30/01/2011

பொருநராற்றுப்படைப் பாடலின் அடிக்கருத்து அமைப்பு - தி. இராமசாமி

ஒரு கவிதையின் ஒருமித்த கருத்து அல்லது அது வெளிக்கொணரும் பொருள் எதுவோ அதை மையக்கரு, தலைமைக் கருத்து, அடிக்கருத்து என்பர். இத்தகைய கருத்துடன் ஒன்றிணைந்து வரும் பொருட்கூறுகளைக் கருத்தலகுகள் என்று ஒப்பியலார் பிரித்துக் காட்டுகின்றனர். அடிக்கருத்தும், கருத்தலகுகளும் ஒன்றிணைந்த தன்மையை விளக்கும் ஆய்வு அடிக்கருத்தியல் ஆய்வாகும். இது ஹாரிலெவின் என்பவரால் ஒப்பிலக்கியத் துறையில் தோற்றுவிக்கப்பட்டு இன்று ஒரு தனி இலக்கியக் கொள்கையாக வளர்ந்து வருகின்றது. பெருநராற்றுப்படைப் பாடலின் அடிக்கருத்து அவ்வடிக்கருத்து அமைந்திருக்கும் திறன் ஆகியவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அடிக்கருத்து விளக்கம்:

ஓர் இலக்கியத்தின் அடிப்படைச் செய்தி, இலக்கியம் உணர்த்தும் செய்தி, திரும்பத் திரும்ப வரும் நுவல் பொருள் என்றனைத்தும் அடிக்கருத்துக்களாகும். ஓர் இலக்கியப் படைப்பில் அல்லது கவிதையில் அடிக்கருத்தே அதன் உயிர் போன்ற செய்தியாகும். எனவே இலக்கியப் படைப்பின் உயிரோட்டமாக அடிநாதமாகக் காண்ப்படும் ஓர் உயர் உணர்வே அடிக்கருத்தாகும். இலக்கியப் படைப்பில் அதனுடன் கொடர்பு கொண்ட பல நிகழ்ச்சிகிளால் அடிக்கருத்து உருவாக்கப்படும். அந்நிகழ்ச்சிகள் உவமை, உருவகம், அடைமொழி என்ற நிலையிலும் உணர முடிகின்றன.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் தரும் விளக்கங்கள்:

தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலியவற்றில் அடிக்கருத்து பற்றிய சிந்தனைகள் காணப்படுகின்றன. இங்கு அடிக்கருத்து என்ற சொல்லை நேரடியாகச் சொல்லவில்லை. அவ்வவ் இலக்கிய மரபிற்கு ஏற்ப திணை, துறை என்ற கலைச் சொற்களின் விளக்கங்களில் அடிக்கருத்து பற்றிய செய்திகள் அமைந்துள்ளன. தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறிப்பிடும் பொருள், திணை, துறை முதலியவற்றிற்குரிய விளக்கங்கள் இங்கு கருதத்தக்கன.

''இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி யின்றி

இதுவாகித் திணைக் குரிப்பொருள் என்னாது

பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப'' (தொல்.200)

என்று செய்யுளியலில் பொருளை விளக்குகிறார் தொல்காப்பியர். சங்கப் பாடல்களின் அமைப்பு முறையை நோக்கினாலும் இது விளங்கும். அகப்பாடற் செய்திகள் கூற்று என்ற அமைப்பில், திணை - குறிஞ்சித் திணை கூற்று - தோழி அறத்தொடு நிற்றல் என்றவாறு விளக்கப்பெற்றிருக்கும் திணை - வாகை துறை - அரசவாகை (புறம் - 204)

மேற்குறிப்பிட்ட துறை என்ற அமைப்பு புலவரின் நேரடிக் கூற்றுகளாக வரும். சங்க இலக்கியத்தில் திணை என்பது பின்னணியாகவே வரும். (செ.சாரதாம்பாள், அடிக்கருத்தியல் கொள்கைகளும் திறனாய்வு அணுகுமுறைகளும், பக்.3-4)

ஆற்றுப்படை இலக்கணம்:

கலைஞர்கள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொண்ட ஒரு பண்பாட்டுக் கூறினைப் புலவர்கள், மன்னனது புகழைப் பாடுதற்குரிய ஒரு வகை உத்தியாகக் கையாண்டார்கள். இவ்வாறு உலக வழக்கு, செய்யுள் வழக்கான போது இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் ஆற்றுப்படை என அதற்கொரு துறை வகுத்தார். (மா.நவநீதக்கிருட்டிணன், தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படை, ப-55)

''கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் அறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்'' (தொல்.புறத்.30)

என்று தொல்காப்பியர் ஆற்றுப்படை பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், எச்சவியலில் அதற்கொரு சிற்ப்பு இலக்கணம் தருகின்றார். இங்கு ஆற்றுப்படை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

''முன்னிலை சுட்டிய ஒருவரைக் கிளவி

பன்மையோடு முடியினும் வரை நிலையின்றே

ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்'' (தொல்.எச்ச.66)

என்கிறார். ஆற்றுப்படை என்பது தலைமக்களைப் பாடும் பாடாண்திணையைச் சார்ந்தது. ஆற்றுப்படையின் நோக்கம் கொடையில் சிறந்த ஆண்மகனைப் பாடுவது போன்று மன்னனின் கொடைத் திறனைப் புகழ்ந்து பாடுவது. பொருநராற்றுப்படை பாடல் 248 வரிகளைக் கொண்டது. இதில் அரசனின் கொடைச் சிறப்பினைக் கூறுதல் அடிக்கருத்தாக அமைகின்றது.

அடிக்கருத்து கருத்தலகுகள் ஆகியன அமைந்துள்ளன. நிலையும் அவை மேல் பாடல் வரிகளில் அமைந்துள்ள நிலையும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்படுகின்றன.

அடிக்கருத்து - கொடைப்பண்பு

தலைமைப் புனைவுக் கூறுகள் - மன்னன் பண்பு விருந்தோம்பல், அரண்மனைச் சிறப்பு, வாழ்க்கை முறை, வருணணை இவை தவிரப் பாடல் அமைந்தவற்றைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். அவை,

விளித்தல், யாழின் இயல்பு, பாடினியின் இயல்பு, கடவுள் வழிபாடு, நற்பயன், துன்பம் நீங்க எழுவாய், பரிசில் பெற்ற வரலாறு, கரிகாலன் போற்றிய முறைமை, ஆடையின் சிறப்பு, கள்ளளித்தல், துயில் இன்பம், கனவோ என மருளுதல், விருந்தோம்பல், பிற விருந்து, இன்சோறு, பரிசில் அளித்தல, பெருஞ்சிறப்பு, வளவனின் ஆற்றல், உணவு, உடை, பரிசில்கள், காவிரிநாடு, திணை மயக்கம், கரிகாலன் வாழ்க, காவிரி சிறப்பு என்பனவாகும். இவ்வாறு சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட கூறுகளைக் கருத்து அலகுகள் அல்லது புனைவுக் கூறுகள் எனலாம். இவற்றுள் அரசனின் கொடைப் பண்பைக் குறிக்க வரும் நேரடித் தொடர்புடைய நிகழ்ச்சிகள் எல்லாம் பொருநராற்றுப்படையில் வரும் தலைமைப் புனைவுக்கூறுகள் ஆகும்.

மன்னனின் கொடைச் சிறப்பைப் பாடுதல் என்ற கருத்திற்கேற்ப கொடைப் பண்பு பற்றியக் கருத்துக்கள் எண்ணிக்கையில் வந்துள்ளன. ஆற்றுப்படைப் பாடல்களின் நோக்கமும் மன்னனின் கொடைப் பண்பைப் பாடுவதாகும். எனவே இங்கு மன்னனின் கொடைப்பண்பைப் பாடுதல் பொருநராற்றுப்படையின் அடிக்கருத்தாக உள்ளது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்டு வரும் கருத்தலகுகள் எல்லாம் திரும்பத்திரும்ப வரும் தன்மையில் தலைமைப் புனைவுக் கூறுகள் என்ற நிலையினைப் பெறும். பாடலில் பயின்று வரும் எண்ணிக்கையாய் மட்டும் தலைமைப் புனைவுக் கூறுகுள் என்பது பொருளன்று. கவிஞன் அரசனின் கொடைச் சிறப்பைப் பாடும்பொழுது மன்னன் பண்பு, விருந்தோம்பல், அரண்மனைச் சிறப்பு, வாழ்க்கை முறை, கலைஞர்களின் நிலை முதலான செய்திகள் அவனையும் அறியாமல் இயல்பாகப் பாடல்கள் தோறும் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன. இவை பொருநராற்றுப்படையின் தலைமைப் புனைவுக் கூறுகள் எனலாம். சான்றாக விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் குறிப்பிடலாம. விருந்து புறப்பாடல்களில் பெரிதும் ஆற்றுப்படைப் பாடல்களில் அடிக்கடி பயின்றுவரும் தலைமைப் புனைவுக் கூறாகும்.

பொருநர்கள் மன்னனை நாடி வருதல், வரவேற்றல், கிழிந்த துணிகளை அகற்றல், புதியது கொடுத்தல், பரிசுப் பொருட்களைக் கொடுத்தல், உணவு பரிமாறுதல், மரபுப்படி ஏழடி பின் சென்று வழியனுப்புல் போன்ற கூறுகள் விருந்து என்ற கருத்துடன் தொடர்புபட்டு வரும் கருத்து அலகுகள் ஆகும். பொருநராற்றுப்படைப் பாடல்களில் நாட்டுவளம் கூறும் பின்னணியில் விருந்தோம்பல் திறன் பேசப்படுகிறது. இங்கு விருந்து பற்றிய செய்தி பெரும்பாலான இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் ஆற்றுப்படைப் பாடல்களிலும் மற்றைய புறப்பாடல்களிலும் இச்செய்தி பெரிதும் பேசப்பட்டுள்ளது. எனவே புறப்பாடல்களில் விருந்து பற்றிய செய்தி பொதுத் தலைமைப் புனைவுக் கூறாக இடம் பெற்றுள்ளது என்றுணரலாம்.

முடிவுரை: ஒரு பாடல் உணர்த்தும் முழுமயான செய்தியே பாடுபொருள் அல்லது அடிக்கருத்து எனப்படும். இது பாடல் முழுவதும் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. அவை குறிப்பாகவோ, வெளிப்படையாகவே உணரும் வண்ணம் பாடலில் அமைந்திருக்கும் செயலைப் பொருத்தமையும்.

பாடலில் இடம்பெறும் கருத்துக்களைச் சிறு சிறுப் பொருட்கூறுகளாகப் பிரிக்கலாம். இவையே பொருட்கூறுகள் அல்லது கருத்தலகுகள் எனப்படும். கருத்தலகுகள் பல இணைந்து ஒரு பாடற்கருத்தை அடிக்கருத்தாக முழுமைப்படுத்த முடியும். இக்கருத்து அலகுகளுடன் நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டும், அடிக்கருத்துகள் நேரடி தொடர்புடையனவாகவும் வரும் கூறுகளே தலைமைப் புனைவுக் கூறுகளாகும். ஒரு புலவன் ஒரு கருத்தை அடிக்கடி தம் பாடல்களில் பயன்படுத்தும் போது பிற புலவர்களும் அதனைத் தொடர்ந்து பின்பற்றுகின்றனர். இவ்வாறு பின்பற்றும் பொழுது இத்தலைமைப் புனைவுக் கூறுகள் பாடல்களில் மரபு வழியாக அமைய இடம் உண்டாகிறது எனலாம்.

நன்றி: கட்டுரை மாலை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக