாவை வரையறுத்துக் காட்ட முயற்சி செய்திருப்பது பாராட்டிற்குரியது.

எனினும் அவ்வரையறையே தான் நிலையானது / சரியானது என்று கொள்வதற்குக் கால வளர்ச்சி இடங்கொடுப்பதில்லை. இதைத் தான் இலக்கிய வளர்ச்சி / புலவனின் வளர்ச்சி எனக் கொள்ளவும் / கருதவும் இடம் தருகிறது. பக்தி இலக்கியப் பாடுபொருள் இதற்குத் தக்க சான்று.

இத்தகைய புரிதல் இந்த ஆய்வுக் கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.

''யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே'' - செம்புலப் பெயல்நீரார்

இப்பாடல் உணர்த்தும் பொருள் தலைவன் தலைவிக்கிடையேயான காதலைப் பற்றி வெளிப்படுத்துவது தான். இங்குதான் ஆய்வு செய்யும் நாம் ஆழ்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. இப்பாடலில் தலைவன் என்ற சொல்லோ, தலைவி என்ற சொல்லோ அல்லது அதற்கு இணையான சொல்லோ இடம் பெறவில்லை. அப்படியிருக்க ஏன் இந்தப் பாடலை அகப்பொருள் என்று கொள்ள வேண்டும். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் பாட்டு என்று பொருள் கொள்ள அக இலக்கணக் கோட்பாடு வழி நோக்க வேண்டியிருக்கிறது. மாறாக ஓர் ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையேயான நட்பாகவோ, பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையேயான நட்பாகவோ ஏன் பார்க்கக் கூடாது?

மேற்கண்ட பாடல் நட்புப் பாடலாகப் பொருள் கொள்ள இடம் தந்து நிற்கின்றது. பாடலாசிரியர் புலப்படுத்தும் கருத்துப் பொதுத் தன்மை வாய்ந்த நட்பின் அடிப்படைப் பாடலாக உயர்ந்த நிலையில் இது அமைந்திருக்கின்றது. இப்படிப் பொருள் கொள்வதால் ஒரு பிழையும் ஏற்பட்டுவிடாது.

தொல்காப்பியர்,

''மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்''

என்று கூறுகிறார். இங்குப் புறத்திணையில் கண்டிப்பாகப் பெயர் சுட்டாத மரபு பின்பற்றக் கூடாது என்று எங்கும் வரையறை செய்யவில்லை. எனவே பெயர் சுட்டாத மரபுக் கூறுகள் புற இலக்கியத்திலும் பின்பற்றப் படலாம் என்பது தெளிவு. அந்த வகையிலேயே இந்தப் பாடலையும் வைத்து எண்ணுவது பொருத்தமாக அமையும்.

புறப்பாடலில் பெயர் வெளிப்படையாகச் சுட்டலாம். குறிப்பாலும் சுட்டலாம்; பெயர் சுட்டப்படாமலும் அமையலாம். பிற்காலத்தில் இலக்கிய ஆசிரியர்கள் பெயர் சுட்டப்படாத புறப்பாடலை வடிக்க அதிக அக்கறைகாட்டாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஒரு அகப்பாட்டுள் புறச் செய்திகள் இடம் பெறலாம் என்பது இலக்கணம் கூறும் வரையறை. அதே சமயத்தில் ஒரு பாடல் அகப்பாடல் போலவும், புறப்பாடல் போலவும் பொருள் கொள்ள இடமளிக்கலாம் என்பதும் தகுந்த வரையறையாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு ஏறக்குறைய பதினைந்து நூற்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் தான் உரை எழுதத் தொடங்குகின்றனர். எனவே, கால இடைவெளி என்பது மூல நூலாசிரியர் நினைத்ததிலிருந்து வேறுபடவும் செய்யலாம். உரையாசிரியரின் கருத்துக்கு மாறுபாடாக ஆய்வாளரின் கருத்து அமையலாம். ஆனால் தொல்காப்பியத்திற்கு, முரணாக அமைய வாய்ப்பில்லை. கூடுதலான ஒரு தகவலாகவே அமையும். ஆய்விற்கு எடுத்துக்கொண்ட பாடலின் பொருள் விளக்கத்தை விளக்கினால் இன்னும் சில உண்மைகள் புலனாகும். இதுவரை இப்பாடலுக்கு அளிக்கப்பட்ட கருத்துச் சாரம் வருமாறு:

தலைவனாகிய நானும் தலைவியாகிய நீயும் காதலர்களாக ஆவதற்கு முன் யார் யாரோ என்பது அறியாதது. என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழியிலும் இதுவரை அறிந்தவரில்லை. உறவினர்களும் இல்லை. எனினும் நம்முள் செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீரைப் போல ஒன்றிலிருந்து ஒன்றை வேறு பிரித்துப் பார்க்க இயலாத வகையில் நம்மிடம் நெருக்கம் அதிகமாக உள்ளது. அதற்கு நம்மிடமுள்ள அன்புடைய நெஞ்சம் / அன்புதான் / நெருக்கம் தான் / அன்பான அணுகுமுறைதான் காரணம் என்பதுதான்.

இப்பாடலில் யாயும், ஞாயும் யார்? இங்கு அகப்பாடல் எனப் பொருள் கொண்டால் தலைவனும் (யாயும்) தலைவியும் (ஞாயும்) என்பது பெறப்படும். ஆய்வின் நோக்கப்படி புறப்பொருள் குறித்தது எனப் பொருள் கொண்டால் அவற்றிற்கான பொருள்,

யாயும் ஞாயும்

ஆண் ஆண்

பெண் பெண்

பெண் ஆண்

ஆண் பெண்

ஆண் பறவை / விலங்கு

பெண் பறவை / விலங்கு

என்ற வாய்ப்பாட்டு முறையில் தலைவன், தலைவி என்ற குறியீட்டை நீக்கிவிட்டு நட்பு என்ற அடையாளத்தோடு காண வேண்டும். இப்பாடலை அகப்பாடலுக்குரிய பொருள் நோக்கோடு மட்டும் பார்ப்பது அப்பாடலின் விரிந்த பொருளைச் சுருக்கி வைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாகும. புலவனின் பரந்து விரிந்த பாடற் பொருளைச் சுருக்கி வைத்துவிடக்கூடாது. அது தன் விரிந்த பரந்த பொருளையே கொண்டு விளங்க வேண்டும்.

சங்க காலச் சமூகத்தில் குழு முறை மாறுகிறது. சிற்றரசு உருக்கொண்டு பேரரசு உருவாகியவண்ணம் அரசு பரந்து வளர்கிறது. பேரரசனின் படை / சிற்றரசனின் படை இன்னொரு அரசின் மீது தன் தாக்குதலைத் தொடர்கிறது. ஓர் அரசனின் கீழ் உள்ள படைப்பிரிவுகளில் பல குழு / ஊர் வீரர்கள் இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் அப்போது தான் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்குமிடையே நட்பு மலர்கிறது. போரிலே ஒருவனுக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. அதை அந்த நண்பன் பார்க்கிறான். அவனைக் காப்பதா போரைத் தொடர்ந்து எதிர்கொள்வதா என்ற மனநிலை அவனுக்குத் தோன்றுகிறது. காயம் பட்டவன் அந்த நண்பனைப் பார்க்கிறான். அப்பார்வைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள். நம்மிருவக்குமிடையே உள்ள நட்பு செம்புலப் பெயல் நீர்போல என எண்ணி அவனைக் காக்க அவனுடன் இருந்து பார்க்கிறான், பார்த்துக் கொள்கிறான்.

அடுத்த நாள் கடமை அழைக்கிறது. போருக்குப் போக வேண்டும். காயம் பட்டவனின் மனநிலை ஒருபுறம். கடமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் நண்பனைப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் மற்றொரு புறம். இந்தச் சூழ்நிலையை அந்தப் பாடலோடு பொருத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் அப்பாடலின் பொருள் குறித்த இவ்வாய்வின் அடிப்படை தெளிவாகும்.

நல்ல நட்புக்கும் நல்ல காதலுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை. தூரத்தில் நல்ல நண்பன் வருகிறான். அதேபோல் நல்ல காதலி / மனைவி வருகிறாள். இருவரையும் நோக்கும் ஒருவன் தன் நண்பனைக் காண விழையும் அதே ஈர்ப்போடும் மனநிலையோடும் தான் பார்க்க முடிகின்றது என்பது இங்குக் குறிப்பிட வேண்டியதாகும்.

நன்றி: ஆய்வுக்கோவை

அகத்துறைத் தலைவனின் அளப்பருந் தகுதிகள்

முனைவர் சொ. மணிவண்ணன் சங்க காலத் தலைவன் தன்னிகரில்லாதவன் பெருமையும் உரனும் உயர்தகுதிகளாகக் கொண்டனர். தலைவனது தகுதியைத் தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆடுஉ மேன என்று கூறுகிறார். இந்நூற்பாவில் பெருமை என்பதற்கு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தரும்போது தலைவனுக்குரிய தகுதிகளாக அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தலாகிய பண்பு, நட்பு, பழி பாவம் அஞ்சுதல் ஆகியன அமைந்துள்ளனவாகக் கூறுகிறார். இவ்வியல்புகள், தலைவனிடம் விளங்கும் முறை பற்றிய விளக்கமாக இக்கட்டுரை அமைகிறது.

தலைவனுக்குரிய அறிவு

அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். தலைவன் இயல்பாக அறிவுத்திறன் மிக்கவனாக விளங்குகிறான் தலைவன் தன் உடல் வலிமையின் அடிப்படையில் போர்க்களத்திற்குச் சென்றாலும், தன்வலிமை, பிறன் வலிமை, துணை வலிமையினை அறிந்து செயல்படுவதற்கு அறிவே கருவியாக அமைகிறது. அதனால்தான் போர்வயிற் பிரிவை மேற்கொள்ளும் தலைவன் உடல் வலிமையோடு அறிவையும் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான். தலைவன் இயல்பைத் தொல்காப்பியர் அவன் அறிவு ஆற்றல் அறியும் என்று கூறுவதன் மூலம் தலைவனின் அறிவுடைமையும் அவ்வறிவாற்றலைப் புரிந்து கொண்டு செயல்படும் தலைவியின் சிறப்பும் ஒரு சேர உணர்த்தப் படுகின்றது.

ஆற்றல்

தலைவனுக்கு உடல் வலிமையாகிய ஆற்றல் மிகப் பெருஞ்செல்வமாகும். இவ்வாற்றல் புறவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மட்டுமின்றி அகவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைகிறது. போர்க்காலத்திலும் பொருள் தேடுவதிலும் தலைவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக செயல்படுகிறான். அரசனின் ஆணை ஏற்று போர்க்களத்தில் திறன் காட்டும் தலைவன் அன்பிற்குரிய தலைவியோடு நிறைவாக வாழ்வதற்கு வருவாய் ஈட்ட இடம் பெயர்ந்து பொருள் தேடுகிறான். வழியில் பாலை நிலக் கொடுமைகளை எதிர்கொள்கிறான். ஆறலைக் கள்வர்களின் அலைக்கழிப்பை புறந்தள்ளுகிறான். தலைவியை இரவுக் குறியில் காண வரும் போது வழியிடைக் காட்டுப் பகுதியில் கொடிய விலங்குகளால் ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாத ஆற்றல் தலைவனின் பெருமைக்குரிய தகுதியாக அமைகிறது.

புகழ்

''தோன்றிற் புகழோடு தோன்றுக'' என்னும் நன்மொழிக்கேற்ப தலைவனின் செயல்பாடுகள் சமூகத்தில் போற்றிக் கொண்டாடப்படும் நிகழ்வுகளாக அமைகின்றன. பிறப்பு, குடிமை, ஆண்மை, தோற்றம், செல்வம் என்று பல தகுதிகளால் காண்போரும், கேட்போரும் புகழ்ந்துரைக்கும் சிறப்போடு தலைவன் விளங்குகிறான். இருபெரு வேந்தர்களிடையே வேறுபாட்டினை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தும் தூதிற் பிரிவு தலைவனின் அறிவாற்றலை வெளிப்படுத்தி அனைவரின் புகழ்ச்சிக்கும் உரியதாகின்றது. ஊரைப் பாதுகாக்கும் கடமையைத் தலைவன் மேற்கொள்ளும் காவற் பிரிவும் உயர் தகுதி மிக்க தலைவனின் உன்னதமான புகழுக்குக் காரணமாக அமைகிறது.

கொடை

வள்ளண்மைத் தன்மையாகிய கொடையும் தன்னிகரில்லாத் தலைவனின் மற்றொரு தகுதியாகும். அறவோர்க்கு அளித்தலும் அந்தணரைப் பாதுகாத்தலும் துறவிகளுக்குத் தானம் தருதலும் என்று பலவகையான கொடைப் பண்புகளைத் தலைவி மேற்கொள்கிறாள். இத்தகைய தலையின் செயல்பாடுகளுக்குத் தலைவனின் துணை நிற்கும் பண்பே பெருங்காரணமாக அமைகிறது. தலைவிக்குப் புதல்வன் பிறந்த காலத்து தலைவன் தானம் வழங்குவது அவனது கொடைப் பண்பினை எடுத்துக்காட்டும் மற்றொரு நிகழ்வாகும். கோவலன் புதல்வியாகிய மணிமேகலை பிறந்தபோது அறவோர்க்கும் வறியோருக்கும் தானம் வழங்கியதையும், அவன் ''இல்லோர் செம்மல்'' என்று புகழப்பட்டதையும் இங்கு சான்றுகளாகக் கொள்ளலாம்.

ஆராய்தல்

தலைவன் ஆராய்ந்து அறிதலாகிய இயல்பில் சிறந்து விளங்குகின்றான். தலைவியோடு கொண்ட களவு வாழ்வில் இவ்வியல்பு தலைவனிடம் நன்கு வெளிப்படுகிறது. தலைவியைக் காட்சி என்னும் துறையில் காணும் தலைவன் அவளைத் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறான். அதே வேளையில் தலைவியின் மனதில் தன்னைப் பற்றித் தோன்றும் கருத்தினைத் தெரிந்து கொள்ள முயல்கிறான். தலைவியிடம் நேரடியாகப் பேசாமல் அவள் கேட்குமாறு வண்டை முன்னிலைப்படுத்தித் தன் காதலுணர்வினை வெளிப்படுத்துகிறான். இதனைக் கேட்கும் தலைவி அவனது எண்ணத்திற்கு இசைவுடையவளானால், குறிப்பாகவேனும் தன் காதலை வெளிப்படுத்துவாள், மேலும் களவு வாழ்வில் தடைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றை நீக்க தோழன், தோழியரைத் துணை கொள்ளும் பாங்கிலும் தலைவனின் ஆராய்தலாகிய இயல்பினைக் காணமுடிகிறது. புறக் கடமைகளை ஆற்றும் போது சிறப்பாகச் செயல்பட்டு செய்வினை முடித்த செம்மலாக தலைவன் விளங்குவதற்கும் ஆராய்தலாகிய இயல்பு பெரிதும் துணை புரிகிறது.

பண்பு

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதலாகும் இடமறிந்து செயல்பட்டு எந்நிலையிலும் சிறப்போடு விளங்குதலை பண்பென்று கூறுவர். தலைவன் தன் காதல் வாழ்விலும் புற வாழ்விலும் போற்றுதலுக்குரியவனாகத் திகழ்கிறான். தன்னிகரில்லாதவனாக தலைவன் பெருமை பெறுவதற்கு அவனது அறிவாற்றலும் உடல் வலிமையும் தோற்றச் சிறப்பும் மட்டுமின்றி பண்பாட்டுச் சிறப்பும் காரணமாகிறது.

நட்பு

ஒருவருக்கு ஆற்றல் அதிகமாயினும், துணை வலிமையின் பயன்பாடு, எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு பெருந்துணையாக அமைகிறது. களவு வாழ்வில் தலைவனுடைய நண்பனாகிய தோழன் இன்றியமையாத பாத்திரமாக அமைகிறான். இயற்கைப் புணர்ச்சியிலும் இடந்தலைப்பாட்டிலும் தலைவியோடு மகிழும் தலைவன் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளால் அவளைச் சந்திக்க இயலாது வாட்டம் அடைகிறான். அப்போது தோழன் துணை புரிகிறான். பாலைவனக் கொடுமையில் தவித்தவருக்குச் சுகம் தரும் சோலை நிழல் தருபவனாக தோழன் அமைகிறான். தலைவனையும் தலைவியையும் இணைத்து வைக்கும் தோழனின் எண்ணத்தைக் கூறி அதனை நிறைவேற்றி வைக்கும் அளவிற்குத் தோழன் செயல்பட அவனிடம் கொண்ட நட்பின் ஆழமே காரணமாக அமைகிறது. ''எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப'' என்று தன் நண்பனை தலைவன் அழைப்பதில் அவனது நட்பினைப் போற்றும் இயல்பு நன்கு உணர்த்தப்படுகிறது.

பழிபாவம் அஞ்சுதல்

தலைவன் தன் கடமையினை முடித்து மீண்டு வரும்போது வழியிடைக் காணும் காட்சிகளில் விலங்குகளும், பறவைகளும் இணை இணைகளாக இன்பம் துய்ப்பதைக் காண்கிறான். தலைவியோடு காணும் இன்பத்தில் பெரிதுவந்தவனாதலால் இன்ப வாழ்விற்கும் ஏற்படும் இடையூறு அடையக்கூடாது என்று எண்ணும் நன்மனம் கொண்டவனாகத் தலைவன் விளங்குகிறான். ஆதலால் அவன் அமர்ந்து செல்லும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் மணிஓசை இடையூறு ஏற்படுத்தும் என்று கருதி மணிகளை அகற்றச் செய்கிறான். இந்நிகழ்வு தலைவன் பழிபாவத்திற்கு அஞ்சுகின்ற மனித நேயப் பண்பாளனாக விளங்குவதை உணர்த்துகிறது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகத் தலைவன் காட்சி படுவதற்கு மேலே கண்ட இயல்புகள் பெருங் காரணிகளாக அமைகின்றன. தொல்காப்பியர் காட்டும் தலைவன், ஆண்மையின் அடையாளமாக பெருமை என்னும் சொல்லிற்கு உயிர்ச்சாட்சியாக விளங்கி, பழங்கால அகப்புற வாழ்வு நிலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் செம்மையான பாத்திரமாகத் திகழ்கிறான் என்று உறுதியாகக் கூறலாம்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக