15/02/2011

வண்ணதாசன் - நேர்காணல்

ண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்' எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது.


இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஷா வழங்கிய `பாவலர் விருது' மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி முதலிய விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.

மனைவி வள்ளி அவர்கள். பிள்ளைகள் சிவசங்கரி, நடராஷ சுப்ரமணியம். சிவசங்கரிக்குத் திருமணமாகி அர்ச்சனா என்ற மகள் உள்ளார். நடராஷசுப்ரமணியத்திற்கு ஜுலை (2009) மாதம் திருமணம். திருமண வேலைகளின் பரபரப்புக்கிடையில், அவரது மாறாத அன்பின் காரணமாகவே இந்த நேர்காணல். கல்யாண்ஜி திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

தீராநதி : உங்கள் கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் வேலை நிமித்தம் நீங்கள் வாழ்ந்த பல ஊர்களின் வரைபடங்களைக் கொண்டவை. அந்த ஊர்கள்  பற்றிய உங்கள் மனப்பதிவுகளைச் சொல்லுங்கள்.

வண்ணதாசன் : ஆமாம். நாற்காலிக் கால்களுக்கிடையே நசுங்கிக் கிடந்த சோற்றுக்கு அலையும் வாழ்க்கை. நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செட்டிகுறிச்சி மீண்டும் அம்பாசமுத்திரம் என இருபத்தாறு வருடங்கள். எல்லா ஊர்களிலும் எங்களுக்கு மனிதர்கள் கிடைத்தார்கள். அப்படி மனிதனும், மனுஷியும் கிடைத்ததால் எனக்குக் கதைகளும், கவிதைகளும் கிடைத்தன. எல்லா ஊர் வரைபடத்திலும் ஒரு சுடலைமாடன் கோயில் தெரு உண்டாகிவிடும்படி நாங்களும் நடமாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊரிலும் அதிகபட்சம் நான்கு, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள். அடுத்த ஊரில் காலை வைக்கையில் முந்தின ஊர் மறக்க முடியாததாகி இருக்கும்.

நிலக்கோட்டை பெரியார் காலனியும், அம்பாசமுத்திரம் திலகர்புரமும், மதுரை பி.பி. சாவடியும், சென்னை ராஜுநாயக்கன் தெருவும் அடுத்தடுத்து இருக்கிற ஒரு ஊரில் நாங்கள் இப்போதும் வசிக்கிறோம். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னால், எங்களுக்கு மதுரை வீட்டில் கூடமாட ஒத்தசையாக இருந்த சரசு, எங்களைப் பார்க்க ஆட்டோவில் வந்தாள். அப்போது ஏழோ, எட்டோ படித்துக் கொண்டிருந்த சக்திக்குக் கல்யாணமாகி ஒரு ஆம்பிளைப்பிள்ளை இருக்கிறான். நந்தியாவட்டைச் செடியின் கொப்பை அவன் ஒடித்துவிட்டான் என்று அர்ச்சனாவிற்கு ரொம்ப வருத்தம். தாத்தாவின் புகார்ப் புத்தகம் நிரம்பிவிட்டது.

தீராநதி : கல்யாண்ஜி என்ற பெயரைக் கேட்டாலே கலாப்ரியா, வண்ணநிலவன், விக்ரமாதித்தன் பெயர்களும் கூடவே நினைவில் வரும். இம் மூவருக்கும் உங்களுக்குமான உறவு எப்படியானது?

வண்ணதாசன் : கோபால் (கலாப்ரியா), நான் எல்லாம் ஒரே தெருக்காரர்கள். 21-ம் நம்பர் வீடும் 28-ம் நம்பர் வீடும் ரொம்ப தூரமா என்ன? இன்றைக்கு வரைக்கும் அவனுக்கு நான் கல்யாணி அண்ணன்தான். அவனுக்கு மட்டுமல்ல அவன் வீட்டுக்காரி சரஸ்வதி டீச்சருக்கும் நான் கல்யாணி அண்ணன். மகள் தரணிக்குக் கூட அப்படித்தான். எட்டயபுரம் வலைப்பக்கத்தில் அவன் எழுதுகிறதைப் படிக்கிறீர்களா? கதை, கவிதை எல்லாம் சும்மா. அசல் வாழ்வுக்கு முன் அவை ஒன்றுமே இல்லை.

நம்பிதான் (விக்ரமாதித்தன்) என்னைத் தேடிவந்து பார்த்த முதல் வாசகன். சுப்பு அரங்கநாதனும் அவரும் தீபத்தில் என்னுடைய `வேர்' கதையைப் படித்துவிட்டு வந்திருந்தார்கள். ரொம்ப அருமையான மனசு. எவ்வளவோ தாண்டி, எங்கெங்கோ காடா செடியாக அலைந்து, காடாறு மாசம், நாடாறு மாசம் என்று இருந்தாலும் பெண்டாட்டி, பிள்ளைகள் மேல் வைத்திருக்கிற பிரியம் அபாரமானது. புது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு, சமீபத்தில் ஒரு விடியக்காலம் கூப்பிட்டார். நான் பல்கூடத் தேய்க்கவில்லை. போய்ப் பார்த்தேன். பேசிக்கொண்டு இருந்தார். பேச்ச பூராவும் அவர் பையன் சந்தோஷ் பற்றித்தான். பெருங்குடியின் எச்சமாக மிஞ்சியிருக்கிற அவருடைய முகத்தின் மீது ஒரு பளபளப்பான எண்ணெய்ப்பசை மாதிரி `சந்தோஷ்' என்கிற பெயர் மினுங்கிக் கொண்டேயிருந்ததை, பக்கத்து இரும்பு இருக்கையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

எல்லாத்தையும்விட மிகப் பெரிய கலைஞன் ராமச்சந்திரன்தான் (வண்ணநிலவன்). அவரை அடிக்கடி சந்திக்கிற மாதிரி, அப்பப்போ அவர் வீட்டுக்குப் போகிற மாதிரி, சந்திராவையும் பிள்ளை களையும் பார்த்துப் பேசுகிற மாதிரி, ஒரே ஊரில் குடியிருக்கிற மாதிரி எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவரைப் பற்றி நிறையச் சொன்னால் ருசிக் குறைவு. கொஞ்சமா சொல்லணும். அல்லது ஒண்ணுமே சொல்லக் கூடாது. அவ்வளவு பெரிய ஆள் அவருடைய `பாம்பும் பிடாரனும்' தொகுப்பில் ஏழோ எட்டோதான் கதைகள் இருக்கும். அதில் உள்ள வரிகள் மாதிரி ஒரு வரியை நான் எழுதி விட்டால் போதும்.

தீராநதி : இப்போது வரை உற்சாகத்துடன் இயங்கி வரும் உங்கள் தந்தை தி.க.சிவசங்கரன் அவர்களைப் பற்றிய சிறு வயது நினைவுகளைக் கூறுங்கள்.

வண்ணதாசன் : என் சிறு வயது ஞாபகங்களில் அப்பாவின் நடமாட்டம் ரொம்பக் குறைவு. என் சிறு வயதை நிரப்பியவர்கள் எங்களின் அம்மாத் தாத்தாவும், அம்மாச்சியும், அம்மாவும், கணபதி அண்ணனும்தான். ஐந்தாம் கிளாஸ் வரைக்கும் எங்கள் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டுதான் ஸ்கூலுக்குப் போயிருக்கிறேன். நினைச்சுப் பார்த்தால் இப்போ கஷ்டமாகக் கூட இருக்கு. எங்கள் தெரு வழியாக, எங்கள் அப்பாவின் விரலைப் பிடித்துக் கொண்டு ஒரு தடவை கூட நானோ, எங்க அண்ணனோ நடந்து போனதே இல்லை.

ஒரு தடவை காதில் ஏதோ அழுக்குச் சேர்ந்து வலி வந்தது எனக்கு. அப்பா என்னை டாக்டரிடம் கூட்டிப் போனார். ஒரு பீச்சாங்குழல் மாதிரி ஒன்றை வைத்து, காது ஓட்டையாகப் போகிற மாதிரி, தண்ணீரைப் பீய்ச்சி அழுக்கை எடுத்தார்கள். போகிற பாதையில் ஒரு ஆளுயரத் தபால்பெட்டி சிவப்பாக நின்றது இப்போது ஞாபகம் வருகிறது. இன்னொரு தடவை 7-ம் வகுப்பு படிக்கும்போது போர்டில் ஸார் எழுதுகிறது சரியாகத் தெரியலை என்று சொன்னதும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற கண் டாக்டரிடம் கூட்டிப் போனதும் அப்பாதான். அந்த டாக்டர் பாடிக்கிட்டே வைத்தியம் பார்ப்பார். கண்ணுக்குள்ளே பாட்டரி லைட் அடிக்கும்போதும் அவர் பாடினார். அழிக்கம்பி போட்ட ஒரு மாடி அது. அங்கே அடித்த மருந்து வாசனையும், ஜெனித் ஆப்டிகல்ஸில் கண்ணாடி போட்டுக்கொள்ள உட்கார்ந்திருந்தபோது நுகர்ந்த ஒரு வாசனையும் இப்போ கூட மூக்கிலேயே இருக்கு. மூக்குக்கு, நாக்குக்கு எல்லாம் கூட தனித்தனியா ஞாபக சக்தி இருக்கும் போல. அதற்குப் பிறகு கொஞ்சம் வளர்ந்ததும், AFRICAN LION, LIVING DESERT  படத்துக்கு எல்லாம் அப்பா ரத்னா டாக்கீஸிற்குக் கூட்டிப் போனார். சாந்தாராமுடைய `ஜனக் ஜனக் பாபல் பாஜே' படத்துக்கும் அப்பாதான் கூட்டிப் போனார். அதுவும் ரத்னா டாக்கீஸில்தான். அப்பாவுக்கு அந்த ரத்னா டாக்கீஸ் பிடிக்கும் போல.

தீராநதி : தி.க.சி. அவர்களின் எழுத்துக்கள், அரசியல், பத்திரிகைப் பணி பற்றி ஒரு மகனாகவும் ஒரு எழுத்தாளராகவும் எப்படிக் கணிக்கிறீர்கள்?

வண்ணதாசன் : அப்படியெல்லாம் மகனாக, எழுத்தாளனாக எல்லாம் தனித்தனியாக, என்னால் அப்பாவைப் பற்றி மட்டுமல்ல, எதைப் பற்றியும் யோசிக்க முடியாது. நான் அப்படி யோசிக்கிறதுமில்லை. என்னைப் பொருத்தவரை தி.க.சி.ன்னா தாமரைதான். அதில் அப்பா செய்ததுதான். அதை அவரால்தான் செய்ய முடிந்தது. அதற்குப் பின்பு கூட அவரளவுக்கு வேறு யாரும் செய்யலை.

தீராநதி : சமீபத்தில் தி.க.சி. அவர்களைப் பற்றிய ஆவணப் படம் பார்த்தேன். அவரை மரியாதைப்படுத்தும் விதமாக அந்தப் படம் இருந்தது. நீங்களும் அந்தப் படத்தில் பங்கு பெற்றுள்ளீர்கள். அந்த ஆவணப் படம் பற்றிச் சொல்லுங்கள்.

வண்ணதாசன் : ஆமாம். அந்தப் படம் அப்பாவை மரியாதைப் படுத்தவே செய்தது. ஒரு ஆவணப்படம் எடுக்கப்படுவதும், அல்லது ஒரு ஆவணம் ஆவதுமே மரியாதைக்குரியதும் மரியாதை செலுத்துதலும் ஆனதுதானே. இதில் என்ன நல்ல விஷயம் என்றால், அதை எடுத்த ராஜகுமாரன் யார் என்றே முன்னே பின்னே தெரியாது. அவர் தமுஎச அல்லது கலை இலக்கியப் பெருமன்றம் சார்ந்தவரும் அல்ல. அமைப்பு அல்லது அரசியல் சார்ந்த அக்கறை எதுவும் அவருக்குக் கிடையாது. அவருக்குத் தோன்றியதும் ஆவணப்படுத்தியதும்தான், நீங்கள் குறிப்பிடுகிற, மரியாதை உணர்வு ஒன்று மட்டுமே காரணம் என்பதை நிச்சயப்படுத்துகிறது. ராஜகுமாரன் அவருக்குக் கிடைத்த ஆவணங்களின் தகவல்களின் அடிப்படையில், மிகச் சிரத்தையுடனும் அக்கறையுடனும் இதை எடுத்திருப்பதாகவே நினைக்கிறேன்.

இரண்டு நாட்களுக்குக் கேமராவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்து விட்டார். அப்போது அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. இனிமேல் வெறுமனே திரும்பிப் போகவும் ராஜகுமாரனால் இயலாது. கழனியூரன், கிருஷி, வள்ளிநாயகம் என்று நண்பர்களையும், தம்பி சேது, நான், என் தங்கை ஜெயா என்று குடும்பத்தினரையும் வைத்துக்கொண்டு எந்த அளவிற்கு அப்பாவைப் பதிவு செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டார். என்னையெல்லாம் விட, என்னுடைய தங்கச்சியின் பேச்சுதான் ரொம்ப இயல்பாக அப்பாவைப் பற்றிப் பேசுகிறது.

எடுக்கப்பட்டது போலவே, இது அமைப்பு சாராத பலரால் திரையிடப்-பட்டது என்று ராஜகுமாரன் சொன்னார். திருப்பூர் தமிழ்ச்சங்கம் கூட குறும்பட ஆவணப்பட வரிசையில் இதற்கு இம் முறை பரிசளித்திருக்கிறது என்பது அப்பாவை மட்டுமல்ல, இந்த ஆவணப்படத்தையும் மரியாதைப்படுத்துகிற விஷயம்தானே அய்யனார்.

தீராநதி : திருநெல்வேலி என்றாலே பிள்ளைமார் சாதியைத் தவிர்க்கமுடியாது. பல தமிழ் எழுத்தாளர்கள் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சாதிக்கும், எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

வண்ணதாசன் : பல இசைக் கலைஞர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல எழுத்தாளர்களாக அவர்களும், பிள்ளைமார்களும் இருந்தார்கள். அதெல்லாம் ஒரு காலம் வரை. அல்லது கல்வியறிவின் ஒரு கட்டம்வரை. மாரார்கள் செண்டை வாசிப்பது மாறி, உவச்சர்கள் மேளம் வாசிக்கிறது மாதிரி, எழுத்தும் சில பேர் கைகளுக்குள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அப்படியில்லை. எல்லாக் கலையையும் எல்லோரும் கற்கிறார்கள். அபாரமான வீச்சுடன் நிகழ்த்துகிறார்கள். தாண்டிச் சென்று சிகரங்களைத் தொடுகிறார்கள். வாழ்வுக்கும், எழுத்துக்கும் இடையில்தான் தீராத தொடர்பு. அந்த வாழ்வுக்கும் சாதிக்கும் தொடர்புகளிருக்கிறதென்பதால், எழுத்துக்கும் சாதிக்கும் தொடர்பு இருப்பது போல ஒரு இணையான கோடு விழுகிறது. ஆனால், அந்தக் கோடு சமூகத்தில் அல்லது அரசியலில் விழுந்து விட்டிருப்பவை போன்று, அழுத்தமானவையோ, அழிக்க முடியாதவையோ அல்ல.

தீராநதி : சாதி, மதம் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?

வண்ணதாசன் : இதுபோன்ற கேள்விகள் ஒரு படைப்புலகம் சார்ந்தஒருவனிடம் கேட்கப்படுவதில்கூட, ஏதோ ஒரு வகையில் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய வலியுறுத்தல் அல்லது தேவையற்ற நினைவூட்டல் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. இயல்பாகவே மற்றெல்லோரையும்விட, அடிப்படை அடையாளங்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறவனாகவே, எழுதுகிறவனும், வரைகிறவனும், இசைக்கிறவனும், செதுக்குகிறவனும், இருப்பான். எது நிலைக்க அவசியமற்றதோ, அதுபற்றிய நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் அவசியமில்லை. நான் ஒருபோதும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டின் சாதி அரசியலில், எழுத்தாளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அதிகபட்சம்.

தீராநதி : `தாமிரபரணி' ஆற்றை ஒரு mythஆக மாற்றுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

வண்ணதாசன் : தாமிரபரணியை மட்டுமல்ல எதையுமே mythஆக மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லை. எதுவுமே myth இல்லை. எல்லாமே நிஜம்.

தீராநதி : தாமிரபரணி ஆற்றை உங்கள் சிறு வயதில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்குமான அனுபவத்தைச் சொல்லுங்கள்.

வண்ணதாசன் : நல்ல வேளை, சிறு வயதிலாவது தாமிரபரணியை ஆறாகப் பார்த்தேன். ஆறு காணாமல் போய்விட்டது. ஆறு திருடப்பட்டுவிட்டது. தாமிரபரணி இப்போது ஆறு அல்ல; வாய்க்கால். குறுக்குத் துறையும், சுலோச்சனா முதலியார் பாலமும் சின்ன வயதில் மணலும் கல்மண்டமுமாய்த் தளதளத்துக் கிடக்கும். நிலவடிக்கிற இரவுகளில் ஆறு அசைந்தசைந்து தளும்பிச் செல்வதைப் பார்ப்பது ஒரு ஆன்மிகம். தேரசைவதும் ஆறு அசைவதும் தனித்தனி தரிசனம்.

மணலைக் கொள்ளையடித்தவர்களே, சீமைக்கருவேல விதைகளை விதைத்துவிட்டும் போயிருப்பார்கள் போல. கடன் கொடுத்தவனுக்குப் பயப்படுவது போல, ஆறு சீமைக்கருவேலுக்கு இடையில் ஒளிந்து ஒளிந்து போய்க் கொண்டிருக்கிறது. சைக்கிளிலிருந்து காலை ஊன்றிக்கொண்டு சுலோச்சனா முதலியார் பாலத்தில் நின்று ஆற்றுக்குள் ஒருத்தர் காறித்  துப்பினார். அவ்வளவு கோபம் இருந்தது துப்பலில்.

கோவில்பட்டிக்கு தமிழ்ச்செல்வன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகிற வழியில் தற்செயலாக, புறவழிச்சாலைப் பாலத்தின் கீழ் பார்த்தேன். ஏதோ போக்கு யானை போல இருக்கிறது. போக்கு ஆட்டோ, போக்கு ரிக்ஷா மாதிரி இது போக்கு யானை. சாய்ந்து ஆற்றுக்குள் அமிழ்ந்து படுத்திருந்தது. பாகன் தேய்த்துக் கொடுக்கக் கொடுக்க, அது சொக்கின பாறையாக தும்பிக்கை, தளர்த்திக் கிடந்தது. இது நிஜம் என்றே நினைக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் கேட்ட `myth' ஆக இருந்துவிடக்கூடாது சாமி.

தீராநதி : தாமிரபரணி ஆற்றில் காவல்துறை நடத்திய கொலைச் சம்பவத்தைக் கேட்டவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?

வண்ணதாசன் : அது காவல்துறை நடத்திய கொலையா? அவர்களை ஏவவும் தூண்டிவிடவும் எப்போதுமிருக்கிற அதிகாரம், அரசாங்கம், அரசியல் அதற்குப் பின் இப்போதும் இருக்கத்தானே செய்கின்றன. பத்திரிகைகளை விடவும் கிருஷி மூலமாகவும், ரஞ்சித் வாய்மொழியாகவும், தமிழ்ச்செல்வன் நேர்ப்பேச்சிலும், காஞ்சனை சீனிவாசன், கதிர் ஆகியோரின் ஆவணப் படங்களிலுமே இதன் தொடர்பான நிறைய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேற்சொன்ன இவர்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல என் சோகமும், கோபமும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்திக் கொண்டது போல என்னால் கூர்மையாகவோ, வெளிப்படையாகவோ முன்வைக்க முடியவில்லை. ரொம்பப் பிந்தி எழுதிய ஒரு கதையின் வரிகளுக்குள் அதை ஒளித்து வைத்திருக்கவே என்னால் முடிந்தது.

தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்' எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே?

வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.

ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்.

தீராநதி : உங்கள் முதல் கவிதைத் தொகுப்பான `புலரி', மறைந்த கவிஞர் மீரா அவர்கள் வெளியிட்ட அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்தது. அதில்தான் வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம், விக்ரமாதித்தன் எனப் பலருக்கும் முதல் கவிதை நூல் வெளிவந்தது. கவிஞர் மீரா அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகள்.

வண்ணதாசன் : அது எப்படி என்னை முதல் ஆளாக நவ கவிதை வரிசையில் வெளியிட மீரா தேர்வு பண்ணினார் என்று தெரியவில்லை. முன்னே, பின்னே பழக்கமில்லை. அறிமுகமில்லை. நான் திருநெல்வேலியிலிருந்து நிலக்கோட்டை போன புதுசு. பாரதி நூற்றாண்டில் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டது எவ்வளவு நல்ல விஷயம். தொகுப்புக்குத் தலைப்புக்கூட அவர்தான் தேர்வு பண்ணினார்.

அப்புறம் `முன்பின்', `அந்நியமற்ற நதி', `கனிவு', `நடுகை' எல்லாம் அவர்தான் வெளியிட்டார். எனக்கு மாத்திரமல்ல, இப்படி எத்தனையோ பேருக்குப் பண்ணினார். கி. ராஜநாராயணனை அவரை மாதிரி யார் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அருமையான மனுஷன். அன்னம், அகரம் இரண்டையும் பெங்குவின், பெலிகன் பதிப்புகள் மாதிரி நிலைநிறுத்தப் பிரயாசைப்பட்டார். அநியாயத்துக்குச் சீக்கிரமே போயிட்டார். அவருக்கு வெளியிட்ட நினைவு மலரில் உள்ள செழியன் கட்டுரையை உடனே வாசிக்க வேண்டும் போல இருக்கிறது.

தீராநதி : கி. ராஜநாராயணன் மணிவிழா (1983) மதுரையில் நடந்தபோதுதான், உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன். கி.ரா.விற்கும் உங்களுக்குமான பாசப்பிணைப்பு எப்படியானது?

வண்ணதாசன் : அநேகமாக உங்களுக்குத்தான் நான் முதன்முதல் அன்றுஆட்டோகிராஃப் போட்டேன் என்று நினைக்கிறேன். நான் கூச்சப்பட்டபோது பக்கத்தில் நின்ற மீராதான் `போட்டுக் கொடுங்க கல்யாண்ஜி' என்று தோளில் தட்டிக் கொடுத்தார். அமைச்சர் காளிமுத்து கலந்துகொண்டு வெளியிட வேண்டிய புத்தகம். அவர் வரமுடியாததால் நான் வெளியிட்டுப் பேசினேன். பேசியும் பழக்கம் கிடையாது. பேசத் தெரியாத பேச்சில் ஒரு களங்கமின்மை இருக்குமல்லவா. அப்படி, சோளக்காடு, வண்ணத்துப்பூச்சி, கி.ரா. மாமா என்று ஏதோ பேசினேன். `பிரமாதமா பேசனீங்க' என்று அதற்கும் மீரா பாராட்டினார்.

கி.ரா. எங்க அப்பாவுக்கு நண்பர். நண்பர் மட்டும்தான். எங்களுக்குத்தான் மாமா. அத்தை உறவு. எனக்குக் கல்யாணம் ஆகிறவரை என்னைப் பிடித்திருந்தது. கல்யாணம் ஆனபிறகு வள்ளியை ரொம்பப் பிடித்துப் போனதால் எனக்கு இரண்டாவது ரேங்க்தான். திருநெல்வேலி வீட்டுக்கு மட்டுமில்லை, நாங்கள் குடியிருந்த அம்பாசமுத்திரம், மதுரை வீட்டுக்கு எல்லாம் மாமா வந்திருக்கிறார்கள்.

மாமாவும், அத்தையும் மாதிரி சந்தோஷமான கணவன்-மனைவி அமைவது அபூர்வம். எப்பவும் சிரித்த மாதிரி, முகம் கோணாமல் வாழ அவர்கள் ரெண்டு பேரிடமும் படிக்க வேண்டும். இது படித்தால் எல்லாம் வந்துவிடாது. எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தவுடன் பாண்டிச்சேரியில் மாமா வீட்டுக்குப் போய் இரண்டு நாட்கள் இருந்தோம். இன்னும் இரண்டு நாள் இருக்கமாட்டோமா என்று இருந்தது. எல்லோரிடமும் மனது இப்படி ஒட்டாது. `அகம் புறம்' தொடர் முடிந்த பிறகு, மாமா ரொம்பப் பாராட்டி ஒரு நீளக் கடிதம் எழுதியிருந்தாங்க. அப்படியே கட்டிப்பிடித்து உச்சி முகர்கிற மாதிரி வரிகள். அதற்கெல்லாம் ஒரு கனிவு வேண்டும். மாமாவும், அத்தையும் வயசாக வயசாக அழகாகிக்கிட்டே போகிறார்கள் என்றால் அது அந்தக் கனிவினால்தான்.

தீராநதி : உங்களது `தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்' கதைத் தொகுப்பிற்கு சுந்தர ராமசாமி அவர்களிடம் முன்னுரை வாங்கியிருந்தீர்கள். அந்த முன்னுரையை, நூலின் இரண்டாம் பதிப்பில் சேர்க்காததற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டா?

வண்ணதாசன் : அது என்னுடைய இரண்டாம் தொகுப்பு. சுந்தர ராமசாமியின் மீதிருந்த மரியாதையால் அவரிடம் முன்னுரை கேட்டேன். மறுக்கவில்லை. கேட்டுவிட்டேனே என்று ஒப்பேற்றவும் இல்லை. ஒருபோதும் அவர் அப்படிச் செய்யவும் மாட்டார்.

என்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் ஒன்றிரண்டு சொல்வார் என்று விரும்பியிருப்பேனில்லையா. அவருக்கு என் கதைகள் அந்தத் தூண்டுதலைத் தரவில்லை போலும். உங்களுக்குத்தான் தெரியுமே. ரொம்பவும் கறாரான அபிப்ராயங்களை அவரால் சிரித்துக்கொண்டே சொல்லமுடியும். இது நகைச்சுவையா, கிண்டலா என்று தீர்மானிப்பதற்குள், கத்தியின் கூர் பாதிப்பழத்திற்கு மேல் இறங்கியிருக்கும். அவருடைய அபிப்ராயம் சரியாக இருக்கலாம். அதை வேறு மாதிரியாகச் சொல்லியிருக்கவும் அவரால் முடியும். யார் தாங்குவார்கள். யார் வலி தாங்கமாட்டார்கள் என்று அவர் தெரியாதவரல்ல.

இந்த வலியைத் தவிர்த்துக்கொள்ளவே அவருடைய முன்னுரையை இரண்டாம் பதிப்பில் தவிர்த்தேன். நான் செய்த தப்பு, இதைத் தொகுப்பு வருவதற்கு முன்பு அவருக்குத் தெரியப்படுத்தாததுதான். அந்தக் குற்றவுணர்வு இப்போதும் எனக்கு உண்டு.

தீராநதி : இப்போது மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தேவதச்சன் அவர்களின் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வண்ணதாசன் : எனக்குப் பிடித்த மூத்த கவிஞர்களின் குழுவில் சுகுமாரனும் சமயவேலும், தேவதச்சனும் கலையாமல் இருக்கிறார்கள். தர்க்கமும் ஒரு வன மரத்தின் ஒளிமைய நாட்டமிக்க கிளைகள் போலப் பிரிந்து பிரிந்து அடர்ந்தும் கவிந்தும் நிற்கிற தத்துவமுமாக அறியப்படுகிற அவரின் கோவில்பட்டி குரல் வேறு. அவருடைய கவிதைகளின் குரல் வேறு. ஆனால் சாராம்சம் ஒன்றுதான். அவருடைய `கடைசி டினோசார்' தொகுப்பை வாசிக்குமாறு நான் என் நண்பர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி வாசிக்கக் கொடுத்த அந்தத் தொகுப்பின் பிரதி திரும்ப வராததால் மீண்டும் ஒரு பிரதி வாங்கினேன். அதற்கப்புறம் ஒரு தொகுப்பு `யாருமற்ற நிழல்' என்று வந்துவிட்டதெனினும், என்னைப் பொருத்தவரை `கடைசி டினோசார்தான்' அவருடைய சமீபத்திய தொகுப்புப் போல, என் வாசிப்பின் அண்மையில் இருக்கிறது. அதனுடைய நிழல் அல்லது வெ்யிலில் அவ்வப்போது நிற்கிறதுண்டு. தேவதச்சனை, தொடர்ந்து எடுத்துக்காட்டுகிற எஸ். ராமகிருஷ்ணனைப் போன்று, எனக்கு நானே மேற்கொள்கிற கவிதைகளை, நானும் ஆறுமுகத்திடம் கண்டுகொண்டிருக்கிறேன்.

தீராநதி : இலக்கியம் சார்ந்த உங்கள் மறக்க முடியாத நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

வண்ணதாசன் : நட்பு சார்ந்தவர்களே நண்பர்கள். அந்த நண்பர்களில் சிலர் இலக்கியம் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ராமச்சந்திரன், ந. ஜயபாஸ்கரன், பாவண்ணன், லிங்கம், இளையபாரதி, சாம்ராஜ் என்று உடனடியாகச் சிலரைச் சொல்லலாம்.

தீராநதி : உங்களது நூல்களைச் சமர்ப்பணம் செய்துள்ளவர்கள் பற்றி.

வண்ணதாசன் : இருபது, இருபத்தொன்று எல்லாம் போதாது. நூற்றுக்கணக்கில் `இன்னார்க்கு சமர்ப்பணம்' என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். கி. ராஜநாராயணமாமா, கணவதி அத்தை, கணபதி அண்ணன், ராமச்சந்திரன், சமயவேல், நம்பிராஜன் இவர்களுக்கெல்லாம், சமர்ப்பணத்தைவிட, அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்.

தீராநதி : இலக்கிய எழுத்தாளர்கள் வெகுஜன இதழ்களில் எழுதுவதைப் பாவமாகக் கருதிய காலம் ஒன்றிருந்தது. `ஆனந்த விகடன்' இதழில் நீங்கள் எழுதிய `அகம்-புறம்' கட்டுரைத் தொடருக்கு எப்படியான வரவேற்பு இருந்தது?

வண்ணதாசன் : இலக்கியப் பத்திரிகையில் எழுதுவது புண்ணியம் என்றோ வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவது பாவம் என்றோ, எழுதுகிறவன் ஒரு காலத்திலும் கருதியிருக்கமாட்டான். எழுத்தாளனுக்குப் பொதுவாகச் சம்பாதிக்கவே தெரியாது. இதில் எங்கே அவன் பாவத்தையும், புண்ணியத்தையும் சம்பாதிக்க.

என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, யாரைப் பொருத்தவரையுமே, இதற்கு ஒன்று, அதற்கு ஒன்று எனத் தனித்தனி பேனா வைத்துக்கொண்டு எழுதியதில்லை. நான் இதுவரை எழுதிய நூற்றுமுப்பது கதைகளில் அதிகபட்சம் இருபதுகூட `குமுதம்', `குங்குமம்', `கல்கி', `விகடனி'ல் வந்திருக்காது. அந்த இருபது கதைகள் என்னைக் கழுவேற்றவுமில்லை. மீதிக் கதைகள் கோபுரத்திலேற்றவுமில்லை. ஆனால் நிறையப்பேரை அவை அடைந்தன.

சிறகுகள் விலாப்புறத்தில் முளைக்கும், நடேசக் கம்பரும் அகிலாண்டத்து அத்தானும், அப்பாவைக் கொன்றவன், பெய்தலும், ஓய்தலும், ரதவீதி போன்ற சிறுகதைகள் அடைந்த வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். அதிகம் அடைதல் என்பது அதிகம் தொடுதல். அதிகம் பற்றிக்கொள்ளல். நான் அய்யனாரை, ஆனந்த புத்தனை, உங்கள் மேலூர் வீட்டுக்கு அடையாளம் சொன்ன தெருவுக்குப் பலசரக்குக் கடைக்காரரை, அவரது அடையாளத்தின் பின்னிணைப்புப்போல, கையில் வாங்கி வந்த கடைச்சாமானுடன், விலகி வந்து தெருவின் இடப்புறம்வரை நீள்வது போலக் கையசைத்து விவரம் சொன்ன, வெளிர் சிவப்பு சேலைப் பெண்ணை எல்லாம் தொட விரும்புகிறேன். எழுத்து அதற்கான விரல்களைத் தர விரும்புகிறேன்.

விகடனில் வந்த `அகம் புறம்' அதை நிறையவே செய்தது. இதற்கு முன்பு என்னை முந்நூறு பேர் படிப்பார்கள் எனில் இப்போது மூவாயிரம் பேர் படித்தார்கள். நேரில், தொலைபேசியில், கடிதங்களில் பகிர்ந்து கொண்டார்கள். புத்தகக் கண்காட்சியில்கூட, இந்த வருடம் புதிய வாசகர்கள் என்னுடைய பழைய புத்தகங்களைக் கேட்டு வாங்கியதாக, சந்தியா பதிப்பகத்தில் சொன்னார்கள். நேர் எதிராக ஒன்றும் நடந்தது. எப்போதாவது ஒன்றிரண்டு முறை என் சிறுகதையோ கவிதையோ நன்றாக வந்திருக்கிறது என்று சொல்கிற சகாக்கள், இறுக்கமாக வாயை மூடிக் கொண்டார்கள். `களக் களக்' என்று கொத்துக் கொத்தாய்க் குளத்து மீன்கள் புரள்கிறது என்று சந்தோஷப்பட்டால், தெப்பக்குளத்துப் படிக்கட்டுப் பாசிகள் இப்படி ஒரேயடியாக ஆளைவாரி விட்டுவிடுகிறது என்ன செய்ய.

தீராநதி : உங்கள் கவிதை, கதை எந்தப் புள்ளியிலிருந்து மனதில் உருவாகத் தொடங்கும்?

வண்ணதாசன் : இதே கேள்வியை முன்பு ஒருமுறை கேட்டபோதும் எனக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. தெரியவில்லை. கேள்வி எந்தப் புள்ளியிலிருந்து உருவாகியிருக்கிறது என்று புரிந்தால்தானே பதில் சொல்லமுடியும். அநேகமாக அனுபவங்களிலிருந்து, அனுபவங்கள் உண்டாக்குகிற நெகிழ்ச்சியிலிருந்து சில சமயம் காயங்களிலிருந்து இன்னும் சில, `அட... என்ன வெளிச்சம்' என்றும், `எவ்வளவு இருட்டு' என்றும் ஒரு மினுக்கட்டாம்பூச்சி பறக்கிற நிலையிலிருந்து எல்லாம் உருவாகத் துவங்குகிறது என்று சொல்லலாமோ. சமையல்கட்டில் தவறிவிடுகிற டம்ளரின் ஓசையிலிருந்து உங்களுக்குப் பாடத் தோன்றும் எனில், கரண்ட் போய் கரண்ட் வந்தவுடன், தன்னையறியாமல் விளையாட்டுக் குழந்தைகள் `ஹோ' என்று கத்துகிற கத்தலிலிருந்து எனக்கு எழுதத் தோன்றும்.

தீராநதி : உங்கள் கதைகளில் வெளிப்படும் பெண்கள் மீதான அக்கறை மிகவும் முக்கியமானது. எப்படியான சூழலில் பெண்களின் துன்பங்கள் உங்களைப் பாதிக்கிறது?

வண்ணதாசன் : அடிப்படையான உளவியல் காரணம் எனில், பெண்களே அதிகமிருந்த ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் மத்தியில், அம்மாவாலும், அம்மாச்சியாலும் நான் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டதே என்று சொல்லவேண்டும். இப்போது அல்லவா பெண்கள் இவ்வளவு உரக்கவும், இவ்வளவு வெளிப்படையாகவும் சிரிக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்பு எல்லாம் பெண்கள் உரக்க அழுவதையும், உரக்கச் சண்டை போடுவதையும்தானே அதிகம் பார்க்கமுடியும்.

அன்பைத் தவிர வேறு எந்தத் தோளுமற்று, சதா ஒரு பூப்பந்தைப் போல அன்பை மட்டுமே தங்களின் ஒவ்வொரு கைக்குள்ளும் இருந்து மற்றவர் கைகளுக்குக் கடத்திக் கொண்டிருக்கிறவர்கள்தானே அவர்கள். அதனால்தானே மார்கழி மாதங்களில் பீர்க்கன் பூவுக்காகவும், பூசணிப் பூவுக்காகவும் பனிக்கூடாக அவர்கள் அலைந்தார்கள். பொருட்காட்சி பார்க்கப்போவது, ராட்சஸ ராட்டினம் பக்கத்தில் நின்று அண்ணாந்து பார்ப்பது அவர்களுக்கு எவ்வளவு பெரிய விடுதலையாக இருந்தது. வாசலில் செருப்புச் சத்தம் கேட்டால், கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்து போகிற, பக்கத்து வீட்டு முத்தக்காக்களுடன் மீதிப் பேச்சை குஞ்சம்மா மதினிகள் என்றைக்குப் பேசி முடித்தார்கள்.

பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.

தீராநதி : கண்ணதாசன், நடை, தீபம், கணையாழி முதல் மீட்சி, இன்றைய உயிரெழுத்து வரையிலான சிற்றிதழ்களில் எழுதியுள்ளீர்கள். இன்றைக்கு வெளிவரும் இலக்கிய இதழ்கள் பற்றிய வெளிப்படையான உங்கள் அபிப்ராயம் என்ன?

வண்ணதாசன் : அப்போதைய சிற்றிதழ்கள், இப்போதைய நடுநிலை இதழ்கள் இரண்டிலும் நோக்கங்களிலும் செயல்பாட்டிலும் பெரிய வேற்றுமைகளில்லை. முன்பைவிட பொருளாதாரச் சிரமம் இப்போது எதுவுமில்லை. விளம்பரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். பதிப்பில் வடிவமைப்பில் எல்லாம் கணினியமான துல்லியம். எல்லாம் இருந்தும், பெருமளவில் அவரவர்க்கென்றே இருக்கிற குழுக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட அவரவர் இதழ் சார்ந்து பதிப்பகங்களும் இருப்பதால், ஒருவர் கோட்டையில் இன்னொருவர் நுழைய முடியவில்லை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எவரையும் சந்தேகிக்க முடியாதபடி, எல்லோரும் மிகச் சரியான அக்கறையுடன், மொழியையும், கலை இலக்கியத்தையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தீராநதி : இப்போது வெளிவரும் ஒரு படைப்பாளியின் மொத்தக் கதைகள், மொத்தக் கட்டுரைகள், மொத்த நாவல்கள் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

வண்ணதாசன் : பதிப்புத்துறை வளர்ச்சியின் தரமான உடன் விளைவுகளில், இந்த மொத்தத் தொகுப்புக்களும் ஒன்று. ஒரு படைப்பாளியின் தொகுப்பு, அவன் வாழ்கிற காலத்திலேயே மொத்தமாகப் பதிப்பிக்கப்படுவது வரவேற்புக்கு உரியதுதானே. 2000-01-ல் என்னுடைய வண்ணதாசன் கதைகளும், கல்யாண்ஜியின் கவிதைகளும் மொத்தமாகத் தொகுக்கப்பட்டபோது, அதற்கு முன்பையும்விட, நானும் என் எழுத்தின் சாயலும் சரியாகக் காணப்பட்டன என்பது நிஜம். உதிரிகளைவிட மொத்தம் எப்போதுமே பலம்தானே. பலம் மட்டுமல்ல அழகு கூட.

தீராநதி : கடிதம் என்பது ஒவ்வொருவருக்குமான அந்தரங்கம் சார்ந்தது. நீங்கள் பிறருக்கு எழுதிய கடிதங்களை நூலாக்கம் செய்தது சரிதானா?

வண்ணதாசன் : நான் கடிதம் எழுதுகிறவன். அது அந்தரங்கமானது, எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. கடிதம் பெறுகிறவர்களில் சிலருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மதுரை ந. ஜயபாஸ்கரனுக்குத் தோன்றியதால் அவர் கடிதங்களை அனுப்ப இயலவில்லை. நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள் போல. உங்களுக்கு அந்த உரிமை உண்டு. என்னைப் பொருத்தவரை, நஞ்சப்பனின் ரவிசுப்ரமணியனின் முயற்சியில், என் கடிதங்களில் ஒரு சிறு பகுதி நூலாக வெளிவந்ததில் சந்தோஷமே. சந்தோஷம் சரி, தப்பு எல்லாம் பார்த்து வருமா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

தீராநதி : எழுத்தாளர் இராகுலதாசனுக்குத்தான் அதிகக் கடிதங்கள் எழுதியுள்ளதாக ஒரு இதழில் சொல்லியிருந்தீர்கள். எப்போதிருந்து அவருக்குக் கடிதங்கள் எழுதினீர்கள்?

வண்ணதாசன் : ராகுலதாசன் என்கிற மு. பழனி இராகுலதாசனைக் கிட்டத்தட்ட 50 வருடங்களாகப் பழக்கம். அப்போது நான் ட்டி.எஸ். கல்யாணசுந்தரம். அவர் மு. பழனி. நான் தினத்தந்தியில் சிரிப்புப் படங்கள் வரைந்து கொண்டிருந்தேன். 1959-60-ல் ஐந்து ரூபாய் மணி ஆர்டரில் வருவது ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுக்கு எவ்வளவு பெரிய விஷயம். அதைப் பார்த்துவிட்டுத்தான் பழனி கடிதம் எழுத ஆரம்பித்தார். சோழவந்தான் பக்கம் நெடுங்குளத்துக்காரர்.

வாழ்க்கை எந்தப் பக்கம் யாரை இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று சொல்ல முடியாது. நான் படிப்பில் விழுந்து, எழுந்திருந்து, பாங்க் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருக்க, அவர் தமிழ் படித்துப் பேராசிரியராகி, சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று தேவகோட்டையில் இருக்கிறார். அவருடைய பழைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது எடுத்ததாக இருக்கும். மனசு மாதிரி முகம். தூசு தும்பு இல்லாமல் துடைத்து வைத்தது மாதிரி இருக்கும். மீசை கூடக் கிடையாது. அவர் தேவர் என்பதை சமீபத்தில் அறியும்போது, மீண்டும் மீண்டும் ஒரு பெரிய மீசையை அவர் முகத்தில் ஒட்ட வைத்துப் பார்த்தேன். ஒட்டுவேனா என்று மீசை கடைசிவரை மறுத்துவிட்டது.

பொதுவுடைமையிலும் ஈடுபாடு. புத்தரிடமும் ஈடுபாடு. வள்ளுவரும், வள்ளலாரும் அவரைப் பொருத்தவரை வேறு வேறு ஆட்களில்லை. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் போன மாதம் `ஷ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்' பற்றி எழுதியிருக்கிறார். எதிலுமே ஆழ்ந்த படிப்பில்லாமல் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளத் தவிக்கிற என்னுடைய இந்த அறுபத்து மூன்றாம் வயதில், அவருடைய இந்த இடம் எனக்கு முக்கியமாகப் படுகிறது. எப்போதும் உள்ளே ஒரு நீரோடை பாய்ந்து கொண்டிருக்கும் போல அவருக்கு.

இந்த ஐம்பது வருடங்களிலும், மீராவின் பையன் கதிர் கல்யாணத்தில் மட்டுமே நாங்கள் ஒருவரை ஒருத்தர் பார்த்துப் பேசியிருக்கிறோம். இது எங்களின் ஐம்பது வருடங்களை மேலும் அழகாக, வாடாமல் வைக்கும் ஒரு நிகழ்வாகிவிட்டது. மூச்சை இழுத்தால், ஒரு வாசனை மாதிரி, கதிர் கல்யாணம் இராகுலதாசனுடன் நிரம்புகிறது.

தீராநதி : இப்போது எழுதும் இளைஞர்கள் முதல் தொகுப்பிலேயே தங்களை நிரூபித்து விடுகிறார்கள். மூத்த படைப்பாளியான நீங்கள் இன்றைய இளைஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வண்ணதாசன் : முதல் தொகுப்பு என்ன, முதல் கதையிலேயே அருமையாக எழுதுகிறவர்கள் தென்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லத்தான் ஆளில்லை. கீரனூர் ஜாகிர்ராஜாவும், கண்மணி குணசேகரனும், சு. வேணுகோபாலும், லட்சுமணப் பெருமாளும், பவா.செல்லதுரையும், காலபைரவனும், ஷ்ரீராமும், திருச்செந்தாழையும், சந்திராவும் இன்னும் எத்தனையோ பேரும் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்துகொண்டே இருக்கிறார்கள். கூடுமானவரைப் புதிதாக எழுதுகிறவர்களின் கதை, நாவல் புத்தகங்களை ரொம்ப ஆசையோடு வாங்கிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மனுஷன் எத்தனை ரூபாய்க்குத்தான் புத்தகம் வாங்கிவிட முடியும். நான் நான்கு வாங்க, நீங்கள் நான்கு வாங்க என்று யாராவது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி யாரும் பக்கத்தில் இல்லை. அல்லது இருக்கிறவர்கள் பக்கத்தில் நான் போகவில்லை. எழுத்தைப் பொருத்தும்கூட ஒன்றிரண்டு புதுப்பையன்கள் பக்கத்தில் நான் போகமுடிவதில்லை. அல்லது அவர்கள் எழுதுகிற விதம் என்னைப் பக்கத்தில் வரவிடுவதில்லை. எங்கள் வீட்டு நடையை விட்டு இறங்கி நாலு எட்டில் போய்ப் பார்த்துவிடும் தூரத்தில் இருக்கிறது புங்கைமரம். அதனுடைய நிழலில் நின்றுகொண்டிருக்கிற ஒரு மனுஷியைப் பார்க்க, நான் தெருக்களைச் சுற்றிக் கூட்டிக்கொண்டு போகிறார்கள் இவர்கள். மழை பெய்ததும் துளைத்துக்கொண்டு மேலே வருகிற மண்புழுக்கள் மாதிரி, இந்த வாழ்வும் மொழியும் மிக எளிதாகத் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறது. எட்டு எட்டேகால் மணி வெயிலில் அநேகமாக, இவ்வளவு நீளப் பாம்பு ஒன்று, இப்படி இரண்டு கை பாகம் இருக்கும். தெற்கே முள்ளுக்காட்டிலிருந்து கிளம்பி, தார் ரோட்டை க்ராஸ் பண்ணி, வடக்குப் பக்கத்துக் கல்வெட்டாய் குழிப் புதருக்குள், தினசரி போகிறது. ஒரு அவசரமும் அதுக்கு இல்லை. யாருக்கும் இடைஞ்சலும் இல்லை. அதுபாட்டுக்குப் பளபள என்று போகிறது. நான் முன்பு சொன்ன `ஊர்ந்து கொண்டே இருக்கும் உயிரின் அழகு' அதுதான். அப்படி மொழி இருந்தால் போதும். அனாவசியமாகப் படம் எடுத்து ஆட வேண்டியதில்லை.

தீராநதி : 90-களில் சுபமங்களா நேர்காணலில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். இன்று எப்படிப் பார்க்கிறீர்கள்?

வண்ணதாசன் : சுபமங்களா பேட்டி வந்த சமயம், `என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பு மட்டும் வெளிவந்திருந்தது. அப்போது அவருடைய `கால்களின் ஆல்பம்' பற்றி எல்லோரும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு நல்ல கவிதையாகப் படவில்லை. இப்போதுகூட அப்படித்தான். அதைவிட வரவர அவர் எவ்வளவோ அருமையான கவிதைகளைப் பின்னால் எழுதியிருக்கிறார். அவருடைய பிந்தைய தொகுப்புக்கள் `நீராலானது', `கடவுளிடம் பிரார்த்தித்தல்', இன்னொன்றுகூட உண்டு. மணல் பிரதியா... அதனுடைய அருமையான முகப்புப் படம் ஞாபகம் வருகிறது... கரெக்ட். `மணலின் கதை' அவற்றையெல்லாம் நான் விருப்பத்தோடு வாசிக்கிறேன். சமீபத்திய `உயிர்மை' இதழில் வெளிவந்திருக்கிற `வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி', `சிநேகிதியின் கணவர்கள்'இரண்டும் அதனதன் அளவில் அருமையானவை. ராமச்சந்திரன் எழுதிய `மனைவியின் நண்பர்' சிறுகதை எவ்வளவு நுட்பமானதோ, அந்த அளவுக்கு நுட்பமானது மனுஷ்யபுத்திரனுடைய `சிநேகிதியின் கணவர்கள்' கவிதையும். எல்லோரும் வாழ்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம். என்றைக்கோ கல் தட்டுகிறது. நகம் பெயர்கிறது. அதனால் என்ன மீண்டும் நகம் வளர்ந்துவிடுகிறதே. அதிலும் இந்தக் கால் பெருவிரல் நகம் கொஞ்சமா அடிபட்டிருக்கும். தன் ரத்தம் கசிந்து உலர்வதையும், ஓடுகிற ஆற்றில் அமிழ்த்தும்போது அது நீரில் புகையாகிப் பரவுவதையும் பார்க்கிற நேரம் முக்கியமானது. ஒரு தியானப் பொழுது அது.

தீராநதி : அர்ப்பணிப்பு உணர்வுடன் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் மதிக்கப்படுவதில்லையே?

வண்ணதாசன் : மொழிபெயர்ப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டாடப்படவில்லை. மொழிபெயர்ப்புக்களை அங்கீகரிப்பதையே மொழிபெயர்ப்பாளர்களை அங்கீகரிப்பதாக எடுத்துக்கொள்வதுதான் எல்லா மொழிகளிலும் நிலைமை என்றே தோன்றுகிறது.

தீராநதி : மொழிபெயர்ப்புக்கள் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கிறது. உங்களுக்குப் பிடித்தமான மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி...

வண்ணதாசன் : மாஸ்கோ அயல்மொழிப் பதிப்பகம், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட நல்ல மொழிபெயர்ப்புக்களின் பட்டியலை 70-களில் நம்பிராஜன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவை தவிர, 2009 ஜனவரி வரை வாசிக்கக் கிடைத்த மொழிபெயர்ப்புக்களின் பட்டியல் மிக நீண்டது. அதில் தலையாயதாக, `நீலகண்டப் பறவையைத் தேடி' எப்போதும் இருக்கும்.

மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்குள் புதிது புதிதாக உண்டாக்குகிற மனதின் பூகோளங்களும், அந்தப் பூகோளங்களின் தட்பவெட்பம் சார்ந்து நாம் உடன் வாழத் தலைப்படுகிற மனிதர்களும் வசீகரமானவை. ஜமீலாவாகவும், பீட்டர்ஸ்பர்க் நாயகனாகவும் மாறியபடி வெண்ணிற இரவுகளில் அந்நியனாகவோ மதகுருவாகவோ அடுத்தடுத்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட மனநிலைகளும் எனக்கு முக்கியமானவை. அந்த வாசிப்புகளுக்குப்பின், என் எழுதுகணங்கள் மட்டுமல்ல வாழ்கணங்களே, முன்பைவிடச் செறிவடைந்திருக்கின்றன. சிக்கலடைந்ததும் இல்லாமல் இல்லை.

தீராநதி : உங்கள் குடும்ப வரைபடம் எப்படி இருக்கும். மூதாதையர்களின் பூர்வீகம் எது?

வண்ணதாசன் : வம்ச விருட்சம். குடும்ப வரைபடம் அப்படியொன்றும் என்னிடமில்லை.சீவலப்பேரியின் பக்கத்து கிராமமான குப்பக்குரிச்சியிலிருந்து பலசரக்குக் கடை வேலை பார்த்தவர் என் பூட்டனார், அதாவது எங்கள் அப்பாவின் அப்பாத்தாத்தா கு. சிவசங்கரன் பிள்ளை. அப்பாவுக்கு அந்தத் தாத்தா பெயர்தான். அப்பாவையும், அம்மாவையும் தன் 5 வயதுக்குள் இழந்து, தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தவர் அப்பா. ஒரு வசதியான குடும்பத்துப் பேரனான அப்பாவுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சார்பு ஏற்பட, இப்படிச் சின்ன வயதில் அப்பா-அம்மா இல்லாமல் வளர்ந்ததன் உளவியல் ஏதாவது செலுத்தியிருக்குமோ என்று தோன்றுகிறது. அப்பா, சித்தப்பா, அத்தை. எங்கள் அம்மா தெய்வானை அம்மாள். எங்கள் தெரு மொத்தத்துக்கும் தெய்வக்கா. அப்பாவுக்கு முறைப்பெண்தான். அப்பா கூடப்பிறந்த அக்காளின் மகள். நாங்கள் ஆறு பேர். மூன்று ஆண். மூன்று, பெண். கி.ரா. மாமா அட்வைஸில் அப்பா குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டது, அந்தச் சமயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குடும்பத்துக்குள். படித்து வேலைக்குப் போய், கல்யாணம் ஆகி, ஓரளவுக்கு நன்றாக இருக்கிறோம். உங்களுக்குத்தான் சங்கரியையும், ராஜுவையும் நிலக்கோட்டை நாட்களிலேயே தெரியுமே. சங்கரிக்குக் கல்யாணமாகி பெங்களூரில் இருக்கிறாள். மாப்பிள்ளை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர். பேத்தி அர்ச்சனாவிற்கு ஏழு வயதாகிறது. மகன் நடராஜும் பெங்களூரில்தான் வேலை பார்க்கிறான். ஜூலை ஒன்பதில் கல்யாணம். பத்திரிகை அனுப்புவேன். வந்திருங்க.

தீராநதி : உங்கள் வாழ்வின் படிப்பு, பணி, ஓய்வு காலங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வண்ணதாசன் : பத்தாங்கிளாஸ் வரை படிப்பு வந்தது. பிரைஸ் எல்லாம் வாங்குவேன். அப்புறம் ஏதோ கிறுக்குப் பிடித்துவிட்டது. ஒன்றும் சரியாகப் போகவில்லை. பி.யூ.சி.யில் செலக்ஷனே கிடைக்கவில்லை. அப்புறம் பி.காம்., படிப்பில் சேர்த்தார்கள். அக்கவுண்டன்சி வரவே இல்லை. ஹைஸ்கூலில் காம்போஸிட் மேத்ஸ் வராது. அல்ஜீப்ரா, லாக்ரிதம், தியரம் என்றால் தூக்கம் வராது. அதே மாதிரிதான் டிகிரி படிப்பிலும். இரண்டு தடவை எழுதி பாஸ் பண்ணினேன். ஒன்றே முக்கால் வருஷம் கழித்து ஸ்டேட் பாங்க் பரீட்சைக்குத் தேர்வு எழுதினேன். நல்ல மார்க். இண்டர்வியூக்குக் கூப்பிட்டார்கள். அப்படி என்ன பேசினேன் என்று தெரியாது. என் ஆங்கிலம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி எந்த ஸ்கூலில் படித்தேன் என்று கேட்டார்கள். வேலை கிடைத்தது. இதற்குள் எழுதி எழுதி கவனத்திற்கு வந்துவிட்டேன். `கலைக்க முடியாத ஒப்பனைகள்' வந்துவிட்டது. பாங்க் பரீட்சை சிகிமிமிஙி என்று உண்டு. பாஸ் பண்ணினால் மூன்று இன்க்ரிமென்ட். நான் முதல் பார்ட்டே தேறவில்லை. அதிலும் அக்கவுண்டன்ஸி உண்டே. என்ன பண்ண.

2006-ல் ஆகஸ்ட் மாதத்தோடு ஓய்வு. பெரும்பாலும் படிப்பு.  எப்போதாவது எழுதுவது. நிறைய அயல் திரைப்படங்கள் பார்ப்பது என்று போகிறது. உங்களுடையது மட்டுமில்லை; காஞ்சனை மணி, சாம்ராஜ், ஹரீந்திரன், பாண்டியராஜ் எல்லோருக்கும் திருப்பிக் கொடுக்கவேண்டிய சி.டி.க்கள் என்னிடமே தங்கிவிட்டன. வெட்கமா இருக்கு. திருப்பிக் கொடுத்திரணும்.

தீராநதி : சமீபத்தில் மறைந்த கவிஞர்கள், சி. மணி, அப்பாஸ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டதும் என்ன தோன்றியது?

வண்ணதாசன் : சுந்தர ராமசாமி இறந்த சமயம், அவருடைய கவிதைகளையும், `குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலில் குழந்தைகள் வருகிற பகுதிகளையும் வாசித்துக் கொண்டேன். சி. மணியின் மறைவு `ஒளிச்சேர்க்கை' தொகுப்பை ஞாபகப்படுத்தியது. ஆனால் உடனடியாக எடுத்து வாசிக்கிற நெருக்கத்தில் இல்லை. அவருடைய முகமும் எனக்குத் தெரியாது. வரிகளும் முகமும் வாசிக்கப்பட முடியாத மனநிலை அது. பக்கத்தில் இதுபோன்ற நேரங்களில் யாருமில்லாது போவது இன்னொரு துயரம்.

அப்பாஸ் தெரிந்த பையன். அதிகம் நெருக்கமில்லை. என்றாலும் தெரியும். கோபாலிடமிருந்து வாங்கிய `வரைபடம் மீறி' தொகுப்பு என்னிடம்தான் இருக்கிறது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முந்தைய குற்றால சீசனில் நாங்கள் தங்கியிருந்த அதே விடுதியில் அவரும் தங்கியிருந்த நினைவு வந்தது. முகமும் உடல் மொழியும் முன்னால் கொண்டுவந்து நிறுத்திய அப்பாஸே போதுமானதாக இருந்தது. கவிதைகளை அன்று வாசிக்கவில்லை.

தீராநதி : இந்த வயதுவரை வாழ்க்கை உங்களுக்குச் சொல்வதென்ன?

வண்ணதாசன் : வாழ்க்கைக்கென்ன, அதுபாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதை சொல்லி கிடையவே கிடையாது. சில சமயம் மேகம் மாதிரி, மேக நிழல் மாதிரி, வெயில் மாதிரி கண்ணுக்கு முன்னால் அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இலந்தம் புதர் வழியாக அது சரசரவென்று யாரையும் கொத்தாமல் யாரையும் பார்க்காமல் எங்கே போகும் என்று தெரியவில்லை. மீன் வியாபாரியைச் சுற்றிச் சுற்றி வருகிற சாம்பல் பூனை மாதிரி நம்முடைய கால் பக்கமே நின்று மீசை முடிகள் அசையாமல் மியாவுகிறது. குளிக்கவும், மீன் பிடிக்கவும் வந்த பையன்கள் ரெண்டு பேரையும் மிதக்கச் செய்யும் கல்வெட்டாங்குழி மாதிரி பால்கவர் அல்லது செய்தித்தாள் விநியோகிக்கிற நம் கண் முன்னே பள்ளத்தில் கிடக்கிறது. பாபநாசம் ஏகபொதிகை உச்சிக்குள் கற்சிலையாக கருத்த புன்னகையைப் புல்லுக்கும் பனிக்கும் விசிறுகிறது. தலைப்பிள்ளை பேறுகாலம் ஆன அம்மை மாதிரி முலைப்பால் வாசனையுடன் நம்மைப் பக்கத்தில் போட்டுத் தட்டிக் கொடுக்கிறது. லாடங் கட்டுவதற்குக் கயிறு கட்டிச் சாய்த்திருக்கிற காளையின் வெதுவெதுப்பான சாணி மாதிரி வட்டுவட்டாக அடுக்கு விட்டுக் குமிகிறது. தொடர் வண்டிகளின் அரக்குச் சிவப்புக் கூவலுடன் கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து சூடான தண்டவாளங்களில் வண்ணத்துப்பூச்சியாக ஆரஞ்சு முத்தமிடுகிறது. நரிக்குறவக் கிழவனைப் போலப் பரிசுத்தமாகச் சிரிக்கிறது. ஒரு கரும்பலகையின் உடல் முழுவதும் என் கேலிச் சித்திரத்தை வரைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக