இன்றைய கவிஞர்கள் வரிசையில் எளிய நடையில் இனிய தமிழைத் தரும் வல்லமை மிக்கக் கவிஞராக திகழ்பவர் வைரமுத்து அவர்கள். அவரின் படைப்புகள் பாமரனைக்கூட பகுத்தறிவாளனாக்கும். மனித மனங்களின் சாதனையாளனாக்கும். மனித வாழ்க்கையின் மையப் புள்ளியாகத் திகழும் ''காதலை'' அனிச்ச மலரைக் காட்டிலும் மென்மையாய்ச் சொல்லும். அது மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களையும் நுணுகி ஆராய்ந்து சரி செய்யப்பட வேண்டியனவற்றை சரியாக எடுத்துக்காட்டும். மேலும், நாட்டின் முதுகெலும்பாய், மூச்சுக்காற்றாய் கருதப்படும் அரசியல் நச்சுக் காற்றாய் மாறி சமூகத்தை நாசப்படுத்தும் அவலத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும். அது மட்டுமின்றி மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அறிவியல் சிந்தனைகளே முக்கியத்துவமானது என்பதை இந்த உலகிற்குப் பறைசாற்றும். இவ்வாறு பல அரிய சிந்தனைகளைக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் பலவும் உணர்த்தினாலும் ''தமிழுக்கு நிறம் உண்டு'' எனும் கவிதை நூல் என்ன சொல்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
காதல்:
தொடக்க காலந்தொட்டு உயிர்களின் உயிராக இருந்து வருவது காதல். அதை மனிதனால் மட்டுமே அழகுபடுத்த முடிந்தது. காதலின் புனிதத்தையும் அவசியத்தையும் தொல்காப்பியம் முதற்கொண்டு இன்றைய இலக்கியங்கள் வரை எல்லாமே மிக அழகாகச் சொல்கின்றன. ஆனாலும், காதலானது மனிதனுக்குத் திகட்டியதாகத் தெரியவில்லை. மனித வாழ்க்கையில் காதலிப்பதுதான் சுகமானது. அதே நேரத்தில் கடினமானது அதுதான். அதனால்தான் ''காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு'' என்றார் கண்ணதாசன். இப்படி காலங்காலமாய் காதலைப்பாடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து அவர்களும் காதலை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். எவ்வாறெனில்
''உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்''
என்றவர்,
செவ்வாயில் ஜ“வராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜ“வன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்''
என்கிறார். கவிஞரின் இந்த வரிகள் மனித இனத்தின் மணி மகுடமாய்த் திகழும் பெண்மையை அதன் மென்மையும், மேன்மையும் வெளிப்படும் விதத்தில் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். மேலும் செவ்வாயில் உள்ளதடி எனது ஜ“வன்! என்று ஒரு தலைவனின் குரலாக ஒலிக்கும் இந்த வரியில் பெண்ணின் இதழ்களை விஞ்ச விஞ்ஞானத்திற்குக்கூட சக்தியில்லை என்பதும், காதலை மீறிய சக்தி உலகிலேயே இல்லை என்பதும் மிக அழகாக எடுத்துரைக்கப்படுகிறது. காதல் பற்றிய வைரமுத்துவின் கவிதை வரிகள் பலவும் பெண்மையின் உண்மையை, உள்ளீட்டை, உணர்வை, சுவையை, சுகந்தத்தை நுகராமல் இருப்பது ஆண்மைக்கு ஒரு பேரிழப்பு என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன. மேலும் ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் ஐக்கியமாவதே வாழ்வியலாகும் என்பதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
சமூகம்:
ஒரு சமூகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இன, மத, மொழி கலாச்சார அடிப்படையிலான மக்கள் வாழ்வதாகும். அம்மக்களின் தனிமனித உரிமைகள் பாதிக்கப்பட்டுவிடாமல் சமத்துவம், சகோதரத்துவம் என்ற பேதமின்றி வாழ்க்கை நடத்துவதே அதற்கு அடையாளமாகும். அதை விடுத்து மனிதரை மனிதர் இழிவுபடுத்தி அடிமையாக நடத்துவது, தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைப்பது போன்ற நிலைகள் இருந்தால் அதை சமூகம் என்று சொல்லவியலாது. ஆகவே, எல்லா மனிதரும் பேதம் களைந்து எல்லாவற்றிலும் சமநிலை என்று வாழ்வதே சிறந்த சமூகமாகும். இதனை நெஞ்சில் நிறுத்திய கவிஞர் சேவலுக்கும், குயிலுக்கும், சங்கினத்துக்கும் பின் வருமாறு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். அதாவது,
''எங்கே ஊர்களில்
ஜாதி இல்லையோ
அங்கே கூவுக சேவல்களே!
எங்கே பூமியில்
போர்கள் இல்லையோ
அங்கே பாடுக பூங்குயிலே!
எங்கே மனிதரில்
பேதம் இல்லையோ
அங்கே முழங்குக சங்கினமே!
என்கிறார். இவ்வரிகளை நுணுகி ஆராய்கின்ற பொழுது, பேதமற்ற சமுதாயம் தான். இன்றைய அவசரத் தேவை என்பதை கவிஞர் சுட்டிக் காட்டியிருப்பது விளங்கும். அது தொடர்பாக மேலும் சொல்ல நினைத்த கவிஞர் வைரமுத்து அவர்கள்,
''ஒரு
கிறிஸ்தவக் கிளி - இந்துப் புலி
சமணக்கொக்கு - பௌத்தப் பசு
சீக்கியச் சிங்கம் - மகமதிய மான்
காட்டுக்குள் அடையாளம்''
என்று வேதனையோடு கேட்கிறார். மனிதன் வாழும் நாடும் நகரமும் சாதி, மத பேதங்களால் நரகமாகக் காட்சியளிப்பதை, விலங்குகளும் பறவைகளும் வாழும் காடுகள் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்பதை உணர்த்துவதன் மூலம் மனிதனின் ஒழுங்கீனத்தை தெளிவுறுத்துகிறார். அது மட்டுமின்றி காடுகளில் வாழும் விலங்குகள் பறவைகளைப் பார்த்தாவது மனிதன் ஏற்றத்தாழ்வகற்றி ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தத் தவறவில்லை. இப்படி ஒற்றுமையுணர்வை விதைக்கும் கவிஞர் வைரமுத்து அவர்கள்
''மதம் ஒரு பிரமை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்?
மதம் என்பதொரு வாழ்க்கை முறை
சரி
வன்முறை என்பது எந்த முறை?
என்று மதவாத சக்திகளை நோக்கி ஒரு கேள்விக்கணை வீசுகிறார். இதில் மதம் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவே தவிர, மனிதனை தீவிரவாதியாக மாற்றுவதற்கு அல்ல என்கிற செய்தியையும் தெளிவுறுத்துகிறார். இக்கருத்தை ''மனிதன் மதத்திற்குள் இருக்க வேண்டுமே தவிர மதம் மனிதனுக்குள் இருக்கக்கூடாது'' என்கிற விவேகானந்தரின் கூற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் மதத்தின் மாண்புதெள்ளெனத் தெரிவதோடு மதம் வாழ்வியலுக்குத்தானே தவிர வன்முறைக்காக அல்ல என்பது தெளிவு பெறும். இவ்வாறான சிந்தனைகளை நூல் முழுக்கச் சொல்லி செல்கிறார்.
அரசியல்:
ஒரு நாடும் சமூகமும், மக்களும், கலாச்சாரமும் உலக அரங்கிலே உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அந்த நாட்டின் அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும். கடைநிலையில் இருப்பவனும் மனிதனாய் மதிக்கப்பட்டு, அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். சாதி, மதச் சார்பற்ற அரசை நிர்மாணிக்க வேண்டும். அதை விடுத்து சாதி மக்களின் பெயரால் அரசியல் நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகிவிடும், ஆகவே, நாட்டின் நலனும், மக்களின் நலனும் காக்கப்படும் விதத்தில் அரசியல் செயல்பாடுகள் அமைதல் அவசியம். இந்நிலை கிடைக்காத போது, பாதிக்கப்பட்டவர்களைத் தட்டியெழுப்பி சுட்டிக்காட்ட வேண்டியது, சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டியதும் ஓர் இலக்கியப் படைப்பாளியின் கடமையாகிறது. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் அரசியல் கருத்துக்களை அனல் தெறிக்க எடுத்து வைக்கிறார். அமைதிப் பூங்காவாகத் திகழும் இந்தியத் துணைக் கண்டத்தை, அமளிக் காடாக்கி, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவ்வப்பொழுது, கபளீகரம் செய்து வரும் கர சேவகர்களுக்கு கேள்வி விடுக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அவர்கள்,
''கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள்
திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை
அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
......................
நாம் உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை''
என்று நெஞ்சம் குமுறுகிறார். எரிமலைக் குழம்பாய் வெடித்துச் சிதறும் கவிஞரின் சிந்தனை அதோடு நிற்காமல்
''சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டு பள்ளத்தில்''
என்று மிகுந்த வேதனைப்படுகிறார். கேட்பதற்கு நாதியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த இந்தியனுக்காக குரல் உயர்த்தும் வைரமுத்து அவர்கள் இரும்பு இதயம் கொண்டவர்களே மிகுதியாக கூடுகின்ற நாடாளுமன்றத்தை நோக்கி,
''ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டின்கீழ்
நாற்பது கோடி மக்கள் என்றால்
அறிவுக் கோட்டின்கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன் அறிவிக்க மறுத்தாய்''
என்று கேட்கிறார். இவ்வரியில் சுயநலப் போர்வையில் சுற்றித் திரியும் போலி அரசியல் தலைவர்களை மிகச் சாதுர்யமாக விமர்சிக்கிறார். இவ்வாறு அரசியல் கருத்துக்கள் பலவற்றை சாதாரணமானவர்களின் வாழ்வு கருதி கூறிச் செல்கிறார்.
அறிவியல்:
மனித வாழ்வியல் அறிவியலை மையமாக வைத்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மனிதனின் ஒவ்வொரு அசைவும் அறிவியலோடு தொடர்புடையவை. அறிவியல் தான் இன்று பிரபஞ்சத்தை ஆள்கிறது. அறிவியலுக்காக மனிதன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் செயலுக்கு உள்ளேயும் வெளியேயும் அறிவியல் இருக்கிறது. அதைக் கண்டுணரத்தான் இத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. எப்படியோ மனிதன் தனக்காகத் தான் அறிவியலே தவிர அறிவியலுக்காக மனிதன் இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். ''காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்தப் பையடா! என்கிற கூற்றையெல்லாம் பொய்யாக்கி, மனித உடலே ஒரு நடமாடும் ஆய்வுக் கூடம். அதில் தான் எத்தனை ரசாயன மாற்றங்கள்! அத்தகைய மனித உடலின் விந்தையை அடையாளம் காட்ட நினைக்கும் கவிஞர் மனிதனை நோக்கி,
''உனது கொழுப்பில்
ஏழே ஏழு சோப்பு செய்யலாம்
உனது கரியில்
ஒன்பதாயிரம் பென்சில் செய்யலாம்
உனக்குள் இருக்கும் இரும்பில்
ஒரே ஒர் ஆணி செய்யலாம்''
என்று, மனித உடலில் இருக்கின்ற தாதுப் பொருள்களின் தன்மையையும், அளவையும் எடுத்துரைக்கிறார். அதுமட்டுமின்றி அறிவியலின் அசுரவேக வளர்ச்சியை உணர்த்த நினைத்த கவிஞர்,
''அடுத்த நூற்றாண்டில்
அந்தி நேரத்தில்
மூளை தவிர எல்லாம்
செயற்கையாய்க் கிடைக்கும்
ஆண்டுக்கொரு முறை
முகம் மாற்றலாம்
.........................
எண்கள் இட்ட
இதயம் கிடைக்கும்
கணவனுக்கு மனைவி
செவ்வாயிலிருந்து
செலவுக்கனுப்புவாள்''
என்று மிக அழகாகச் சொல்கிறார். இந்த வரிகள் அறிவியல் உணர்ச்சியைச் சொன்னாலும், மனிதன் எந்திர கதியாய் ஆகிவிட்டான் என்பதுடன், எதிர்காலத்தில் செயற்கையாகத்தான் மனிதன் இருப்பான் என்பதையும் தெளிவுறுத்துகின்றன.
நிறைவுரை:
இவ்வாறு கவிஞர் வைரமுத்துவின் பார்வையானது சமூகம், அறிவியல், அரசியல் என்று எல்லாக் கோணங்களிலும் செல்கிறது. அவரின் சிந்தனை கோணங்கள் அமைத்தும் முற்போக்கானவை. பகுத்தறிவு சிந்தனைகளை நினைவுறுத்தி நிலைநிறுத்தக் கூடியனவாகவும் மறுமலர்ச்சிக்கு துணைபுரிக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றன.
நன்றி: கட்டுரை மாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக