30/01/2011

குறுந்தொகைப் பாடல்களில் ஐவ்வகை அடிக்கருத்தாய்வு - ம. சித்ரா கண்ணு

ஒரு கவிதையில் அல்லது ஒரு படைப்பில் வாசகருக்கு வற்புறுத்தக் கூறுமாறு அமைக்கப்பட்ட ஒரு தலைமைக் கருத்தே அடிக்கருத்து. இது கவிதையின் மொத்தப்பொருள், கவிதை சொல்ல வரும் அடிக்கருத்து, அடிக்கருத்தோடு பின்னிப்பிணைந்து வரும் பாடலை முழுமைப்படுத்தும் தலைமைப் புனைவுக் கூறுகள் என்று மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இந்த மூன்று கூறுகளும் தொடர்ந்தமைந்தத் திறனை விளக்கும் ஆய்வு ''அடிக்கருத்தியல்'' (Themtology) என்பதாகும்.

மேலை இலக்கிய அறிஞரான பிராவர்(S.S.Prawer) ''ஒப்பிலக்கிய ஆய்வுகள் ஓர் அறிமுகம்'' (Compalative Literature studiers an Introduction) எனும் நூலில் அடிக்கருத்துக்களை ஆய்வு செய்யும் வகைகளாக ஐந்திணையைக் குறிப்பிடுகிறார். அவை,

1. இயற்கையின் எதிரொளி 2. முனைப்புக் கருத்து 3. சூழல்கள் 4. வினை செயல்வகை 5. தொன்மம் ஆகியன வாடும். இந்த ஐவ்வகை அடிக்கருத்து ஆய்வுகளைக் குறுந்தொகைப் பாடல்களில் பொருத்திப் பார்ப்பது, இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. இயற்கையின் எதிரொளி: பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் நடைபெறுகின்ற இயற்கை நிகழ்ச்சிகள், அவ்வியற்கை நிகழ்ச்சிகளை எதிரொளிக்கின்ற மனிதச் செயல்கள் ஆகியவற்றின் இலக்கியச் சான்றுகள் (Literary Representation) அடிக்கருத்து ஆய்வாகக் கொள்ளத்தக்கவை என்கிறார் பிராவர்.

(i) இயற்கை நிகழ்ச்சிகளுக்குச் சான்றாக கனவு, மரணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கனவு அடிக்கருத்து இடம்பெறும் இலக்கியச் சான்றாகக் குறுந்தொகை 30ஆம் பாடலைக் காட்டலாம். இப்பாடலில் தலைவன் வரைவின் பொருட்டு பொருள் தேடப்பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக்குக் காரணத்தைத் தோழி கேட்க, அதற்குத் தலைவி,

''. . . . . . அல்கல்

பொய் வலாளன் மெய்உறல் மர்இய

வாய்தகைப் பொய்கனா மருட்ட னாற்று எழுந்து

தமளி தைவந்தனன். . . . . ''

என்று கூறுகிறாள். நான் தலைவனோடு அளவளாவியதாகக் கனாக்கண்டேன். ஆதலால், உடல் இவ்வாறு மெலிந்துவிட்டது என்று கூறுவதன் வாயிலாகக் கனவு என்ற அடிக்கருத்து இப்பாடலில் இடம்பெற்றுள்ளமையைத் தெரியலாம்.

(ii) இயற்கை நிகழ்ச்சிகளை எதிரொலிக்கும் மனிதச் செயல்களாக மனித வாழ்வின் பிரச்சனைகளையும் மனித நடத்தையின் அமைப்புகளையும் பிராவர் குறிப்பிடுவார். மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குச் சான்றாக, சந்து செய்வித்தல், அறிவுரை கூறல் போன்றவற்றைச் சொல்லலாம்.

''அறிவுரை கூறல்'' என்பதற்கு குறுந்தொகை 268 ஆம் பாடலைச் சுட்டி விளக்கலாம். இப்பாடலில் தலைவன் சிறைப்புறத்தே இருக்க, தோழி தலைவிக்குக் கூறுவது போல, இரவுக்குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு தலைவி அஞ்சுதலையும், தலைவன் வராமையிலும் தலைவி வருந்துவதையும் சுட்டி, தலைவியின் இந்நிலையைச் சரிசெய்ய, வரைந்து கோடலே தக்கது எனப் புலப்படுத்தி அறிவுறுத்துகிறாள் தோழி. இப்பாடலில் அறிவுரை கூறல் என்னும் அடிக்கருத்து பொருந்தி வந்துள்ளது.

2. முனைப்புக் கருத்து: இலக்கியத்திலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் திரும்பத் திரும்ப வரும் முனைப்புக் கருத்துக்கள் அடிக்கருத்து ஆய்வாகக் கொள்ளத்தக்கது என்கிறார் பிராவர். இலக்கியத்தில் இடம்பெறும் முனைப்புக் கருத்துக்குச் சான்றாக அலர் எழுதலைக் குறிப்பிடலாம். இதற்குக் குறுந்தொகை 372 ஆம் பாடலைச் சான்று கூறலாம். இப்பாடலில் இரவுக் குறி வந்து ஒழுகா நின்றின்ற தலைவன் சிறைப்புறம் நிற்க தலைவிக்குக் கூறுவாளாய், தோழி

''. . . . . . . . . .பதுக்கை

புலர்பதம் கொள்ளா அளவை

அலர் எழுந்தன்று இவ்அழுங்கல் ஊரே'',

என்கிறாள். இதன் வாயிலாக, தலைவன் வந்து சென்ற சுவடு மறைவதற்குள், இவ்வூரில் அலர் பெருகியது என்றும், அதனைத் தடுக்க விரைவில் வரைந்து கொள்ளுதலே நல்லது என்றும் தலைவனுக்கு உணர்த்துகிறாள் தோழி. இம்முனைப்புக் கருத்து ''வரைவுகடாதல்'' எனும் அடிக்கருத்து சிறக்கத் துணைபுரிகிறது.

3. சூழல்கள்: திரும்பத் திரும்ப வரும் சூழல்களும் (Situation) அவற்றை வேறுபட்ட படைப்பாளர்கள் கையாண்டுள்ள விதமும், அடிக்கருத்து ஆய்வாகக் கொள்ளத் தக்கன என்கிறார் பிராவர். சங்க அகப்பாடல்களில் தலைவனும், பாங்கனும் சந்தித்து உரையாடும் சூழலைப் பல்வேறு கவிஞர்கள் திரும்பத் திரும்பப் பாடியுள்ளனர். எனவே, பாங்கற் கூட்டம் எனும் சூழல், அடிக்கருத்து ஆய்வாகக் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதற்குக் குறுந்தொகை 72 ஆம் பாடல் கொண்டு விளக்கம் அளிக்கலாம். இப்பாடலில் தலைவியோடு அளவளாவி வந்த தலைவனிடம் காணப்பட்ட மாறுபாடுகளைக் கண்டு, இவை உனக்கு எதனால் வந்தன? என வினவிய பாங்கனிடம்,

''தேமொழித் திரண்ட மெல்தோள் மாமலைப்

பரீஇ வித்திய ஏனல்

குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே''

என்ற பதில் மூலம் நான் மலைவாணர் மகள் பால் நட்புப் பூண்டு காமரோய் உற்றேன். அதன் பயனால் இப்படி வேறுபட்டு நிற்கிறேன் என உரைக்கிறான். இப்பாடலில் சூழல் சார்ந்த பாங்கற் கூட்டம் என்ற அடிக்கருத்து பொருந்தி வருகிறது. மேலும் குறுந்தொகை 58, 95, 100, 119, 129, 132, 136, 206, 219 ஆகிய பாடல்களும் இவ்வாய்விற்கு உட்பட்டவையாக இருக்கின்றன.

4. வினை செயல் வகை: செய்யும் தொழில் பற்றி அமைந்த குழுக்கள், சமுதாய வகுப்புகள், இனங்கள், சமுதாயம் அல்லது வாழ்க்கை பற்றிய குறிப்பிட்ட செயல்களின் அவதாரங்கள் போன்ற பொது மாதிரிகள் இலக்கியச் சான்றுகள் அடிக்கருத்து ஆய்வாகக் கொள்ளத் தக்கவை என்கிறார். பிராவர். இதனைக் குறுந்தொகை 131 ஆம் பாடலைக் கொண்டு விளக்கலாம். இப்பாடலில் வினைமுற்றிய தலைவன் தன் தலைவியைப் பிரிந்து வந்ததற்குக் காரணமாகிய வரை பொருட்தேடல் எனும் செயல் முற்றுபெற்ற தலைவன்.

''பேரமர்க் கண்ணி இருந்த வூரே

நெடுஞ்சேண் அரு இடையது''

அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது என்கிறான்.

5. தொன்மம்: தொன்மக் கதைகள், கட்டுக் கதைகள், வரலாறு அல்லது தொடக்க கால இலக்கியம் இவைகளிலிருந்து எடுக்கப்பட்ட பெயரிடப்பட்ட தலைவர்களின் இலக்கியச் சான்றுகள் அடிக்கருத்தாய்வாகக் கொள்ளத்தக்கவை என்கிறார பிராவர். இதற்குக் குறுந்தொகை 87ஆம் பாடலைச் சான்றாகக் காட்டலாம்.

நன்னன் என்னும் சிற்றரசன் ஒருவன் ஆற்றங்கரையில் இருந்து தன் தோட்டத்தில் அரிதின் வளர்த்த மாமரத்தின் காய் ஒன்று அவ்வாற்றிலே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றிற்கு நீராடச் சென்ற பெண் ஒருத்தி எடுத்துச் சாப்பிட்டாள். அது கண்ட காவலர் அவளை நன்னன் முன் கொண்டு நிறுத்த, அவன் அவளுக்குக் கொலைத் தண்டம் விதித்தான். அதனை அறிந்த அவளின் தந்தை அவளது நிரைக்கேற்ற பொன்னால் செய்த பாவையையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் தண்டமாக அளிப்பதாகக் கூறவும், நன்னன் அதற்கு உடன்படாமல் கொலை புரிவித்தான் என்ற நிகழ்வைத் தோழி கூறவந்ததன் நோக்கம், ஒரு நாள் தலைவன் வந்ததை தாய் அறிந்து விட்டாள், அவள் மன்னன் நன்னனைப் போன்றவள், மன்னிக்கவே மாட்டாள். நீ வந்து சென்ற நாள் முதலாய் முன்பைவிட மிகப் பாதுகாத்து வருகிறாள், எனவே விரைவில், வரைந்து கொள் என்கிறாள். இப்பாடலில் மூலம் தொன்மம் எனும் அடிக்கருத்து நிறுவப்படுகிறது.

தொகுப்புரை: கனவு எனும் அடிக்கருத்து தலைவியின் ஆற்றாமை வெளிப்படுத்தல் மூலம் நிகழ்கின்றது. ''அறிவுரை கூறல்'' எனும் அடிக்கருத்து மூலம் தலைவன்-தலைவி வாழ்க்கையில் தோழியின் முக்கியப் பங்கும் தெரியவருகிறது. முனைப்புக் கருத்து ''அலர்'' மூலம் விளக்கப்பட்டு அது வரைவு கடாதலைச் சிறப்பிக்க துணைபுரிகிறது என்று கூறப்பட்டுள்ளது. சூழல்களை அடிக்கருத்து ஆய்விற்கு உட்படுத்தலாம் என்பது பாங்கற்கூட்டம் எனும் நிகழ்வு மூலம் விளக்கப்பட்டுள்ளது. வரைபொருள்வேண்டி வினைமேற் கொள்ளும் தலைவனின் நிலை வினைசெயல் வகைக்குப் பொருந்திக் காணப்பட்டுள்ளது. நன்னன் எனும் அரசனின் கதைமூலம் தொன்மம் எனும் அடிக்கருத்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நன்றி: கட்டுரை மாலை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக