சேந்தன் திவாகரம் என்ற நிகண்டு நூல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்நூலைப் பின்பற்றியே பிற நிகண்டுகள் தோன்றின. சேந்தன் என்ற சோழநாட்டு வள்ளல் இவரை ஆதரித்தாலும் சேந்தன் என்பவர் இயற்றியதாலும் இந்நூல் சேந்தன் திவாகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டதாக உள்ளது.
சேந்தன் திவாகரத்தில் ஆங்காங்கே இலக்கணக் கருத்துக்கள் பல விரவியுள்ளன. அவற்றுள் புறத்திணைக் கருத்துக்களைக் காலத்தால் முதன் தோன்றிய தொல்காப்பியத்துடன் இந்நூலின் சமகாலத்தில் தோன்றிய புறப்பொருள் வெண்பா மாலையுடனும் இக்கட்டுரை ஒப்பிட்டு ஆய்கிறது.
புறத்திணை விளக்கம்:-
தமிழின் தனிச்சிறப்பாகிய பொருள் இலக்கணம் அகம், புறம் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. களவு, கற்பு எனும் வாழ்க்கை முறைகள் அகப்பொருளில் அடங்குகின்றன, அவையல்லாத பிறவெல்லாம் புறப்பொருளாகும். வீரம், கொடை, கல்வி, இறைமை போன்றன யாவும் இவற்றுள் அடங்கும்.
''மக்கள் வாழ்வில் தூய கற்புறு காதல் கண்ணிய மனையற ஒழுக்கம் பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டன பிறர் தொடர்பின்றி யமையா இற்புறவாழ்வோடு இயைபுடைய எல்லாம் புறமெனப்பட்டன'' என்று அதற்குச் ச.சோ பாரதியார் எடுத்துரைக்கிறார்.
புறத்திணை எண்ணிக்கை:-
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இரண்டாவது இயலாக இவ்வியல் அமைந்துள்ளது. இதில் புறத்திணை ஏழு என்று குறித்துள்ளார் ''முப்படக்கிளந்த எழுதிணையென்ப'' என்ற அகத்திணையில் நூற்பா பிற்பட கிளக்கப்படுவன வெட்சி முதலாகப் பாடாண் ஈறாகப் புறத்திணை ஏழு என்று உணர்த்தப் பெறுகின்றது. கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈறாக வரும் அகத்திணை ஏழினுக்கும் ஒவ்வொரு புறத்திணைக்கும் தனித்தனியாகப் பொருந்தும்.
புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணை 12 என்று குறிப்பிடுகிறது. அவை வெட்சி முதலாகப் பெருந்திணை ஈறாகப் பனிரெண்டாகும்.
சேந்தன் திவாகரம் புறத்திணைகளாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டினைக் குறிப்பிடுகிறது.
கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தொல்காப்பியத்தின்படி அகத்திணையுள் அடங்கும். வெட்சியுள் கரந்தையும் உழிஞையுள் நொச்சியும் அடங்கும். பொதுவியலென்னும் துறை புறத்திணையியலுள் தொல்காப்பியர் கூறவில்லை. காஞ்சி என்பதற்கு நிலையாமை என்ற பொருளையே குறிப்பிட்டுள்ளார்.
உரையாசிரியர் இளம்பூரணரும் புறத்திணை ஏழு என்றே குறிப்பிடுகின்றார். ''அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டு ஆயவாறு போல அகத்திணை ஏழிற்கும் புறத்திணை ஏழு என்றலே பொருத்தமுடையதாயிற்று'' என்று நச்சினார் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைகளின் எண்ணிக்கை ஏழு. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் எண்ணிக்கை பனிரெண்டு இவ்விரண்டோடும் அமையாமல் சேந்தன் திவாகரம் எட்டினை மட்டும் குறிப்பிடுகிறது.
1. தொல்காப்பியரின் கருத்துப்படியே கைக்கிளை, பெருந்திணைகள் அகத்திணைகளாகவே இவ்வாசிரியரால் கருதப்பட்டு அவை விடப்பட்டு இருக்க வேண்டும்.
2. பொதுவியல் என்ற திணையும் தொல்காப்பியர் கருத்துப்படியே விடப்பட்டு இருக்க வேண்டும்.
3. தொல்காப்பியமும், புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடும் பாடாண் திணை சேந்தன் திவாகரத்தில் விடப்பட்டுள்ளது. இதன் காரணம் அறியப்படவில்லை.
4. தொல்காப்பியத்தைப் போல் அல்லாமல் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுவது போலவே வெட்சியையும், கரந்தையையும் வஞ்சியையும், காஞ்சியையும், உழிஞையையும், நொச்சியையும் தனித்தனித் திணைகளாகவே, சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது. ஒன்று ஒன்றனுள் அடங்கும் துறைகள் என்றாலும் போர் நிகழ்வுகள் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்துக் கூறல் பொருத்தமானதே.
காஞ்சித்திணை விளக்கங்கள்:-
தொல்காப்பியம் காஞ்சித்திணை நிலையாமையைக் குறிப்பிட சேந்தன் திவாகரம் புறப்பொருள் வெண்பாமாலை கருத்தையொட்டியே எதிரூன்றலையே குறிப்பிடுகிறது. மேலும் இந்நூல் சொற்பொருள் விளக்கம் என்னும் நிலையில் காஞ்சி என்பதற்கு எதிரூன்றல், நிலையின்மை என்னும் இரண்டு பொருளையுமே குறிப்பிடுகிறது. எனவே இரண்டு பொருளையும் அறிந்த வகையில் காஞ்சித்திணையெனும் திணைக்கு விளக்கமாகப் புறப்பொருள் வெண்பாமாலையோடு இது பொருந்துகிறது.
''எதிரூன்றல் காஞ்சி யெயில் காத்த னொச்சி'' என்கிறது அப்பாடலடி. சேந்தன் திவாகரம் கூறும் பொருண்மொழிக்காஞ்சி என்பது தொல்காப்பியம் குறிப்பிடும்
''பாங்கரும் சிறப்பின் பன்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே''
என்ற காஞ்சித்திணையின் விளக்கத்திற்குப் பொருந்துவதாக அமைந்துள்ளது.
காஞ்சித்திணை - துறைகள் சில:-
முதுமொழி காஞ்சி, முதுபாலை, பேரியல் காஞ்சி, நெடுமொழிக் காஞ்சி எனும் நான்கு துறைகளைச் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது. முதுமொழிக்காஞ்சி, முதுபாலை ஆகிய இவ்விரண்டும் தொல்காப்பியத்தில் மட்டும் இடம் பெறுகின்றன. மேலும் ''கழிந்தோர் ஓழிந்தோர்க்கு காட்டிய முதுமை'' முதுகாஞ்சி என்றும், ''நனிமிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பியது'' முதுபாலை என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நெடுமொழிக்காஞ்சி என்பதும் பேரியல் காஞ்சி என்பதும் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலையாகிய இரு நூல்களிலும் காஞ்சித் திணையில் வரும் துறைகளுள் குறிப்பிடப்படவில்லை.
நெடுமொழி என்னும் துறை தொல்காப்பியத்துள் வஞ்சியிலும் கரந்தையிலும் வந்துள்ளது. மாராயம் பெற்ற நெடுமொழி என்று குறிக்கப்பட்டுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில் மாராயம் தனியாகவும் நெடுமொழி தனியாகவும் வஞ்சித் திணையுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றுள் நெடுமொழி வஞ்சி புறப்பொருள் வெண்பாமாலையில்,
''ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை எடுத்துரைத்தன்று''
எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் தொல்காப்பியம் கரந்தைத் திணையில்
''தலைத்தாள் நெடுமொழி
தன்னொடு புணர்த்தல்''
என்ற பகுதியில் நெடுமொழியைக் குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைத் திணையில் நெடுமொழி கூறல் என்னும் துறையில் ''தன்மேம்பாடு தான் எடுத்துரைத்தன்று'' என்று குறிப்பிடுகிறது.
ஆனால் சேந்தன் திவாகரத்தில் ''தன்மேம்பாடு தான் இகழ்தலாக'' குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றற் கொன்று முரணாக அமைந்துள்ளது. ஆயினும் வெற்றியைப் பெறும் நோக்கோடு ஊக்க உயர்வாக எடுத்துரைப்பதை முதல் கருத்தாகக் கொள்ளலாம், வஞ்சினமாக இரண்டாவது கருத்தைக் கொள்ளலாம்.
வாகைத் திணையில் - துறைகள் சில:-
வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் எனும் நால்வகை வருணத்தாரின் தொழில்கள் வாகைத் திணையில் குறிப்பிடப்படுகின்றன.
''அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்''
என்று தொல்காப்பிய நூற்பா அந்தணருக்கு ஆறுவகைத் தொழிலும், அரசருக்கு ஐவகைத் தொழிலும், வணிகருக்கும் வேளாளருக்கும் ஆறுவகைத் தொழிலும் உரியன என்று குறிப்பிடுகிறது.
சேந்தன் திவாகரம் வேளாளர் முதலாக நால்வரின் தொழில்களையும் ஆறு ஆறு வகைகளாகக் குறிப்பிடுகிறது.
வேளாளர் தொழில்கள்:-
தொல்காப்பியம் உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வியெனும் ஆறுவகைகளைக் குறிப்பிடுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலையில் வேளாளர்க்கு, அந்தணர், அரசர், வணிகர் எனும் மூவருக்கும் ஏவல் செய்யும் தொழில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சான்றுப் பாடலில் உழவுத் தொழிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேந்தன் திவாகரம் உழவு, பசுகாவல், வாணிகம், குயிலுவம் காருகவினை, இருபிறப்பாளருக்கு ஏவல் எனும் ஆறினைக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் ஆறு வகைகளுள் உழவு, பசுகாவல், வாணிபம் என்ற மூன்று மட்மே சேந்தன் திவாகரத்தில் ஒன்றுபடுகின்றன. பிற மூன்றும் இரு நூல்களிலும் வெவ்வேறாக அமைந்துள்ளன.
வணிகர் தொழில்கள்:-
தொல்காப்பியம் ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் எனும் ஆறினையும் வணிகருக்கு உரியனவாகக் குறிப்பிடுகிறது.
அரசர் தொழில்:-
தொல்காப்பியம் ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்புதல் எனும் ஐந்தினைக் குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலையும் அவற்றையே குறிப்பிடுகிறது. சேந்தன் திவாகரம் அவ்ஐந்து வகை தொழிலோடு ''விசயம்'' என்பதை ஆறாவது தொழிலாகக் குறிப்பிடுகிறது. மேலும் தொல்காப்பியம் ஐவகைத் தொழில்களுள் படைவழங்கலைக் குறிப்பிட சேந்தன் திவாகரம் படைக்கலம் கற்றலைக் குறிப்பிடுகிறது.
அந்தணர்கள்:-
தொல்காப்பியம் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேப்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறுவகைத் தொழிலைக் குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் அவர்க்குரிய தொழில் வகைகள் எவையும் குறிப்பிடப் பெறவில்லை. சேந்தன் திவாகரம் தொல்காப்பியம் கூறிய ஆறுவகைத் தொழிலையே முறைமாறாமல் குறிப்பிடுகிறது.
சேந்தன் திவாகரம் அகராதி வகை நூலாகையால் புறத்திணை இலக்கணம் முழுமையாகக் கூறப்பெறவில்லை.
புறத்திணைகளின் எண்ணிக்கை, புறத்திணை விளக்கம், புறத்திணை துறைகளுள் சிலவற்றுக்கான விளக்கம் மட்டுமே உள்ளன.
தொல்காப்பியம் புறத்திணைகளின் எண்ணிக்கை 7 என்றும் புறப்பொருள் வெண்பாமாலை 12 என்றும் குறிப்பிட, சேந்தன் திவாகரம் எட்டினைக் குறிப்பிடுகிறது.
கைக்கிளை, பெருந்திணை, பொதுவியல் ஆகியனவற்றைத் தொல்காப்பியம் விலக்கியது போன்றே, சேந்தன் திவாகரத்திலும் விலக்கப் பெற்றுள்ளன.
புறப்பொருள் வெண்பாமாலை போன்று வெட்சி, கரந்தை என்பனவும் வஞ்சி, காஞ்சி என்பனவும் நொச்சி, உழிஞை என்பனவும் சேந்தன் திவாகரத்திலும் தனித்தனித் திணைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் காஞ்சித் திணையின் விளக்கம் தொல்காப்பியத்தில் வருவதை விடுத்துப் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றி முரண்படுகிறது.
வாகையில் நால்வர் தொழில்கள் தொல்காப்பியத்தில் கூறப்பெறுவது போன்று சேந்தன் திவாகரத்திலும் கூறப்பெற்றுள்ளன.
நெடுமொழிக்காஞ்சி பிறிதொரு பொருள்தரும் வகையில் முரண்படுகிறது. அவ்வகையில் ''இடைநிலைப்பட்டு'' வந்துள்ளது.
நன்றி: ஆய்வுக்கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக