தொன்மங்கள் பல்வேறு நிலையில் பல்வேறு கூறுகளை அறிந்து கொள்ளுவதற்கு உறுதுணையாக அமைகின்றன. இவ்வடிப்படையில் சாதியத் தொன்மங்கள், சாதிகள் பற்றிய தோற்றத் தொன்மங்களை (Orgin Myths) அறிந்து கொளள உதவுகின்றன. சாதியத் தொன்மங்களை விரித்துக் காண்பதற்குத் தொன்மக் கூறுகளான புராணம், இதிகாசம், தொன்மம் (பழமை), பழமரபுக்கதைகள் (legend) வாய்வழி வரலாறுகள் இவை போன்று இன்னும் பிற கூறுகளும் தொன்மங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன.
இவை போன்ற தொன்மங்கள் புனையப் பெற்றவையா? நம்பகத் தன்மை கொண்டவையா? அல்லது முற்றிலும் உண்மையானவையா? என்பது ஆழ்ந்த ஆராயச்சிக்குரியது. இருப்பினும் இத்தொன்மக்கூறுகள் வழங்கப்படும் சமூக, பண்பாட்டு வரலாற்றுச் சூழல்களில் தருக்க உறவுகளைக் கருத்தாடல் செய்கின்றன. இக்கருத்தாடல் முறையானது உறவுகள் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. மேலும் இக்கூறுகள் அனைத்தும் மொழிசாரா வழக்காறுகளாக இருந்தாலும் மக்களின் வாழ்வியல் அனுபவங்களாகவும், அறிதிறன் (Cognition) சார்ந்த செயல்பாடுகளாகவும் காணப்படுகின்றன.
பல்வேறு நிலையில் விரிந்து காணப்படும் தொன்மங்கள், மக்களின் வாழ்க்கைத் தளத்தின் முரண்பாடுகளையும், எதிர்நிலைச் சிக்கல்களையும் நேர்கொள்வதற்கு உதவுகின்றன. சாதியத் தொன்மங்களின் அடிப்படையில் இடையர் எனப்படும் கோனார் இனமக்களின் தொன்மங்களை இங்குக் காணலாம்.
இடையர் (கோனார்) தொன்மங்கள்:-
ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு வகையான சாதியத் தொன்மங்கள் கூறப்படுகின்றன., இன்றைக்கு மேல் சாதியில் இருப்பவர்கள் ஒவ்வொரு படிநிலையாக மெல்ல மெல்ல மாற்றம் கொண்டனர் என்பதை,
''கள்ளர் மறவர் கனத்த அகம்படியார்
மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்''
என்பதன் மூலம் அறியமுடிகிறது.
ஆனால் இடையர், கோனார் என்றழைக்கப்படும் இவ்வின மக்களின் தொன்மங்களைக் கூறும்போது, ஒரு காலத்தில் மிகவும் தாழ்ந்து கிடந்தனர். சமூகத்தில் எவருமே இவர்களிடம் உணவு, நீர் பெறுவது கிடையாது. யாராவது ஒருவர் முன்வந்து இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கிருஷ்ண பகவான் எண்ணி, அவரே இச்செயலைச் செய்தார். கோனார் வீட்டிற்குள் சென்று பால், தயிர், வெண்ணெய் உண்டார். அன்று முதல் பிராமணர் உட்பட அனைவரும் கோனார்களிடம் நெருங்கிப் பழகினார்கள் என்பது கோனார்களின் தொன்மமாகக் கூறப்படுகிறது.
பிற சாதியினரைப் போல படிப்படியான மாற்றம் பெறாமல், யாருமே மதிக்காத நிலையில் கிருஷ்ண பகவானின் கருணையில், அவரின் பாதம்பட்ட கோனாரின் வீட்டிற்குள் மற்றை உயர்சாதியினரும் அவர்களிடம் கூடிப்பழகும் ஆதிக்கம் பெற்றனர். கடவுளின் தலையீட்டால் தாழ்த்தப்பட்ட நிலையில் இந்த கோனார் இனமக்கள் உயர்குடியாக்கத் தகுதி பெற்றனர். உயர்குடியாக்கத் தகுதிப் பெயர்வில், செய்யும் தொழில் வேறுபாடோ, வேறு எந்த மாற்றமோ, ஏற்படாத நிலையில் கிருஷ்ண பகவானின் கருணையால் கோனார்கள் கடவுளின் மக்கள் என்றாகித் தகுதி மாற்றம் பெற்றனர். இத்தகுதி தலையீட்டால் மேல்நிலையாகக் (Sanskritization) கருத்தினை முன்னிருத்திக் கூறுகின்றது.
இச்சாதியத் தொன்மக் கூறுகள் உண்மையானவைதான் என்று ஆராயும்போது, தாழ்ந்த குடியினர் வாழுகின்ற பகுதிகள் இன்றைக்கும் ''சேரி'' ''பாடி'' என்னும் பெயர்களில் வழங்கப்பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மையாகவே உள்ளது. சமூக வாழ்க்கை வாழ ஆரம்பித்த மக்களின் வாழ்க்கை முறையினைப் பறைசாற்றுகின்றன. இலக்கியங்களாகிய எட்டுத் தொகையிலும், பத்துப்பாட்டிலும் இதற்கான சான்றுகள் நிறைந்துள்ளன.
சங்க இலக்கியக் கூறுகள்:-
இடையரின மக்கள் சங்க இலக்கியங்களில் ஆயர், கோவலர், கோன் இடையர் என்று பல்வேறு பெயர்களில் காணப்படுகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் முல்லை நிலம் எனப்பெற்றது. இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் உண்மையிலே தாழ்த்தப்பட்ட மக்களா? கிருஷ்ண பகவானால் உயர்குடியைச் சார்ந்தவர்களா? என்பது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய ஒன்று. இருப்பினும் மேலோட்டமாக நோக்கும்போது அவை உண்மையானவையாகத் தோன்றுகின்றன. ஏனெனில் சங்க இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயும்போது, இடையர் இன மக்கள் வாழ்ந்த ஊர்கள் இடைச்சேரி. ''ஆய்ப்பாடீ'' என்ற பெயர்களில் வழங்கப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.
தெய்வம்:-
சங்க இலக்கியங்கள் துணை கொண்டு தெய்வத்தைக் காணும்போது, இடையர் இனமக்களின் காப்பு கடவுளாகவும் வழிபடு தெய்வமாகவும், இம்மக்களின் தலைவனாகவும் திருமால் விளங்குவது கருதத்தக்கது. சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல் ஆழ்வார்களின் பாசுரங்களும் இறைவன் திருமால் ''ஆயர்களின் தலைவனாகவும்'', ''ஆயர் கொழுந்தே'' எனவும் ஆயர் ''கொழுந்தர்'' எனவும் ''கோனார்'' எனவும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவ்வழிபாட்டு முறையினைக் கொண்டு பார்க்கும்பொழுது, யாருமே தீண்டந்த நிலையில் இருந்தவர்களை உயர் குடிப்பெயர்வு செய்வதற்கு, இவ்வின மக்கள் காட்டும் நன்றி கடனாக இவ்வழிபாட்டு முறை அமைந்திருக்கலாம். என்பது கருதத்தக்கதாகும்.
இவ்வாறு இடையர், கோனார் என்றழைக்கப்படும் இவ்வின மக்களின் தொன்மம் கூறப்பெற்றுள்ளது. ''கோனார்'' என்னும் சொல் வழக்கு ஏறக்குறைய 15 நூற்றாண்டுகளுக்குமேல் அழியாமல் தொடர்ந்து இருந்து வருகின்றது. இன்றைக்கும் ''இடையர்'', ''கோனார்'' என்ற பட்டப் பெயர்கள் வழக்கில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: ஆய்வுக்கோவை.
திரு.க.செந்தாமரை அவா்களுக்கு தாங்கள் யார்? தாங்கள் ஒரு வரலாற்றுப்பேராசியரா? வரலாற்று ஆய்வாளரா? இல்லை வரலாறு என்றால் என்ன? என அறிந்தவரா? தாங்கள் இந்த ஜாதியைச் சோ்ந்தவரா? இது உங்கள் சொந்தக்கருத்தா? கோனார் என்பதைப்பற்றி கோனார்களிடம் கேட்டு சித்தத்தில் தெளிவுபெற்று பின்னா் ஆய்வுக்கோவையை சமா்ப்பிக்கவும்...!!!
பதிலளிநீக்குமிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரம் எதாவது உங்களிடம் இருக்கின்றதா?,ஆடு,மாடுகள் மேய்த்து எவரையும் சாராமல் ஒரு கவுரவ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை தாங்கள் எவ்வாறு தாழ்த்தபட்டவர்கள் ஆனார்கள்.
பதிலளிநீக்கு