24/06/2010

சொற்றொடர்

1.சொற்கள் ஒன்றை ஒன்று தொடர்வது சொற்றொடர் எனப்படும்.

2.கண்ணகி பாடம் படித்தாள் - இவ்வாறு கருத்து முடிந்திருக்கும் சொற்றொடர் முற்றுச் சொற்றொடர் அல்லது வாக்கியம் எனப்படும்.

3.கண்ணகி பாடம் படித்து, பாடம் படித்த கண்ணகி - இவ்வாறு கருத்து முடியாத சொற்றொடர் எச்சச் சொற்றொடர் எனப்படும்.

1. வாக்கியத்தின் உறுப்புக்கள்
மாதவி மலர்களைப் பறித்தாள் (1) இந்த வாக்கியத்தில் பறித்தாள் என்பது வினைமுற்று. இதுவே இந்த வாக்கியத்தில் பயன் நிலைத்திருக்கும் இடமாகும். ஆகவே, இது பயனிலை எனப்படும்.


1.பயனிலைக்கு முன் `யார்?' அல்லது `எது?' என்பதை வைத்து, `யார் பறித்தாள்?' என்னும் கேள்வி கேட்டால், மாதவி என்று விடை வருகிறது. இவ்விடையே இவ்வாக்கியத்தில் எழுவாய் என்று சொல்லப்படும். செயல் எழுவதற்கு (தோன்றுதற்கு) வாயாக (இடமாக) இருப்பது எழுவாய் எனப்படும்.

2.பயனிலைக்கு முன் `யாரை' அல்லது `எதை' அல்லது `எவற்றை' என்பவற்றுள் ஏற்ற ஒன்றை வைத்துக் கேள்வி கேட்டால், வரும் விடையே செயப்படுபொருள் எனப்படும். இங்கு, `எவற்றைப் பறித்தாள்?' என்று கேள்வி கேட்டால் அதற்கு, மலர்களை என்பது விடையாகிறது. எனவே, இவ்வாக்கியத்தில் மலர்களை என்பது செயப்படு பொருளாகும்.
இவ்வாக்கியத்தில்,

மாதவி - எழுவாய்
பறித்தாள் - பயனிலை
மலர்கள் - செயப்படுபொருள்

பெரும்பாலான வாக்கியங்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இருக்கும். செயப்படுபொருள் இல்லாமலும் `நான் எழுந்தேன்' என்றாற்போல, எழுவாயும் பயனிலையும் மட்டுமே வரும் வாக்கியங்களும் உண்டு.


1.வா இது, நீ வா எனப் பொருள்படும். இங்கு வா - பயனிலை; நீ - எழுவாய். இந்த எழுவாய் வெளிப்படையாக வராததால், அது தோன்றா எழுவாய் எனப்படும்.
நீ - தோன்றா எழுவாய்
வா - பயனிலை


2.
1.நான் தூங்கினேன் - இங்கு வினைமுற்றும் பயனிலையாக வந்துள்ளது. இது வினைப் பயனிலை எனப்படும்.

2.படைத்தவர் கடவுள் - இங்குக் கடவுள் என்னும் பெயர்ச் சொல் பயனிலையாக வந்துள்ளது. இது பெயர்ப் பயனிலை எனப்படும்.

3.வந்தவர் எவர்? - இதில் எவர் என்னும் வினா, பயனிலையாக வந்துள்ளது. இவ்வாறு வருவது வினாப் பயனிலை எனப்படும்.

சொல் இலக்கணம் கூறுதல்
ஒரு வாக்கியத்தில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் திணை, பால் எண் முதலிய கூறி, அது நிற்கும் நிலையும் கூறுதல் சொல் இலக்கணம் கூறுதல் எனப்படும். உதாரணம் கீழே காண்க:

1. கண்ணன் பாடம் படித்தான்.

இவ்வாக்கியத்தில் (1) கண்ணன் (2) பாடம் (3) படித்தான் என்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன.


1.கண்ணன் - பெயர்ச்சொல், உயர்திணை, ஆண்பால், ஒருமை எண், படர்க்கையிடம், முதல் வேற்றுமை, படித்தான் என்னும் பயனிலைக்கு எழுவாய்.

2.பாடம் - பெயர்ச்சொல், அஃறிணை, ஒன்றன் பால், ஒருமை எண், படர்க்கையிடம், இரண்டாம் வேற்றுமை, படித்தான் என்னும் பயனிலைக்குச் செயப்படுபொருள்.

3.படித்தான் - வினைச்சொல், உயர்திணை, ஆண்பால், ஒருமை எண், படர்க்கையிடம், இறந்த காலம், கண்ணன் என்னும் எழுவாய்க்கு பயனிலை.
குறிப்பு: பெயர்ச் சொல்லுக்கு வேற்றுமையுண்டு. வினைச் சொல்லுக்குக் காலம் உண்டு.


2. படித்த பத்மினி பாடி மகிழ்ந்தாள்.

1.படித்த - இறந்தகாலப் பெயரெச்சம், பத்மினி என்னும் பெயரைக் கொண்டு முடிகிறது.

2.பத்மினி - பெயர்ச்சொல், உயர்திணை, பெண்பால் ஒருமை எண், படர்க்கையிடம், முதல் வேற்றுமை, மகிழ்ந்தாள் என்னும் பயனிலைக்கு எழுவாய்.
3.பாடி - இறந்தகால வினையெச்சம். மகிழ்ந்தாள் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிகிறது.

4.மகிழந்தாள் - வினைச்சொல், உயர்திணை, பெண்பால், ஒருமை எண், படர்க்கையிடம், இறந்தகாலம், பத்மினி என்னும் எழுவாய்க்குப் பயனிலை.

3. நிறுத்தற் குறிகள்
நாம் படிக்கும்பொழுது பொருள் விளங்குவதற்காகச் சில இடங்களில் நிறுத்தியும், மகிழ்ச்சி, கோபம், துன்பம் முதலிய உணர்ச்சிகள் விளங்கும்படியும் படித்தல் இயல்பு. இவ்வாறு படிப்பதற்கு உதவியாய் இருக்கும் பொருட்டு நூல்களில் தக்க இடங்களில் சில குறிகள் இடப்பட்டுள்ளன இக்குறிகள் இடப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு நேரம் நிறுத்த வேண்டும் என்பதை அவை நமக்குத் தெரிவிக்கின்றன. அதனால் அவை நிறுத்தற் குறிகள் என்று பெயர் பெறும்.


1.. இது முற்றுப்புள்ளி. இக்குறி இடப்பட்டுள்ள இடத்தில் நான்கு மாத்திரை நேரம் நிறுத்தவேண்டும். ஒரு முறை கண்ணிமைக்கும் அல்லது கைந்நொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

2.கண்ணன் கடைக்குச் சென்றான்; ஆறணா கொடுத்தான்; ஒரு புத்தகம் வாங்கினான்.
இதில் ஒரு எழுவாய்க்கு மூன்று பயனிலைகள் வருகின்றன. இவ்வாறு ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும் போது வாக்கியத்தின் இடையில், ஒவ்வொரு பயனிலைக்குப் பிறகும் வரும் நிறத்தற் குறி அரைப்புள்ளி எனப் பெயர் பெறும். இங்கு இரண்டு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.


3.(1) அறம், பொருள், இன்பம், வீடு - பொருள்களை எண்ணல்.
(2) அவர் மகன் இறந்தபொழுது அழுது, விம்மி, புலம்பி ஏங்கினார் - வினையெச்சம்.

(3) தம்பி, இங்கு வா - விளித்தல்.

(4) அவன் அவ்வாறு பேசிய பொழுது, கண்ணன் எதிரில் வந்தான் - எச்சச் சொற்றொடர்.

இவ்வாறு பொருள்களை எண்ணும்போதும், வினையெச்சங்களின் பின்னும், விளிக்கும் போதும் எச்சச் சொற்றொடராக வரும் போதும், காற்புள்ளி இடவேண்டும். இங்கு ஒரு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.


4.வேலன் தேர்வில் வெற்றி பெற்றானா?
திருக்குறளை இயற்றியவர் யார்?

இவை வினா வாக்கியங்கள். வினாவுக்குப் பிறகு இடப்பட்டுள்ள குறி வினாக்குறியாகும். இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.


5.(1) எப்படி இவ்வளவு உயரமான மலையில் ஏறினாய்!
(2) இஃது என்ன அநியாயம்!

(3) திருடன்! திருடன்!

(4) என் பணம் போயிற்றே!

(5) உன்னைச் சும்மா விடுவேனா, பார்!

இவ்வாக்கியங்களில் வியப்பு, இரக்கம், அச்சம், அழுகை, சினம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுவதைக் காணலாம். இவ்வுணர்ச்சிகளை உணர்த்த வரும் குறியே உணர்ச்சிக் குறி என்பது. இங்கேயும் நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.


6.``தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று.''
என்பது திருக்குறள். இது திருவள்ளுவர் பாடல். ஒருவர் சொல்லியதை அப்படியே மேற்கோளாக எடுத்துக் காட்டும் போது, மூன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் குறிகள் இடவேண்டும்.


7.கண்ணன் கந்தனைப் பார்த்து, ``கந்தா, `நான் தேர்வில் வெற்றிபெற்றால் உனக்கு இனிப்புப் பண்டம் வாங்கித் தருவேன்.' என்று அன்று முருகன் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா?'' இவ்வாறு மேற்கோளுக்குள் மேற்கோளாக வரும்போது ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும்.

8.( ) இவை பிறைக் குறிகள் எனப்படும்.
(1) `இலக்கியம்' என்பது போல் மொழி பெயர்த்து எழுதும் பொழுது பிறைக் குறிகள் இட வேண்டும்.

(2) மனத்துக்கண் மாசு (அழுக்கு) இல்லாதவராதலே நன்று - இவ்வாறு மாசு என்னும் சொல்லுக்கு அழுக்கு எனப் பொருள் கூறும்பொழுது பிறைக் குறிகள் இட வேண்டும்.

(3) வருமொழி (அதாவது, நிலைமொழியோடு சேர்வதற்கு வருமொழி) - இவ்வாறு விளக்கம் செய்யும்போதும் பிறைக்குறிகள் இடவேண்டும்.

(4) (3) (8) (10), - என்று இவ்வாறு, சிறு பிரிவுகளுக்கு முதலில் எண்கள் வரும்போதும் பிறைக் குறிகள் இடவேண்டும்.


`மலைமகள் - (இமய) மலையிற் பிறந்த உமையம்மை' - என உரையிற் சொல் வருவிக்கும்போதும் பிறைக் குறிகள் இடவேண்டும்.

4. தொகை நிலைத்தொடர் - தொகா நிலைத்தொடர்

1.புத்தகம் படித்தான் - இது, புத்தகத்தைப் படித்தான் என விரியும். எனவே, `புத்தகம்' என்னும் சொல்லுக்கும் `படித்தான்' என்னும் சொல்லுக்கும் இடையில் `ஐ' என்னும் உருபு தொக்கு (மறைந்து) உள்ளது. இங்ஙனம் இடையில் வேற்றுமை யுருபோ, உவமை யுருபோ, பிறவோ தொக்கு (மறைந்து) வர, இரண்டு சொற்கள் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்றல் தொகைநிலைத் தொடர் எனப்படும்.

2.கோவலன் படித்தான் - இவ்விரு சொற்களுக்கு இடையில் மேற்சொன்ன வேற்றுமை யுருபோ, உவமை யுருபோ, பிறவோ தொகாமல் (மறையாமல்) இரண்டு சொற்களும் தொடர்ந்து நிற்றலைக் காணலாம். இங்ஙனம் இரு சொற்கள் தொடர்ந்து நிற்றல் தொகா நிலைத்தொடர் எனப்படும்.

தொகை நிலைத்தொடர் - வகை
(1) வேற்றுமை


1.(1) புத்தகம் படித்தான் - இதில் `ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கு வருவதால், இத்தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.
(2) தலைவணங்கு - இங்கு `ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

(3) வீடு செல் - இங்கு `கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு தொக்கு நிற்றலால், இத்தொடர் நான்காம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

(4) மலைவீழ் அருவி - இதில் `இன்' என்னும் ஐந்தாம் வேற்றுமையுருபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஐந்தாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

(5) கண்ணன் குழல் - இங்கு `அது' என்னும் ஆறாம் வேற்றுமையுருபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஆறாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

(6) பெட்டிப் பணம் - இங்கு `இல்' என்னும் ஏழாம் வேற்றுமை உறுபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

(7) பொன் மோதிரம் - இது `பொன்(னால் செய்யப்பட்ட) மோதிரம்' என விரியும். இடையில் `ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும், `செய்யப்பட்ட' என்னும் பயனும் உடன் தொக்கு வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்பெயர் பெறும்.

இவ்வுருபும் பயனும் உடன் தொக்க தொகை, இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடியவரும் என்பதை அறிக.

இவ்வாறு இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வரச் சொற்கள் தொடருதல் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர் எனப் பெயர் பெறும்.


(2) அல்வழி

இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வராமல் உவமை உருபு, பண்பு உருபு முதலியன மறைந்துவரச் சொற்கள் புணர்தல் (வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணர்தல்) அவ்வழித் தொகை நிலைத்தொடர் எனப் பெயர் பெறும். கீழ்வருவன இவ்வகையைச் சேர்ந்தவை.
(1) ஆடு பாம்பு

ஓடு குதிரை

தாழ் சடை

என, வினைப்பகுதியும் பெயர்ச்சொல்லும் சேர்ந்து வருதல் வினைத்தொகை எனப்படும். `ஆடு பாம்பு' என்பது ஆடின பாம்பு, ஆடுகின்ற பாம்பு, ஆடும் பாம்பு எனப் பொருள்படும்.

(2) கருங்குதிரை

கருமை - பண்பு

ஆகிய - பண்புருபு

குதிரை - பண்பி

என விரியும்.

இவ்வாறு `ஆகிய' என்னும் பண்புருபு இடையிலே மறைந்து வர, பண்பும் பண்பியும் தொடர்தல் பண்புத்தொகை எனப்படும்.

(3) முத்துப் பல்

முத்துப் - உமை

போன்ற - உவமை உருபு

பல் - பொருள்

என விரியும்

இவ்வாறு உவமை உருபு இடையிலே தொக்குவர உவமையும் பொருளும் தொடருதல் உவமைத்தொகை எனப்படும்.

(4) சேர சோழர் - இது சேரனும் சோழனும், என விரியும். இதில் உம் என்பது தொக்கு வருதலால், இஃது உம்மைத் தொகை எனப்படும்.

(5) (1) தாழ்குழல் - தாழ்ந்த கூந்தல், தாழ்கின்ற கூந்தல், தாழும் கூந்தல் எனப் பொருள் படுதலால் வினைத்தொகை எனப்படும்.


(3) தாழ்குழல் வந்தாள் - இது, தாழ்ந்த கூந்தல் (உடையவள்) வந்தாள் என விரியும். அதாவது, வினைத்தொகைப் புறத்தில் `உடையவள்' என்னும் சொல் தொக்கு வருகிறது. இங்ஙனம் வருதல் அன்மொழி (அல்லாத மொழி)த் தொகை என்று இலக்கணத்தில் கூறப்படும். இவ்வுதாரணத்தில் வந்துள்ள `தாழ்குழல்' - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்பெயர் பெறும்.
இந்த அன்மொழித்தொகை (1) வேற்றுமைத் தொகை (2) வினைத்தொகை, (3) பண்புத்தொகை, (4) உவமைத் தொகை, (5) உம்மைத்தொகை என்னும் ஐந்திலும் வரும்.


தொகா நிலைத்தொடர் வகை
(1) பத்மினி பாடினாள் - இத்தொடரில் முதலில் இருக்கும் சொல் பத்மினி என்பது. இவ்வாக்கியத்தில் அதுவே எழுவாய். எனவே, இத்தொடர் எழுவாய்த் தொடர் எனப்படும். இவ்வாறே கீழ்வரும் தொடர்களில் வரும் முதற்சொல்லின் இலக்கணம் கொண்டே தொடர் கூறுக.

(2) வந்தாள் வள்ளி - வினைமுற்றுத்தொடர்.

(3) வந்து போனாள் - வினையெச்சத்தொடர்.

(4) வந்த வள்ளி - பெயரெச்சத்தொடர்.

(5) வள்ளி, வா - விளித்தொடர்.

(6) வள்ளியை அழைத்தாள் - வேற்றுமைத் தொகா நிலைத்தொடர்.

(7) இனி வருவான் - இடைச்சொல் தொடர்.

(8) சாலப் பேசினாள் - உரிச் செற்றொடர்.

(9) பாம்பு பாம்பு - அடுக்குத் தொடர்.

இவ்வொன்பதும் தொகா நிலைத்தொடர்கள்.


5. இரட்டைக்கிளவி - அடுக்குத்தொடர்
1.

1.அவன் கலகல என்று சிரித்தான்.

2.தண்ணீர் சலசல என்று ஓடுகிறது.

3.அவள் மடமட என்று பேசினாள்.

4.இரத்தம் குபுகுபு என்று வெளி வந்தது.

5.அம்புபட்ட மயில் துடிதுடித்து விழுந்தது.

இவற்றில் வந்துள்ள கலகல, சலசல, மடமட, குபுகுபு, துடிதுடித்து என்பன இரட்டைப்படவே வந்துள்ளன; இரட்டையில் ஒன்றைப் பிரித்தால் மற்றொன்று பொருள் தராது; இரட்டைப்பட வந்தாற்றான் பொருள் தரும். இத்தகைய சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும். (கிளவிசொல்).
2.

1.பாம்பு பாம்பு

2.தேள் தேள் தேள்

3.புலி புலி புலி புலி

4.வந்து வந்து போனான்

5.சென்று சென்று தேய்ந்தது

இங்கு வந்துள்ள பாம்பு பாம்பு முதலியவை பிரித்தால் பொருள் தரும். ஒரே சொல் இரண்டாகவும் மூன்றாகவும் நான்காகவும் அடுக்கி வரும். எனவே, இவை அடுக்குத் தொடர் எனப் பெயர் பெறும்.
3. இரட்டைக்கிளவி - அடுக்குத் தொடர் - வேறுபாடு:


1.இரட்டைக்கிளவி. இரட்டியே வரும்; அடுக்குத் தொடர் இரண்டுக்கு மேலும் வரும்.

2.இரட்டைக்கிளவி ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்தால் பொருள் தராது. அடுக்குத் தொடரில் ஒவ்வொரு சொல்லும் பொருள் தரும்.

6. வழுவமைதிகள்
பசுவை அன்பினால் `இவள் என் அம்மை' என்று சொல்லுதல் வழு (குற்றம்); ஆயினும் இங்ஙனம் கூறுதல் உலகில் பெரு வழக்காயிருத்தலால் ஆன்றோர் இதனை அமைதி (பொருத்தம்) என ஏற்றுக் கொண்டனர். எனவே, இது வழு அமைதி ஆயிற்று. இங்ஙனம் கூறப்படும் வழுவமைதி (1) திணை வழுவமைதி, (2) பால் வழுவமைதி, (3) இட வழுவமைதி, (4) கால வழுவமைதி, (5) மரபு வழுவமைதி எனப் பலவகைப்படும். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காண்க:

1. திணை வழுவமைதி


``திங்களும் சான்றோரும் ஒப்பர்'' இங்குத் திங்கள் அஃறிணை; சான்றோர் உயர்திணை. இவ்விரு திணைச் சொற்களும் கலந்து சிறப்பினால் உயர்திணை முடிவை ஏற்றன. இங்ஙனம் வருதல் திணை வழுவமைதி எனப்படும்.

2. பால் வழுவமைதி

1.தாய் தன் புதல்வனை, `என் அம்மை வந்தாள்' என்று கூறுதலில், அன்பின் பெருக்கால் ஆண்பால் பெண் பாhலாயிற்று.

2.ஒருவனை, ``அவர் வந்தார்'' என்பது, உயர்வினால் ஒருமைப்பால் பலர்பால் ஆயிற்று. இங்ஙனம் வருதல் பால் வழுவமைதி எனப்படும்.

3. இட வழுவமைதி

1.நீயோ, அவனோ, யார் இது செய்தார்?

2.யானோ, அவனோ, யார் இது செய்தார்?

3.நீயோ, யானோ, யார் இது செய்தார்?

4.நீயோ, அவனோ, யானோ, யார் இது செய்தார்?

இவ்வுதாரணங்களில் (1) முன்னிலையில் படர்க்கையும், (2) தன்மையில் படர்க்கையும், (3) முன்னிலையில் தன்மையும், (4) முன்னிலையில் படர்க்கையும் தன்மையும் வந்திருத்தலைக் காண்க. இங்ஙனம் வருதல் இடவழுவமைதி எனப்படும்.
4. கால வழுவமைதி


1.தெய்வம் இருக்கிறது.

2.நிலம் கிடக்கிறது.

3.மலை நிற்கிறது.

இவ்வாறு தம் தொழில் இடையறாது முக்காலத்திலும் ஒரு தன்மையவாய் இயலும் பொருள்களை நிகழ்காலத்தால் கூறுதல் கால வழுவமைதி எனப்படும்.
5.

1.தனக்காகக் காத்து நிற்கும் நண்பன். `இன்னும் சோறு உண்டலையோ!' எனின், அதுவரை உண்ணாதான், `உண்டேன், இதோ வருகிறேன்' என்பான். உண்ணுகின்றவனும் `உண்டேன், இதோ வருகிறேன்' என்பான். இவ்வாறு விரைவுப்பற்றி எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்த காலம் ஆயின.

2.அக்காட்டிற்புகின் கூறை கோட்பட்டான் இது மிகுதியால் எதிர்காலம் (`கூறை கோட்படுவான்' என்பது இறந்தகாலம் (`பட்டான்' என) ஆயிற்று.

3.அறம் செய்யின், சுவர்க்கம் புகுந்தான் இது தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலம் ஆயிற்று.

4.யாம் பண்டு விளையாடுவது இப்பூங்கா.

யாம் பண்டு விளையாடுகிறது இப்பூங்கா.
இது யாது காரணமும் இன்றி இயல்பினால் இறந்த காலம் (விளையாடியது என்பது) எதிர்காலமும் (விளையாடுவது என) நிகழ்காலமும் (விளையாடுகிறது என) ஆயிற்று. இவ்வாறு (1) விரைவு, (2) மிகுதி, (3) தெளிவு, (4) இயல்பு என்னும் பொருள்கள் பற்றி, பொருத்தமான இடங்களில் ஒன்று மற்றொன்றாகக் கூறப்படும். இது கால வழுவமைதி எனப்படும்.

6. மரபு வழுவமைதி


1.யானைக்கன்று - மரபு; யானைக்குட்டி - மரபுவழு. ஆயினும் வழக்குப் பெற்றுவிட்டமையால் இஃது அமைதி எனக் கொள்ளப்பட்டது.

2.மீ மிசை - மேல் என்னும் ஒரே பொருளைத் தரும் மீ-மிசை என்னும் இரு சொற்கள் வந்தன, இங்ஙனம் வருதல் காரணமற்றதாயினும், சிறந்து நிற்றலால் அமைதியாகக் கொள்ளப்பட்டது.

3.இம்மாடு யான் வாங்கியது என, செயப்படுப்பொருளைக் கருத்தாவைப் போல வைத்து, அதன்மேல் வினை முதல் வினை ஏற்றிக் கூறுவதும் வழக்கில் இருப்பதனால் அமைதி எனக் கொள்ளப்பட்டது.

4.
1.நெஞ்சமே! நான் கூறுவதைக் கேள்.

2.பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்.

3.இவ்வழி அவ்வூருக்குப் போகும்.

4.பெடை யன்னம் தன் நிழலைக் கண்டு தன் ஆண் அன்னத்தின் காதலி என்று கருதி, ஆண் அன்னத்துடன் ஊடல் கொண்டது.

இவ்வாறு (1) கேளாதவற்றைக் கேட்பன போலவும் (2) சொல்லாதவற்றைச் சொல்வன போலவும், (3) நடவாதனவற்றை நடப்பன போலவும், (4) செய்யாதனவற்றைச் செய்வன போலவும் அஃறிணையிடத்தில் சொல்லப்படும். உயர்திணை இடத்தும் இவ்வாறு சொல்லப்படுதல் புலம்பல் முதலியவற்றில் காண்க.

7. தமிழ் மரபு

1.மரபு - சான்றோர் வழக்கு. எப்பொருளை எச்சொல்லால், எந்நெறியால் சான்றோர் சொன்னார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அந்நெறியால் சொல்லுதலே மரபு ஆகும்.
குதிரைக்குட்டி - இது சான்றோர் வழக்கு - மரபு.
பசுவின் கன்று - இது சான்றோர் வழக்கு - மரபு.


2.
1.அடிசில் - இஃது உண்பன, தின்பன, நக்குவன, பருகுவனற்றிற்கெல்லாம் பொதுச்சொல், ஆதலால் இதனை `அயின்றார்,' `மிசைந்தார்' என்னும் பொது வினையாற் கூறலே மரபு.

2.அணி (நகை) - இது கவிப்பன, கட்டுவன, இடுவன தொடுவனவற்றிற்கெல்லாம் பொதுச்சொல். ஆதலால் இதனை, `அணிந்தார்,' `தாங்கினார்' என்னும் பொது வினையாற் கூறலே மரபு.

3.இயம் (வாத்தியம்) - இது கொட்டுவன, ஊதுவனவற்றிற்கெல்லாம் பொதுச்சொல். ஆதலால், இதனை `இயம்பினார்,' `படுத்தார்' என்னும் பொது வினையாற் கூறலே மரபு.

4.படை ( போர்க்கருவி) - இது எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவனவற்றிற்கெல்லாம் பொதுச் சொல். ஆதலால், இதனை, `வழங்கினார்,' `தொட்டார்' என்னும் பொதுவினையாற் கூறலே மரபு.

3.குன்றவன் கொற்றன் - திணை பற்றி வந்த சிறப்புப் பெயர்.
அருவாளன் அழகன் - நிலம்பற்றி வந்த சிறப்புப் பெயர்.

பார்ப்பான்கௌதமன் - சாதிபற்றி வந்த சிறப்புப் பெயர்.

கோவூர்கிழான் கண்ணன் - ஊர்பற்றி வந்த சிறப்புப் பெயர்.

பொன்னன் கந்தன் - உடைமைபற்றி வந்த சிறப்புப் பெயர்.

கரியன் கண்ணன் - நிறம் (குணம்) பற்றி வந்த சிறப்புப் பெயர்.

நடிகன் நடராசன் - தொழில்பற்றி வந்த சிறப்புப் பெயர்.

ஆசிரியன் அந்துவன் - கல்விபற்றி வந்த சிறப்புப் பெயர்.

திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி பற்றி வரும் சிறப்புப் பெயருடன் இயர் பெயர் சேர்ந்து வருமாயின், அவ்வியற் பெயர் (மேற்கண்டவாறு) பின் வருதலே சிறந்த மரபு.


4.
1.நம்பி வந்தான், அவற்குச் சோறிடுக - படர்க்கை இடத்ததாகிய உயர்திணைப் பெயரைச் சார்ந்த சுட்டுப் பெயர் உயர்திணைப் பெயருக்குப் பின் வந்தது.

2.பசு வந்தது, அதற்குப் புல்லிடுக - அஃறிணைப் பெயரைச் சார்ந்த சுட்டுப் பெயர் அதன்பின் வந்தது.

3.சாத்தன் தெய்வம், அவற்குப் பலியிடுக. - விரவுப் பெயர்
சாத்தன் - உயர்திணை
சாத்தன் வந்தது, அதற்குப் புல்லிடுக. - விரவுப் பெயர்
சாத்தன் - அஃறிணை


இவ்விரவுப் பெயரைச் சார்ந்த சுட்டுப்பெயர் அவ்விரவுப் பெயரின் பின் வந்தது. (விரவுப் பெயர் - பொதுப் பெயர்.)
இங்ஙனம் (1) உயர்திணைப் பெயர், (2) அஃறிணைப் பெயர், (3) விரவுப் பெயர் என்னும் மூவகைப் பெயரைச் சார்ந்து சுட்டுப் பெயர் வரின், அச்சுட்டுப் பெயர், அம் மூவகைப் பெயர்க்கும் பின்வரும். இங்ஙனம் வருதலே மரபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக