முன்னுரை:
இன்று வாழும் எழுத்தாளர்களுள் பரபரப்பாகப் பேசப்படுபவர் இந்திரா சௌந்தர்ராஜன். எழுத்துச் சார்ந்த எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுடைய இவர் சமூகம், குற்றவியல், ஆர்வநிலை, ஆவியுலகம், ரசவாதம் எனப் பல நிலைகளிலும், களங்களிலும் விறுவிறுப்புக் குறையாதபடி எழுதி ''ஒரு பன்முக எழுத்தாளராக'' எழுத்துலகில் பவனி வருகின்றார். ஆயினும் ''இந்திரா சௌந்தர்ராஜன்'' என்றதுமே ''மர்ம எழுத்தாளர்'' என இவர் மீது குத்தப்பட்ட தனி முத்திரையே வாசகர்களின் நினைவிற்கு வரும். அவ்வகையில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் இவரது படைப்புகளில் ஒன்றான ''ரகசியமாக ஒரு ரகசியம்'' நாவலில் இடம் பெற்றுள்ள ''மர்மங்கள்'' இக்கட்டுரையில் எடுத்தியம்பப்படுகின்றன.
ரகசியமாக ஒரு ரகசியம்:
சேலம் வட்டாரத்தில் உள்ள சித்தர்பட்டி எனும் மலைக்கிராமத்தில் உள்ளது. சித்தேஸ்வரர் ஆலயம். அக்கோயிலுக்கென்று சில ஆசாரங்கள் உண்டு. அதனை மீறுபவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள சுனைநீரால் தீராத நோய்களும் குணமாகி வந்தன, வைரவன் செட்டியரால் கோயில் மகத்துவம் வெளி உலகத்திற்கு தெரியவர, அவ்வூரிலும் அக்கோயிலிலும் பல மர்மங்கள் நடைபெறத் தொடங்கின. அம்மர்மங்களுக்குக் காரணம் சித்தர்களாக இருக்கும், இறைவனின் சக்தியாக இருக்கும் என ஒரு பக்கம் கருத்து நிலவ, மறுபக்கம் அது மனிதர்களுடைய வேலையாக இருக்கும் என்ற மனநிலையோடு பலர் அம்மர்மங்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இம்மர்மத்தைக் கண்டறிய முயன்று ஸ்ரீகாந்தும், விஷ்வராமும் மரணத்தைச் சந்திக்க, மணிசுந்தரமும் பிரசாந்தும் விடாமல் முயற்சிக்கின்றனர். இறுதியில் பைத்தியமாக நடிக்கும் கே.ஆரின் உதவியுடன், சுனைநீருக்குள் இருக்கும் நவபாஷான லிங்கத்திற்காக ஒரு கூட்டம் செய்த சதி வேலையே இம்மர்மங்கள் என்ற உண்மை தெரியவருகிறது. காவல் துறை உதவியுடன் அக்கூட்டம் பிடிபட, இறுதியில் அக்கூட்டத்திற்குத் தலைவன் வைத்தியர் ராமரத்தினம் என்ற மர்மம் விடுவிக்கப்படுகிறது.
நம்பகத்தன்மை:
தன் நாவலில் தொடர் மர்மங்களைத் தந்துள்ள இந்திரா சௌந்தர்ராஜன் தன் படைப்பில் உள்ள மர்மங்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் சில உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் தலைப்பிடல், பின்னணி அமைப்பு, கல்வெட்டுச்செய்திகள், நிகழ்ச்சி, அமைப்பு, வர்ணனை ஆகிய குறிப்பிடத்தக்கனவாகும். தன் நாவலுக்கு இந்திரா சௌந்தர்ராஜன் ''ரகசியமாக ஒரு ரகசியம்'' என்று அளித்திருக்கும் பெயரே இக்கதையில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு கட்டத்தில் மர்மங்களை ஓரளவு கண்டறிந்த மணிசுந்தரம் வைத்தியரிடம், ''ஆடற மாட்டை ஆடிக்கறக்கணும்பாங்க அதைத்தான் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். அவ்வளவும் அந்தக் கோயில் ரகசியத்தை தெரிஞ்சுக்கவும் எல்லார்க்கும் தெரிவிக்கவும் தான்! என்றும், ''அது ஒரு ரகசியமான ரகசியம் அதுக்கு மேல எல்லாம் தானாத் தெரியவரும்'' என்றும் கூறுவதாக அமைத்திருப்பது சிறந்த உத்தியாகும்.
சித்தர்பட்டியை நாவலின் கதைக்களமாக அமைத்திருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் அதனை ஒரு மர்மம் நிறைந்த களமாகக் காட்டுகிறார். அதற்கேற்றார்போல் அவ்வூரில் பல மர்மங்கள் நடைபெறுகின்றன. ''இது சரியான மர்மப்பட்டி'' என்ற மணிசுந்தரத்தின் கிண்டலும், ''எப்பேர்ப்பட்டவர்கள் மதிக்கும் எங்கள் ஊர்'' என்ற வைத்தியர் ராமரத்தினத்தின் வார்த்தைகளும் அதனை நிருபிக்கின்றன. இதே போன்று அங்குள்ள கோயிலையும் மர்மம் நிறைந்ததாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
கல்வெட்டுச் செய்திகள்:
இந்நாவலில் ஒவ்வொரு அத்தியாயத் தொடக்கத்திலும் கவிதை வடிவில் பல்வேறு கல்வெட்டுச் செய்திகளை ஆசிரியர் தந்துள்ளார். கொடிமரம், பிரகாரம், கனை, நந்தி பீடம், கருவறை, போகர்நிலை, போதகர் சிற்பம் என 26 இடங்களில் அமைந்திருக்கும் இக்கல்வெட்டுக்கள் கோயில் ஆசாரங்கள், காலபைரவன் கருணை, சுனைநீரின் சிறப்பு, சிவ பூசையின் சிறப்பு, ஆசாரங்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், அவற்றிற்கான எச்சரிப்புகள் எனப் பல செய்திகளைத் தருகின்றன. இவை அங்கு நடைபெறும் மர்மங்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. பசுபதியின் மரணம் கொடூரமான முறையில் நிகழ்ந்த போது அது இறைவனின் கருணையற்ற செயல் என மக்கள் புலம்புகிறார்கள். ''சித்திரனுபூதிக் கல்வெட்டில்,
''நெடுமுடி காணச் சென்ற பிரம்மனே
பிழைசெய்து பெற்றான் சாபம்!
கடும்பணி செய்யாது சிலர் கொடும்பணி
செய்து சேர்க்கிறார் பாவம்!
பாவத்தின் உச்சமே மரணம்! (ப.180)
என்ற செய்தி இருப்பதாகக் காட்டும் ஆசிரியர், அவ்வத்தியாயத்திலேயே விஷ்வராமின் மரணம் நிகழும்படிச் செய்து கல்வெட்டுச் செய்தியை உண்மையாக்கியுள்ளார்.
கோயில் ஆசாரங்கள்:
சூரியன் அஸ்தமிக்கும் முன் நடையைச் சாத்திவிட வேண்டும் என்பது அக்கோயில் ஆசாரங்களுள் ஒன்று. மீறுபவர்களுக்கு மரணம் சம்பவிக்கும். சிவன் கோயிலில் நாய் வடிவில் காவல் இருக்கும் பைரவமூர்த்தியே அத்தண்டனையை அளிப்பதாக மக்கள் நம்பி வந்தனர். கோயிலுக்குள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மற்றொரு ஆசாரமும் கடைப்பிடிக்கப்பட்டது. அதை மீறுபவர்களுக்கு மரணம் நிகழும் என்பதை,
''ஈரெட்டு தினத்துக்குள்
எமனுலகம் சேர்ந்திடுவான்.'' (ப.90)
என்று அங்குள்ள கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தொடர் மரணங்கள்:
ஆசாரங்களை மீறுபவர்களுக்கு மரணம் நிகழும் என்பதை உண்மையாக்கும் வகையில் மூன்று மரணங்கள் சித்தர்பட்டியில் மர்மமான முறையில் நிகழ்ந்தேறுகின்றன. அவை கோயில் இரகசியங்களைத் துப்பறியும் நோக்குடன், இரவில் கோயிலுள் தங்கிய ஸ்ரீகாந்தின் மரணம். கோயில் நடை சாத்திய பின்பு, குழந்தையைக் காப்பாற்றுவதற்காக நடை திறந்து உள்ளே சென்ற பசுபதியின் மரணம், இரவில் கோயிலில் தங்கி, டேப்ரிக்கார்டர் மற்றும் போட்டோவை ஆதாரங்களாகப் காட்ட முயன்ற விஷ்வராமின் மரணம் ஆகியன. இம்மரணங்களை நாய்க்கடியினால் ஏற்பட்டதாக காட்டுவதால் பைரவமூர்த்தியால் இம்மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
சுனைநீர்:
கோயிலுள் ஒரு சுனை உள்ளதாகக் காட்டுகிறார் ஆசிரியர். அச்சுனைநீரில் பௌர்ணமி அன்று குளித்தால் சித்தபிரமை தீரும். சுனைநீரோடு உரிய மூலிகைகளைச் சேர்த்துச் சாப்பிட்டால் எல்லா வியாதியும் தீரும். பதினாலரை வருஷம் இந்நீரைக் குடித்தால் முதுமை வராது என்பன போன்ற செய்திகளை அதன் அருகில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதற்கு வைரவன் செட்டியாரின் வெண் குஷ்டம் குணமாதல் (11.5) டாக்டர் கே.ஆர். பார்த்தும் குணப்படுத்த முடியாத மந்திரி மகனின் பைத்தியம் தெளிதல் (11.89) ஆகியனவற்றை ஆதாரமாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
கோயிலில் நிகழும் மர்மங்கள்:
கோயில் சந்நிதியில் பனை ஓலை அல்லது தாழம்பூ மடலில் செய்திகள் வரத்தொடங்கின. கோயிலை வருங்காலத்தில் நிர்வாகிக்க வேண்டிய ஆணைகள் வருதல், பட்டருக்குச் செப்பு நாணயத்தைத் தங்கமாக்கித் தருவதாகச் செய்தி வருதல், பக்தர்களின் விண்ணப்பத்திற்கு பதில் ஓலை வருதல் எனப் பல அதிசயங்கள் நடந்தேறுகின்றன. தாழம்பூ மடலில் வந்த செய்திக்கு ஏற்றார் போல ஆதிரை இரவில் பட்டர் பசும்சாணத்தில் புதைத்து வைத்த செப்பு நாணயம் தங்கமாக மாறிய அதிசயம் நிகழ்கிறது. விஷ்வராம் கோயிலுள் தங்கி ரகசியத்தைக் கண்டறிய முற்பட்ட இரவு கோயிலுள் நடைபெற்ற ரகசிய பூஜையின் போது நிகழ்ந்த அதிசய நிகழ்வுகள் (பக்.172-176) மர்மமான முறையில் இருந்தன.
யதார்த்த நிகழ்ச்சிகள்:
அதே போல் யதார்த்தமாக நடைபெறும் நிகழ்ச்சிகளை மர்மங்களோடு தொடர்பு படுத்தி காட்டியிருப்பது மற்றொரு உத்தியாகும். மலையருவிக்கு ஒற்றையடிப் பாதையில் செல்லும் லலிதாவைப் பாம்பு தீண்டுவது யதார்த்தமாக நடைபெறுகிற செயல். இதனை ஆசிரியர், அதற்கு முன், யாரையும் சேர்க்கக் கூடாது என்ற சாமி ஓலையின் உத்தரவை மீறி, லலிதா ஒரு பைத்தியத்தை ஆசிரமத்தில் சேர்த்ததினால் ஏற்பட்ட சாமி குத்தமாக அதனைக் காட்டி நம்ப வைக்க முயலுகிறார்.
வர்ணனைகள்:
''நாவலில் வரும் வருணனைகள் ஆசிரியரின் கவித்துவ ஆற்றலைக் காட்டுவதாகவும் கதையோடு பொருந்தியதாகவும், கற்பவருக்கு விருவிருப்பூட்டும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்.'' என்பார் இராமலிங்கம். அவ்வர்ணனை, பின்னணியைப் பற்றியதாகவோ, கதை மாந்தர்களைப் பற்றியதாகவோ அமையலாம். அவ்வகையில் இந்திரா சௌந்தர்ராஜன் தன் நாவலில் தரும் கதை மாந்தர் மற்றும் காட்சி வர்ணனைகள் அவர் கையாண்டுள்ள மர்மங்களுக்குத் துணைபுரிவனவாகவே அமைந்துள்ளன எனலாம்.
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொலை கார நாயின் தோற்றத்தை வர்ணித்து விட்டு அடுத்த அத்தியாயத்தில் அது அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டுக்கூட்டத்தில் உள்ள பெரிய கறுப்பு ஆடு என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறார்.
கோயிலில் இரவில் நடக்கும் ரகசியத்தை அறிய, டாக்டர் விஷ்வராம் கோயிலில் பதுங்கி இருந்து பார்த்த போது நிகழ்ந்த நிகழ்வை ஆசிரியர் 16 அத்தியாயத்தில் தன் வர்ணணைத் திறத்தால் படம் பிடித்துக்காட்டுகிறார்.
மர்மம் விடுவிக்கப்படல்:
வாசகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில், மர்மங்களைத் தொடர்ந்து அடுக்கி வரும் ஆசிரியர் விஷ்வராமின் துணிவான நடவடிக்கையால் மர்மம் விடுவிக்கப்பட போவது போல காட்டி, எதிர்பாராத மரணத்தை அவருக்கு ஏற்படுத்தி மர்ம முடிச்சை இறுகச் செய்கிறார். 18வது அத்தியாயத்திற்குப் பின் மர்மங்கள் ஒவ்வொன்றையும் படிப்படியாக விடுவிக்க ஆரம்பிக்கிறார்.
சமூகப் பிரக்ஞை:
''மர்மப் படைப்புகளில் சமூகப் பிரக்ஞைக்கோ சில நற்செயல்களின் பிரசாத்திற்கோ இடம் கிடையாது என்கிற நிலையைத் தன் படைப்புகளில் மாற்றிக் காட்டுவதற்காகக் ''கூறும் இந்திரா சௌந்தர்ராஜன் அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர் இந்திரா சௌந்தர்ராஜன். சமய நம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதைக் கடுமையாக விமர்ச்சிக்கிறார். சமூக விரோதிகள் சமயம் சார்ந்த சிந்தனைகளைத் தவறான முறையில் கையாண்டு மக்களை ஏமாற்றுவதை ''ரகசியமாக ஒரு ரகசியம்'' நாவலில் காட்டியுள்ளார்.
நிறைவு:
''மனத்திலுள்ள மர்மர், வாழ்க்கையில் உள்ள மர்மத்தை நான் எழுதுகிறேன். என்னைப் போல அமானுசியத்தை எழுத யாரும் இல்லை என்று துணிந்து கூறுகிறார். இந்திரா சௌந்தர்ராஜன் அம்மனத்துணிவை அளித்தது அவரது எழுத்து திறமை என்று சொல்லும் அளவிற்கு, கதைக்கரு, கதை அமைப்பு என மர்ம நாவலுக்கே உரிய அனைத்து உத்திகளையும் சிறப்பான முறையில் இந்நாவலில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக