மேடைப்பேச்சு:
ஒருவர் மேடையிலிருந்து பேசக்கூடிய பேச்சானது பலரும் கேட்கக் கூடியதாக அமைந்தால் அது மேடைப்பேச்சாகும். அஃதாவது வீழ்ந்த இனமொன்றின் எழுச்சிக்காகவோ, சமூக அவலத்தை உணர்த்திடவோ, அந்நிலையிலிருந்து மீள்வதற்காகவோ வாழ்க்கையை நல்வழியில் நடத்திடுவதற்காகவோ, இலக்கிய இன்பத்தை எய்திடுவதற்காகவோ, ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றிடுவதற்காகவோ, தன் இயக்கக் கொள்கைகளை மக்களிடம் தெரிவிப்பதற்காகவோ, இம்மேடைப் பேச்சானது அமையும்.
மேடைகளும், விளைவுகளும்:
கிரேக்கத்தில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களைப் பகுத்தறிவு பாதைக்குக் கொண்டுவர முற்பட்டார் சாக்ரடீசு. அந்த சிந்தனையின் வெளிப்பாடாய் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள். அப்படிக் கேட்டால்தான் சிலை வடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறுவான் என்ற மனிதத் தத்துவத்தை விதைத்தார். மனிதனை சுயசிந்தனைக்குப், பகுத்தறியும் பாங்கிற்கு அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்காவில் மேடைப்பேச்சில் பகுத்தறிவை வளர்த்தவர் ஆர்.இ. இங்கர்சால் பாதிரியாரின் மகனாகப் பிறந்து பைபிளைப் பல கோணங்களில் ஆராய்ந்தவர். மேடைப்பேச்சு வரலாற்றில் பணம் கொடுத்து மக்கள் இவரது பேச்சைக் கேட்டனர்.
''கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கு அது தெரியாது ஆனால் நான் சொல்கிறேன். நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பவில்லை ஏனென்றால் அதற்கான சாட்சியங்கள் என்னிடமில்லை'' என்று பொருள் முதல்வாதக் கோட்பாட்டை மக்கள்முன் வைக்கிறார். மதத்தின் பிடியிலிருந்த மக்களைச் சிந்தனையில் ஆழ்த்தினார். வால்டேர் தன் மேடைப்பேச்சினால் படிப்போனையும் பாமரனையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வைத்தார். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டார். அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கினர்.
சீனாவில் ''மஞ்சு'' அரசினால் அம்மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைகளாக உணவு இல்லாமல் பசியோடும் அல்லல்பட்டனர். சீன மக்களின் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் டாக்டர் சன்யாட் சென்னின் மேடைப்பேச்சு ஒளித்தன. தன் மேடைப்பேச்சின் மூலம் உலகெங்கும் சென்று நிதி திரட்டி படை திரட்டி மஞ்சு அரசை வீழ்த்தி, புதிய சீனாவை உருவாக்கினார். ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்பட்ட துருக்கியின் புத்தெழுச்சியில் கமால்பாட்சாவின் பங்களிப்பு ஏராளம். துருக்கியின் பெருமைக்கு இழிவு வந்தது, இந்நிலையில் கமால்பாட்சா நாட்டை மறுசீரமைப்புச் செய்தார். மக்கள் மன்றங்களுக்குச் சென்று மேடைகளில் தன் கருத்துக்களை முழங்கி மக்கள் சக்தியை ஒன்றிணைத்தார். புரட்சி வெடித்தது 1923 அக்டோபர் 29 ஆம் நாள் குடியரசு நிலையினைப் பெற்றது. மதச்சார்பின்மை அரசு பாட்சாவால் நிறுவப்பட்டது. சமயப் பள்ளிகளும் புனிதக் கல்லறைகளும் மூடப்பட்டன. தனியார் பள்ளிகளில் போதிக்கப்பட்ட மத போதனைகளும் நிறுத்தப்பட்டன. இவையெல்லாம் நடைபெற கமால்பாட்சாவின் மேடைப்பேச்சுக்கள் அடித்தளமாயின.
இவ்வாறாய் மேடைப்பேச்சின் வாயிலாய் ஆதிக்க வல்லாண்மையின் ஆணிவேர் அறுபட்டு சமுதாயத்தில் புதிய சிந்தனைகளும் மாற்றங்களும் வளரத் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டின் இந்தியச் சமூகச் சூழல் இருவிதமாய் அமைந்தது. ஆங்கிலேயரிடமிருந்து அடிமை மற்றொன்று பார்ப்பனர்களுக்கு அடிமை என்ற இரு வேறான அடிமை முறைகள் இருந்தன. தொடக்கத்தில் விடுதலைப் போராட்டக் களத்தில் காங்கிரசின் சார்பில் மேடையில் பேசிவந்த தந்தை பெரியார் பின்னர் இந்திய சமுதாய மறுமலர்ச்சிக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினார். மனிதன் முன்னேற பகுத்தறிவையும், உழைப்பையும் வலியுறுத்தி சிந்தனைகளைப் பரப்பி சிந்தனை கொள்ளச் செய்தார். மனிதனை மனிதன் அடிமைப்படுத்திக் காலங்காலமாய் ஓர் இனம் காலடியில் கிடக்க அவர்களின் உழைப்பை உறிஞ்சியும் வாழ்ந்த ஓர் இனத்தின் அடையாளத்தைக் காட்டி, அவர்களிடமிருந்து விடுதலை பெற சுயமரியாதை இயக்கம் உருவானது. இது உருவாகக் காரணம்
''பார்ப்பனர் கொண்ட பிறவி உயர்வால் அடைந்த
தேவர் நிலை, அவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆனதால் பெற்ற பூசுரர் நிலை, அவர்கள் மட்டுமே சந்நியாசி ஆகலாம் என்பதால் பெற்ற மதகுரு நிலை, அவர்கள் மட்டுமே வைதீகச் சடங்கு செய்யலாம் என்பதால் பெற்ற புரோகித நிலை, அவர்கள் மட்டுமே ஓதலாம் என்பதால் பெற்ற கல்விமான் நிலை, அவர்கள் மட்டுமே கோயில் நிர்வாகமும் ஊரவையும் நடத்தியதால் பெற்ற நாட்டாண்மை நிலை, அவர்கள் மட்டுமே இராசகுரு பதவியில் அமர்வோரானதால் பெற்ற ஆட்சி நிலை, அவர்கள் மட்டுமே பல நாடுகளிலும் உறவும் செல்வாக்கும் பெற்றிருந்ததால் அடைந்த தூதர்நிலை, அவர்கள் மட்டுமே மன்னர்களின் அந்தப்புரம் வரை செல்லும் உரிமையால் அரசின் இரகசியங்களை அறிந்து அரசர்களையும் ஆக்கவும் அழிக்கவுமான வல்லாண்மை நிலை; அவர்கள் மட்டுமே சுதந்திரம் இயற்றவும் நீதி வழங்கவும் உரிமை கொண்டவரானதால் அடைந்த பிற இனத்தாரை அச்சுறுத்தும் நிலை, அவர்கள் மட்டுமே கொலை முதலான கொடிய குற்றம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்புவதற்குப் பெற்றிருந்த தனிச் சலுகை நிலை என்று ''சமூக நீதி'' குழி தோண்டி புதைக்கப்பட்டு ''வீரனின் கூர்வாளைவிடப் புரோகிதனின் தர்ப்பைப் புல்லே நாடாளும் வலிவுடையதான நிலையில் பெரியாரின் வருகை சமூக அவலத்தை நீக்கி சமூக நீதி வழங்கப் போராட்டம் தொடர்ந்தது. மேடைப்பேச்சுக்களினால் உலகெங்கும் வலம் வந்த பெரியார் மனித இனத்தின் மீதான அடிமைத்தனத்தை, சமூக இழிவை நீக்கி தன் உரைகளை நிகழ்த்தினார். ''இந்திய துணைக் கண்டத்தின் மண்ணடிமை மக்களடிமை ஒழிக்கப் பிறந்த இயக்கமே விடுதலை இயக்கமான தேசிய இயக்கமாகும். மனித இனத்திலே பிறப்பினால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தால் ஏற்பட்ட கேட்டினை எதிர்க்கப் பிறந்த இயக்கமே பகுத்தறிவு அடிப்படையில் பிறந்த சுயமரியாதை இயக்கமாகும். இனங்களிலே உயர்வு தாழ்வு கற்பித்து ஆரியம் அனைத்திலும் உயர்ந்தது, திராவிடம் தாழ்ந்தது என்னும் ஆதிக்க வாதத்தை ஒழிக்கப் பிறந்ததே திராவிட இயக்கம். பிறப்பால் இனத்தால் மொழியால் ஏற்பட்டு விடுகின்ற வாய்ப்புகள் வேறுபட்டதால் தமிழர்கள் திராவிடர்கள் நான்காம் தரச் சாதியாக தாழ்ந்த இனமாக இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்படும் நிலையைத் தகர்க்கப் பிறந்ததே திராவிடர் இயக்கம்'' எனும் கொள்கை முழக்கத்தோடும் பகுத்தறிவு இயக்கம் மக்கள் முன்னேற்றத்தில் பங்கு கொண்டது. கலை இலக்கியங்களின் வழி மனித விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ப.இ சார்பில் இலக்கியப் படைப்புகளும், திரைப்படங்களும் வரத் தொடங்கின. நாடகங்கள் மூலமும் கருத்துக்கள் மக்களை அடைந்தன. இந்நிலையில் எல்லோரையும் இணைக்கும் ஓர் தொடர்பு ஊடகமாக மேடைப்பேச்சானது அமைந்தது. அதன் வழியில் தந்தைப் பெரியார் விழிப்புயர் விடுதலையும் பெற்றுத் தந்தார். அவ்வழியில் இலக்கியப் படைப்பாளியாகவும் திரைப்படத்துறையின் கதையாசிரியராகவும், இதழியலாராகவும் இருந்த அண்ணா மேடைப்பேச்சின் மூலம் கொள்கைகளைப் பரப்பலானார். மேடைப்பேச்சு வரலாற்றில் தனக்கு என்று ஒருதனி நடையை உருவாக்கினார். ''நான் பேசுகிறேன் அதனால் வாழ்கிறேன்'' என்றார் பாபுலோ நெருடா; ஆனால் அண்ணாவோ தன் பேச்சின் மூலம் தமிழினத்திற்கே வாழ்வளித்தவர்.
பெரியாரின் இயக்கமே தமிழருக்கு வாழ்வளிக்கும் வல்லமை தரும், அவரின் பகுத்தறிவு விளக்கமே தமிழர்களைத் தலைநிமிரச் செய்யும் என்னும் உறுதிகொண்டு பெரியாரைத் தலைவராக ஏற்றுப் பொதுத் தொண்டை தன் வாழ்வில் மேற்கொண்டு தமிழர்களால் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் எய்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் மன்றத்தில் தன் கொள்கை முழக்கங்களை முன்வைத்தார்.
நிலையும் நினைப்பும்:
உள்ள வலிமையும் உழைப்பின் உயர்வையும் கொண்டு உலகெங்கும் வெற்றிகளைக் குவித்தும் அவற்றை இமயமலை முதல் இன்னும் ஏராளமான பாறைகளிலும் அவ்வரலாறுகளை வடித்து வைத்து உள்ளனர் நம் முன்னோர். இந்நிலையில் ஆரியர்கள் வருகைக்குப் பின்னர் சமூகத்தில் மாற்றங்கள் பல நிகழ்ந்தன. மனிதனை மனிதன் அடிமை கொள்வது, சாதிய இழிவுகளா அவர்களிடையே வேற்றுமையை வளர்ப்பது என்றும் புராண இதிகாசங்கள் மூலம் வருணாசிரமக் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் கீழ் உலகம், மேல் உலகம், முற்பிறப்பு, மோட்சம், நரகம் எனக் காண முடியாதவைகளை எல்லாம் தமிழர்களிடம் திணித்தனர் அவர்களைத் தங்களிடம் அடிமைப்படுத்தினர். அறிவியல் முன்னேற்றங்கள் பல கண்டும் மக்களிடம் இருந்த இந்த இருள் நீங்கவில்லை. மக்கள் உழைப்பையும், உண்மை நிலைமையும் உணரவேண்டும் என்ற எண்ணத்தின் மேடை வெளிப்பாடே ''நிலையும் நினைப்பும்'' ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இதுவாகும். உயர்ந்த குறிக்கோளுடனும் நல்ல எண்ணங்களும் கொண்ட மக்களால்தான் ஒரு நாடானது வளர்ச்சியினை அடைய முடியும் என்ற கருத்தினை எடுத்தியம்பும் அண்ணா. ''ஒரு நாட்டின் நிலை அதன் நினைப்பை உருவாக்குகிறது. உன்னத நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு உயர்ந்திருக்கும். தாழ்ந்த நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு தாழ்ந்திருக்கும். அதாவது நிலை உயர்ந்திருந்தால் நினைப்பும் உயர்ந்திருக்கும். நிலை தாழ்ந்திருந்தால் நினைப்பும் தாழ்ந்திருக்கும்''. என்று தொடங்குகிறார். மாணவர்களிடையே ஆற்றும் இந்த உரையானது அவர்களின் எண்ணங்கள் மேலோங்கிடவேண்டும். சிந்தனையின் எல்லைகள் விரிந்திட வேண்டும் எனும் கொள்கையோடும் தொடங்குகிறார். ஆரியர்கள் எவ்வாறு தமிழர்களை அடிமைப்படுத்தியிருப்பார்கள் என்று தொடரும் அண்ணா, ''தமிழகத்தின் கானகங்களில் கங்கைக் கரையில் உலவியர்களின் கூட்டம் யாகம், ஓமப்புகை, வேத, ஒலி கேட்கும் நிலை முதலியன தோன்றின. தமிழில் ஆரியம் கலந்தது தமிழகத்துடன் ஆரிய வர்த்தம் ஐக்கியமானது பிறகு கேட்க வேண்டுமா? பாசறைகளுக்கு பக்கத்தில் ஆஸ்ரமங்கள் மன்னர்களுக்குப் பக்கத்தில் மாடல மறையவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. தனி நிலை கெட்டது. நிலை கெடவே நினைப்பும் கெட்டது. அயல்நாட்டார் கண்டுகேலி செய்கிற அளவுக்குக் கெட்டது'' என்கிறார். ஆரியர்களிட்ம் அடிமைப்பட்ட நிலையினை வரிசைப்படுத்துகிறார். அடிமைப்பட்ட காரணத்தை விளக்க முற்படும் அண்ணா தொடர்ந்து,
''ஆரியர்கள் சிந்துநதி தீரத்திலிருந்து தக்காணம் நோக்கி வந்தபோது தமிழகத்தில் செல்வம் கொழித்திருந்தது. தமிழர்கள் நெஞ்சில் நல்லெண்ணங்கள் குடிகொண்டிருந்தன என்பதும் ஆரியர் குடியேற்றத்திற்குப் பிறகு செல்வம் குறைந்திருக்கிறது. நல்லெண்ணங்கள் மறைந்து நச்சுக் கொள்கைகள் குடிகொண்டிருக்கின்றன என்பதும் வரலாற்று உண்மைகள் என்று தன் ஆதாரங்களை எடுத்துரைத்து கருத்துக்களை மாணவர்களிடம் பதிய வைக்கிறார்.
புத்தெழுச்சி ஊட்டல்:
தமிழர்கள் முன்னர் வாழ்ந்திருந்த வளமான வாழ்க்கையை உணர்த்தி இன்று அவர்களின் நிலையை அடிமைத்தளையை உரிமையை இழந்து உணர்வைத் துறந்து இருக்கும் நிலையைச் சுட்டி இந்நிலையிலிருந்து மீள்வதற்கும் அதை உணர்த்துவதற்கும் முழங்கும் அண்ணா,
''யவன நாட்டுக் கலங்கள் தமிழ்நாட்டுக் கரையை முத்தமிட்டன. தமிழ்நாட்டு முத்துக்களை இத்தாலி நாட்டு எழிலரசிகள் தங்கங்களைக் கொடுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டு மன்னன் ஒருவன் ஈழநாடு சென்று வெற்றி பெற்றான். இமயத்தில் சேர சோழ பாண்டியர்களது இலச்சினைகள் பொறிக்கப்பட்டன. தமிழர்களை எதிர்ப்பவர்கள் கிடையாது எட்டுத் திக்கும் வெற்றி முரசு கொட்டினார்கள். போரும் காதலும் அவர்கள் போற்றியப் பொருள்கள் என்றெல்லாம் பண்டையத் தமிழ்நாட்டின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறினால்தான் பாமர மக்களும் நாம் ஆசைப்படுவதுபோல் மீண்டும் தமிழ்நாட்டில் செல்வம் தழைக்க வேண்டும் நல்லெண்ணங்கள் நிலைக்க வேண்டும் என்ற நினைப்பைப் பெற முடியும்'' எனறு சிந்தனையை விதைக்கிறார். எந்த ஒரு நாடும் முன்னேற்றத்தை அடைய அந்த நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக மாணவச் சமுதாயம் மலர்ச்சி பெற்றால்தான் சமுதாயம் புத்தெழுச்சிப் பெற்றிடும். மாணவர்கள் அதற்கான சிந்தனைத் தெளிவையும் பகுத்தறிவுப் பண்பையும் பெற்றிட வேண்டும் என்று தொடரும் அண்ணா பாடத்திட்டத்தில் பழம் மரபுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை, ''பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்குப் பழமையிடத்திலுள்ள பாசம் குறையும். மனத்திலுள்ள மாசு நீங்கும் காலத்திற்குத் தக்கது போலக் கருத்து வளரும். அப்பொழுது சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது; மழையைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கும். ஆனால் பகுத்தறிவு பாடத்திட்டங்களில் நுழைவதைச் சர்க்கார் தடை செய்தால் சாந்தி பருவ ஆராய்ச்சிதான் நடக்கும். மேல்நாட்டார் தன் நினைப்பைக் கண்டு நகைப்பர். பரந்த தேசம் மூன்று பக்கம் கடல்கள்; ஒரு பக்கம் உலகம் போற்றும் இமயம் நாற்பது கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட நாடு மும்மூர்த்திகள் தோன்றிய நாடு; நால்வர் ஆழ்வாராதிகள் அவதிரித்த புண்ணிய பூமி இருந்தும் பஞ்சம்; மக்கள் பட்டினியால வாடுகிறார்கள்; சிலர் இறக்கிறார்கள். சர்க்காரோ சாந்தி பருவ ஆராய்ச்சி செய்கிறார்கள். தொழிற்சாலைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. விஞ்ஞானத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை''. என்கிறார். இன்றைய காலச்சூழலும் இதற்குப் பொருந்துகிறது. பருவ மழை பொய்த்துவிட்டது. வறட்சி அதிகரித்தது என்ற போதிலும் மழை பொய்த்ததற்கான காரணங்களை ஆராயாமல் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம்; கடவுளுக்கு கஞ்சி வார்த்தல் என்று மக்கள் உண்மையை உணராமல் சிந்தனைகள் பூட்டப்படுகின்றன. அவர்களின் நிலை மேம்பட பகுத்தறிவுப் பாதையே சரியான வழி; அதுவே அனைவரும் பயணிக்க வேண்டிய வழி என்கிறார்.
''இவர்களுடைய நாக்கில் ஏரோப்ளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் வயலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டிபோல குருடனிடம் காட்டிய முத்து மாலையைப் போல செவிடன் கேட்ட சங்கீதம் போல விஞ்ஞானம் மதிப்பற்று இருக்கிறது'' என்று சமூக நிலையை தெளிவுபடுத்துகிறார்; இந்நிலையிலிருந்து மனிதன் விடுபட வேண்டும் என்கிறார். மனித இனத்தின் மீதுள்ள இழிவு நீங்கி அவர்களின் வளர்ச்சி எங்கும் தழைத்திட வேண்டும் அதற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் மாணவர்கள் சந்தித்து அவர்களின் சிந்தனையைத் தெளிவுபடுத்திட வேண்டும் என்பதை,
''மனிதனை மனிதனாக்க, மனிதனிடமிருந்து மிருகத்தனத்தைப் பிரிக்க மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப் போக்க, மனவளத்தை உண்டாக்க, அவர்கள் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் காரியத்தில் வெற்றிபெற இடைவிடாத பிரச்சாரம் செய்ய வேண்டும். வாய்த்த போதெல்லாம் அறிவுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்'' என்று மக்களுக்கு பகுத்தறிவை அடையும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். அவ்வாறு அடைந்தால் அத்தேசத்தின் நிலையும் வளம்பெறும். அனைத்துத் தரப்பு மக்களிடமும் உள்ள அறியாமையை அவலத்தைப் போக்கிட வேண்டும். அப்பொழுதுதான் நிலை உயரும். உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட நினைப்பும் வளரும் என்கிறார். இன்று மாணவச் சமுதாயத்திற்குத் தேவையான நம்பிக்கையை மனோன்மயம் சுந்தரனாரின் இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்ற நம்பிக்கைத் தத்துவத்தைக் கொண்டு மாணவர்களை எழுச்சிக் கொள்ளச் செய்து அவற்றில் ஈடுபடவும் வைக்கிறார் தன் பேச்சினால்.
முடிவு:
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சமூக மாற்றங்கள் முதலானவைகளும் மேடைப்பேச்சால் நிகழ்ந்தன. இந்தி எதிர்ப்புப் போரில் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியானது அண்ணாவின் தலைமையிலான மேடைப்பேச்சினால்தான் எனலாம். சமுதாயத்தில் கல்வி, இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு முதலானவற்றில் அனைவரின் பங்களிப்பிற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் சுயமரியாதை இயக்கம் மேடைப் பேச்சாளர்கள் தான் என்பதை அறுதியிட்டுக் கூறமுடிகிறது.
நன்றி: கட்டுரை மாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக