19/10/2010

இலை - விமலாதித்த மாமல்லன்

கொல்லையில் கறிவேப்பிலை மரம் தளதளவென்று நின்று கொண்டிருந்தது. தெருவிலிருந்து  பார்ப்பவர்கள், அந்த  வீட்டில் அப்படியொரு மரம் இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாது.

வீட்டிற்கு  ஸ்நோஸிம்  அடித்து  இருந்தது. வீட்டின்  ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந்திருக்கும்  பெண்ணின்  தாயாரைப்போல, ரொம்ப ஜாக்கிரதையுடன்  கண்காணித்து  வந்தாள்  மாமி. வீட்டின்  வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லி பதித்து, அதற்குமேல் ஸ்நோஸிம் அடித்துவைத்தாள். தேர்தல் சமயத்தில், மாமியின் பாராவையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை  சுவரில்  எழுதிவிட்டார்கள். சுயேட்சை  ஆசாமிகூட  தன் சின்னமான சைக்கிளை தாரால் வரைந்து விட்டிருந்தான். மாமிக்கு ஏககோபம். அந்த தேர்தலில் மாமி ஓட்டுபோடப் போகவில்லை.



கொல்லைக் கதவு தடதடவென்று விட்டுவிட்டு தட்டப்பட்டது. மூன்றாவது தடவையாக சப்தம் கேட்டதும்தான் ஸ்லோகம் சொல்வதை நிறுத்திவிட்டு, ‘வரேன்’ என்று உரக்கக் கத்தியபடி அலமாரி ரூமுக்குள் இருந்து சாவியை எடுத்துக்  கொண்டு  கொல்லைக்  கதவை  நோக்கிப்  போனாள். இன்னும் கதவு தட்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. ‘வரேன்’ என்று திரும்பவும் கத்தினாள். இந்த  தடவை  மாமியின்  குரல்  கதவைத்  தாண்டி  கேட்டிருக்க வேண்டும். நிசப்தமாகி விட்டது.

கக்கூஸில் நீர் விழும் சப்தம் கேட்டது.

மாமி  “என்னடி  இவ்ளோ  லேட்டு  இன்னிக்கு” - என்று கேட்டபடி  கதவைத் திறந்தாள்.

வெளியில் முண்டாசு கட்டிய ஒரு ஆள் நின்று கொண்டு இருந்தான்.

“நீயா.“

“ஏம்மா“.

“இல்லே கக்கூஸ்காரியோன்னு நெனச்சிண்டுட்டேன்.“

கக்கூஸ் கதவைத் திறந்து கொண்டு மாமியின் பையன் பக்கெட்டுடன் வெளியில் வந்தான். வந்தவன் நின்று கொல்லைக் கதவைப் பார்த்தான். அம்மாவின்  எதிரில்  முண்டாசு  ஆள் நிற்பதைப்  பார்த்ததும், கிணற்றடிக்கு வந்து நீர் சேந்தி பக்கெட்டை நிரப்பிக் கொண்டு திரும்பவும் கக்கூஸுக்கு உள்ளே போய் கதவை மூடிக் கொண்டான்.

“எல பறிச்சுட்டுப் போலாம்னு வந்தேம்மா.“

“இப்போ வாண்டாம். அப்புறம் பாக்கலாம்.“

“எல பறிச்சி ரெண்டு மாசம் ஆயிடுச்சேம்மா.“

“அப்புறம் வாயேன்“

“மரம் நெறஞ்சி கெடக்குது பாரும்மா“

“பேசின பணம் தரமாட்டே நீ. இப்ப வாண்டாம்.“

“இன்னாம்மா அப்படி சொல்லிட்ட. ஒந்துட்டு எனக்கெதுக்கும்மா.“

“எல்லாம் இப்ப பேசுவே“

“ஐயா சவுக்கியமாம்மா.“

“சௌக்கியந்தான், அப்புறம் வா.“

“தம்பி எப்பிடிம்மா இருக்குது.“

“எல்லாரும் நன்னா இருக்கோம், உன் புண்ணியத்துல. நீ போயிட்டு அப்புறம் வா.“

“இன்னாம்மா நீயே இப்பிடி சொல்லிட்டா எங்களைப் போல ஏழை பாழைங்க எப்பிடிம்மா பொழைக்கிறது.“

“தோ பாரு காலங்கார்த்தால வம்பு பண்ணாதே. நேக்கு நெறைய வேலை கெடக்கு.“

“ரெண்டு நிமிசத்துல பறிச்சிக்கிணு போயிடறேம்மா.“

“போன தடவையே பேசின பணம் குடுக்கலே நீ.“

“யம்மா இந்த தடவை அப்படியெல்லாம் ஆவாதும்மா.“

இந்த சர்ச்சை கிணற்றடியைத் தாண்டி, சமையல் கட்டைத் தாண்டி ஹால் வரையில்  கேட்டிருக்க  வேண்டும். மாமா பேப்பரும்  கையுமாக  வந்து நின்றார், அதிக நேரம் தம்மால் அவனுடன் பேசிக் கொண்டிருக்க முடியாது என்பது போல.

“ஐயிரே, அம்மாகிட்ட சொல்லு ஐயிரே! ஒரே முட்டாக் கோச்சிக்குது.“

மாமா பேசாமல் இருந்தார். தமக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விடாமல் அதற்குள்ளேயே தம்மால் இயன்ற அளவிற்கு பௌருஷத்துடன் இருக்கப் பழகி அநேக ஆண்டுகளாகி விட்டன அவருக்கு.

“ஐயருகிட்டே என்ன சொல்றது. நான்தான் சொல்லிண்டு இருக்கேனே.“

“நீ சொல்ற துட்டே தர்ரேம்மா.“

“ஏழு ரூபா.“

“யம்மா யம்மா நாங்க எப்படிம்மா பொழைக்கறது.“

“எல பறிக்கலையேன்னு மரம் ஒண்ணும் அழல நீ போயிட்டு வா.“

“இன்னாம்மா ஒரே முட்டா இப்பிடிப் பேசினா இன்னாம்மா செய்யிறது.“

“ஒரு தம்பிடி கொறையப்படாது.“

“ஐயிரே“

ஐயரிடம் என்ன பேசுவது என்று மாமி சொன்ன போதே திரும்ப உள்ளே போய் ஈஸிசேரில் உட்கார்ந்து விட்டிருந்தார் அவர்.

“ஐயிர  ஏன்  கூப்பிடுற. சொன்னா  சொன்னதுதான். நியாயமா  உன்கிட்ட ஏழேகால்  ரூபா  கேக்கணும். போன  தடவையே  நாலணா  கொறைச்சலாக் குடுத்துட்டுப் போனே.“

அவன்  உள்ளே  பார்த்துக்  கத்தினான். ’“சாமீ   அஞ்சி  ரூபாய்க்கு  சில்ற இருக்குதா சாமீ.’“

மாமி  உள்பக்கம்  திரும்பிப்  பார்த்தாள். மாமா  சேரில்  இருந்து  எழுந்து வருவது தெரிந்தது. மாமியின் பார்வையை சமையல் கட்டின் வாசலருகில் வரும்போதுதான்  சந்தித்தார். வாசல்  நிலையைப்  பிடித்தபடி  அங்கேயே நின்று விட்டார்.

மாமி அவன் பக்கம் திரும்பி ’கடைக்குப் போய் மாத்திண்டு வா’ என்றாள்.

அவன்  போனதும்  ’சில்லறைக்குன்னு  மொதல்ல  சொல்லுவன். தோ பறிச்சிண்டு  மீதி  தர்ரேம்பன். பறிச்சிண்டப்பறம்  அடுத்த  தடவை தர்ரேம்மான்னுட்டுப் போயேப் போயிடுவன். இந்த பிராமணருக்குப் புத்தி வாண்டோமோ’ என்று  தனக்குத் தானே பேசியபடி பாத்ரூமுக்குள் நுழைந்து சீயக்காய் போட்டு கொல்லைக் கதவுச் சாவியை எண்ணெய் போகத் தேய்த்தாள்.

மாமியின்  குரல்  காதில்  விழாததைப்  போல, சமையல்  கட்டின்  வாசல் நிலையை விட்டு ஈஸிச்சேரை நோக்கிச் சென்றார் மாமா.

’யம்மா’ என்று குரல் கொடுத்தபடி முண்டாசுக்காரன் நுழைந்தான். அவன் கையில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் ஒரு ரூபாய் நோட்டுமே இருப்பதைப் பார்த்துவிட்டு மாமி சத்தம் போட ஆரம்பித்தாள்.

“ஏம்மா கத்தறே. இத்தப் புடி, டவுசர்லேந்து சில்லறை எடுத்துத் தரேன்.“

“தோ  பாரு  இந்தக்  கதையெல்லாம்  வாண்டாம். ஏழு  ரூபாயை  எண்ணிக் கீழே வை. தம்பிடிக் கொறைஞ்சாலும் வாண்டாம்.“

வேஷ்டியைத் திரைத்து டிரௌசரிலிருந்து எட்டணா பில்லை ஒன்றை எடுத்து  ரூபாய்  நோட்டுகளின்மேல்  சேர்த்து  வைத்தான். மாமியின் முகத்தைப் பாத்தபடியே இன்னொரு பில்லையை வைத்தான்.

மாமி  குனிந்து  பார்த்தாள். கடைசியாக  வைத்த  பில்லை  நாலணாவாக இருந்ததைக் கண்டு ’நாலணா கொறையறதே’ என்றாள்.

“டீக்கிதாம்மா துட்டு இருக்கு.“

“எல எடுத்துண்டுபோய் வித்து டீ சாப்பிடு“

டிரௌசரில் கைவிட்டு இரண்டு பத்துபைசா ஒரு அஞ்சு பைசாவை எடுத்துக் கீழே இருந்த பணத்துடன் சேர்த்து வைத்தான்.

மாமி குனிந்து எடுத்துக் கொண்டபடி சொன்னாள்.

“தோ  பாரு  நின்னபடிக்கே  பறிச்சுக்கோ. மேலேயெல்லாம்  ஏறி  கெளைய கிளைய ஒடச்சு வச்சுடாதே.“

பணத்தை இடுப்பில் முடிந்து கொண்டு கிணற்றுச் சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.

வேஷ்டியை அவிழ்த்து கல்லும் மண்ணுமாய் இருந்த தரையில் விரித்தான். வேஷ்டி அழுக்கேறி நைந்து கிடந்தது. தோய்த்தால் கிழிந்தும் விடலாம்.

அவன்  கீழ்ப்புறமிருந்து  கறிவேப்பிலை  பறிக்கத்  தொடங்கினான். மரம் இரண்டாள்  உயரம்கூட  இருக்கவில்லை. முக்கால்வாசி  நேரம்  நிலத்தில் நின்றபடியே  பறித்தான். நுனியில்  பறிக்கவேண்டி வந்தபோதில் மட்டும் வலுவான  நடுமரத்தில்  அதிக  பளு  விழுந்துவிடாமல்  ஒற்றைக்  காலில் நின்றபடி  பறித்தான். கொஞ்சம்  இலைகள்  பக்கத்து  வீட்டுச்  சுவரைத் தாண்டி விழுந்தன.

பார்த்து  பறிக்கப்படாதோ. குப்பை  விழுந்துடுத்துன்னு  பக்கதாத்தலேர்ந்து சண்டைக்கு  வந்துடப்போறா. அவாத்துல  விழாமப்  பறி - என்றபடி  கீழே இருந்த குவியலில் இருந்து ஒரு கை கறிவேப்பிலை எடுத்துக் கொண்டாள்.

அவன் முண்டாசைக் கழற்றி வேர்வையைத் துடைத்துவிட்டு தலையில் கட்டிக்  கொண்டான். பிறகு  விரித்திருந்த  வேஷ்டியின்  நான்கு மூலைகளையும் சேர்த்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு புறப்பட்டான். மரம் வெற்றுக் கிளைகளுடன் மொட்டையாக நின்றிருந்தது.

மாமி கொல்லைக் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பியபோது கக்கூஸ் கதவு  திறந்திருந்தது. கிணற்றடியிலிருந்து  ஈரக்  காலடிக்  சுவடுகள் வீட்டிற்குள் போயின.

’கொறஞ்சது இருபது ரூபாயாவது சம்பாதிச்சுடுவன் இன்னக்கி’ என்று முணுமுணுத்தபடி குளிக்க பாத்ரூமுக்குள் போனாள்.

தலையில் டவலைக் கட்டிக் கொண்டபடி பூஜை செய்து முடித்து சாப்பிட அழைத்தாள். தானும் ஒரு தட்டு வைத்துக் கொண்டாள்.

“கறிவேப்பிலை தொகையல் நன்னாருக்குடி“ - என்றார் மாமா.

“அதுக்கெனன  கொறைச்சல். இன்னக்கி  அவனுக்கு  நல்ல  தேட்டைதான். கொறைஞ்சது இருபது ரூபாயாவது சம்பாதிச்சுடுவான்.“

“அம்மா கொஞ்சம் தான் போடு.“

தட்டில் முருங்கைக்காய் தான்களைப் போட்டாள்.

“பக்கத்தாத்துல  இவ்ளோ கொத்து  கறிவேப்பிலை  விழுந்துடுத்துன்னா “- என்றபடி கையை விரித்துக் காட்டினாள்.

“பார்த்துப்  பறிக்கச்  சொல்லக்  கூடாதோடி. அவாளா  பறிச்சுக்கறது  இல்லாம நாமளா வேறக் குடுக்கணுமாக்கும்.“

“முந்தாநாள்  கூட  எல  பறிக்கத்தான்  மதில்மேல  ஏறினாண்ணா. என்னைப் பார்த்ததும் ஹிஹின்னு இளிச்சுண்டே கொடி கட்டறேன் மாமின்னா. இவோ கொடிகட்டற லட்சணம் தெரியாதாக்கும்.“

முருங்கைக்காய் சக்கைகளைத் தெருவில் போட வந்தபோது பக்கத்து வீட்டைப் பார்த்தாள்.

அந்த வீட்டுக் குழந்தை மூன்று சக்கர சைக்கிளை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தது. வேறு யாரும் இல்லை.

“கணேச்சு.“

“என்ன மாமி.“

“சாப்ட்டாச்சா.“

“ம்“

“என்ன சமையல்.“

“வெங்காய சாம்பார். உர்லக் கெயங்குக் கறி. தொகைல்.“

“என்ன தொகையல்.“

“புதினா.“

“புதினாவா? கறிவேப்பிலையா?“

“புதினா.“

“எப்படி இருந்தது.“

“வாசனையா.“

“காரமா வாசனையா இருந்துதா? சப்புனு வாசனையா இருந்துதா?.“

பேச்சு சத்தம் கேட்டு குழந்தையின் அம்மா வெளியே வந்தாள்.

“ஹி ஹி சாப்பாடாச்சா.“

“ம். இப்பதான் ஆச்சி.“

“அதான்  கொழந்தையைக்  கேட்டுண்டிருந்தேன். புதினா  எங்கே  வாங்கினே. கார்த்தால மாம மார்க்கெட்டுக்குப் போயிட்டு இல்லேன்னு திரும்பி வந்துட்டரே.“

அவள் முகத்தில் மாறுதல் ஏதும் இருக்கிறதா என்று மாமி கூர்ந்து கவனித்தாள்.

“நேத்து வாங்கிண்டு வந்தது மாமி.“

அ“ப்படியா, தலைக்கு மேலே வேலை கெடக்கு வரேண்டியம்மா.“

ஈஸிச்சேரில்  கண்களை  மூடியபடி  மாமா  படுத்திருந்தார். மாமி அவரருகில் வந்து  நின்று  ’புதினாவாம்  புதினா. கொழந்தைக்குக்கூட  பொய்  சொல்லக் கத்துக் குடுத்திருக்கா.’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

காலையிலிருந்தே  ஈஸிச்சேரும்  பேப்பருமே  கதி  என்று  கிடந்தவர், அன்று முழுக்கவும்  அப்படியே  இருக்கத்  தீர்மானித்து  விட்டிருக்க வேண்டும். மாமி நகர்ந்ததும் கண்ணை ஒருமுறை கிறக்கத்துடன் திறந்து ஈஸிச்சேரில் லேசாக ஒருக்களித்து லகுவாகப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார்

****

(மார்ச் 1981) ,  கணையாழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக