30/01/2011

சிலப்பதிகாரத்தில் சமுதாயம் - மா. ஜெயச்சந்திரன்

முன்னுரை: செந்தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்ததும், தலையாயதும், மிகத் தொன்மையானதும், காலத்தால் முந்தியதுமானதுமான அரிய காப்பியம் சிலப்பதிகாரமாகும். இந்த அரிய காப்பியம் முப்பெரும் தமிழக வேந்தர்களுக்கே உரியதாகவும், சேர, சோழ பாண்டியநாடு என்ற முப்பெரும் நாட்டினைப் பற்றியதாகவும் விளங்குகிறது. மற்ற காப்பியங்களை விடச் சிலப்பதிகாரம் காப்பிய வரையறையிலிருந்து சிறிதும் மாறுபடாது சமுதாயம் செம்மையுற அமைவதற்கு மனிதனின் ஒழுக்கம், தூய்மை, கட்டுப்பாடு பொதுநோக்கு முதலியவைகளே காரணம் என்பதை வலியுறுத்துகிறது. சங்ககாலத் தமிழர்களுடைய திருமணம், சமயம், நீதி, சமுதாய ஒற்றுமையை வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.

காப்பியத்தின் அமைப்பு: பொதுவாகக் காப்பியங்களில் காப்பியத்தின் கதை தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு பகுதியாக அமையாது பல பகுதிகளின் தொகுதியாக அமைதல் வேண்டும். சிலப்பதிகாரம் மூன்று காண்டம் முப்பது காதை என்ற அமைப்புடையதாகின்றது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் பெயராய்க் கொண்டு இயங்குவது இதன் தனித்தன்மையாகும். கதையே காப்பியத்தின் உயிராகும். சிலம்பின் கதை பிறமொழிக் கதையோ, தழுவலோ இன்றி தூய தமிழ்க் கதையாய் அமைந்துள்ளது. முத்தமிழ் மன்னரை உட்கொண்டு கதை பின்னப்பட்டதால் கதையில் உண்மைத் தன்மை பொருந்திக் கற்போர் உள்ளத்தையும், கருத்தையும் கவர்வதாக உள்ளது. பெரும்பாலும் காப்பிய கதை அரசர்களையும், தேவர்களையும் சிறந்த வீரர்களையும் பற்றியதாக இருப்பது மரபாக இருப்பினும் சிலம்பின் கதை சாதாரண குடிமகன் கதை, வணிகர் குலத்தில் பிறந்த கோவலன், கண்ணகி வரலாறே கதையாயினும், கற்போர் மனதை ஈர்க்கும் சக்தி வாய்ந்ததாய் உள்ளது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவன் இல்லை, குணமும் குற்றமும் நிறைந்த தலைவன் கதையே எனினும் மக்களின் உயர்ந்த ஆன்மீக அறிவை நிறைவு செய்வதாக, உன்னத வாழ்கை, உன்னத உணர்வு பற்றியதாகக் காப்பியக் கதை அமைந்துள்ளது.

திருமணம்: ''அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அன்பே அதன் பண்பு அறமே அதன் பயன் இல்வாழ்வாரே அனைவருக்கும் துணை'' என்பது வள்ளுவம். ஈதல் இசைபட வாழ்ந்து உயிருக்கும் ஊதியம் தேட விழையும் வணிக குல பெருமக்கள் மாநாய்க்கன், மாசாத்துவான், இவர்களுடைய மக்கள் மாதர் தொழும் பெருங்குணக் கண்ணகியும், உலகு புகழ் கண்டு போற்றும் செவ்வேள் கோவலனும் ஆவர். உள்ளக்களவு, கடவுட்காமம் கனிந்த கண்ணகி, கோவலன் மணம் பெற்றோர்கள் மனம் மகிழ்ந்தது. மறைவழி காட்டிடும் தீவலம் வந்த திருமணம் உளக்களவுடன் பெற்றோர் உடன்பாட்டுடன் நிகழ்ந்த கற்பு மணம் மாநகர்க்கே மணம் ஈந்தது. இருமனம் இணைந்த அத்திருமணத்தில் ''காதலற் பிரியாமல் கலவுக்கை நெகிழாமல் தீது அறுக'' என ஏத்தும் மங்கல மகளிர் மங்கல வாழ்த்து ஒலிக்கிறது. இதன் சொல் நோக்காது சொற்பொருள் பயன்நோக்கும்போது இளங்கோ அடிகளாரின் உள்ளம் விளங்கும். எனவே மனம் ஒத்து, மறைவழி காணும் மண மாட்சியும், அன்பால் ஒன்றி, அருளால் காத்து மாசற்றும் மனத்திட்பமும் பெறும் மண வாழ்வின் நோக்கும் முதற் காதையிலேயே ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

விருந்தோம்பல்: சங்க காலத்தில் விருந்தோம்பல் நிகழ்வு தமிழ் பண்பாட்டை வெளி உலகிற்கு வலியுறுத்தும் முக்கிய ஊடகமாகும். இல்வாழ்வில் செல்வம் சேர்த்து வாழ்தல் விருந்தினரைப் போற்றிப் பிறருக்கு உதவி செய்வதற்குத்தான் என்பதை வள்ளுவர்,

''இருந்தோம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு'' (திருக்குறள்-81)

என்று விளக்கியுள்ளார். இக்காப்பியத்தில் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு மகிழ்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் கண்ணகிக்கு இல்லறத்தின் தலைறயமான விருந்தோம்பும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனை,

''அறவோர்க் கனித்தலு மந்தன ரோம்பலும்

துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை'' (சிலம்பு-16)

என்று கண்ணகி கோவலனிடம் வருந்திக் கூறும் வரிகள் புலப்படுகின்றன. குன்றளவு செல்வத்தைத் தொலைத்து வந்த கோவலனைப் பொருளிழந்தமைக்காக இடித்துரைக்காமல் சிலம்பு கொண்ம் எனக் கூறிய சேயிழை வாக்கில் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்க் கோடலை யிழந்தவை காட்டும் இளங்கோவடிகள், இவ்விருவரையும் மாதிரி வீட்டு விருந்தினராக்கி (அடைக்கலப்படுத்தி) விருந்தோம்பலை விளக்கிக் காட்டுகிறார்.

சமயம்: பல்வேறு சமயங்களின் களஞ்சியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் ஆகும். வேறுவேறு கடவுளர் சாறு சிறந்தொரு பால் (சிலம்பு. 5.177) எனவரும் இளங்கோவடிகள் கூற்றால் சோழர் தலைநகரில் பல சமயக் கடவுளர்க்கும் விழக்கள் சிறப்பாக நடைபெற்றதை அறிய முடிகிறது.

''பிறவாயாக்கை பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி நொடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்

.... .... .... .... ..... .... ....

அறவோர் பள்ளியு மறனோம் படையும்

புறநிலைக் கோட்டத்துப் புண்ணித் தானமும்

ஆகிய பல சமயக் கோயில்களும், கோட்டங்களும் சிறப்புற்று இருந்தன. பூதங்களும் புகாரைக் காவல் புரிந்ததாக நம்பினர். இத்தகைய நம்பிக்கை கொண்ட சமுதாயத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த கண்ணகி, சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந்தொழுதால் கணவனைப் பெறலாம் எனப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூறியபோது பீடன்று எனப் பொழிந்திருந்து பெற்றிமையைக் காண முடிகிறது. இங்குக் காதல் வாழ்க்கைக்குக் கடவுளையும் துணை வேண்டா நிலையைக் காண முடிகிறது.

நீதி முறைமை: நாட்டு மக்களின் வாழ்க்கைக்கும், உரிமைக்கும் உத்திரவாதம் அளித்துப் பாதுகாப்பது நீதித்துறை ஆகும்.

''எள்ளது சிறப்பி னிமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் டீர்த்தோ னன்றியும்

வாயில் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுடத் தான்றன்

பெரும் பெயர்ப் புகா ரென்பதியே'' (சிலம்பு 20 : 51-56)

எனத் தன் ஊர்ப் பெயரைச் சுட்டும் போதே தன் நாட்டில் மக்களுக்கு மட்டுமின்றி மாக்களுக்கும் நீதி வழங்கிய பெருமையினைக் கண்ணகி உரைக்கிறாள்.

''தென்றமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை'' (சிலம்பு. நாடுகாண்கதை.58)

''பிழையா விளையும் பெருவளஞ் சுரப்ப

மழை பிணிந் தாண்ட மன்னவன் வார்கெனத் (சிலம்பு. நாடுகாண்காதை. 29-30)

தீதுதீர் சிறப்பினையுடைய தென்னவனை மாமுது மறையோன் வாழ்த்துகின்ற வாழ்த்தும், பாண்டிய நாட்டிலும் நீதி ஒருபாற் கோடாதிருந்த நிலையை உணர்த்துவனவாகும். மதுரையில் வாழ்ந்த பொற்கொல்லன் அவன் கூறிய மொழிகளைக் கேட்ட சினையலர் வேம்பன், அவன் ஊர்க்காப்பாளனை அழைத்து அவனிடம் கட்டளையிட்டுக் கூறியது தென்புலிக் காவலின் மன்பதைப் பழிப்புக்குரிய செயலாகி விடுகிறது. இறுதியாகத் தன் முன் வைத்த சிலம்பை எடுத்துக் கண்ணகியுடைக்க மாணிக்கப்பரல் மன்னவன் வாய் முதல் தெறிக்கின்றது.

''பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட

யானோ வரசன் யானே கள்வன்

மன்பதைக் காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென

மன்னவன் மயங்கி வீழ்ந்து'' (சிலம்பு. வழக்குரைக்காதை 75-79)

என வளைந்த செங்கோலை உயிர் கொடுத்து நிமிரச் செய்து ஓங்கு புகழ் எய்துகின்றான் பாண்டி மன்னன். தேராமன்னா என விளித்தக் கண்ணகியும் பாண்டிய மன்னன் செயல் கண்ட நெஞ்சம் நெகிழ்ந்தது. இறுதியில்,

''தென்னவன் றீதிலன் றேவர்கோன் றன்கோயில்

நல்விருந் தாயினா னானவன் நன்மகள்'' (சிலம்பு. வாழ்த்துக் காதை. 10)

என்று புகழாரம் சூட்டி உறவு கொள்கிறாள்.

முடிவுரை: தமிழ்ச் சமுதாயம் அன்பு, அருள், அறிவு, ஆற்றல், கலைவளம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதைச் சித்தரித்துக் காட்டும் சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், எனப் பல வகையாகப் பாரட்டத் தகுந்த காப்பியம் எனில் மிகையாகாது. ஏனெனில் சமயப் பொதுமை நோக்கிய ஒரு இலட்சிய சமூக அமைப்பைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. சேர, சோழ, பாண்டிய எனும் அரசியல் பிரிவுகளையும் மனித நலம் சிறந்ததற்கான, அனைவரும் கூடிப் பெண்மையைப் போற்றுகிற சமுதாய அமைப்பைச் சிலப்பதிகாரம் உலகிற்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது இந்தக் காப்பியத்திற்கு உரிய தனித்தன்மையாகும்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக