14/02/2011

மேலாண்மை பொன்னுசாமி - நேர்காணல்

2008-ஆம்ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் மேலாண்மை பொன்னுசாமி. "மின்சாரப்பூ' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலாண் மறைநாடு என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, இயங்கிவரும் ஒரு எளிய மனிதர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற ஒருவர், இலக்கியத்திற்காக வழங்கப்படுகிற மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பது இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

"பாசத்தீ', "ஈஸ்வர', "பூ மனச்சுனை', "மனப்பூ', "தாய்மதி', "சூரிய வேர்வை', "மானாவாரிப்பூ', "அச்சமே நரகம்' போன்ற 26 சிறுகதைத் தொகுப்புகளும், ஆறு நாவல்களும், ஆறு குறுநாவல் தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன. "இனிய உதயம்' இதழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து....

"நக்கீரன்' மற்றும் "இனிய உதயம்' சார்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பள்ளிப் பருவம், இலக்கிய ஈடுபாடு ஏற்பட்ட சூழல் பற்றிக் கூறுங்களேன்...

""ஐந்தாம் வகுப்புவரைதான் படித்தேன். படிப்பில் முதல் மாணவனாக இருந்தேன். இருந்தாலும்கூட வசதி இல்லாததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாம போச்சு. ஆனா படிக்கணும்கிற அந்த ஆசைதான் நான் நாவல்களையும் சிறுகதைகளையும் அதிகமா படிக்கக் காரணமா இருந்தது.

அப்போ சோவியத் நாவல்கள் தமிழில் நிறைய கிடைத்தன. ஆழமா, அழுத்தமா, மக்களோட வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமா இருந்தவை சோவியத் கதைகள். அந்த யதார்த்தம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படிப்பட்ட கதைகள் தமிழ்ல இல்லையேங்கற ஆதங்கம் எனக்கு இருந்தது. அப்படிப்பட்ட சமயத்துலதான் ஜெயகாந்தனோட "யுகசந்தி' சிறுகதைத் தொகுப்பு எனக்கு படிக்கக் கிடைச்சது. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சோவியத் நாவல்கள் மாதிரியே ஜெயகாந்தன் கதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அதிலிருந்த யதார்த்தமும் சமூக உண்மையும்தான் அதற்குக் காரணம்.

ராஜபாளையத்துக்கு பலசரக்கு வாங்கப் போவேன். அங்கே மக்களுக்கு அதிகமா பழக்கத்துல இல்லாத பத்திரிகைகள் கிடைத்தன. "நம்நாடு', "மாலைமணி', "திராவிட நாடு', "விடுதலை', "காஞ்சி' போன்ற பத்திரிகைகளைப் படிப்பேன்.

டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் என்னைப் பிரமிக்க வைத்தார்கள். அப்பொழுது எனக்கு நெருக்கமான எழுத்தாளராக ஜெயகாந்தன் இருந்தார்.

குடும்பத்துல நொடிப்பு ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கப் போனேன். அங்கேயும் படிப்பைத் தொடர்ந்தேன். பழைய புத்தகக் கடையில் கிடைத்த ரஷ்யக் கதைகள், ஜெயகாந்தன் சிறுகதைகள் ஆகியவற்றைப் படித்தேன்.

ஜெயகாந்தன் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அந்த நேர்த்தியும் கலைவடிவமும் எனக்கும் கைவந்தது. சிறுகதை நன்றாக எழுத வந்ததற்கு ஜெயகாந்தனும் ஒரு காரணம். எனவே நான் நிறைய சிறுகதைகள் எழுதினேன்.

அந்தக் காலத்தில் எனக்குத் தெரிந்த பத்திரிகை "செம்மலர்' ஒன்றுதான். ஆகவே அதற்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். பிறகு அதை மறந்து விட்டேன். இரண்டு மூன்று மாதங்கள் கழித்து "செம்மல'ரில் என் சிறுகதை பிரசுரிக்கப்பட்டிருந்தது.

முதன்முதலாக என் எழுத்தை அச்சில் பார்த்தவுடன் விவரிக்க முடியாத பரவசமும் உற்சாகமும் எனக்கு ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்றால், நான் அடிக்கடி குறிப்பிடு வதைப்போல "தஞ்சாவூர் ராஜகோபுரத்தின் மேலே ஏறி மொத்த உலகத்துக்கும் கேட்பதுபோல கத்தணும்.' அந்த மாதிரி ஒரு சந்தோஷம் எனக்கு.''

உங்கள் முதல் கதை எந்த ஆண்டு வந்தது? சிறுகதை எழுதக் கற்றுக் கொண்ட பிறகுதான் எழுதத் தொடங்கினீர்களா?

""1972- ஆம் ஆண்டு என்னுடைய முதல் கதை வெளிவந்தது. ஒரு மாதத்தில் இரண்டு கதைகள் எழுதுவேன். சிறு வயதிலேயே எனக்கு வயதுக்கு மீறிய வாசிப்பு அனுபவம் இருந்தது.

மேலாண்மை பொன்னுசாமி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதிக் கொண்டி ருந்தேன். அன்னபாக்கியச் செல்வன் என்ற பெயரிலும் கதைகள் எழுதுவேன். கலைக் கண்ணன் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவேன்.

சிறுகதையின் வடிவம், உத்தி, உள்ளடக்கம், உரையாடல், சிறுகதையின் நேர்த்தி, அதன் முடிவு போன்றவற்றையெல்லாம் கற்றுக் கொண்டு நான் எழுதவில்லை. தொடர்ச்சி யாக எழுதியதால் என்னுடைய எழுத்து சீர்பட்டது- பண்பட்டது. எழுதி எழுதித்தான் எழுதுவது எப்படி என்பதையே நான் கற்றுக் கொண்டேன். பிற்காலத்தில் "சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்று ஒரு புத்தகமே எழுதக்கூடிய அளவுக்கு சிறுகதை நுட்பத்தை நான் கற்றுத் தேர்ந்தேன். இது எனக்குப் பயிற்சியால்தான் வந்தது.''

உங்களுடைய எந்தக் கதை, முதன்முதலாகப் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது?

""1978-ஆம் ஆண்டு "கொலை' என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். "இலக்கியச் சிந்தனை' அமைப்பு அக்கதையைப் பரிசுக்குரிய கதையாகத் தேர்ந்தெடுத்தது. இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் அவர்களுடைய அண்ணன் ப. லெட்சுமணன் அந்த அமைப்பை நடத்தி வந்தார். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகைகளிலும் இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு கதையை முதல் பரிசுக்குரிய கதையாகத் தேர்ந்தெடுப்பார்கள். ஆண்டுதோறும் அதை புத்தகமாகவும் வெளியிடுவார்கள்.

1978-ஆம் ஆண்டு "கொலை' என்ற எனது சிறுகதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் எனக்கு புதிய வாசகர் வட்டத் தொடர்பும் பரவலான கவனிப்பும் கிடைத்தது. சக எழுத்தாளர்களுக்கும் வெகுஜனப் பத்திரிகைகளுக்கும் என்மீது மரியாதை ஏற்பட்டது. குறிப்பாக ஜெயகாந்தன், இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி போன்ற எழுத்தாளர்கள் என்னைப் பாராட்டினார்கள். அது எனக்கு ஊக்கமூட்டுவதாகவும் உத்வேகமளிப்பதாகவும் அமைந்தது! அன்றைக்கு அந்தப் பரிசின் மதிப்பு 50 ரூபாய்தான் என்றாலும், அதன் தரமும் மதிப்பும் மிகமிக அதிகம். எனக்கே என்மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது அப்போதுதான்.

கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவ வலியால் அவதிப்படுகிறாள். உயிர்போகும் அவஸ்தையில் துடிக்கிறாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். யாருக்கும் கை, கால் ஓடவில்லை. ஊரில் மருத்துவமனை இல்லை. மருத்துவரோ மருத்துவ வசதியோ இல்லாத காலம். நாட்டு வைத்தியம் செய்யும் பெண்ணும் நாவிதப் பெண்மணியும்தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டவுன் ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. வாகன வசதி இல்லை. மாட்டுவண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போகலாம் என்றால் மழை பெய்கிறது- சூறைக்காற்று வீசுகிறது- இடி இடிக்கிறது- மின்னல் மின்னுகிறது. சரியான சாலை வசதியும் கிடையாது!

இந்தக் குழப்பத்திற்கிடையே அந்த கர்ப்பிணிப் பெண் இறந்து போகிறாள். உரிய நேரத்தில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பாள். தாயும் சேயும் நலமாக இருந்திருப்பார்கள். அந்தப் பெண் செத்ததை "இறப்பு' என்று போடாமல் "கொலை' என்று குறிப்பிட்டிருந்தேன். ஏனென்றால் சரியான சாலை வசதியோ மருத்துவ வசதியோ இருந்திருந்தால் அவள் செத்துப் போயிருக்க மாட்டாள்.

நாடு விடுதலையடைந்து 32 ஆண்டுகள் ஆகியும்கூட சரியான சாலைவசதியைக்கூட அரசாங்கம் அந்த ஊருக்குச் செய்துதரவில்லை. ஆகவேதான் "கொலை' என்று தலைப்பு கொடுத்தேன். கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வை- சாதாரண மக்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அரசியலோடு பொருத்தி எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.''

இலக்கியம் என்றால் அது படித்தவர் களுக்கு மட்டுமே உரியது; இலக்கியம் என்பது அதிகமாகப் படித்த மேதாவி களுக்கு மட்டுமே புரியும் என்பதைப்போல பலர் நடந்து கொள்கிறார்கள்- எழுதுகிறார்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் இலக்கியம் என்பது ஒன்றுமே இல்லை; அது மிகவும் எளிமையானது; ஏழை எளியவர்களுக்கும் சமானிய மக்களுக்கும் உரியது என்று சொல்லி வருகிறீர்கள். இந்த நிலையில் பகட்டு இலக்கியவாதிகள், நகரங்களைச் சேர்ந்த புரட்டு இலக்கியவாதிகள், "பசுத் தோல் போர்த்திய புலி' என்பதைப்போல இலக்கியப் போர்வை அணிந்துகொண்ட சில குழப்பவாதிகளால் கசப்பான அனுபவத்தைச் சந்தித்திருக்கிறீர்களா?

""நிச்சயமாக. அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைய உண்டு. முதன்முதலாக என் கதை "செம்மல'ரில் வந்தவுடன், தஞ்சாவூரில் பக்கத்திலிருந்த சைக்கிள் கடைக்காரரிடம் ஓடிச்சென்று, ""செம்மல'ரில் என் கதை வந்திருக்கண்ணே' என்றேன். அதற்கு அவர், "என்னது, செம்மலையா. என்னய்யா இது கதகிதன்னுகிட்டு. உருப்படும் வழியப் பாரு' என்றார்.

அதேபோல பார்பர் ஷாப் வைத்திருக்கும் ஒருவரிடம் சொன்னேன். அவரும் அதைப்போலவே சொன்னார். பலசரக்குக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியிடம் சொன்னேன். "பிழைக்கிற வழியப் பாரு தம்பி. கல்லமுட்டாய் வியாபாரம் பண்ணினாலாவது ஒரு பிரயோசனம் இருக்கும்' என்றார்.

ஆனால் எல்லாருமே அப்படி இல்லை. தபால் ஆபீசில் துரைராஜ் என்று ஒருவர் இருந்தார். அவர் என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். "இவர்களுக்கு இதெல்லாம் புரியாது. கேலியும் கிண்டலும் செய்வார்கள். எல்லாருக்கும் புரியக்கூடிய காலம் வரும்' என்று சொல்வார்.

ஒன்றுபட்ட முகவை மாவட்டத்தினுடைய எழுத்தாளர் சங்கச் செயலாளராக இருந்த எஸ்.ஏ. பெருமாள் மற்றும் கே. முத்தையா, "செம்மல'ரில் ஓவியராகவும் துணையாசிரியராகவும் இருந்த தி. வரதராசன் போன்றவர்கள் என்னைப் பாராட்டி ஊக்கப் படுத்தினார்கள்.

நான் வளர்ந்ததற்கு இவர்கள் மட்டும் காரணம் அல்ல; என்னை ஏளனம் செய்த- சீண்டிவிட்ட புண்ணியவான்களும்தான் காரணம்.

செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போய்ட்டு மக்கள் வருவாங்க. சாமக்காட்ல சாக்குப் படுதாவுக்குள்ள- அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல நான் படிச்சுக்கிட்டு இருப்பேன். சாமகாட்ல சாக்குப் படுதா ஏன் போடுறதுன்னா ஆடு-மாடு குட்டி போடறதுக்குத்தான். நான் அங்க இருந்து படிச்சிக்கிட்டு இருப்பேன். அதைப் பார்ப்பவர்கள், "ஏலே, பரீட்சைக்கா படிக்க? பரீட்சைக்குப் படிக்கிறவனே இப்படி படிக்க மாட்டான்வே' என்பார்கள்.

இலக்கிய பகட்டுக்காரர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள் அல்லவா? ஆமாம்; அவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பற்றி ஏளனமாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். "இவருக்கு நவீனமாக எழுதத் தெரியவில்லை. இவர் எழுத்தில் இலக்கியம் இல்லை. கலைவடிவம் இல்லை. கிராமத்தையே எழுதிக் கொண்டிருக்கிறார். செழுமை இல்லை' என்றெல்லாம் சொல்வார்கள்.

இலக்கியம் என்பது என்ன? என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது பகிர்ந்து கொள்வது. இன்பத்தை மட்டுமல்ல; துன்பத்தைப் பகிர்ந்துகொள்வது- வலிகளைப் பகிர்ந்து கொள்வது- வாசகனை- வளரும் தலைமுறையைத் தயார்படுத்துவது- தகுதிப்படுத்துவது- அவனை உயர்ந்த மனிதனாக்குவது- சமூகத்தை மேம்படுத்துவது- சீர்படுத்துவது- பண்படுத்துவது. பேதங்களை ஒழிக்க வேண்டும். இதுதான் இலக்கியம். எதிலும் ஒரு முற்போக்கு இருக்க வேண்டும். யதார்த்தம் இழையோட வேண்டும். எளிமை வேண்டும். அதுதான் கலையின் உயிர். இதைத்தான் பாரதி சொன்னான்- எளிய சொல், எளிய பொருள், எளிய எழுத்து, வெகுஜனங்கள் விரும்பும் மெட்டு, எளிய சந்தம் என்று. எனக்கு இதுதான் முக்கியம். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.

புராணங்களும் இதிகாசங்களும் ஏன் எழுந்தன? வேதங்களும் மறைபொருளும் சொன்ன உண்மைகளை விளக்கவே புராண இதிகாசங்கள் தோன்றின. வேதத் தத்துவங் களும் மறைபொருளும் சாமானிய மக்களுக் கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம் போன்றவை தோன்றின. இலக்கியம் சாதாரண மக்களுக்கு - பாமர மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே நான் கதைகள் எழுதுகிறேன்.

தமிழில் பக்தி இலக்கியம் மிகப்பெரிய எழுச்சி பெற்றதற்குக் காரணம், மக்களுக்கும் காலத்திற்கும் ஏற்ப மொழி தன்னை எளிமைப் படுத்திக் கொண்டதுதான். அதனால்தான் பக்தி இலக்கியங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தன.

புத்த தத்துவமும் புத்த மதமும் மிகப்பெரிய அளவில் பரவியதற்கு என்ன காரணம்? அன்றுள்ள மக்களுக்குப் புரியும் பாலி மொழியில் அவர் பேசினார். மக்களுக்குப் புரியும்- மக்கள் விரும்பும் மொழியில் பேசாத எந்தக் கொள்கையும்- எந்த இயக்கமும் வெற்றி பெறாது.

ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நான் எழுதுகிறேன். அவர்கள் வாழ்வையும் வலிகளையும் நான் எழுதுகிறேன். அது நடுத்தட்டு மக்களைச் சென்று சேர வேண்டும் என்று விரும்பு கிறேன். நடுத்தட்டு மக்கள் யார்? அவர்கள் அறிவு ஜீவிகள் அல்ல. உதட்டு இலக்கியம் பேசுகிற மேனா மினுக்கிகள் அல்ல. அவர்கள் உத்தியோக வர்க்கத்தினர். தொழிலாளிகள். 1950-களுக்குப் பிறகு கல்வி அறிவு பெற்றவர்கள். உத்தியோக வசதி பெற்றவர்கள். அவர்கள்தான் எனக்கு முக்கியம். அவர்களுக்குப் புரியும் மொழியில் எழுதவே நான் ஆசைப்படுகிறேன்.

என்னைக் குறை சொல்கிறவர்களுக்கு இன்னொரு பொறாமை என்னவென்றால், அவர்களால் மறுக்க முடியாத தூரத்தில்- உயரத்தில் நான் இருக்கிறேன். அதனால் என்னை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட எதிர்மறைச் சீண்டல்களால்- இலக்கியப் பகட்டுக்காரர்களால் நான் வளர்கிறேன்; வளர்க்கப்படுகிறேன்.

"கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு- வட்டார வழக்கு- யதார்த்தமான மொழிநடை உனக்கு அருமையாக வருகிறது. தொடர்ந்து எழுது' என்று என்னை ஊக்கப்படுத்தியவர்களை நான் நன்றியோடு இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருவேளை என் முதல் கதையை "செம்மலர்' வெளியிடாமல் போயிருக்குமானால் நான் எழுத்தாளராகவே ஆகியிருக்க மாட்டேன்.''

இன்றைக்கு எல்லாரும் உங்களை மதிக்கிறார்கள். தொடக்க காலங்களில் அந்த நிலைமை இருந்ததா? குறிப்பாக உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

""என்னுடைய எல்லா புத்தகங்களிலும் முன்னுரையில் ஒரு வாசகம் காணப்படும். "என் இலக்கியப் பயணத்திற்கு ஆதாரமாகவும் ஆணிவேராகவும் ஆத்ம சக்தியாகவும் இருக்கிற என் தம்பி கரிகாலன்' என்பதுதான் அது.

என் தம்பி என்னால் எவ்வளவோ துன்பமடைந்திருக்கிறான்- நஷ்டமடைந்திருக்கிறான். ஆனால் அவ்வளவையும் தாங்கிக் கொண்டு என் வளர்ச்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். நான் பட்ட கஷ்டத்தைவிட அவன் பட்ட கஷ்டம் 15 மடங்கு அதிகம். என் மனைவி பொன்னுத்தாயி படிக்காதவள்தான் என்றாலும், குடும்பத்தைக் காப்பவள் அவள்தான். பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோதுகூட அவர்களுடன் இருந்து என்னால் உதவி செய்ய முடியாமல் இருந்ததுண்டு.

"குடும்பக் கஷ்டம் தெரியாமல் இலக்கியம், கதை என்று ஊர் சுற்றி வருகிறீர்களே' என்றோ அல்லது "சம்பாரிக்க வேண்டிய வயதில் கதை எழுதிக் கொண்டு கிடக்கிறீர்களே' என்றோ குதர்க்கம் பேசுகிறவர்கள் எவ்வளவோ பேர் உண்டு. அப்படியெல்லாம் இல்லாமல் என்னை அனுசரித்து- பொறுத்துப் போனாள் என் துணைவி. என் தம்பியாவது என் உடன் பிறந்தவன். அவன் உதவி செய்வது பெரிதில்லை. என் மனைவியும் என் தம்பி மனைவி ராஜலட்சுமியும் குடும்பத்தைப் புரிந்து கொண்டு எங்கள் வளர்ச்சிக்குத் துணை நிற்பதுதான் பெரிய விஷயம்.

என் மகள் வைகறைச் செல்வி, என் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துப் பாதுகாப்பது, ஒரு உதவியாளரைப்போல செயல்படுவது, என் கதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவது, வெளிவந்தவுடன் அதை வெட்டி எடுத்துப் பாதுகாப்பது, பிறகு தொகுத்துப் புத்தகமாகப் போட துணை நிற்பது என்று பல வகையிலும் எனக்குப் பேருதவி புரிகிறாள். இப்படி எல்லாவகையிலும் எனக்கு குடும்பத்தினரின் பரிபூரண ஒத்துழைப்பு இருக்கிறது. இதுதான் என் உள்ளாற்றலைப் பீறிட வைக்கும் சக்தி- ஆன்மாவின் அடி ஆழத்தில் உள்ள உந்து சக்தி. என் உள்ளே இருக்கும் நெருப்பை விசிறிவிட்டு- என் உயிராற்றலைத் தூண்டி விட்டு என்னை இயங்கச் செய்பவர்கள் என் குடும்பத்தினர்தான்.''

நகரத்தில் பிறக்கவில்லையே, கிராமத்தில் இருக்கிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

""கிராமத்தில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்; வசதியாக நினைக்கிறேன். நான் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தில் குடியேறியிருக்க முடியும். ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகியிருக்க முடியும். என் மக்களையும் என் வாழ்க்கையையும் என் கிராமத்தையும் விட்டுவிட்டு நகரத்தில் சிறைப்பட நான் விரும்பவில்லை. இங்குள்ள வசதி அங்கு இல்லை. 3,000 ரூபாய் இருந்தால் இங்கே கிராமத்தில் வாழ்ந்துவிட முடியும். மதுரையில் வாழ வேண்டுமானால் 10,000 ரூபாய் வேண்டும். அதுவே சென்னையாக இருந்தால் 25,000 ரூபாய் வேண்டும்.

இயல்பான மனிதர்கள், இயல்பான வாழ்க்கை. இதைத் துறக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்போது கிராமத்துக் கதைகள் எழுது கிறவர்கள் சமகாலத்து கிராமத்து வரலாற்றை எழுதுவதில்லை. ஆனால் நான் அப்படி இல்லை. பருவ மாற்றம், விவசாய மாற்றம் எல்லாவற்றையும் எழுதுகிறேன். விவசாயத்தின் வீழ்ச்சியை எழுதுகிறேன்.

உலகமயத்தால்- தாராளமயத்தால் கிராமங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்று சமகால கிராமத்தை எழுத்தில் பதிவு செய்கிறேன்.

அரசு வங்கிகளால் கிடைக்கும் சலுகைகள் மறுக்கப்படுகிற நிலையில், விவசாயிகள் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாக்கப் படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சூடான ரத்தம் எப்படி உடலில் வெதுவெதுப்பாக இருக்கிறதோ அதைப் போன்றது கிராம வாழ்க்கை. என் இலக்கிய நடவடிக்கை களுக்கு ரத்தம் பாய்ச்சுவது கிராம வாழ்க்கைதான்.

வணிகப் பத்திரிகைகள் அனைத்தும் என் எழுத்தை வரவேற்கின்றன. அதற்கு என்ன காரணம்? அசல் கிராமத்தை நான் படம்பிடித்துக் காட்டுகிறேன்; அவ்வளவுதான்.

இயக்குநர் மகேந்திரன் இந்த வீட்டுத் திண்ணையில் இருந்து கதை கேட்டிருக்கிறார். "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "முள்ளும் மலரும்' போன்ற மிகச் சிறந்த படங்களை இயக்கிய மகேந்திரன் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார். என் இலக்கிய நடவடிக்கைகளுக்கு உயிர் கிடைப்பதே நான் கிராமத்தில் இருப்பதால்தான். கிராமத்தில் பிறந்ததால் பெருமைப்படுகிறேன் - வருத்தப்பட்டதில்லை. கிராமத்தில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை கொண்டதில்லை.''

இதுவரை எத்தனையோ கதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறீர்கள். இனிமேலும் மக்களுக்குச் சொல்ல வேண்டியது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

""நிச்சயமாக இருக்கிறது; நிறைய இருக்கிறது. ஒரு பெரிய நாவல் எழுத திட்டமிட்டிருக்கிறேன். "சிவகாசி கலவரம்', "சிவகாசி கொள்ளை' என்கிறார்களே அதைப்போல, எங்கள் மேலாண் மறைநாடு கிராமத்தின் 150 ஆண்டுகால வரலாற்றை எழுத வேண்டும். நிச்சயமாக என்னைத் தவிர வேறு யாரும் அதை எழுத முடியாது. அந்த வலியும் வேதனையும் கடந்தகால வரலாறும் மற்றவர்களுக்குப் புரியாது.

இத்தனை நாட்களாக அந்த நீண்ட நாவலை நான் எழுதாமைக்கு ஒரு காரணம் இருந்தது. சாதிசார்பு வந்துவிடுமோ என்று எனக்கு ஒரு பயம் இருந்தது. பாதிக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் நான். சாதிச்சார்பு எனக்குப் பிடிக்காது. சாதி சமத்துவம்தான் நான் விரும்புவது. ஆகவே இதுவரை நான் அந்த நாவலை எழுதத் தயங்கியபடி இருந்தேன். ஆனால் இப்பொழுது ஒரு உறுதி ஏற்பட்டிருக்கிறது. ஒரு புதிய உத்தியில்- இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மாறாக ஒரு புதிய வடிவில்- ஆனால் எளிமையாக சாதிச் சமத்துவத்தை அடித்தள மாகக் கொண்டு 2012-ஆம் ஆண்டுக்குள் இந்த நாவலை எழுதி முடித்துவிடுவேன்.''

உங்கள் எழுத்தால் பாதிக்கப்பட்டவர் கள் உண்டா? அது உங்களைப் பாதித்த துண்டா? உங்கள் எழுத்தால் பயன் பெற்றவர்கள் இருக்கிறார்களா? வாழ்த்துகள் - எதிர்ப்புகள்... எதை அதிகம் பெற்றுள் ளீர்கள்?

""என் எழுத்து நிறையபேரை பாதித் துள்ளது. எதிர்ப்புகளை நான் அதிகம் சம்பாதித்ததில்லை. என் கதைகளில் உள்ள நேர்த்திதான் அதற்குக் காரணம். இடம், பெயர், திசை, குறி, ஊர் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன். நான் யாரைப்பற்றி எழுதியிருக்கிறேனோ அவரே வந்து பாராட்டுவார். நான் அவரைப் பற்றிதான் எழுதியிருக்கிறேன் என்பதே அவருக்குத் தெரியாது. அதிகமான பாராட்டுகளையே பெற்றுள்ளேன்.

"நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் நல்ல எழுத்துகளின்மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது' என்றும்; "உங்கள் கதைகளைப் படித்த பிறகுதான் நான் எழுதத் தொடங்கினேன்' என்றும் நிறைய பேர் சொல்கிறார்கள். உள்ளதை உள்ளவாறு எழுதுவதுதான் அதற்குக் காரணம்.

என் எழுத்து கேமரா படப்பிடிப்பு அல்ல; ஓவியம்! கேமரா ஓவியம் அல்ல; முப்பரிமாணமுடையது. எதையுமே நான் ரிப்போர்ட்டாகச் சொல்லமாட்டேன். வண்ண ஓவியம்போல ஒருவிதமான ரசாயனக் கலவையே எனது கதைகள்.

புலனாய்வுக் கட்டுரைகள் எழுதினால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் உள்ளதை உள்ளவாறு எழுத வேண்டும். பாராட்டு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் கதைகளில் அப்படியில்லை. உண்மையாகவே இருந்தாலும் ஊர், பெயர், குணம், குறிக்கோளையெல்லாம் மாற்றித்தானே எழுதுகிறோம்.''

தமிழ் சினிமா ஒரு காலத்தில் புராணங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. பிறகு சமூகப் படங்கள் வெளிவந்தன. பிறகு வண்ணப்படங்கள்- கற்பனைக்கெட்டாத மாதிரியான- யதார்த்த உலகோடு தொடர்பில்லாத படங்கள் வெளிவந்தன. பிறகு இப்போது இலக்கியத்தரமான சினிமாக்கள் வருகின்றன. எழுத்தாளர்களின் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. ஒரு எழுத்தாளராக தற்காலத் திரைப்படங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

""பெரும்பாலும் புனைவு அதிகமாகவும் உண்மை குறைவாகவும் தமிழ் சினிமாக்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி இருக்க வேண்டும்? உண்மை அதிகமாகவும் புனைவு குறைவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்தப் படம் கலைக்கு மிகவும் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு காலத்தில் ஏவி.எம். படங்கள் - தேசபக்திப் படங்களாக வந்தன. பிறகு சமூக சீர்திருத்தப் படங்கள் - திராவிட இயக்கத்தின் தாக்கமுள்ள படங்கள் வந்தன. அண்ணா, கலைவாணர், கலைஞர் போன்றோரது படைப்பாளுமையோடு படங்கள் வெளிவந்தன. பிறகு பீம்சிங் போன்றோரது படங்கள், "பழனி' போன்ற கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்துகின்ற படங்கள், நல்ல குடும்பத்தின் மேன்மையைச் சொல்லும் படங்கள், நல்ல மானுடப் பண்புகளை மேம்படுத்தும் திரைப்படங்கள் தோன்றின. கெட்ட படங்களும் வந்தன; நல்ல படங்களும் வந்தன. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதை என்று ஒருவர் பெயரைப் போட மாட்டார்கள்.

மேற்குலகில் ஒரு கதையோ- ஒரு நாவலோ எழுதப்பட்டால் அது உடனே திரைப்படமாகிவிடும். அதனால்தான் அந்த நாடுகளில் நல்ல படங்கள் உருவாகின்றன. ஈரானியப் படங்களெல்லாம் அப்படிப்பட்டவைதான்.

இயக்குநர் மகேந்திரன் நல்ல படங்களை எடுத்திருக்கிறார். இயக்குனர் சசி, முற்போக்கு எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய "வெயிலோடு போய்' என்ற கதையை "பூ' என்று அருமையான சினிமாவாக எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட கதைகள் படமாக்கப்படுமானால் அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். யதார்த்தம் இருக்க வேண்டும். மக்களுடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். "வெயில்', "காதல்', "பூ', "கல்லூரி' போன்ற சிறந்த சினிமாக்கள் வெளிவருவது தமிழ்திரைப்பட உலகின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பாலாஜி சக்திவேலின் "கல்லூரி' மிகச் சிறந்த படம். ஆனால் யாரும் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. "காதல்' பெற்ற வெற்றியை "கல்லூரி' பெறவில்லை. அது மிகச்சிறந்த கதை. 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வி படித்தவர்கள், கல்லூரியில் ஆங்கிலம் படிக்க எவ்வளவு சிரமப்படு கிறார்கள் என்ற உண்மையைச் சொன்ன சமூக- யதார்த்த சினிமா அது. தாய்மொழிக் கல்வியை மேன்மைப்படுத்துகின்ற படங்கள் எல்லாம் கல்விச் சாதனை, கலைச் சாதனை புரிகின்ற படங்களாகும்.

முற்போக்கு யதார்த்தவாத கதைகளைத் தழுவி சினிமாக்கள் எடுக்கப்பட வேண்டும். இலக்கியக் கதைகளைத்தான் ஈரானிய சினிமாக்கள் பின்பற்றுகின்றன. அப்படி எடுக்கப்படும்போது கதைக்களம் பொருத்தமாக இருக்க வேண்டும். சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி பிரச்சினையைப் பற்றிய படத்தை ஊட்டியிலும் சென்னையிலும் எடுக்கக்கூடாது. கல்லுடைக்கும் தொழிலாளியின் கஷ்டத்தைப் பேசும் படத்தை டார்ஜிலிங்கிலும் சிம்லாவிலும் எடுக்கக்கூடாது. கதைக்குப் பொருத்தமான களம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

எழுதப்பட்ட இலக்கியத்திலிருந்து எடுக்கப்படுகிற படங்கள் மிகச்சிறந்தவையாக இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகமயமும், தனியார்மயமும் எல்லாவற்றையும் சீரழிக்கும்; எல்லாவற்றையும் பாதிக்கும்; பழிக்கும். அதைப்போல அது சினிமாவையும் பாதிக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் சினிமா உலகில் புகுந்து சீரழிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மசாலா திரைப்படங்கள் மறுபடியும் செல்வாக்கு பெற்றுவிடும்.''

உங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்ததா?

""சினிமா வாய்ப்பு பலமுறை வந்தது. நடிக்க கூப்பிடுகிறார்கள். வசனமெழுதச் சொல்கிறார்கள். கிராமத்தை விட்டுவிட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. நகரத்தில் இருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளத்திலேயே இருக்க வேண்டும். திடீரென்று வசனத்தை மாற்றச் சொல்வார்கள். இதில் எனக்கு உடன்பாடு இருக்காது. இது ஒரு எழுத்தாளனுக்கு மரியாதைக்குறைவான விஷயம். இதன் காரணமாகவே வருகின்ற சினிமா வாய்ப்பு களையெல்லாம் மறுத்து வருகிறேன். பாலாஜி சக்திவேல் என்னுடைய கதையை வாங்கி வைத்திருக்கிறார். "கவிதாலயா' புஷ்பா கந்தசாமி, மாணிக்க நாராயணன் போன்றவர்கள் என் கதைகளை வாங்கி வைத்திருக்கிறார்கள். எப்பொழுது படமாக்கப் போகிறார்களோ தெரியாது. நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். கதை கொடுப்பேன்; வசனம் எழுத மாட்டேன்.''

சாகித்ய அகாடமி விருது கிடைத்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

""மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. சாகித்ய அகாடமி அதிகாரி ஹிதேந்திரநாத் எனக்கு போன் செய்து இச்செய்தியைத் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் இதற்கு முன்பே பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் இது எனக்குப் பெரிய மதிப்பையும் விளம்பரத்தையும் கொடுத்தது. மீடியா செல்வாக்கு இந்த விருதுக்கு உண்டு. முன்பே நான் தமிழக அரசு விருது பெற்றிருக்கிறேன். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் மாட்சிமை விருது பெற்றிருக்கிறேன். ஸ்டேட் பேங்க் விருதை ஆறுமுறை பெற்றிருக்கிறேன். சி.பா. ஆதித்தனார் விருது பெற்றிருக்கிறேன். ஆனாலும் அதிலெல்லாம் கிடைக்காத ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் இதில் கிடைத்திருக்கிறது. காரணம் இந்திய அளவில் உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. தேர்ந்த இலக்கியவாதிகள், அறிவாளிகள், நடுநிலையாளர்கள் கொண்டது சாகித்ய அகாடமி பரிசு தேர்வுக்குழு.

எனக்குக் கிடைத்த இந்த விருது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் கிடைத்த விருது. விவசாயிகளுக்கும் தொழிலாளி களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கிடைத்த விருது. எனது கிராமத்துக்கு- எளிமையான எழுத்துக்கு- யதார்த்தவாத முற்போக்கு கதைகளுக்குக் கிடைத்த விருது. இலக்கிய பகட்டுக்காரர்களுக்கு எதிராக எனக்குக் கிடைத்த சமூக அங்கீகாரம்தான் நான் பெற்றிருக்கும் இந்த சாகித்ய அகாடமி விருது.''

உங்களுடைய நூல்கள் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன - சாகித்ய அகாடமி விருதும் கிடைத்திருக் கிறது. இந்த இரண்டு மகிழ்ச்சியையும் ஒப்பிடுங்கள்?

""இரண்டுமே மகிழ்ச்சிக்குரியதுதான். இரண்டும் இருவேறு பரிமாணங்களுடையது. மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராசர் பல்கலைக் கழகங்களிலும், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும், அஞ்சல்வழிக் கல்லூரிகளிலும் எனது கதைகள் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. என் கதைகளை ஆய்வு செய்து 16 பேர் எம்.ஃபில். பட்டம் பெற்றிருக்கின்றனர். ஆறு பேர் பி.எச்.டி. பட்டம் வாங்கியுள்ளனர். தென்மாவட்டங்களில் உள்ள எல்லா கல்லூரிகளிலும் நான் உரையாற்றியிருக்கிறேன்.

என்னால் தொடமுடியாத உயரத்தை- என் வாழ்க்கை எட்ட முடியாத இடத்தை என் எழுத்து தொட்டிருக்கிறது; என் இலக்கியம் எட்டியிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது என் இலக்கியத்திற்குக் கிடைத்த அங்கீகாரம். அது, "ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பதைப்போல. கல்லூரிக்குச் செல்வது என்பது ஒரு பயணத்தைப்போல- எதிர்கால உத்தியோகஸ்தர்களிடம் போய் பேசுகிறேன். இக்கால உத்தியோக வர்க்கத்தைப் பற்றி எதிர்கால உத்தியோகஸ்தர்களிடம் சென்று பேசுகிறேன். பல்கலைக்கழகங்களில் பேசப் போகும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்- "இங்கு வந்து படிக்கத்தான் முடியவில்லை; பேசவாவது முடிந்ததே' என்று சந்தோஷமடைவேன்.

என் எழுத்து இன்றைய மாணவனை- இன்றைய தலைமுறையை எட்டியிருப்பது என் இலக்கியக் கடமைக்குக் கிடைத்த வெற்றி. விருது என்பது வேற்று ஊர்க்காரர்கள், வேற்றுக் கிரகவாசிகள் என்பதுபோல் அறிஞர் உலகம் நமக்குத் தந்த அங்கீகாரம். கல்லூரியில் என் எழுத்து பாடமாக வைக்கப்பட்டிருப்பது என்பது என் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மைல்கல்.''

இதுவரை எழுதிய கதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

""அப்படியெல்லாம் எதையும் சொல்ல முடியாது. அந்த நிறைவு ஏற்பட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுவேன். என் கதைகளில் வெற்றி அடைந்தது, அடையாதது என்றுதான் உள்ளதே தவிர பிடித்தது- பிடிக்காதது என்று இல்லை. இருந்தாலும் அப்படி ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், "இனி', "ஊர் மண்' என்ற கதைகளைத்தான் சொல்ல வேண்டும். பெண்களைப் பற்றி, தலித்து களைப் பற்றி நான் எழுதிய கதைகள் அனைத்துமே எனக்குப் பிடித்த கதைகள்தான்.

"மின்சாரப்பூ' என்பது ஒரு தலித் சிறுவனுக்கும் ஒரு பிற்படுத்தப்பட்ட சிறுவனுக்கும் உள்ள நட்பு, உரையாடல், முரண் போன்றவற்றை உள்ளடக்கியது. அதேபோல அதில் உள்ள சில கதைகள் பலசரக்குக் கடைக்காரர்களின் அனுபவங்கள். இதெல்லாம் என்னைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது.''

இலக்கு என்று எழுத்தில் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

""அதுதான் மேலே நான் குறிப்பிட்ட அந்தப் பெரிய நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்பது.''

சாகித்ய அகாடமி விருது ஒரு குறிப்பிட்ட நூலுக்குக் கொடுக்கப்படுவது என்றாலும், அது அந்த எழுத்தாளரின் எல்லா நூல்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்படுவது என்பதுதான் பொருள் - அதுதான் மரபு. ஆகவே உங்கள் அனைத்து படைப்புகளுக்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம்தான் இந்த விருது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் "இனிய உதயம்' வாசகர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

"" "நக்கீரன்' மற்றும் "இனிய உதயம்' இதழ்களின்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த இதழ்களின் வாசகன் நான். இந்த ஏடுகளைப் படிக்கிற வாசகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். அவர்களுக்குச் சொல்வதற்கு ஏதும் இல்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்- பாராட்டுகள், வாழ்த்துகள்- அவ்வளவுதான்.

"நக்கீரன்' ஆசிரியர் மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் அவர்கள்மீது எனக்கு நிறைய மதிப்பு உண்டு. தனிப்பட்ட முறையில் எனது நெருங்கிய நண்பர். என் மகன் வெண்மணிச் செல்வன் "அரும்பு' இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்றான். அப்போது "நக்கீரன்' ஆசிரியர் கையால்தான் பரிசு பெற்றான்.

"நக்கீரன்' உண்மையான - தெளிவான அரசியல் செய்திகளை சுடச்சுடத் தருகிறது. அரசு மட்டத்தில் நடைபெறும் லஞ்ச லாவண்யங்களை- ஊழலை- முறைகேடுகளை "நக்கீர'னில் வெளியிட்டால்தான் தட்டிக் கேட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அந்த இதழ் குவித்திருக்கும் இமாலய வெற்றி. அரசு மட்டத்தில் நடைபெற வேண்டிய கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானாலும் அது "நக்கீர'னில் செய்தியாக வேண்டும் என்பதுதான் நிரந்தரமான நிலை.

பெரிய பெரிய அறிவாளிகள், அரசுகள், நிறுவனங்கள் நடத்தும் சர்வேக்கள், கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாய் போய்விடுகிறது. ஆனால் "நக்கீரன்' சர்வே பொய்யாய்ப் போனதாக சரித்திரமே இல்லை. இதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி உங்களால் அவ்வளவு துல்லியமாக செய்திகளைத் தரமுடிகிறது? உங்கள் நட்பால் நான் மகிழ்கிறேன் - நெகிழ்கிறேன். "நக்கீர'னில் நான் கொடுத்த ஒரு பேட்டியால் என் ஊருக்கு ஒரு நூலகம் கிடைத்தது.

"இனிய உதயம்' தரமான இலக்கிய இதழ். லாப நோக்கம் பாராமல்- கோஷ்டி சண்டைகளுக்கு இடம் தராமல் - நடுநிலை தவறாமல் நடைபெறும் ஆரோக்கியமான இலக்கிய இதழ்.''

-சி.என். ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக