14/02/2011

தேவபாரதி - நேர்காணல்

எழுபத்து மூன்று வயதில் கம்பீரமான இளைஞனைப்போல பேசியும், குறும்படங்களுக்கு எழுதியும் வரும் தேவபாரதி மூத்த படைப்பாளி. திருவொற்றியூரை அடுத்த காலடிப் பேட்டையில் ஒரு தொழிலாளியின் மகனாகப் பிறந்து, பொதுவுடைமை இயக்கத்தின் தாக்கத்தால் வளர்ந்து, தானும் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், எழுத்தின் மீதிருந்த ஈடுபாடு காரணமாக தொழிலாளியாக இருக்கும் போதே இருபது வயதில் "ஆனந்தவிகட'னில் முத்திரைக் கதைகளை எழுதியவர். எழுதியது குறைவு என்றாலும், ஒவ்வொரு கதையையும் கனமான பாத்திரங்களு டன் - உணர்வு ததும்பும் மொழியுடன்-நேர்த்தியான கட்டுமானத்துடன் எழுதிய வர். ஜெயகாந்தனை நேசித்து அவருடன் இன்றுவரை நெருங்கிய நட்பு பாராட்டி வருவது மட்டுமின்றி, ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல, தேவபாரதி கை வலிக்க எழுதி தனது நண்பரை நிறைய எழுத வைத்த நேயர்.

தென்னிந்திய மொழிகள் தவிர, ஆங்கிலம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. இன்று தேவபாரதியின் நூல்களை கலைஞன் பதிப்பகம், சந்தியா பதிப்பகம், செண்பகா பதிப்பகம் போன்றவை வெளியிட்டுள்ளன. தொழிலாளர்களோடும் தொழிற்சங்கங்களோடும் நெருக்கமாக இருந்த இவர், அகில இந்திய அளவிலான இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனத்தின் தமிழகக் கிளைக்குச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். ஒரு மாலை வேளையில் "இனிய உதயம்' இதழுக்காக அவரைச் சந்தித்தோம்...v வடசென்னையில் பிறந்து வளர்ந் திருக்கிறீர்கள். நீங்கள் எழுத ஆரம்பித் தது 1959-ஆம் ஆண்டு. அறுபதுகளில் எழுச்சியின் உச்சத்தில் இருந்த திராவிட இயக்கத்தின் பாதிப்பு உங்களது தொடக்க காலக் கதைகளில் இல்லை. மாறாக பொதுவுடைமை சார்ந்த மனிதநேயமே கதையின் மையமாக இருக்கிறது. திராவிட இயக்கத்தின் பாதிப்பில் சிக்காமல் உங்களை இடதுசாரிச் சிந்தனைகளின்பால் இட்டுச் சென்றது எது?

""எனது வாழ்விடச் சூழல்தான் இதற்குக் காரணம். எனது தந்தை ஒரு தொழிலாளியாக இருந்தது இன்னொரு காரணம். அப்போது எங்கள் குடும்பம் திருவொற்றி யூரை அடுத்த காலடிப்பேட்டை யில் வசித்தது. திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் வடசென்னை என்பது இன்று போல அன்றும் கம்யூனிஸ்ட்டு களின் செல்வாக்கு பெற்ற பகுதி யாகவே இருந்தது. அதற்குக் காரணம் தொழிலாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாக அது இருந்தது. எனது தந்தை "வெஸ்டர்ன்' நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக இருந்தார். திடீரென்று அதை மூடிவிட்டார் கள். அதன்பிறகு குடும்பத்தை நடத்திச் செல்ல எனது தந்தை காலடிப்பேட்டையில் ஒரு "விறகு தொட்டி' வைத்து வியாபாரம் செய்தார். மாலை நேரத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடி விவாதிக்கும் இடமாக அது இருந்தது. பதினைந்து வயதுகூட நிறைவடையாத அந்த வயதில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை விறகு தொட்டிக்கு வந்த ஒரு தோழர் எனக்குக் கொடுத்தார். அதைப் படித்து பாதிக்கப்பட்டேன். அது மட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்களாகவும் எதிர்ப்பவர்களாகவும் காம்ரேடுகள் இருந்ததால், எனக்கு திராவிட இயக்கத்தின் மீது ஈர்ப்பும் இருந்ததில்லை; மரியாதையும் இருந்ததில்லை.

எனக்கு இருபது வயதானபோது இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் பெயிண்டிங் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிலாளர் வர்க்கம்தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு என்று நம்பினேன். தொழிலாளிகள் இந்திய அரசியலை பொதுவுடைமைப் பாதைக்குத் திருப்புவார்கள் என்று ஆழமாக நம்பினேன். புரட்சி வரும் என்று நம்பிய அப்பாவி காம்ரேடாக இருந் தேன். அந்த நம்பிக்கை என்னையொரு கம்யூனிஸ்டாகவும் மாற்றியது!''

அடிப்படையான கம்யூனிஸ்ட் கொள்கைகளை அந்த இளம் வயதில் விளங்கிக் கொள்ள முடிந்ததா?

""என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? எந்தக் கட்சிக்கும் இல்லாத கொள்கையாக, சமதர்மம் எனும் அற்புதத்தை இதயமாக அல்லவா கம்யூனிஸம் இன்றளவும் நேசிக்கிறது. ஏழ்மையை ஒழிப்போம் என்று முதலில் சொன்னதும், எல்லாருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் கம்யூனிஸ்ட் இயக்கம்தான். உற்பத்திச் சாதனங் களும் வளங்களும் மக்களின் சொத்தாக அரசின் கட்டுப்பாட் டில் இருக்க வேண்டும் என்று சொன்னதும்- இன்றும் சொல்லி வருவதும் கம்யூனிஸம் மட்டும் தானே! இதைவிட சிறந்ததொரு அரசியல் மீட்புக் கொள்கையை இன்னும் இரு பதாயிரம் ஆண்டு களுக்கு யாரும் சிந்திக்க முடியாது என்பது என் கருத்து. இதனால் கம்யூனிஸத்தின் பால் நான் இயல் பாக ஈர்க்கப்பட் டேன். நான் சிறுவனாக இருந்தா லும் வயது வித்தியாசம் பார்க் காமல் தோழர்கள் என்னை ஆகர்ஷித்துக் கொண்டார்கள். என்னை சமமாகவே நடத்தி னார்கள்.''

வடசென்னை என்பது இன்று அழுக்கடைந்த நெருக்க டியான ஒரு பகுதியாக- குற் றங்கள் மலிந்த ஒரு பகுதியாக இருக்கிறது. அன்று வட சென்னை வாழ்வு என்பது எப்படியிருந்தது?

""வடசென்னை இன்றுதான் நெருக்கடியான ஒரு பகுதியாக இருக்கிறது. அன்று கடற்கரை முழுவதும் கீரைத் தோட்டங்கள் இருந்தன. சவுக்குத் தோப்புகள் இருந்தன. நெருக்கடி என்பதே கிடையாது. குற்றங்களும் மிக அபூர்வமாகவே நடக்கும். "சவுக்குத் தோப்பில் கொலை' என்று இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பத்திரிகையில் செய்தி வரும். அப்படி சவுக்குத் தோப் பில் கொலை நடந்தால் வட சென்னை முழுக்க மக்கள் பரபரப் பாகப் பேசுவார் கள். கொலை நடந்த சமயத்தில் அடுத்து வரும் நாட்களில் ஏழு மணிக்கெல்லாம் பயந்து கொண்டு வீட்டில் அடங்கிவிடுவார்கள். பின்னர் தொழிற்சாலைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் படை யெடுத்த போது வடசென்னை யின் ஆன்மா அழிக்கப்பட்டது. பிறகு மார்வாடிகள் உள்ளிட்ட வடமாநில வந்தேறிகளும் கணிசமாக வடசென்னையில் குடியேறினார்கள். கடலும் அன்று கரையிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. காலப் போக்கில் கடலரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் வந்துவிட்டது- வந்தேறிகளைப்போல. ஆனா லும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவே வட சென்னை அன்றும் இன்றும் இருக்கிறது. ஐம்பதுகளின் வட சென்னை வாழ்க்கையை "இன்று முதல்' என்ற நாவல் வழியே சித்தரித்திருக்கிறேன். அதில் திரு வொற்றியூரும் காலடிப்பேட்டை யும் தொழிலாளர்களின் வாழ்வும் தான் கதைக்களம்.''

சென்னை என்றல்ல; இன்று தேசம் முழுவதுமே தொழிலாளர் களின் எழுச்சி யும் போராட் டங்களும் தீவிரத் தன்மை கொண்ட தாக இல்லை. முனை மழுங்கின போராட்டங்க ளும் வெறும் ஊதிய உயர்வு சலுகைகளுக் காகப் போராடுகிறவர்களாக வும், சமூகத்தின்மீது அக்கறையற்ற மந்தை மனோபாவத்தில் ஓடிக் கொண்டிருப்பவர்களா கவும் தொழிலாளர்கள் மாறி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது...

""மாபெரும் அரசியல் சக்தி யாகவும் மக்கள் சக்தியாகவும் இருக்கும் தொழிலாளர்கள் இப்படி மாறிப்போனதற்குக் காரணம், இங்கே மடைதிறந்து விடப்பட்ட சந்தைப் பொருளா தாரம், தாராளமயம், உலக மயம், அதன் வழியே பெருகிக் கிடக்கும் நுகர்வுக் கலாச்சாரமும்தான். ஐயாயிரம் ரூபாய் ஊதியம் வாங்குகிற ஒரு தொழிலாளி யைக்கூட நுகர்வுக் கலாச்சாரம் துரத்திக் கொண்டிருக்கிறது. அவன் பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்துவிட்டு, மனைவியின் பொருமலைத் தாங்க முடியாமல் தொலைக்காட்சி ப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை கடனுக்கு வாங்கி விட்டு, வாங்கிய கடனை அடைக்க ஓடிக் கொண்டி ருக்கிறான்.

விலைவாசியும் வீட்டு வாடகையும் அவன் கழுத்தை நெறிக்க, போராட்ட குணத்தை வீசியெறிந்து விட்டு பணத்துக் காக ஓடவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் நன்கு முன்னேறிவிட்ட தொழிலாளர் கள் தமிழ்நாட்டின் ஆசிரியர் களைப்போல வட்டிக்கு விடுகி றார்கள். உபரி வருவாயை எப்ப டிப் பெருக்குவது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இன்று தொழிற்சங்கவாதி களும் முதலாளிகளும் சமரசம் செய்து கொள்கிறவர்களாக மாறிவிட்டார் கள். இதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஓரணியில் திரட்டுவது இன்று இயலாத ஒன்று.

மற்றபடி ஒவ்வொரு கட்சி யும் வைத்திருக்கிற தொழிற்சங்கங் கள் அரசியல் பலவீனத்தோடு நடத்தப்பட்டு வரும் முனை மழுங்கின தொழிற்சங்கங்களே! இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அந்த வகையில் பரவாயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது!''

போகட்டும்! அன்று உங்களை பாதித்த கம்யூனிஸ்ட் தலைவர் யார்?

""சந்தேகமில்லாமல் "ஜீவா' என்று உரக்கச் சொல்வேன். அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் பாரீஸில் இருந்தது. பாலன் இல்லமெல்லாம் எழுபது களுக்குப் பிறகு வந்தது. பாரி முனை கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்துக்கு பதினேழு வயதி லேயே போக ஆரம்பித்தேன்.

அங்கேதான் ஜீவா, மாயாண்டி பாரதி, முத்தையா, மணலி கந்தசாமி போன்ற அற்புத மனிதர்களைப் பார்த் தேன்; பழகினேன். அதிலும் ஜீவா எனும் தலைமை குறித்து தோழர்கள் அப்போதே சொல்லக் கேட்டு, அவர் மேடையில் ஒரு புயல்போல் சீறிப் பிரசங்கித்த ஆளுமை யைப் பார்த்து, இப்படியும் ஒரு பேச்சாளன் இருக்க முடியுமா- பேச முடியுமா என வியந்து போனேன். திரு வொற்றியூர் தேரடியில் அரசியல் கூட்டம் என்றால், அண்ணா, ம.பொ.சி. போன்றவர்கள் காரில் தான் வந்து இறங்குவார்கள். ஆனால் ஜீவா 56-ஆம் எண் பேருந்தில் வந்து இறங்குவார். மக்களை மட்டுமே நினைப் பவன்- மக்கள் நலனே தன் நலன் என நினைப்பவன் மக்களைப் போல பேருந்திலேயே வந்து இறங்குகிறாரே என்று ஆச்சரியப் பட்டுப் போனேன்.

ஜீவாவுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்ட காலத்தில், நான் பாரீஸ் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கு வரும்போதும் சரி; மதிய உணவு இடைவேளையின்போதும் சரி- கிடைக்கிற கொஞ்ச நேர இடை வெளியென்றாலும் ஜீவாவைத் தேடி கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்திற்கு ஓடுவேன். அப்போது அவர் தாம்பரத்தில் தங்கியிருந்தார். எனது வயது பற்றியெல்லாம் அவருக்கு எவ்வித தன்முனைப்பும் இருந்தது கிடையாது. வயது வித்தியாசம் பார்க்கிற அவலக்குணம் ஜீவாவிடம் மட்டுமல்ல; எந்தவொரு காம்ரேடு களிடமும் அன்று கிடையாது. என் தோள்மீது கை போட்டு அழைத்துக் கொண்டு, அப்படியே கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலேறி தாம்பரம் செல்வார். கடற்கரை ரயில் நிலையத்தில் நான் வாங்கித் தரும் தேநீரை அன்போடு பருகு வார். கம்யூனிஸ்ட் காரியாலயத்தி லிருந்து கடற்கரை ரயில் நிலையம் வருகிற வரை பொதுவுடைமை பற்றி ஒரு பள்ளி மாணவனுக்கு எத்தனை எளிமையாகச் சொல்ல வேண்டுமோ அத்தனை எளிமை யாகச் சொல்வார். எனக்கான வழிகாட்டி, தலைவன் எப்படி இருக்க வேண்டுமென நான் நினைத்தேனோ அப்படி இருந் தார் ஜீவா. இதனால் எனது பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அவரை அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அவரிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். "உன் விருப்பப்படியே வருகிறேன் சுப்பு' என்றார். எனக்கு தலைகால் புரியவில்லை. அப்போது நான் பள்ளியில் மாணவர் தலைவ னாக இருந்தேன். ஓடோடிச் சென்று விழாக் கமிட்டியிலிருந்த ஆசிரியர்களிடம் "ஜீவா வர சம்மதித்து விட்டார்' என்றேன். அவர்கள் அதற்காக சந்தோஷப்படவில்லை. "ஜீவாவை அழைத்துவர வேண்டாம்' என்றார்கள். நான் நொந்து போனேன். பள்ளி இறுதி வகுப்பு வரை மூன்றாண்டுகள் இப்படியே "ஜீவாவை அழைத்துவர வேண் டாம்' என்றார்கள். அப்போது தான் புரிந்தது- காரில் வந்து இறங் குகிறவன்தான் தலைவன் என்று! பகட்டுக்கு வழிபாடு நடத்துகிற எச்சில் தமிழர்கள் எல்லா இடங் களிலும் இருக்கிறார்கள் என்று! காந்தியைப்போல ஜீவா எளிமை யின் மறு உருவம்.

தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் விடுதலை பெற வேண்டும் என்றால் அதற் கான ஒரே விடுதலைப் பாதை பொதுவுடைமை தவிர வேறில்லை என்று உறுதியாக நம்பிய அவர், தொழிலாளியைப்போல அரைக் கால் சட்டை அணிந்திருப்பார். இதற்காகவே அவரைப் பலர் விமர்சித்தார்கள். ஜீவாவின் இந்த ஆடை அடையாளத்துக் கும், அரை நிர்வாணியாக இருந்த காந்தியின் ஆடை அடையாளத் துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை பெரும் பான்மையானவர்கள் புரிந்து கொண்டாலும், என் பள்ளியில் இருந்த புல்லர்களைப் போன்ற பலர் புரிந்து கொள்ளவில்லை. ஜீவாவைப் போன்ற தன்னலமற்ற தலைவனாக அவருடைய காலத்திலேயே நான் பார்த்த ஒரே ஆளுமை காமராசர்தான். ஈ.வே.ராவை நான் சமூகவாதி யாகத்தான் பார்க்கிறேன். ஜீவா தன்னை சமூகத்துக்கு அர்ப் பணித்து விட்டதால் தாய்மாமன் வீட்டில் வளர்ந்த தனது மூத்த மகள் குமுதாவை பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வளர்ந்து குமரியான பிறகுதான் சந்தித்தார். சமூகத்துக்காக தனது குடும்பத்தையே மறந்துபோன ஒரே தலைவன் ஜீவாதான். தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது என்பதற் காகவே தாயாரின் மரணத்தின் போது அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட மறுத்தவர். ஜீவா என்று பெயர் சொன்னாலே நம் இதயம் கரையும். ஜீவா தியா கத்தின் சொரூபம்- உழைப்பவர் களின் உந்து சக்தி- கம்யூனிஸத் தின் கௌரவம்!''

இலக்கியம், எழுத்தின்மீது உங்களுக்கு எப்படி காதல் பிறந்தது?

""நான் பள்ளி இறுதி பயின்ற காலகட்டத்தில் காலடிப் பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பெற்ற அநேக அமைப்புகள் இருந்தன. உதாரணமாக திருவொற்றியூரில் "புதுமைக் கலா மன்றம்', "மக்கள் மறுமலர்ச்சி மன்றம்', "கல்விக் கழகம்' என்று பல அமைப்புகள். இதில் 1958-ஆம் ஆண்டு "புதுமை கலா மன்ற'த்துக்கு கவிஞர் தமிழ் ஒளி வந்திருந்தார். அவரோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. எனக்கும் அவருக்கும் பன்னி ரண்டு வயது வித்தியாசம். இருந்தாலும் என்பால் அன்பும் சமத்துவமும் கொண்டு என்னைச் சமமாக நடத்தினார். அவரால்தான் எனக்கு இலக்கி யப் பரிச்சயம் ஏற் பட்டது. தமிழின் தலைசிறந்த இலக் கியங்கள், தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்கள், உலக இலக்கியங் கள், ரஷ்ய இலக்கியங்கள் போன் றவை அவரால் எனக்கு அடையா ளம் காட்டப்பட்டன. அவருட னான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு வாசிப்பைப் பற்றி பேசுவோம். இதற்காகவே- அவரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே பல புத்தகங்களை இரவு முழுவதும் கண்விழித்துப் படித்து முடித்து அவரோடு விவாதித்திருக்கிறேன். இப்படி அவருடனான சந்திப்பும் வாசிப்பும்தான் என்னை கவிதை கள் எழுத வைத்தன. முக்கியமாக அவர் எங்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தபோது கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை எனக்கு வாசித்தும் காட்டுவார். அந்த பாதிப்பு என்னைத் தூண்டி யதும் ஒரு காரணம்.''

கவிதைகளை விட்டுவிட்டு சட்டென்று சிறுகதைகள் பக்கம் உடனடியாக மடை மாறிய ஒரே எழுத்தாளர் அநேகமாய் நீங்கள்தான் என்று நினைக் கிறேன்...

""உண்மை தான். நேரடியாக சிறுகதை முயற்சித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கவிதை வழியே சிறுகதை, நாவல், கட்டுரை என்று பயணப் பட்டவர்கள், கவிதையில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, இனி சிறுகதை வடிவமே எனது கருப் பொருளுக் குச் சேதம் விளைவிக்காத ஊடகம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிடுவதுதான் வாடிக்கை.

ஆனால் எனக்கு நேர்ந்தது வேறு. அன்று கவிஞன், எழுத்தா ளன் யாராயினும் சமூகத்தில் கிடைக்கிற அங்கீகாரத்தைவிட, "ஆனந்த விகடன்', "மஞ்சரி' போன்ற வெகுஜன இதழ்களில் பிரசுரமாகும் சிறுகதை, கட்டு ரைக்குத் தரப்படும் சன்மானத் தொகை பெரிய கௌரவமாக இருந்தது. அதிலும் என்னைப் போன்ற எளியவனுக்கு சன்மானம் ஒரு பொருட்டாகவே இருந்தது. அக்காலத்தில் பத்திரிகைகளில் கவிதைகளுக்குத் தரும் சன்மானம் பத்து ரூபாயிலிருந்து இருபத் தைந்து ரூபாய் வரைதான் இருந் தது. ஆதலால் ஒரு கவியாக வாழ்வது என்பது கடினமாக இருந் தது. மாறாக "ஆனந்த விகட' னில் ஒரு முத்தி ரைக் கதை பிரசுர மானால் 101 ரூபாய் கொடுப்பார்கள். அக்காலத்தில் நூறு ரூபாய் என்பது என்னைப் போன்றவர்களுக்கு மிகப் பெரிய தொகை.

தவிரவும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதினார்கள். முத்தி ரைக் கதை இந்த வாரம் யார் எழுதியிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் வாசகர் கள் மத்தியில் இருந்தது. ஆகவே நாமும் ஏன் சிறுகதை எழுதக் கூடாது என்று "ஆனந்த விகட'னுக்கு "தர்க்கம்' என்ற சிறுகதையை எழுதி அனுப்பி வைத்தேன். அனுப்பிய ஆண்டு 1961, நவம்பர் மாதம். அந்தக் கதை அடுத்த மாதமே முத்திரைக் கதையாகப் பிரசுரமானது. வாச கர்கள் என்னைக் கொண்டாடி விட்டார்கள். மாபெரும் படைப் பாளிகள் பலர் எனக்கு நண்பர் களாகக் கிடைத்தார்கள். அப் போது "ஆனந்த விகட'னுக்கு நிர்வாக ஆசிரியராக இருந்த மணியன் அவர்கள் என்னைப் பார்க்க விரும்புவதாக தமிழ்ஒளி சொன்னார். அவரைப் போய்ப் பார்த்தேன். மிகுந்த மரியாதை யோடு என்னை வரவேற்று தேநீர் தந்த அவர், "இனிமேல் நீங்கள் எழுதுகிற கதைகளை முதலில் விகடனுக்கு அனுப்புங் கள்' என்று கேட்டுக் கொண்டார். நல்ல கதையா என்பதை மட்டுமே பார்த்து, இன்னார்- இனியார் என்று பாராமல் "விகடன்' பிர சுரித்ததால் அந்த இதழின்மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது மட்டுமல்ல; நல்ல கதைகளை மட்டும் எழுத வேண்டும் எனத் தூண்டியதும்கூட ஒருவகையில் "ஆனந்த விகடன்'தான். இப்படித் தான் கவிதைகளைத் துறந்து, சிறுகதையாளனாக என்னை நானே மடைமாற்றிக் கொண்டேன். என்றாலும் இடையிடையே சில கவிதைகளையும் எழுதினேன். அவையெல்லாம் என்னை கவிதையாக எழுது என நச்சரித்த கருப்பொருட்கள்.''

இன்று எந்தவொரு இலக்கிய வடிவம் என்றா லும் சப்-டெக்ஸ்ட் (நன்க்ஷ பங்ஷ்ற்) என்று குறிப்பிடப்படும்- எழுதியதைவிட எழுதாமல் அப்படியே வாசகனின் மனவாசிப்புக்கு விட்டுவிடும்- சொல்லப்படாத வார்த்தை களும் உணர்வுகளும்தான் வாசகனுக்கு அதிக அழுத்தம் தருவதாக இருக்கிறது! உங்கள் சில கதைகளில் இந்த உத்தி இயல்பாக அமைந்திருக்கிறது. என்றாலும், பெரும்பான்மை கதைகள் பளிச்சென்று வாச கனுக்குத் திறந்து வைக்கப் பட்ட வாசலோடு, ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய லட்சியத்தை தூக்கிப் பிடிக்கும் கதைகளாக இருக்கின்றன. இந்தத் தன்மை உங்கள் இடது சாரிச் சிந்தனை கொடுத்த ஒன்றா?

""லட்சியத்தை வரையறுத்துக் கொண்டு யாரும் எழுத முன் வருவது இல்லை. என்னை பாதித்த இயக்கமும் பொதுவுடைமைச் சிந்தனையுமே அதற்குக் காரண மாக அமைந்தன. நான் எழுதிய காலகட்டத்தில் எழுதிய எழுத் தாளர்கள் என்றாலும் சரி; எனக்கு முந்தைய தலைமுறை என்றா லும் சரி- எழுத்தை, மனித மனதை பண்படுத்தும் உழவுக்கருவியாகப் பயன் படுத்தினார்கள். உதாரணத் துக்கு பாரதியைச் சொல்ல வேண்டும். பாரதி "தனிமை இரக்கம்' என்றுதான் முதல் கவிதை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தனது கவிதையின் சிறப்பைப் பற்றிப் பேசவந்த அவர், "சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது; சேராதிருக்க நவகவிதை; காலத்தால் அழியாத மகா கவிதை' என்று எழுதினார். வேறொரு கவிதையில் தன் கவிதையின் சாரமாக, தன் எழுத் தின் அடிப்படையை- லட்சி யத்தை, "தீயன புரிதல்; முறைதவிர் உடமை; செம்மை தீர் அரசியல் ஆகியவற்றின்மீது எழும் என் அரும்பகை; அதன் மிசை ஆணை' என்று சொல்கி றார். சுதந்திர வேட்கை கொண்டு தேசமே இருந்தபோது, மக்களுக் குப் போதிப்பவர்களாக, எழுத்தை வெறும் பிழைப்பாகக் கருதாமல் உயர்ந்த லட்சியத்தின் வெளிப் பாடாகக் கருதி எழுதினார்கள்.

சமூக அரங்கில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மக்களின் நலம், மக்களின் மனம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத் தார்கள். தமிழின் முதல் புதினத் தைப் படைத்த வேதநாயகம் பிள்ளை நீதிபதியாக இருந்தார். முதல் சிறுகதைக் கோவை யைக் கொண்டு வந்த வ.வே.சு. ஐயர் கல்விக் கட லாக இருந்தார். புதுமைப் பித்தன் செல்வந்தரோ, உயர்பதவியோ வகிக்க வில்லை என்றாலும், தமிழ் இலக்கியத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார். இப்படி என் முதல் தலைமுறையினர் பங்களிப்பு என்னை மக்களுக்கான எழுத்தை எழுத வைத்தது.

பாரதி சொல்வதுபோல, "ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்' என்பதுதான் எனது எழுத்தின் லட்சியமாக இருந் தது என்பதால், இயல்பாக அமைந்த- கதையே அமைத்துக் கொண்ட இலக்கிய உத்திகளைத் தவிர, நான் தீவிர கதைத் தொழில் நுட்பவாதியாக, எனது கதை யைச் சிதைக்கவும் சென்று சேர் வதில் தடை செய்யவும் விரும்ப வில்லை. என்றாலும் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நாமே சொல்லிவிடுவது என்ற பாடப்புத்தகத் தன்மையிலான கதைகளையும் நான் எழுத வில்லை. நல்ல கதைகளைத் தர வேண்டும் என்பதற்காக என்னை எழுதத் துரத்திய சொற்ப கதை களை மட்டுமே எழுதியிருக்கிறேன்.

அதேபோல பிரச்சார தொனியோடு நான் ஒருபோதும் எழுதவில்லை. எனினும் எழுத்து என்பதே ஒரு மறைமுகப் பிரச் சாரம்தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.''

உங்களது கதைகளின் கதை பற்றிச் சொல்ல முடியுமா?

""நிச்சயமாக! தமிழில் ஒரு வேடிக்கையான பாடல் உண்டு- "கதை கதையாம் காரணமாம்; காரணத்துக்கு ஒரு தோரண மாம்' என்று. நம் ஒவ்வொருவரு டைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உண்டு. கதைகள் எல்லாம் நூறுசதவிகித புனைவுகளாக இருக்க முடியாது. வாசகர்கள் கேட் கிறார்கள் என்று குப்பைகளை எழுதிய தமிழ்வாணன்கூட ஒரு சதவிகிதமாவது உண்மைகளை அவரது துப்பறியும் குப்பைக் கதைகளில் சேர்த்திருந்தால் மட்டுமே அவரால் எழுதியிருக்க முடியும். எனினும் தொன்மமோ ஒரு சமூகத்தின் வரலாறோ அரசியலோ இல்லாத புனைவு கள் அற்ப ஆயுளோடு மாண்டு போகும். இன்று குழந்தைகள் ரசிக்கும் ஹாரிபாட்டர் போன்ற மிகைப் புனைவுகளில் கதா நாயகன் புறக்கணிக்கப்பட்ட வனாகச் சித்தரிக்கப்பட்ட காரணத்தால் மட்டுமே அதன் முதுகெலும்பு உறுதியாக இருக்கிறது. புறக்கணிப்பிலிருந்து எழுந்து நின்று வெற்றி பெறுவது தானே மனித வாழ்வு. அதுதான் ஹாரிபாட்டரின் வெற்றிக்குக் காரணம்.

எனது கதைகளின் பின்னணி யைப் பற்றிச் சொல்லும்போது, புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த "பலிபீடம்' கதை யைப் பற்றிச் சொல்ல வேண்டி யிருக்கிறது. அந் தக் கதை ருஷ்யா வின் பிரசித்தி பெற்ற எழுத்தா ளர் அலெக்ஸாண் டர் குப்ரின் எழுதி யது. அது விபச்சாரத்தைப் பற்றிய- விபச்சாரிகளைப் பற்றிய கதை. மன்னிக்க வேண்டும்! இதை பாலியல் தொழிலாளி என்று போட்டுக் கொள்ளுங்கள். அதில் அவர் எழுதியிருந்தார்- "ஏழ்மையும் அறிவின்மையும் பாலியல் தொழிலாளர்களை உற்பத்தி செய்கிறது' என்று. இத்தகு இழிவான- மோசமான வாழ்க்கைக்கு மனிதர்கள் எவ்விதம் தள்ளப்படுகிறார்கள் என்ற சித்தாந்தம் அது.

அதை நான் மறுக்கவில்லை. இதனடிப்படையில் புதுமைப் பித்தன் "பொன்னகரம்' என்ற சிறுகதையை எழுதியிருந்தார். "விபத்துக்கு உள்ளான புருஷனைக் காப்பாற்றுவதற்காக அம்மாளு என்ற பெண்மணி ஒருவனது இச்சைக்கு உட்பட்டு பாலியல் தொழிலாளியாகிறாள் என்பது தான் கதை. அக்கதையை முடிக் கும்போது, "கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதானய்யா பொன்னகரம்' என்று எழுதியிருந் தார். இக்கதை யைப் படித்தபோது பண்பாடு, நம் வாழ்வு சார்ந்து எனக்கு மாற்றுக் கருத்து தோன்றி யது! ஏழ்மையாக இருப்பதால் மட் டுமே ஒருத்தி இக் காரியத்துக்கு உட்பட்டுவிடுவாளா என்ன? தமிழனின் வாழ்வு என்பது வறுமையிலும் பண்பாட்டை இழக்க விரும்பாத போராட்ட வாழ்வாகத்தான் இருக்கிறது. இதைச் சொல்ல நினைத்து "தத்துவ தரிசனம்' என்ற சிறு கதையை எழுதினேன்.

பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்கிற ஒருத்தியிடம் காசு கொடுத்து அவள் பெண்மை யைத் திருட நினைக்கிறான் ஒருவன். அவன் முகத்தில் அவன் கொடுத்த காசைத் தூக்கி எறிந்து விட்டுப் போகிறாள். மனதுக்குள் கடல்போல் கொந்தளிப்புடன் சொல்லிக் கொள்கிறாள்: "த்தூ... பிச்சைக்காரின்னா அவிசாரின்னு நினைச்சிக்கிறான்.' - இப்படித் தான் முடித்தேன் அந்தக் கதையை. ஆக காரணம் என்பது திட்டமிட் டதாக- நிகழ்வதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நம் வாழ்வும் வாழ்வியலும் படைப்புகளின் காரணமாகவே செயலாற்றுகின் றன.''

உங்கள் சிறு கதைகளைப் பற்றிச் சொல்லும் போது நீங்கள் "விகட'னில் எழுதி வந்த காலகட்டத்தில், ஜெயகாந்தன் தான் தேவபாரதி என்ற பெயரில் எழுதுவதாக பேச்சு கிளம்பிய தாமே? இப்படியொரு பேச்சு எழ என்ன காரணம்? அவரது எழுத்துகளை பிரதியெடுத் ததுபோல நிச்சயமாக உங்கள் எழுத்துகள் இல்லை அல்லவா? மற்றொன்று ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்களில் நீங்களும் ஒருவர். அவரோடு உங்களுக்கு இருந்த உறவு பற்றியும் சொல்லுங்களேன்...

""அப்போதே இதை நான் மறுத்திருக்கிறேன். ஏன் இப்படியொரு பேச்சு எழுந்தது என்றால், எனது கதைகள் "ஆனந்த விகட' னில் பிரசுரமாவதற்கு முன்பே ஜெயகாந்தன் "விகடன்' வழியே ஒரு மாபெரும் வட்டத்தை சம்பாதித்து வைத்தி ருந்தார். அவரைப்போல் நான் எழுதவில்லை என்றாலும், எனது இலக்கிய நோக்கமும் எனது கவிதைகளின் ஆன்மாவும் ஜெயகாந்தன் படைப்புகளோடு ஒத்துப்போனது காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஜெய காந்தனோடு 1961-லேயே எனக்கு நட்பு ஏற்பட்டு விட்டது. என்றா லும் இருவருக்கும் ஒத்த சுபாவம் கிடையாது. ஆனால் ஆழமான நண்பர்களாகி விட்டோம். என் னையும் அவரையும் இணைத்து வைத்தது அவர் எழுதிய ஒரு கட்டுரை என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஜெயகாந்தனைச் சந்திப்ப தற்குமுன் "சரஸ்வதி' பத்திரிகை யில் "சென்னைக்கு வந்தேன்' என்ற கட்டுரையை எழுதியிருந் தார். அதில் "பேனாவின் மூலமாக என்னை நானே கழுவேற்றிக் கொள்ள வரவில்லை' என்று எழுதியிருந்தார். தங்களை சமர சம் செய்து கொண்டு எழுதிய பலரையும் பார்த்து வந்த எனக்கு, ஜெயகாந்தனின் இந்தப் பிரகடனம் அவர்மீதான அபிமானத்தை அதிகப்படுத் தியது. தமிழ்ஒளிதான் என்னை ஜெயகாந்தனிடம் கன்னிமாரா நூலகத்தில் ஒருமுறை அறிமுகப்படுத்தி னார். மறுநாளே நான் ஜெயகாந்தன் வீட்டுக்குச் சென் றேன். எனக்கு இரண்டாவது சந்திப் பிலேயே சாப்பாடு போட்டார். நெகிழ்ந்து போனேன். அப்போது நான் பெரம்பூர் ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந் தேன். ஜெயகாந்தனைச் சந்திப்ப தற்காக அடிக்கடி விடுப்பு எடுக் கத் தொடங்கினேன். ஒரு கட்டத் தில் சக ஊழியர் தொழிற்சாலை கண்காணிப்பாளரைத் தாக்கிய வழக்கில் நான் நேரடி சாட்சியாக இருந்தேன். ஆனால் விசாரணைக் கமிட்டியின் முன்பு தொழிலாளியைக் காட்டிக் கொடுக்க விருப்பமில் லாமல் வேலையை விட்டு வெளி யேறினேன். வேலையை விட்டது ஜெயகாந்தனைச் சந்திக்க இன்னும் வசதியாக அமைந்து விட்டது. இதனால் எங்கள் நட்பு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இருவரும் அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டே இருப்போம். இப்படி 25 ஆண்டுகள் பேசிக் கொண்டி ருந்தோம். என்றாலும் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் வாழ்க்கை நகராது என்பதால், ஜெயகாந்தன் சினிமா தயாரித்து இயக்கியபோது, அவரது படங்களின் தயாரிப்பு நிர்வாகியாக, பணப் பையை நிர்வகிப்பவ னாக இருந்தேன். இதனால் நிறைய சினிமா புரொடக் ஷன் மேனேஜர் வேலைகள் என்னைத் தேடி வந்தன. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயகாந்தன் நண்பர் என்பத னால் தயாரிப்பு வேலை செய் தேனே தவிர அது எனது வேலை இல்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். அதை ஜெயகாந்த னும் அறிவார்.

ஒருமுறை கண்ணதாசன் "முன்னணி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஜெயகாந்த னிடம் கதை கேட்டு அவரது வீட்டுக்கு நண்பர்களோடு வந்தார் கண்ணதாசன். நான் அருகில் இருந்தேன். கண்ண தாசன், "கதை எழுதிக் கொடுங்கள்' என்று கேட்டார். ஜெயகாந்தனோ, "எவ்வளவு சன்மானம் தருவீர் கள்?' என்று கேட்டார். "நாங்கள் தொடங்குவது சின்ன பத்திரிகை' என்றார் கவிஞர். "நான் பெரிய எழுத்தாளன் அல்லவா' என்றார் ஜெயகாந்தன் நகைச்சுவையாக. கையோடு என்னை கண்ணதாச னிடம் சுட்டிக்காட்டி, "இவர் எழுத்தாளர் தேவபாரதி. இவருக்கும் வாய்ப்புக் கொடுக்க லாமே' என்றார். அவர் செய்த சிபாரிசில் நானும் "முன் னணி'யில் எழுதினேன். இதுதான் ஜெயகாந்தன். ஜெயகாந்தனோடு இணைந்து பல பணிகளைச் செய்தேன். அவரோடு கூடவே இருந்த தால், அவர் எழுதிய பாதி படைப்புகளை அவர் டிக்டேட் செய்ய நான் கைப்பட எழுதியிருக் கிறேன். இது எழுத்தைக் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது.''

அது என்ன ஜெயகாந்தன் நட்பு வட்டத்தில் கம்பீரமான மீசையோடு எல்லாரும் வலம் வருகிறீர்கள்?

""நாம் என்ன பிராமணனா? சூத்திரன்தானே? சூத்திரன் என்பவன் இழிவானவன் என்று வருணாசிரமம் சொல்வதெல் லாம் பழங்கணக்கு. சூத்திரனுக்கு மீசைதான் கம்பீரம். அர்த்த முள்ள வாழ்வை வாழ சூத்திரம் வகுத்தவன்- இந்த உலகத்துக்கே பல வாழ்வியல் சூத்திரங்களைச் சொல்லிக் கொடுத்திருப்பவன் தமிழ்ச் சூத்திரன்தான். இதில் நல்ல பல தமிழ் பிராமணர்களை யும் நான் தமிழ்ச் சூத்திரனாகவே பார்க்கிறேன். பாரதிபோல மீசை வைத்துக் கொள்ள முடியவில் லையே என ஏங்கியிருக்கிறேன். ஜீவாவின் மீசை, ம.பொ.சி. மீசை, சேகுவேராவின் மீசை என்று என்னை வசீகரித்த மீசைகள் பல. தோழர் ஜெயகாந்தனின் மீசை ஆளுமையின் அடையாளம். கம்பீரத்தின் முக"வரி.' அவரது மீசையின் நீட்சியாக நட்பு வட்டத்தின் மீசைகளை எடுத்துக் கொள்ளலாம்; தவறில்லை.''

குழந்தைகளுக்கான சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறீர்கள். இன்று குழந்தை இலக்கியம் என்ற ஒன்று இருக்கிறதா?

""முன்பைவிட தீவிரமாக, காட்சி வடிவில் கணிப்பொறி குறுவட்டுகளா கக் கிடைப்பது காலத்தின் மாற்றம். இன்று கதை சொல்கிற தலை முறை இல்லை. ஒவ்வொரு வீட் டிலும் வெற்றிகர மான கதை சொல்லிகளாக தாத்தா, பாட்டி இருவருமே இருந் தார்கள். இன்று அவர்களும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் முடங்கிக் கிடக்கிறார் கள். குழந்தைகளும் தொலைக் காட்சியில் வருகிற சிறுவர் கதைகளில் தங்கள் கதை சொல்லிகளைக் கண்டுபிடித்து விட்டார் கள். குழந்தைகளுக்கு என்று பிரத்தியேக தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. எனது பேரப் பிள்ளைகள் உட்பட சுட்டி டி.வி., ஜெட்டிக்ஸ், போகோ என்று மாய்ந்து மாய்ந்து பார்க் கிறார்கள். உலகத்து சிறுவர் இலக்கியங்களை கார்ட்டூன் ஓவியக்காட்சிப் படங்களாகப் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. நானும் அவர் களோடு பார்க்கிறேன். ஆனால் சில தொடர்கள் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சு கின்றன. உதாரணமாக, சுட்டி டி.வி.யில் வரும் "செட்ரிக்' என்ற தொடர், பெரிய மனிதர்களின் உணர்வெழுச்சி களைக் குழந்தை கள்மீது திணித்து, அவர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்க முனைகிறது! இப்படி பல குழந்தைகள் தொலைக்காட்சிகளில் தடை செய்ய வேண்டிய பல தொடர் கள் இருக்கின்றன. ஆசியாவி லேயே பணக்கார குடும்பமாகி விட்ட கலாநிதிமாறன் குடும்பம் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆனால் தமிழ்ப் பிஞ்சுகளை நஞ் சாக்கித் தங்கள் பணப் பையை நிரப்பிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. சிறுவர் இலக்கி யத்தில் சற்று ஆர்வம் காட்டியதற் குக் காரணம் லியோ டால்ஸ்டாய். அவர் எழுதிய சிறுவர் கதைகளை வாசித்து வியந்தே நானும் முயற் சித்தேன். அது சிறிய முயற்சி; அவ்வளவே.''

இப்போதும் வாசிக்கிறீர் களா? வாசிப்பு தவிர வேறு எதில் நாட்டம் உண்டு?

""எப்போதுமே நான் தீவிர வாசகனாக இருந்தது இல்லை. தீவிர வாசகன் என்றால் பட்டியல் போட்டு வாசிப்பவன் கிடையாது. தேர்ந்தெடுத்து வாசித்தவன். இப்போதும் புதி யவர்கள் சிலரை நண்பர்கள் சொல்ல அல்லது புத்தகம் வீடு தேடி வந்தால் வாசிப்பதுண்டு. தமிழ்ச் சிறுகதை தரமுயர்ந்து நிற் கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. எனினும் நவீன தமிழ்ச் சிறுகதைகள் எனக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றன. மலிவான ரசனையை வளர்த்த வெகுஜன எழுத்தாளர்கள் இப் போது குறைந்து போய்விட்டது எனக்கு மாபெரும் மாற்றமாகத் தெரிகிறது. கேரளம், வங்காளத் தைப்போல தரமாக எழுதுகிற இலக்கியப் படைப்பாளிகளுக்கு வெகுஜன பத்திரிகைகள் வழக் கத்துக்கு மாறாக அதிக இடம் தருவதும் மகிழ்ச்சியான மாற்றமாகப்படுகிறது. இந்த மாற்றத் தைப் பார்க்கும்போது நானும் இப்போது எழுத வேண்டும் என்று துடிக்கிறேன்.

வேறு நாட்டங்கள் என் றால் "திருப்பாவை'யைப் பாடு வதில் காதலே உண்டு. இது சிறு வயது முதலே ஏற்பட்ட நாட்டம் என்றுகூடச் சொல்லலாம். என் தாயார் சிறுவயதில் மார்கழி முழுவதும் என்னை அருகில் இருத்தி வைத்து "திருப்பாவை' படிக்க வைப்பார். இப்போது எழு பது வயது ஆகப் போகிறது. ஒவ் வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் புலர் காலைப் பொழு தில் இப்போதும் நான் "திருப்பாவை' வாசிக்கிறேன். அது ஆண்டாளின் அழகுத் தமிழா? அவள் கொண்ட பக்தியா என்பதெல்லாம் என்னால் விவரிக்க இயலாது. அது ஒரு இனிய அனுபவம்.''

ஒரு மூத்த படைப்பாளி என்பதால் உங்களிடம் இந்தக் கேள்வி! சிறுகதை, நாவல் இரண்டுக்குமான முக்கிய வேறுபாடுகள் என்று எதைச் சொல்வீர்கள்? இன்று பலர் குறுநாவல்களை எழுதிவிட்டு சிறுகதை என்கிறார் கள்...

""புதுமைப்பித்தனே இதுபற்றிச் சொல்லியிருக் கிறார். "வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சாளரத் தின் வழியே வெளியே பார்ப் பது போன்றதுதான் சிறுகதை. நாவல் என்பதோ வீட்டைவிட்டு வெளியே வந்து உலகத்தைப் பார்ப்பதற்கு ஒப்பாகும்' என்கி றார். இன்னும் விரிவாகச் சொல்வ தென்றால் சிறுகதை என்பது முக்கிய பாத்திரத்தின் வாழ்க்கை யில் ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன்மூலம் மனித மனங்களில் அதிர்வுகளை உண்டு பண்ண விழைகிறது. நாவலோ பிரதான பாத்திரங்க ளின் மொத்த வாழ்க்கை நெடுகி லும் விரிந்து சென்று காலத்தோடு விளையாடும் எழுத்து. சிறுகதை யானது வாசகர் மனதில் உடனடி விளைவுகளை உருவாக்குகிறது. நாவலானது காலப்போக்கில் மனித மனங்களில் ரசாயனம் செய்கிறது.

சிறுகதைக்கு உதாரணமாக, கங்கா என்கிற இளம் பெண் ணுக்கு நேர்கிற எதிர்பாராத நிகழ்ச்சியைச் சித்தரிக்கும் கதை தான் "அக்னிப் பிரவேசம்'. இந்தக் கதையைத் தொடர்ந்து ஜெ.கே. எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள்', "கங்கா எங்கே போகி றாள்?' என்று அடுத்தடுத்து எழுதப்பட்ட இரண்டு நாவல்கள், கங்காவின் முழு வாழ்க்கையையும் சித்தரிக்கிறது. அவள் கங்கையில் கலந்து மறைகிற வரை அந்த நாவல் சித்தரிக் கிறது. நவீன தமிழ் இலக்கியத் துக்கு இலக்கணம் வகுப்பது போல தலைசிறந்த சிறுகதை களையும் நாவல்களையும் ஜெய காந்தன் படைத்திருக்கிறார். காலம் கடந்தும் உதாரணங் களாகத் திகழும் படைப்புகள் அவருடையவை.''

ஆனால் தமிழ்ச் சிறுகதையில் சிறந்த சாதனையாளராக புதுமைப்பித்தனைச் சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா?

""இப்போதும் சொல்கிறேன். சிறுகதை இலக்கியத்தில் புது மைப்பித்தனின் சாதனை வேறு; ஜெயகாந்தனின் சாதனையும் வீச்சும் வேறு. புதுமைப்பித்தன் என்று வைத்துக் கொண்ட புனைப் பெயருக்குப் பெருமை சேர்த்த ஒரே தமிழ்ப் படைப்பாளி புது மைப்பித்தன் மட்டும்தான்.''

நீங்கள் திரை எழுத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

""எனக்கு வேலையில்லா நிலையில் என்னைத் திரைத் துறையில் கால் பதிக்க வைத்தவர் ஜெயகாந்தன்தான். 1964-ல் "உன்னைப்போல் ஒருவ'னில் தொடங்கி, அவரால் எழுதப் பட்ட "யாருக்காக அழுதான்', "சில நேரங்களில் சில மனிதர்கள்', "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', "கருணை உள்ளம்' போன்ற படங்களில் தயாரிப்பு நிர்வாகி யாகப் பங்களிப்பு செய்தேன். பிறகு 1971-ல் "இனி ஒரு ஜன்மம் தரு' என்ற மலையாளப் படத் தைத் தயாரித்து வெளியிட்டேன். அந்தப் படத்தின் கதாசிரியரும் நான்தான். அதன்பிறகு பீம்சிங் கின் புதல்வரும் என் ஆத்ம நண்பர்களில் ஒருவருமான எடிட்டர் பீ.லெனின் இயக்கிய "நாக்அவுட்', "குற்றவாளி', "காவலை மீறி', "ஊருக்கு நூறுபேர்', "செடியும் சிறுமியும்' ஆகிய குறும்படங் களுக்கு கதை, திரைக்கதை, வசனம் என்று அநேக பங்களிப்பு களைச் செய்திருக்கிறேன். இவற் றில் "நாக்அவுட்', "ஊருக்கு நூறு பேர்' ஆகிய படங்கள் குடியரசுத் தலைவரின் விருது பெற்ற படங் கள் என்பது குறிப்பிடத் தக்கது. தவிர மல்லியம் ராஜகோபால் இயக்கிய பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறேன். திரைத் துறையில் எனக்கொரு மனக்குறையும் உண்டு. ச.எ.உ.ஈ - யால் அங்கீகரிக் கப்பட்ட எனது "நாளை வரும்' என்கிற திரைக்கதை இன்னும் எடுக்கப்படாமலேயே இருக்கி றது. என்றாலும் அவ்வகையில் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.''

நேர்காணல் : ஆர்.சி. ஜெயந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக