நேற்று வந்த நிலா - கதைச் சுருக்கம்: கேசவனும், சந்தியாவும் புதுமணத் தம்பதிகள். எல்லா நிலைகளிலும் மனைவியின் சுதந்திரத்தை அங்கீகரிக்கக்கூடிய கணவனாகக் கேசவன் திகழ்கிறான். சந்தியா, அறியாப்பருவத்தினளாக இருந்தபோது அவளைக் காதலித்த சந்திரன், அவள் வேலை பார்க்கும் கம்பெனியில் மேலதிகாரியாக இருக்கிறான். அலுவலகப் பணி காரணமாக இருவரும் தனிமையில் வெளியூர் செல்கின்றனர். சந்தியாவின் கணவன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை உடையவனாகத் திகழ்கிறான். சந்திரன் சந்தியாவின் நினைவாகவே இருக்கிறான். சந்திரனை, சேன்ரா என்ற வெளிநாட்டுப்பெண் விரும்புகிறாள். அவள் காதலை ஏற்க மறுத்துவிடுகிறான் சந்திரன். சேன்ரா வருந்தி அமெரிக்கா சென்றுவிடுகிறாள். சந்திரன் தன்னிடம் தவறாக நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள் சந்தியா. அவனைத் திருத்துகிறாள். தன் கணவன் கேசவனிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள். சந்திரன் சந்தியாவை விரும்பியவன் என்பதை அறிந்தும் கேசவன் அவர்களை நல்ல நண்பர்களாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறான். கேசவன், சந்தியாவும் மகிழ்வுடன் இருக்கின்றனர்.
சமுதாயப் பார்வை: மனிதகுலம் உணர்வாய் வாழ்வதற்கு அன்பை அடித்தளமாகக் கொண்டு குடும்ப வாழ்வு வேண்டும் என்பதே பிரபஞ்சனின் உயிர்நோக்கமாக உள்ளது. அணும் பெண்ணும் இணைந்து கணவன் மனைவியாக உடன்படிக்கை செய்து கொண்டு வாழ்வதும், தந்தை தாயாக இருந்து தலைமுறையினை வழிநடத்துவதுமான இந்தியச் சமுதாய நிலையை நாவல் படம்பிடிக்கிறது. எந்திரமயமான அவசர உலகத்தில் உண்மையான அன்பு குடும்பங்களில் நிலவுவது அருகி வருகிறது. போலித்தனமான வேஷங்களே மனித வாழ்க்கையாக மாறிவரும் இன்றையச் சூழலில் ஓர் இலட்சியத் தம்பதியரைப் படைத்து புதுமை உலகைக்கான முயற்சிக்கிறார் ஆசிரியர்.
ஒரு முக்கோணக் காதல் கதையை மையமாக வைத்துக் கொண்டு மாதிரிக் கணவன் மனைவியரைப் படைத்துச் சமுதாயத்திற்கு பாடம் கற்பிக்கிறார் பிரபஞ்சன். பெண்ணியச் சிந்தனைகளுக்கு முதலிடம் தருவதுடன் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என் விரும்புகிறார். தலைமுறை மாற்றம், பாலுறவுச் சிக்கல், திருமண முறை, அன்புறு வாழ்க்கை, பெண் கல்வி, பெண் விடுதலை (சுதந்திரம்) பெண்ணுரிமை, நாட்டுப்பற்று, மனிதநேய வெளிப்பாடு, சமூக அவலம் என்ற தலைப்புகளில் நாவலாசிரியரின் சமூகப் பார்வை இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமுறை மாற்றம்: காலம் காலமாக மாறிவரும் தலைமுறை இடைவெளி முற்போக்கான சிந்தனைகளுக்கு வழி வகுக்கின்றது. பெண்ணுக்குக் கல்வி கொடுப்பதை எதிர்த்த தலைமுறையினரும் உண்டு. பெண்ணுக்குக் கல்வி மட்டும்போதும் என்று அடுத்த தலைமுறையினர் முழுக்கமிட்ட வரலாறுகள் ஏராளம், ஆனால் இன்று ஆணை விடப்பல்வேறு நிலைகளில் பெண்ணினம் முன்னேற்றம் கண்டுள்ளமை தலைமுறை மாற்றத்தின் விளைவே ஆகும்.
''சந்தியா படிக்கணும்னு ஆசைப்பட்டாள்; மாப்பிள்ளை ஒப்புக்கொண்டார். கோல்டு மெடல் வாங்கி பாசானாள். வேலைக்குப் போனால் தான் கல்யாணம்னு சொன்னாள். அவள் ஆசைக்கு வேலையும் ஆச்சு, கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறா மாப்பிள்ளைக்கு எப்படி விருப்பமோ!!. என்று சந்தியாவின் தந்தை பேசும் பேச்சு தலைமுறை மாற்றத்தைக் குறித்த பேச்சே ஆகும்.
பாலுறவுச் சிக்கல்: நாவலின் பல இடங்களிலும் பாலுறவுச் சிக்கல் பேசப்படுகிறது. கார்த்திகை மாதத்து இரவு நேரத் தனிமை நிலையை சந்தியா நினைவுப்படுத்துகின்ற போதும், சந்திரன் தன்னை ஏதும் செய்து விடுவானோ என மனம் அலைபாயுமிடத்தும் இச்சிக்கல் இடம்பெறுகிறது. சந்திரன் தன்னை இழந்த நிலையில் சந்தியாவின் கையைப் பிடிப்பதும், அவள் கண நேரம் தடுமாறிய செயலும் பாலுறவுச் சிக்கலையே பேசி நிற்கின்றன. என்றாலும் நாவலாசிரியரின் இலட்சியத் தலைவி அறிவுக்கு முதலிடம் தந்து உணர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளுகிறாள்.
''நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அளிக்க முடியாமைக்கு நான் தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது இயற்கையான சமாச்சாரம். யாரும் யாரிடமும் இதைக் கேட்க உரிமை உண்டு. சந்தியாவின் பேச்சு இச்சிக்கலை உளவியல் சிந்தனையோடு விளக்குவதாக உள்ளது.
திருமணம்: திருமணம் என்னும் சடங்கு கட்டாயம் நடந்தே ஆக வேண்டியதன் அவசியம் யாராலும் உணரப்பட வேண்டிய ஒன்றாகும். திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்வினால் சமூக ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே காத்துக்கொண்டு வாழும் வாழ்வு திருமணத்தினால் மட்டுமே கிட்டுகிறது எனலாம். திருமணம் செய்து கொள்ளாத வாழ்வு கட்டற்ற காட்டாற்று வெள்ளம் போல, வெண்மேகம் போல பயனற்றதாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் கண நேர சபலத்தால் நட்புறவுகள் பாதிக்கப்பட்டு குடும்ப அமைப்பு சிதறும் அபாயம் பிரபஞ்சனால் நன்குணர்த்தப்படுகிறது.
''உங்களை ரொம்பவும் படுத்திட்டேன். நீங்க அப்படி நடந்துகிட்டது தப்பு இல்லை. அது இயல்புதான். உங்களைப் போல தனியா இருக்கிற என்னை நினைச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்காம இருக்கிற மனுசருக்கு இருக்கிறது வேணா சரி. ஆனால் கேசவனுக்கு மனைவியா இருக்கிற எனக்கு சரி இல்லை சந்திரன் என்ற சந்தியாவின் பேச்சினால் திருமணத்தின் பலம் உணர்த்தப்படுகிறது.
அன்புறு வாழ்க்கை: வாழ்க்கை அன்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நாவலில் வரும் கேசவன் சந்தியா தம்பதியினர் அன்புறு வாழ்விற்குத் தக்க மாதிரிகளாகப் பிரபஞ்சனால் படைக்கப்பட்டுள்ளனர். சந்தியா பிரிந்திருந்த சில நாட்கள் கேசவன் வெளியிலேயே தங்குகிறான். வீட்டில் சாப்பிடுவதும் இல்லை.
''வீடுன்னா என்ன சந்தியா? அன்பான மனுஷங்க தானே'' என்கிறான். ''சந்தியா இது மாதிரி பிறந்த நாள், கல்யான நாள் இவைகளுக்கெல்லாம் இப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்று நானும் நினைப்பதுண்டு. ஆனால் மனிதர்கள் மேல் நமக்கிருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்த முடியும்? வெளிப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் நான் இதை நினைக்கிறேன். என்கிறான் கேசவன். கேசவனும், சந்தியாவும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்தும் அன்பு போட்டி நிலையிலேயே நாவலில் அமைந்துள்ளது.
''காதலின் அர்த்தத்தை அன்று அந்த நிமிஷத்தில்தான் அறிந்து கொண்டாள் சந்தியா. காதல் என்பது ஆண், பெண் உறவு மட்டுமல்ல. காதல் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது மட்டுமல்ல. தாலி கட்டிய சம்பிரதாயம் அல்ல. தாய்மை மட்டுமல்ல. குடும்பம் குழந்தை குட்டிகள் மட்டுமல்ல. எல்லாமும் தான். ஆனால் இவை அனைத்தும் இணைக்கிற அந்தச் சரடு மட்டுமே முக்கியம். அந்தச் சரடு நம்பிக்கை. புரிதலின் ஆதாரத்தில் தோன்றுகிற நம்பிக்கை. என்று ஆசிரியர் பேசியிருப்பது அவர் காணவிழைந்த இலட்சியக் குடும்ப வாழ்வு பற்றிய எண்ணமே எனலாம்.
காதலனோடு சந்தியா தனித்து வருவதும், அவனோடு பழகுவதும் எந்த விதத்திலும் கேசவனைப் பாதிக்கவில்லை. அவளது நடத்தையில் அவன் சந்தேகமும் கொள்ளவில்லை. சந்திரன் இருட்டையும், தனிமையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைந்தும் சந்தியா கற்பு நெறியிலிருந்து பிறழாதவளாக, கணவனுக்கு எந்த வகையிலும், மனதாலும் துரோகம் செய்யாத புதிய வார்ப்பாகவே படைக்கப்பட்டுள்ளார். இது ஆசிரியரின் சமுதாய எதிர்பார்ப்பையே காட்டுகிறது.
பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை: சந்தியா, சேன்ரா, வள்ளி முதலான பாத்திரங்கள் பெண் கல்வியின் இன்றியமையாமை வலியுறுத்துவதற்காகவே படைக்கப்பட்டனவாகத் தோன்றுகின்றன. சந்தியா சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக்கூடிய அறிவுத்திறம் நிரம்பியவளாக நாவலில் சிறந்து நிற்கிறாள். பெண்களுக்கு சுதந்திரம், சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் புதியதோர் உலகு படைத்திட முடியும் என்ற கருத்து நாவலில் மேலோங்கி நிற்கிறது.
நாட்டுப்பற்று: தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்டு தாய் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஒவ்வொருவரும் முனைப்போடு செயல்படவேண்டும் என்கிறார். ''மேனாட்டுத் தொழில் வளர்ச்சி பிரமிக்கக் கூடியது தான். ஆனால் நம் தேசத்து வளர்ச்சி எந்த விதத்தில் குறைந்தது? மக்கள் வாங்கும் சக்தி குறைவாக இருக்கும் நாட்டில் தொழில் நேர்த்தியை விடவும் தேவையே முக்கியமானதாகும். நமக்கு தாழ்வு மனப்பான்மை வேண்டாம்'' என்ற சந்தியாவின் பேச்சு ஆசிரியரின் தேசப்பற்றை உணர்த்தியுள்ளது.
மனித நேயம்: ஜாதி, மத, மொழி, இனம், காலம் கடந்தும் வாழ்வது மனித நேயம் மட்டுமே. சந்தியா இல்லாத நேரத்தில் சந்தியாவின் செயலும் ''சந்திரனின் தாயார் தந்தி கொடுத்து சந்திரனை வரவழைத்தபோது, அவனுக்கு துணையாக சந்தியா செல்வதும்'' இரவு நேரத்தில் சந்திரன், சந்தியாவை அவள் வீட்டில் விட்டுச் செல்வதும்'' இது போன்ற நிகழ்வுகள் மனித நேயத்தை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. எனவே மனித நேயம் மதிக்கப்பட வேண்டிய அவசியத்தை நாவலில் ஆசிரியர் உணர்த்துகிறார்.
சமூக அவலம்: சமுதாயத்தைச் சீரிய முறையில் பிரதிபலிப்பவனே உண்மையான சமூகப் பிரஞ்ஞை உடைய எழுத்தாளனாகிறான். அந்த வகையில் பிரபஞ்சன் சமூக அவலங்களை இந்நாவலில் இழையோடச் செய்துள்ளார்.
''இப்படியே வயல்வறண்டு நஞ்சை புஞ்சையானால்
நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்''
''பசிக்காமல் இருக்க மனுசன் மாத்திரை சாப்பிடுவான்
நீங்க ஒண்ணு. நாளையைப் பற்றி யாருக்குக் கவலை
சந்தியா? இன்னிக்கு சாப்பிட்டோம். சினிமா பார்த்தோம்
....... போதும்னு ஜனங்க ஆயிட்டாங்க''
என்ற உரையாடல் சமூகச் சிந்தனை இல்லாத மானுட வர்க்கத்தைச் சாடுவதாகவே உள்ளது. இளைய தலைமுறையினர் டி.வி.பெட்டியில் வாழ்வைத் தொலைத்து அமைதியைத் தேடக்கூடிய சமூக அவலம் நாவலில் பேசப்படுவது சிறப்புடையது.
முடிவாக: தலைமுறை மாற்றம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக அமைப்பின் சீரழிவான பாலுறவு முறைகேடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்ற கருத்து நாவலில் வலியுறுத்தப்படுகிறது, தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் காக்கப்படவேண்டுமேயானால் திருமணம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகிறது. குடும்ப வாழ்வும், அடுத்த தலைமுறையும் சிறக்க வேண்டுமேயானால் கணவன் மனைவியருக்கிடையே சந்தேகமற்ற, துரோகமற்ற, தூய அன்பு நிலைபெற வேண்டும் என்ற ஆசிரியர் கருத்து சமூகத்திற்கு தேவையான ஒன்றாக அமைகிறது. பெண்ணுரிமையும், பெண் கல்வியும், மனித நேயமும், தேசப்பற்றும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை நாவல் வலியுறுத்துகிறது.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக