30/01/2011

சிற்பியின் கவிதைகளில் பெண்ணியம் - சு. திருவரசன்

பெண், பெண்மை, பெண்ணியம் இவற்றுள் முதற்சொல் உயர்திணை உயிர்ப்பொருள். இரண்டாம் சொல் பெண்ணிற்குரிய இயல்புகளைக் குறிக்கும். மூன்றாம் சொல்லுக்கு, ''பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது'' என்று ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம் தரும்.

''பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும். அதன் மூலம் உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'' என்று சார்லட்பன்ச் கருதுகின்றார். இந்திய அளவில் பெண்ணிய முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களாய் ராஜாராம் மோகன்ராய், காந்திஜி போன்றோரைச் சுட்டலாம். தமிழக அளவில் ஈ.வெ.ரா., பாரதியார், பாரதிதாசன், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி போன்றோரைக் குறிப்பிடலாம். இக்கட்டுரை, பெண்ணியத்திற்கு எவ்வெவ்வகையில் சிக்கல்கள் உள்ளன. எவரால் உள்ளன என்ற கருத்துகளைச் சிற்பியின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பெண்ணியச் சிந்தனைகளை ஆராய்கின்றது.

சிற்பி - பெண்ணியம்:

திருவள்ளுவர் முதல் பாரதி வரையிலான கண்ணதாசன் உள்ளிட்ட ஆண் கவிஞர்கள் பெண்ணியச் சிந்தனைகளைத் தத்தம் நோக்கில், தத்தம் காலத்திற்கேற்பப் பாடுபொருளாய்க் கொண்டு கவிதைகளைப் படைத்துள்ளனர். இவ்வகையில் தற்கால வாழும் கவிஞர்களுள் சிற்பியும் தம் சிந்தனைகளைப் பெண்ணியம் நோக்கிச் சிறப்பாகவே செலுத்தியுள்ளார். இவருடைய பெண்ணியச் சிந்தனைகளை,

1. இலக்கியப் பெண்ணியம்

2. நடப்பியல் பெண்ணியம்

என்ற பொதுத் தலைப்பில் பல்வேறு உட்தலைப்புகளோடு ஆராயலாம்.

இலக்கியப் பெண்ணியம்:

பெண்கள், கற்பு நிலையில் இன்று மட்டுமல்ல. அன்றும் துன்பப்பட்டிருந்தார்கள் என்பதை அன்றைய இலக்கியப் பெண்களான சீதை, அகலிகை, சகுந்தலை, மேனகை ஆகியோர் மூலம் சிற்பி பாடுகின்றார்.

காப்பிய நாயகனான இராமனுக்கு இருநோக்கு. முனிவர் மனைவி மீது அனுதாபம் தன் மனைவி மீது சந்தேகம் தீர தீக்குளிப்பு. (சி.க.வா. இராமன் பார்வையில் அகலிகை)

என்று இராமன் சீதை மீதுள்ள சந்தேகத்தையும், அகலிகை மீதுள்ள அனுதாபத்தையும் வெளிப்படுத்தியதைப் புலப்படுத்துகின்றார்.

அறியாமல் அகலிகை செய்த

செயலிற்கு முனிவர் கௌசிகன்

கொடுத்த சாபம் கல்லாகக் கடவது

சாப விமோசனம்

இராமனின் காலடி ஏகுதல். (சி.க.வா. அகலிகை இன்னும் காத்திருக்கிறாள்)

என்ற சிற்பியின் வரிகளை, அப்துல் ரகுமானின்,

''இந்திரனாகி

உன்னைக் கற்பழிப்பவர்களும் நாம்தாம்

கௌதமனாகி

உன்னைச் சபிப்பவர்களும் நாம்தாம்''

என்ற வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆண்களால் பெண்ணுக்குண்டான சோதனைகளை உணரலாம். இதுபோல, ஆண்களால் பெண்களுக்குண்டான நிகழ்வுகளை, சிற்பி தம் பெண்ணியச் சிந்தனைகளைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார்.

துஷ்யந்தனிடம் தன்னை இழந்த

சகுந்தலை தன்னை யார்

என்பதனை நிலைநாட்டிக்

கொள்ள முடியாமல் தவிப்பது

தொலைத்துவிட்ட மோதிரத்திற்காக (சி.க.வா. ஓ, சகுந்தலா)

இல்லற ஆண்கள் மட்டுமின்றி, முனிவர்கள் கூடப் பெண்ணைக் கருதிய நிலையை, விசுவாமித்திர முனிவர் மேனகையுடன் உல்லாசம் கொண்டு சிறிதுநாள் கழித்து பிரிந்து மீண்டும் தவத்திற்கே சென்று விடுகின்றார்.

நடப்பியல் பெண்ணியம்:

இக்கால நடப்பியற் கூறுகளை அரசியல், கலாச்சாரம், பண்பாடு, சமயம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய நிலைகளில் பெண்ணியச் சிந்தனைகளைச் சிற்பி தம் கவிதைகள் மூலம் காட்டுகின்றார்.

அரசியல் பெண்ணியம்:

சொல்லாலும் செயலாலும் சில போலி அரசியல்வாதிகள் வேறுபட்டிருப்பர். இத்தகையோருள் ஒருவர் பகலெல்லாம் பெண்ணிடம் களித்திருந்து மாலையில் வேடமிடும் விதத்தை.

''இன்றுமாலை ஐந்து மணிக்கு அநாதை, விடுதி திறப்புவிழா

திறப்பாளர் மாண்புமிகு... சிநேகலதா குலுங்கக் குலுங்கச்

சிரித்துக் கொண்டிருக்கிறாள்'' (சி.க.வா., சர்ப்பயாகம், தரிசனங்கள்)

என்று கூறுகிறார்.

சமயப் பெண்ணியம்:

சமயப்பணியில் புனிதப் பணியாகக் கருதப்படும் கோவில் தருமகர்த்தாக்கள். கோவிலுக்கு அருகிலுள்ள சத்திரத்தில் கோவில் புனிதத்தோடு சேர்த்துப் பெண்ணின் புனிதத்தையும் கெடுப்பதை,

''தருமகர்த்தா நச்சரிப்பின் கசங்குகின்ற பருவத்தின்

உம்ம்ம் மெலிந்த உம்ம்ம்'' (சி.க.வா, தரிசனங்கள், ப.301)

என்று பாடுவதால் அறியலாம்.

பொருளாதாரப் பெண்ணியம்:

வரதட்சணைக் காரணமாகப் பெண்ணினம் பாதிப்படைவதையும், அதற்கு மாமியார் என்னும் பெண்ணே சில இடங்களில் காரணமாகிறாள் என்பதையும்,

''அப்பா கேட்கிறார் நோட்டு அச்சிடும் யந்திரம்

அம்மா கேட்கிறாள் கோலார் சுரங்கம்'' (சி.க.வா, தண்டனை, ப.540)

என்ற வரிகளால் அறியலாம்.

சமுதாயப் பெண்ணியம்:

இன்றைய சமுதாயத்திலும் பெண்கள் மலர்கள்தாம்; மணம் வீசுபவர்கள்தாம்; பிறரால் நுகரப்படுபவர்கள்தாம்; மலரால் மலருக்கு - பெண்ணுக்கு எப்பயனும் இல்லைதான்; இத்தகைய மலரைக் கசக்கி நுகர்பவர்கள் ஆண்கள்தான். இவ்வுண்மைகளை,

''பெண்கள் இன்னும் மலர் கொய்யும் பூந்தோட்டம்தான்

ஆண்கள் மட்டும் சதை கிழிக்கும் முள்ளின் வேலி'' (சி.க.வா. இராமன் பார்வையில் அகலிகை, ப.529)

என்று சித்தரிக்கிறார்

புரட்சிப் பெண்ணியம்:

விதவைப் பெண்களின் வாழ்வில் விடிவு ஏற்படல் வேண்டும்; சோகத்திற்கு முடிவு ஏற்படல் வேண்டும்; அதாவது அத்தகைய பெண்களை மணக்க ஆண்கள் முன்வரவேண்டும். இக்கருத்துக்களை,

''அது சந்தை, அவளோ மங்கலம் இழந்த மங்கை

சந்தை, வாரம் ஒருமுறை கூடும், அவளுக்கு நேரம் எப்போது மாறும்'' (சி.க.வா.விடிவு ப. 242)

என்று படம்பிடிக்கின்றார்.

போலிப் பெண்ணியம்:

போலிகள் பொருள்களில் மட்டுமின்றி மனித உயிர்களிலும் உள்ளன. குடித்த பலர் செய்யும் செய்கையினைப் படித்த சில ஆசிரியர்களும் செய்கின்றனர். கற்க வந்த மாணவியின் கற்பைக் கெடுத்த ஆசிரியன் கற்பரசி கண்ணகியின் காப்பியத்தைக் கற்பிக்கின்றார். மனசாட்சியை மனமறிய மறைத்து விட்டு மனக்குரங்கை அலையவிட்ட இந்த மனிதக் குரங்கைச் சிற்பி அடையாளங் காட்டுகின்றார். பிழை திருத்தம் ஆசிரியப் பணியில் பிழையானவர்களும் வந்துவிட்ட அவலத்தை, போலிகள் கடைபிடிக்கும் போலிப் பெண்ணியத்தை,

''வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்

எட்டாம் வகுப்பில் சிலப்பதிகாரம்'' (சி.க.வா, பாடம் தொடர்கிறது. ப.498)

என்று பாடிப் படம் பிடிக்கிறார்.

முடிவுகள்:

சிற்பி தம் பெண்ணியக் கருத்துக்களை இலக்கியப் பெண்ணியம், நடப்பியல் பெண்ணியம் என்ற இருபெருந்தலைப்புகளில் வகைப்படுத்துகின்றார்.

இலக்கியத்தின் மூலம் பெண்ணியக் கருத்துக்களைப் புலப்படுத்த சீதை, அகலிகை, சகுந்தலை, மேனகை போன்ற பெண் பாத்திரங்களையும், இராமன், கௌசிகன், துஷ்யந்தன், விசுவாமித்திரர் போன்ற ஆண் பாத்திரங்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நடப்பியலின் மூலம் பெண்ணியக் கருத்துகளைப் புலப்படுத்த அரசியல், சமயம், பொருளாதாரம், சமுதாயம், புரட்சி, போலித்தனம் போன்ற பாடு களங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

இலக்கியப் பெண்ணியத்தில் சந்தேகம், கோபம், தவிப்பு, அனுதாபம், ஆகிய உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

நடப்பியல் பெண்ணியத்தில் காமம், சலனம், மேல்நாட்டுப் பற்று, பொருட்பற்று, வறுமை, பகல்வேடம், போலித்தனம், விதவைமணம், இயலாமை போல்வன மையக் காரணங்களாய் அமைகின்றன.

''பெண்ணிற் பெருந்தக்க யாவுள'' (குறள் - 54) என்ற திருவள்ளுவரின் கருத்தை, சிற்பியின் பெண்ணியக் கவிதைகளை ஆய்வு செய்தபின், பெண்ணிற் ''வருந்தக்க யாவுள'' என்று கூறத் தோன்றுகிறது.

சிற்பியின் கவிதைகள் பெண்ணியத்தைப் பல்வேறு கோணங்களில் பாடினாலும் எல்லாவற்றிற்கும் முழுப்பொறுப்பாகவும், முதற்பொறுப்பாகவும் ஆணினத்தையே முன்னிலைப்படுத்துகின்றன.

எனவே, ''ஸ்திரீகள் பதவிரதையாக இருக்க வேண்டும் என்று எல்லாருமே விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால் அண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரதத்திலே காட்டுவதில்லை'' (பாரதியார், பாரதியார் கட்டுரைகள் ப.103) பாரதியாரின் இக்கூற்றை ஆண்கள் மாற்றிக் காட்டும் வரை சிற்பி ஆண்களுக்காகக் காத்திருக்கக்கூடும். சிற்பியின் விருப்பப்படி ஆண்கள் மாறினால், ஆடவர் பற்றிய சிற்பியின் அபிப்ராயமும் மாறலாம். ஆனால், அதுவரை கவிஞரின் கருத்தைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

எது எவ்வாறாயினும் பெண்களின் எதிரிகளாய் ஆண்களை அறிவிக்கப் பெண்கள் தயங்குகின்றனர். அந்தப் பணியை ஆண்கவிஞர் சிற்பி அச்சமின்றியும், தயக்கமின்றியும் வெளிப்படுத்தியது பெருமையும் உரனும் நிறைந்த அவரது ஆண்மையின் வெளிப்பாடே ஆகும்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக